தமிழகத்தைக் காப்பாற்ற ரஜினிகாந்த் செய்ய வேண்டியது இதுதான்!

இப்படி ஒரு கதையை ரஜினிகாந்த் சொல்லிவிட்டு சென்றால், தமிழகம் பிழைக்கும். இல்லையென்றால், நாடு புதிய அதிகார மையங்களிடம் சிக்கித் தவிக்கும்.
தமிழகத்தைக் காப்பாற்ற ரஜினிகாந்த் செய்ய வேண்டியது இதுதான்!


மரியாதைக்குரிய ரஜினிகாந்த் அவர்களே! உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை பட்டியலிட விரும்புகிறேன்.

முன்பெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும். ரசிகர்களிடம் ஆரோக்கியமான போட்டி இருக்கும். ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் போன்றவர்களின் திரைப்படங்களும் ஏககாலத்தில் வெளிவரும். ஒரு படத்திற்கு மற்றொரு படம் போட்டி. படத்தின் தரம் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இன்று அப்படியா நடக்கிறது? ஒரு சமயத்தில் ஒரு பெரிய ஹீரோ நடித்த படம் மட்டுமே வெளிவருகிறது. அந்த படம் தன் வசூலை முடித்துக்கொண்ட பிறகு அடுத்த படம் வெளியாகிறது. பெருவாரியான தியேட்டர்களில் அதே படம் திரையிடப்படுகிறது. ஒரு படத்துக்கு மற்றொரு படம் போட்டி கிடையாது. வசூலை வைத்து மட்டுமே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. வசூல் அதிகமானால் வெற்றி; இல்லையென்றால் தோல்வி.

படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள், தயாரிப்பாளர் பெட்டியை நிரப்பிவிடுவார். ‘தரமான திரைப்படத்தை கொடுக்காமல், ரசிகர்களின் பணத்தை பிடுங்கிக்கொள்கிறோமே' என்ற குற்ற உணர்ச்சி யாருக்குமே இருப்பதில்லை. ரசிகர்களின் திருப்தியைவிட தயாரிப்பாளரின் திருப்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

‘புதிய திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களை படம் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியிடலாமே' என்று விஷால் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த கருத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் ஆமோதித்திருந்தார். இது எந்த ஊர் நியாயம்? இது ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்ற நினைப்பு யாருக்குமே இல்லையே! எது எப்படி போனாலும் வசூல் மட்டுமே முக்கியம் என்ற சினிமாக்காரர்களின் எண்ணத்தையே விஷாலின் இந்தக் கருத்து வெளிப்படுத்துகிறது.

‘எல்லோரும் தியேட்டரில்தான் படம் பார்க்க வேண்டும். இணைய தளத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியிடக்கூடாது. திருட்டு விசிடியாக படங்கள் வெளிவரக்கூடாது' என்று சொல்கிறார்கள். ஆனால், படம் வெளிவந்த சில நாட்களுக்குப் பின் இவர்களே டிவிடியாகவும், இணையதளத்திலும் விற்று அதையும் காசாக்குகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று சொல்லி தொலைக்காட்சியில் வெளியிடுகிறார்கள். தியேட்டரில் மட்டுமே படம் பார்க்க வேண்டும்' என்ற சித்தாந்தம் என்னாச்சு? இவர்கள் பார் என்றால் நாம் பார்க்க வேண்டும். பார்க்கக்கூடாது என்றால் பார்க்கக்கூடாது? அப்படித்தானே!

தமிழில் திரைப்படத்தின் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கிறது மாநில அரசு. ஆனால், வரிவிலக்கின் பலன் மக்களுக்கு போய்ச் சேருவது கிடையாது. பலன் முழுவதும் தயாரிப்பாளருக்கே.

சமீபத்தில் வெளியான பாகுபலி படத்திற்காக சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரினார். மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் வெளிவரும் என்ற நிலை. ரஜினிகாந்த் அவர்களும் முன்னொரு முறை கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்த சரித்திரமும் உண்டு. எல்லாம், காசு, பணம், துட்டு, மணி.

