ஹரித்வாரில் குளிக்கக் கூட லாயக்கற்ற நிலையில் கங்கை: அடுத்த தலைமுறைக்கு இதுதான் பரிசா?

ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் நீராடும் கங்கை, குடிக்க அல்ல குளிக்கக் கூட லாயக்கற்றது என்கிறது ஆய்வக சோதனைகள்.
ஹரித்வாரில் குளிக்கக் கூட லாயக்கற்ற நிலையில் கங்கை: அடுத்த தலைமுறைக்கு இதுதான் பரிசா?


டேஹ்ராடூன்: ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் நீராடும் கங்கை, குடிக்க அல்ல குளிக்கக் கூட லாயக்கற்றது என்கிறது ஆய்வக சோதனைகள்.

இது என்னடா வேதனை என்று நினைத்தால், ஆம் நிச்சயம் இது வேதனை தரும் தகவல்தான். 

கங்கை நதியில் குளித்தால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். ஆனால், அதே கங்கையில் குளித்தால் நிச்சயம் ஒரு நோய் தாக்கும் என்கிறது பகிர் ஆய்வு முடிவுகள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள பதிலில், ஹரித்வாரில் பாயுறும் கங்கை நதி, குளிக்கக் கூட தகுதியற்றது என்று தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது.

கங்கோத்ரி முதல் ஹரித்வார் வரை உத்தரகாண்டின் பல பகுதிகளில் கங்கை நதி நீரை எடுத்து சோதனை செய்யப்பட்டது. சுமார் 294 கி.மீ. தூரத்துக்குப் பாயும் கங்கை நதியின் தரம் மற்றும் அதன் மாதிரிகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்தது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்எம் பரத்வாஜ் கூறுகையில், ஒரு நதி நீரை எடுத்துக் கொண்டால், அதில் முக்கியமாக 4 காரணிகள் அடிப்படையாக எடுக்கப்படும். தண்ணீரின் வெப்ப நிலை, கலந்திருக்கும் ஆக்ஸிஜன், கோலிபார்ம் (பாக்டீரியா) உள்ளிட்டவை அடங்கும். ஹரித்வாரில் எடுக்கப்பட்ட கங்கை நதியை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தியதில், நதிநீரில் ஏராளமான கோலிபோர்ம் மற்றும் அதிகப்படியான ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பில், குளிக்கத் தகுதியான தண்ணீரில் இருக்கும் பயாலஜிகல் ஆக்ஸிஜன் தேவை என்பது ஒரு லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், கங்கை நீரில் 6.4 மில்லி கிராமுக்கும் அதிகமாக இருக்கிறது.

மேலும், நீரில் அதிகப்படியான பாக்டீரியா இருப்பது, ஹரித்வாரில் கங்கை நீர் மாசடைந்திருப்பதையே காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஹரித்வாரில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளும், சுற்றுலாக் குடில்களும், கழிவுநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததும் கங்கை நதி நீர் இந்த அளவுக்கு மாசடையக் காரணமாக இருக்கிறது. கங்கை நதி நீரில் கழிவு நீர் கலப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டாலும், கங்கை நதிக் கரைகள் எந்த தடையும் இல்லாமல் மாசடைந்து வருகிறது.

புனித நதி என்று கூறப்பட்ட கங்கை நதிக்கே இந்த நிலையை ஏற்படுத்த மக்களாகிய நாம் தான் முழு முதற் காரணம் என்பதை கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இளைய தலைமுறை பற்றி அடிக்கடி குறை சொல்லும் மூத்த தலைமுறை மக்கள் வாழ்ந்த காலத்தில்தான் ஒரு புனித நதிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்வது இந்த கங்கையைத்தானே. 

கூவமும் ஒரு காலத்தில் அழகிய நதியாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், அதை இன்று சாக்கடைக் கால்வாயாக மாற்றிவிட்டு, கூவத்தைக் கடக்கும் போது வெட்கப்பட்டுத்தானே பலரும் துணியால் முகத்தை மூடிக் கொள்கிறோம். 
 

இதே நிலையைத்தான் இன்று கங்கையும் அடைந்துள்ளது. கங்கையில் குளித்தால் பாவம் தீரும் என்று சொல்லிக்கொடுத்த நமக்கு, அதே கங்கையை மாசுபடுத்தினால் தீராத பாவம் வந்து சேரும் என்று சொல்லிக் கொடுக்க மறந்தவர்களையும் இங்கே நொந்துதான் ஆக வேண்டும்.

இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் உயிருள்ள நபர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது உத்தரவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. உயிராக மதிக்க வேண்டிய கங்கை நதியை, வேறு எந்த நாட்டிலும் செய்ய முடியாத அளவுக்கு நாம் அசுத்தம் செய்துவிட்டோம்.

இதற்கெல்லாம் தென்னிந்தியர்களாகிய நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தமிழர்கள் தப்பித்துக் கொள்ள முடியும். ஏன் என்றால், தமிழகத்தில் ஓடும் நதிகளை எல்லாம் மணல் கொள்ளைக்காரர்களிடம் பறிகொடுத்து விதவைகளாக்கிய நமக்கு, கங்கையைப் பற்றி கவலைப்படவா நேரம் இருக்கப் போகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com