தெலுங்குத் திரையுலகின் ‘கே. பாலசந்தரான’ தாசரி நாராயண ராவ் பற்றிய அறியாத செய்திகள்...

டோலிவுட், கோலிவுட் எங்கே எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு பாலசந்தர், ஒரே ஒரு தாசரி நாராயண ராவ் மட்டுமே! இருவருமே இப்போது இல்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற திரைப்படங்கள் என்றென்றைக்குமாய் அவர்களது பெருமை
தெலுங்குத் திரையுலகின் ‘கே. பாலசந்தரான’ தாசரி நாராயண ராவ் பற்றிய அறியாத செய்திகள்...

பிரபல தெலுங்கு இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், நடன அமைப்பாளர், சின்னத்திரை இயக்குனர், தயாரிப்பாளர் என டோலிவுட்டில் அஷ்டாவதானியாகத் திகழ்ந்த தாசரி நாராயண ராவ் நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. டோலிவுட்டில் அவரால் வளர்ந்தவர்கள், பிரபலமானவர்கள் அனேகம் பேர். அவர்கள் அனைவருக்கும் தாசரி தான் குரு. இன்று அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் தெலுங்குத் திரைப்பட உலகினரில் எவரிடம் சென்று, தாசரி குறித்து இரண்டு வார்த்தை சொல்லுங்கள் எனக் கேட்டாலும்... உடனடியாக அவர்கள் சொல்லக் கூடிய பதில்;

தர்ஷக ரத்னா... குருகாரு தாசரி...

“டோலிவுட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும் சரி நம் குருகாரு(தாசரி) இருக்கிறாரே... அவரிடம் சென்றால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும் என்றே இது வரை நாங்கள் நம்பினோம். இன்று அந்த நம்பிக்கை இறந்து விட்டது. இனிமேல் அது இல்லை எனும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் இப்போது நாங்கள் தவிக்கிறோம்.” என்பதாகவே இருக்கிறது அவர்களது உருக்கமும், கலக்கமுமான பதில்கள் அனைத்தும். டோலிவுட்டைப் பொருத்தவரை ‘சர்வ சமஸ்ர நிவாரணி( சர்வ கஷ்டங்களைத் தீர்ப்பவர்) தாசரி நாராயண ராவ்’ என்பதாகவே அவரது வாழ்க்கையும், திரையுலகப் பங்களிப்பும் இருந்திருக்கிறது.

பெற்ற விருதுகள்...

அப்போதையை ஒருங்கிணைந்த ஆந்திராவின் மேற்கு கோதாவரி ஜில்லாவின் பாலகொல்லுவில் 1942 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி பிறந்தார் தாசரி நாராயண ராவ். தமது திரையுலக பங்களிப்பில் அவர் இதுவரை இரண்டு தேசிய விருதுகள், 9 நந்தி அவார்டுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட 4 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றிருக்கிறார். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், மற்றும் கன்னடப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். ஒரு இயக்குனராக தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்கள் உட்பட இதுவரை 151 திரைப்படங்களை இயக்கியவர் எனும் முறையில் இவரது பெயர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தாசரியின் படங்களில் ‘கண்ட்டே கூத்துர்னே கனு’ (குழந்தை பெற்றுக் கொள்வதென்றால் மகளையே பெறு), ‘மேக சந்தேஷம்’ இரண்டுமே தேசிய விருது பெற்றவை.

தனது திரையுலகப் பிரவேசம் பற்றிய கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்; தான் மதராஸ் ராஜதானியில் இருந்து நாடகங்களின் மீதிருந்த ஆசையால் தெலுங்கில் படங்கள் இயக்க விரும்பி ஹைதராபாத் வந்ததாகவும், இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதமான கோட்பாடுகளும் இல்லாமல் உழைக்க வேண்டும், வரும் வாய்ப்புகளை எல்லாம் எதையும் விட்டு விடாமல் யாரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்காமல் உழைத்து தனது வேலையை முறையாக முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே தனது தாரக மந்திரமாக வைத்து தான் உழைத்ததால் தனது வெற்றிகள் சாத்தியப் பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் தாசரி.  