ஒரு திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே முன்னூறு கோடி, நானூறு கோடி வசூல், பிரம்மாண்ட வெற்றி என்றெல்லாம் செய்திகள் வருகிறது. ஆனால், சில நாட்களிலேயே அவருக்கு நஷ்டம், இவருக்கு நஷ்டம், நடிகர் வீட்டை நோக்கி செல்வோம் என்று செய்திகள் வருவதையும் பார்க்கிறோம். இவ்வளவு வசூலுக்கு பிறகும் நஷ்டம் என்பது எப்படி? முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்வதில்லை. அதுதான் பிரச்னை' என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். என்ன சொல்லி என்ன பயன். எல்லா சுமையும் ரசிகர்களின் தலையில் தானே விழுகிறது.

தனி நபர் வருமானத்திற்கான வரியை அரசாங்கம் விதிக்கிறது. மக்கள் யாரும் அதை முழுமனத்தோடு ஏற்பதில்லை. அரசாங்கத்தின் பலவகையான கெடுபிடிகளையும் மக்கள் முழுமனத்தோடு ஏற்பதில்லை. ஆனாலும் இந்த நாடு எனக்கு வேண்டாம், நான் நாட்டை விட்டு செல்கிறேன் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் ஒரு பெரிய நடிகர், தனது படத்திற்கு பிரச்னை என்று வந்தபோது நாட்டை விட்டு செல்கிறேன் என்றார்.

திரைப்பட நடிகைகளைப் பற்றி சமூக வளைத்தளங்களில் சமீபத்தில் வெளிவந்த கன்றாவி விஷயங்கள் உலகையே அதிர வைத்தது. இதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

திமுக ஆட்சியின்போது, தியேட்டர் கிடைக்காமல் ஐம்பது படங்களுக்கு மேல் வெளிவராமல் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு நிலவியதே! ஒரு சீனியர் நடிகர் என்ற முறையில் இதைப் பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா?

ரஜினிகாந்த் அவர்களே! மேலே சொன்ன எல்லா விஷயங்களும் சினிமாத் துறையில் சிஸ்டம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கான சில உதாரணங்கள். நீங்கள் வளர்ந்த இடத்தில், நீங்கள் புழங்கும் இடத்தில் உள்ள சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?

பல வருடங்களுக்கு முன் ஒரு கட்சிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட பெரும் பங்காற்றினீர்கள். நீங்கள் அமரவைத்த ஆட்சி தவறில்லாமல் நடந்ததா? அப்போது நடந்த தவறுகளைப் பற்றி எப்போதாவது வாய் திறந்தீர்களா? உங்கள் பேச்சை நம்பி ஓட்டளித்தவர்களுக்கு என்ன பதில் சொன்னீர்கள்? உங்களுக்கு பிடித்தவர்கள் ஆட்சியில் இருந்தால் தவறுகளை கண்டுகொள்ளமாட்டீர்கள். பிடிக்காதவராக இருந்தால், கொதித்து எழுவீர்களா? இது நியாயமா?

நீங்கள் சொல்வதைப் போலவே அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்த சிஸ்டத்தை சரி செய்ய என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? அதை வெளியிட முடியுமா? உங்களுக்கென்று கொள்கைகள் இருந்தால் அதையும் தெரிவியுங்கள். பிரச்னைகளைச் சொல்லி அதற்கான தீர்வுகளைக் கொடுங்கள். அப்படிச் செய்யாமல், வெற்று விமர்சனங்களை மட்டும் செய்து வந்தால், மற்ற அறிக்கை அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கும்.

தற்போது வரை நீங்கள் தனி நபர். எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. மற்ற கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, உங்களால் விமர்சிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் மட்டுமே உங்களை விமர்சனம் செய்ய முடியும். வேறு வழியில்லை. இதை தவிர்க்க வேண்டுமென்றால் புதிய கட்சியைத் தொடங்குங்கள். அல்லது ஏதாவது அரசியல் கட்சியில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

