ஒரு ஆணை வென்ற பெண்

உடல்ரீதியாக ஆண்களைவிடவும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால், பெண்களை
ஒரு ஆணை வென்ற பெண்

உடல்ரீதியாக ஆண்களைவிடவும் பெண்கள் பலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமை இழந்தவர்களாக்கி, ஆன்மீகத்திலும் அவர்களை பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல் ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவை எல்லாமே ஆண்களைவிட பெண்கள் உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான். வேறெந்த விதத்திலும் ஆண்கள், பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது. அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இது பற்றி, கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை, அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.

ஆன்மீகத்தில் பெண்கள் 

அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன்கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோயிலுக்குத்தான் செல்வான். இந்திய ஆன்மீக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். உள்நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா? பெண் தோலா? என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மீக சக்தியை நிர்ணயிக்கக்கூடியவை இந்த தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாக பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம்பொருளை ஒரு அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது. விலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்று வரை கூட அது தொடர்கிறது. இன்றுகூட பெண்தெய்வ வழிபாடு என்பது ஆண்தெய்வ வழிபாட்டைவிட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன்கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோயிலுக்குத்தான் செல்வான்.

பூணூல் அணிந்த பெண்கள் வேத காலங்களில், அந்தணர் அணிகிற பூணூலை, பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால், பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக் கூடாது என்கிற ஒரு விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மீகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல, பெண்களுக்கும்கூட என்பதால் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று வாழ்ந்தார்கள்.

வெற்றி பெற்ற மைத்ரேயி 

ஜனக மஹாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மீக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது பொய் என்று கண்டறிவதற்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மஹாராஜா தன்னை உணர்ந்த ஒருவர், தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில் ஆன்மீகப்பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் தொடங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மீக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் போகப்போக பலர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்சுமமாகப் போய்க் கொண்டிருந்தன. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி. 

இந்த இருவருக்கும் இடையிலான விவாதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்துகொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்கு சூட்சும நிலையிலே விவாதங்கள் போய்க் கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மீகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த மனிதர், கூர்மையான மதிக்கு மிகவும் புகழ் பெற்றிருந்த அவர், கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார், 'இன்னும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்து விடுவாய்” என்று. ஜனக மஹாராஜா தலையிட்டார். யாக்ஞவல்கியரிடம் சொன்னார், “உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை' என்றார். பிறகு, குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலேயும் மைத்ரேயிக்கு அவர் உரிய மரியாதைகள் செய்தார்.

கணவன் மனைவியாக வாழ்ந்த இருவர்…

யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். மைத்ரேயி அவரைத் தன் கணவராக ஏற்கிறாள். மைத்ரேயி அவரிடம் சொல்கிறார், 'நீங்கள் என் சீடராக இருக்க வேண்டாம், கணவராக இருங்கள்' என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு யாக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் வந்து, 'இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன். என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்' என்று சொல்கிறார். உடனே மைத்ரேயி கேட்கிறார், 'இதுபோன்ற சொற்ப விஷயங்கள் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்? உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்த சின்னச் சின்னப் பொருள்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்து விடுவேனா?' என்று கேட்கிறார். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய், ஞானமடைந்த நிலையிலே வாழ்ந்தார்கள்.

பெண் எப்போது ஆளுமை செய்வாள்?
 
இதுபோல நிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேத காலங்களில் ஆன்மீக வாழ்க்கையைப் பொறுத்த வரை, பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தால் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்பெயர்ச்சி நிகழ்ந்து, உயிர் வாழ்வதே முக்கியம் என்ற நிலை வரும்போதுதான் ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும் போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்சும நிலையிலே இயங்குகிற போது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணை சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?

பெண்கள் இழந்த சுதந்திரம் கி.மு. 3000த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு மங்கோலியா, மத்தியசீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து மூர்க்கத்தனமான படையெடுப்புகள் நம் நாட்டின் மீது நிகழ்ந்தபோது, கொள்ளையடித்து உண்டு வாழும் வாழ்க்கைமுறை பிரபலமானபோது, பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் தொடங்கினார்கள். இதற்குப்பின் வகுக்கப்பட்ட செயல்முறைகள் ஒருதலைப்பட்சமாகி, சாத்திரங்களும், சூத்திரங்களும் வழங்கிய விதிமுறைகள் மாற்றப்பட்டு, ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன.

பெண்ணிற்கு எப்போது முக்தி? வேதங்கள் ஸ்ருதிகள். அவை வாழ்வின் இறுதிநிலை உண்மைகளைப் (ultimate reality) பற்றிப் பேசுகின்றனவே தவிர வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் அவை வகுப்பதில்லை. எப்படி வாழ்வது என அவை சொல்வதில்லை. பிறகு தான் ஸ்மிருதிகளை எழுதினார்கள். 50லிருந்து 60 சதவீதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது என்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாக பெண் மீது சில தடைகள் வகுப்பப்பட வேண்டியிருந்திருக்கலாம். ஆனால், அவை நிரந்தரமான சட்டங்களாக மாறியது துரதிர்ஷ்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு எதிராக செய்த முதல் மாற்றம், ‘பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது’ என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி, அல்லது தன்னை உணர்வதற்கான ஒரே வழி, தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான் என்று முடிவு செய்தார்கள்.

நன்றி : ஈஷா மையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com