எல்லா ஜேனர்களிலும் படம் இயக்கியவர்...

தாசரி நாரயண ராவ் தமிழிலும் கூட சில படங்களில் தோன்றி இருக்கிறார். அந்தப் படங்கள் அவரது தெலுங்குப் படங்களின் தமிழ் டப்பிங்குகள். விஜயசாந்தி, ராம்கி நடிப்பில் வெளிவந்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் அப்படியான திரைப்படங்களில் ஒன்று.

தாசரியின் படங்கள் பெரும்பாலும் புரட்சிகரமானதாகவே இருக்கும். ஊழலை எதிர்க்கும் படங்கள், பெண் விடுதலை பேசும் படங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை அலசும் படங்கள், வாழ்வின் நிதர்சனங்களைப் பற்றிப் பேசும் கதைகள் என தனது படங்களில் ஏதாவது ஒரு மெசேஜ் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தவர் தாசரி. டோலிவுட்டில் தாசரி எனும் ஆலமரத்தின் அடியில் அடைக்கலமான குறுஞ்செடிகள் அனைத்தும் பின்னாளில் விளைந்து விருட்சமாகி தாசரியின் புகழ் பரப்பும் அளவுக்கு பெருமை பெற்றவர்களானார்கள். அவர்களில் ஒருவர் நடிகர் மோகன் பாபு. நம்மில் பலருக்கு மோகன் பாபுவை சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று சொன்னால் தான் தெரியும். மோகன் பாபு குடும்பமே இன்று தாசரியின் இறுதிக் காரியத்தை எந்தக் குறைகளுமின்றி சிரத்தையுடன் நிறைவேற்ற அவரது வீட்டில் தவமிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் தாசரியை தெலுங்கு பாலசந்தர் என்று சொல்லலாம். இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு மிகப் பிடித்தமான தெலுங்கு இயக்குனர்களில் ஒருவராக தாசரி இருந்தார் என்பதால் அப்படிச் சொல்வதில் தவறேதும் இல்லை. இதை உலக நாயகன் கமல் தனது ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பத்திரிகையாளராகவும்...

தாசரி திரைப்படத்துறையில் மட்டும் தனது தடங்களைப் பதித்துச் செல்லவில்லை. பிரபல படத்தயாரிப்பாளரும், ராமோஜி ராவ் ஃபிலிம் சிடியின் உரிமையாளருமான ராமோஜி அவர்களது ஈநாடு பத்திரிகையை எதிர்த்து ‘உதயம்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையையும் தொடங்கி அதை நடத்தியவர். அந்த வகையில் தம்மை ஒரு பத்திரிகையாளராகவும் அவர் அடையாளப் படுத்திக் கொண்டார்.

அரசியல்வாதியாகவும்...

தமது ஒட்டுமொத்த வாழ்விலும் தாசரி என்னென்னவாக இருந்தார்? என்ற கேள்வியை விட அவர் என்னவாக இல்லாமல் இருந்தார்? என்று கேட்டால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு அவர் வகித்த பதவிகள் அதிகம். திரையுலகப் பங்களிப்புகள் தவிர ஒரு தேர்ந்த காங்கிரஸ் அபிமானியாக மேலிடத்தில் செல்வாக்கு இருந்ததால் முந்தைய காங்கிரஸ் அரசில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் நிலக்கரித் துறை மந்திரியாக பதவி வகித்தவர் தாசரி. காங்கிரஸில் சோனியாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் தாசரியும் ஒருவர் என்று கருதப் பட்டார்.

தாசரி என்பது அடைமொழி அல்ல... 