எப்போது அடுத்தவரின் அரசியல் நடவடிக்கையை குறை சொல்லத் தொடங்கினீர்களோ, அப்போதிலிருந்தே நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். உங்களைப் போன்ற சினிமா பிரபலங்களின் முகத்திற்கு ஓட்டுகள் விழலாம். வெற்றியும் பெறலாம். ஆனால், எதற்காக அந்த வெற்றி தரப்பட்டதோ, அந்த நோக்கம் மக்களை சென்றடையுமா என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு. காரணம், உங்களின் நிர்வாகத் திறனையும், புத்திசாலித்தனத்தையும் உங்கள் நாற்பத்தி நான்கு ஆண்டு பொதுவாழ்க்கையில் நாங்கள் கண்டதில்லை. உங்கள் நிர்வாகத் திறனை நிரூபிக்கும் வகையில் ஏதாவது சாதனையை நிகழ்த்திக் காட்டுங்கள். உங்களை எந்த நிபந்தனையும் இன்றி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதுவரை வெற்று விமர்சனத்தை தவிருங்கள்.

இந்த தருணத்தில் ஒரு குட்டிக் கதையை படிப்போம்.

ஒரு நாடு. அந்த நாட்டின் அரசன் திடீரென்று மரணமடைந்தான். அவனுக்கு வாரிசு யாரும் இல்லை. புதிய அரசராக யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. இது போன்ற தருணங்களில் கோவில் யானையிடம் ஒரு மாலையை கொடுப்பார்கள். அதை தெருக்களில் நடமாட விடுவார்கள். அது யாருக்கு மாலையிடுகிறதோ அவரே புதிய அரசர்.

மாலையுடன் புறப்பட்டது யானை. ‘தங்களுக்கு மாலையிடாதா' என்று ஒவ்வொருவரும் காத்திருந்தனர். யானை ஒவ்வொரு வீதியாக நடந்தது. வழியில் ஒரு சத்திரம் இருந்தது. அதன் திண்ணையில் ஒரு சாது அமர்ந்திருந்தார். சத்திரத்தை பார்த்ததும் சட்டென்று நின்றது யானை. அமர்ந்திருந்த சாதுவின் கழுத்தில் மாலையைப் போட்டது. இனி சாதுதான் அந்த நாட்டின் புதிய அரசர். மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். சாதுவை தோளில் சுமந்தபடி அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

‘புதிய அரசர் தெய்வ நம்பிக்கை மிக்கவர், ஆன்மீகவாதி, நல்லவர், பல புண்ணிய இடங்களுக்கு யாத்திரை சென்றவர். இனி அவர் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார்' என்றெல்லாம் சாதுவைப் பற்றி பெருமையோடு பேசினார்கள். அவரின் நல்ல குணங்களையும் பட்டியலிட்டார்கள்.

ஒரு வாரத்திற்கு பிறகு புதிய அரசனுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. மேடை மீது சாது அமர்ந்திருந்தார். அவருக்கு வலது புறத்தில் அவருடைய மகன், மருமகள், மகள், மருமகன் என்று ஒரு கூட்டமே அமர்ந்திருந்தது. இடது புறத்தில் மனைவி, மாமியார், மைத்துனன் என்று மற்றொரு கூட்டமே அமர்ந்திருந்தது.

சாது அப்போது பேசினார்.

‘மக்களே! பல வருடங்களாக சத்திரத்தில் எனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைத் தேடி வராத சொந்தங்கள் நான் அரசன் என்றதும் என் அருகில் அமர்ந்திருக்கிறது. நம்முடைய அரசருக்கு வாரிசு இல்லை. அதனால், யானை என்னை தேர்ந்தெடுத்தது. ஆனால், எனக்கு வாரிசுகள் இருக்கிறது. எனக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்தால், என் மகன் எனக்குப் பின் இந்த நாட்டை ஆளுவான். என்னுடைய மகன் என்ற ஒரே தகுதி அவனை அரியணையில் உட்காரவைக்கும். இது ஏற்புடையதா?

நான் இத்தனை காலம் தங்கியிருந்த சத்திரத்தில் பல தவறுகள் நடக்கிறது. இது நாள் வரை அந்த தவறுகளை நான் தட்டிக் கேட்டதில்லை. என்னைச் சுற்றி நடந்த தவறுகளை சரி செய்ய முடியாத என்னால், எப்படி நாட்டின் பிரச்னைகளை தீர்க்க முடியும்? தவறுகளை சரிசெய்ய இதுவரை நான் முயலவில்லையே! இது ஏற்புடையதா?

‘எனக்கு அரசியல் தெரியாது. எல்லாம் தெரிந்ததுபோல எனக்கு நடிக்கவும் தெரியாது. ஒருவேளை அப்படி நடித்தால், என் நடிப்பில் வேண்டுமானால் நான் வெற்றி பெறுவேன். ஆனால், நிஜத்தில் அது அரசியல் தோல்வியைத்தான் மக்களுக்கு அளிக்கும். தற்போதுவரை எனக்கு அரசியலும் தெரியாது, அரசியலை முழுமையாகத் தெரிந்த யோக்கியமான நண்பர்களும் கிடையாது. அரசியலுக்காக புதிதாக ஒருவரை நண்பராக்கிக்கொண்டால், அவரை நம்பியே நாட்களை நகர்த்தவேண்டி இருக்கும். அவரின் தவறுகளுக்கும் நானே பொறுப்பேற்கவேண்டி இருக்கும். அதுமட்டுமில்லாது, நான் ஆன்மீகவாதி. அரசியலில் ஆன்மீகம் நுழைவதோ, ஆன்மீகத்தில் அரசியல் நுழைவதோ தவறு. ஆகையால், அரசியல் தெரிந்தவர்கள் நாட்டை ஆளட்டும். நான் கிளம்புகிறேன்' என்றவாறு கிளம்பினார் சாது.

கூட்டத்தில் இருந்த ஒருவன் பேசினான்.

‘யானை உங்களை தேர்ந்தெடுத்ததை கடவுளின் முடிவாக நாங்கள் கருதுகிறோம். நீங்கள் இப்படி செய்வது கடவுளை அவமதிக்கும் செயல்' என்றான்.

சிரித்தார் சாது.

‘இந்த யானை ஒவ்வொரு நாளும் நான் தங்கியிருக்கும் சத்திரத்தின் வழியாக செல்லும். தினமும் அதற்கு இரண்டு வாழைப்பழங்களை கொடுப்பேன். ஆகையால், நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு யானைக்கு கொடுத்த வாழைப்பழங்கள்தான் காரணமே தவிர கடவுளின் அருள் காரணமல்ல' என்றார் சாது.

அப்போது மற்றொருவன் பேசினான்.

‘ஐயா! உங்களின் முடிவை இத்தனை நாட்களுக்குப் பிறகு ஏன் சொல்கிறீர்கள். யானை உங்கள் கழுத்தில் மாலையிடும்போதே அதனிடம் திருப்பிக் கொடுத்திருக்கலாமே!' என்றான்.

சிரித்தார் சாது.

‘நான் தங்கியிருந்த சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கிறது. அந்த மரத்தடியில் ஒரு பிச்சைக்காரன் படுத்திருப்பான். தான் சாப்பிட்ட பிறகு மீதமிருக்கும் உணவை தினமும் இந்த யானைக்கு கொடுப்பது வழக்கம். ஒருவேளை, நான் யானையிடம் மாலையை திரும்பக் கொடுத்திருந்தால், அது பிச்சைக்காரன் கழுத்தில் போட்டு, அவனை அரசனாக்கியிருக்கும். ஒரு சாதுவோ, பிச்சைக்காரனோ உங்களை ஆளக்கூடாது. ஒரு அரசியல் தெரிந்த சிறந்த நிர்வாகி மட்டுமே ஆள வேண்டும். நிர்வாகத் திறமை, நேர்மை, ஒழுக்கம் ஆகியவைதான் ஒரு அரசரை தீர்மானிக்க வேண்டுமே தவிர, வாழைப்பழங்களும், மிஞ்சிப்போன சோறும் தீர்மானிக்கக்கூடாது' என்று சொல்லிவிட்டு சத்திரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார் சாது.

இப்படி ஒரு கதையை மரியாதைக்குரிய ரஜினிகாந்த் அவர்கள் சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றால், தமிழகம் பிழைக்கும். இல்லையென்றால், நாடு புதிய அதிகார மையங்களிடம் சிக்கித் தவிக்கும்.

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com