இவரது பெயரில் உள்ள தாசரி என்பது அவரது வீட்டுப் பெயர். தெலுங்குப் படவுலகில் மூன்றே மூன்று பிரபலங்களுக்கு மட்டுமே தங்களது வீட்டுப் பெயரைச் சொன்னாலும் போதும் இந்த உலகமே அவர்களை சட்டென நினைவு கூர்ந்து விடும் எனும் பெருமை உண்டு. அவர்கள் முறையே நந்தமூரி என்டிஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தாசரி நாரயண ராவ். இவர்களை முறையே நந்தமூரி, அக்கினேனி, தாசரி என்று சுருக்கமாகச் சொன்னாலே போதுமாம். வீட்டுப் பெயர்கள் சொந்தப் பெயரை மறக்கடிக்க வைப்பதென்பது ஆச்சரியமான விசயம் தான்.

கம்பெனி இல்லாமல் ஒரு காஃபீ கூட அருந்த மாட்டார் தாசரி...

தாசரி நாரயணராவ் குறித்து தெலுங்குத் திரையுலகில் பிரசித்தி பெற்ற ஒரு சொல் வழக்கு உண்டு; அவர் கம்பெனி இல்லாமல் காஃபீ கூட அருந்த மாட்டார் என்பதே அது! அதாவது ஒரு காஃபீ அருந்துவதாக இருந்தால் கூட எவரேனும் நண்பர்களோ, சிஷ்யர்களோ உடனிருக்க வேண்டும் அவருக்கு. கூடுதலாக தன் மனைவியான தாசரி பத்மா இறப்பதற்கு முன்பு வரை அவர் ஒரு மிகச் சிறந்த போஜனப் பிரியராகவும் இருந்துள்ளார். தாசரி வீட்டு டைனிங் ஹாலில் அவருடன் இணைந்து தினமும் 10, 15 நபர்களாவது உணவருந்துவது வழக்கமாம். முதல்முறை உடல்நலன் சீர் கெட்டு மருத்துவமனை அலைக்கழிப்புகளுக்குப் பின் தாசரி தனது உணவைக் குறைத்துக் கொண்டு 10 கிலோ எடை வரை குறைந்திருந்தாராம். சப்பாட்டைக் குறைத்தாரே தவிர சாப்பிடும் போது கூடும் நண்பர்களின் எண்ணிக்கையை இவர் எப்போதும் குறைத்தவரில்லை. 

வாழ்வின் பூர்வ ஜென்ம புண்ணியம்...

தெலுங்கில் இவரை விட வயதில் மூத்தவர்கள் பலர் இருந்த போதும் கூட எந்த ஒரு சினிமா விழாவாகட்டும், கலை விழாவாகட்டும் மொத்த டோலிவுட்டும் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி முதல் மரியாதை தந்தது ஏன் எனும் கேள்விக்கு “இதற்கு என்னிடம் பதில் இல்லை, இது எனது பூர்வ ஜென்ம புண்ணியம் என்பதைத் தாண்டி” என்றிருக்கிறார் ஒரு பேட்டியில். வாஸ்தவத்தில் இவர் கொண்டாட்ப் பட்டதற்கான நிஜக் காரணம் தாசரி, சிறிய பட்ஜெட் திரைப்படங்களையும், சிறிய நடிகர்களையும் அதிகம் ஊக்குவிப்பதை தனது வாடிக்கையாக வைத்திருந்தார் என்பதே; இதற்கான காரணம் வினவப் பட்ட போது; டோலிவுட்டில் பெரிய ஹீரோக்கள் என்றால் நான்கைந்து பேர்கள் தான் அவர்களை வைத்து வருடத்திற்கு நான்கோ, ஐந்தோ படங்களை மட்டுமே இயக்க முடியும். அதுவே சின்ன பட்ஜெட்டில், சின்ன ஹீரோக்கள் பத்துப் பேரை வைத்து 20 அல்லது 30 படங்கள் வரை இயக்கலாம். திரையுலக ஆரோக்கியத்துக்கு இதுவே முக்கியம். பலருக்கு நாம் வேலை தர வேண்டும் என்றால் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். என்ன ஒரு அருமையான எண்ணம்! அதனால் தான் இவர் கொண்டாடப் பட்டார்.

நாளொன்றுக்கு 18 மணி நேர வேலை....

பரபரப்பான இயக்குனராக இருந்த காலகட்டத்தில் ஓய்வு ஒழிச்சலின்றி நாளொன்றுக்கு 18 மணி நேரம் 3 ஷிஃப்டுகளாக படப்பிடிப்புகளை நடத்தி மாதம் ஒரு புதுப்பட ரிலீஸ் எனும் வகையில் பல தயாரிப்பாளர்களின் வயிற்றில் பாலை வார்த்த இயக்குனர்களில் ஒருவர் தாசரி. நடிகர்களில் அப்படி 3 ஷிஃப்ட் வேலை பார்த்து தம்மைப் போல ரோல் மாடலாக இருக்கத் தகுதியான நபராக தாசரி அடையாளம் காட்டுவது நடிகர் கிருஷ்ணாவை( ஒக்கடு, ஸ்ரீமந்துடு, ஸ்பைடைர் புகழ் மகேஷ் பாபுவின் தந்தை)

தாசரியின் திரை வாரிசு...

தாசரியின் திரை வாரிசாக அறிமுகமானவர் அவரது மகன் அருண் குமார். ஆனால் தனது மகனைப் பற்றி பேசும் போது அவருக்கு கொஞ்சம் வருத்தமே! இன்றைய வாரிசு ஹீரோக்களைப் போல தன் மகனைத் தான் முன்னதாக சினிமாவில் அறிமுகப் படுத்துவதற்குண்டான குணநலன்களான டான்ஸ், குதிரையேற்றம், நீச்சல், சண்டைப் பயிற்சி என்று திறமையான வாரிசாகத் தயார்படுத்தாமல் விட்டதை தன்னுடைய குறையாகவே நினைத்து அவர் வருந்தி இருக்கிறார். 

ஜெயலலிதாவின் வாழ்க்கை சித்திரம்...

தமது திரையுலக வாழ்க்கையில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் இதுவரை 151 திரைப்படங்களுக்கும் மேலாக படங்களை எடுத்துத் தள்ளி சாதனை புரிந்தவரான தாசரிக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சித்திரத்தை இயக்க வேண்டும் எனும் ஆசை இருந்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பொன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்குள் உடல்நலன் சீர்கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதால் அந்தப் பணியை அவரால் முடிக்க முடியாமலே போய் விட்டது.

முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி...

இருக்கலாம் அந்தச் சாதனையை அவர் செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆனால் தெலுங்கில் ஒரு கமர்சியல் இயக்குனராக அறிமுகமாகி பல கோடி இதயங்களை கொள்ளை கொண்டு இன்று மாநில அரசின் முழு அரசு மரியாதைகளுடன் குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படும் பெருமை எத்தனை சினிமாக்காரர்களுக்கு கிடைத்து விட முடியும்?! அது தாசரி நாராயண ராவுக்கு கிடைத்திருக்கிறது. 

வாழ்வின் அர்த்தம்...

அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தங்களாக அவரது பிரசித்தி பெற்ற திரைக்காவியங்களான பிரேமாபிஷேகம்(தமிழில் வாழ்வே மாயம்), தாத்தா மனவடு(தாத்தாவும், பேரனும்), சீதாராமைய்யகாரு மனவராலு(சீதாராமைய்யாவின் பேத்தி), பங்காரு குடும்பம்( தங்கமான குடும்பம்) உள்ளிட்ட எண்ணற்ற படங்கள் இருக்கின்றனவே காலத்துக்குக்கும்.

டோலிவுட், கோலிவுட் எங்கே எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு பாலசந்தர், ஒரே ஒரு தாசரி நாராயண ராவ் மட்டுமே! இருவருமே இப்போது இல்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற திரைப்படங்கள் என்றென்றைக்குமாய் அவர்களது பெருமை பேச இங்கிருக்கும்.

இப்போது நீங்கள் ஓய்வெடுக்கலாம் தாசரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com