மானுடம் வென்றது! கேரள இளைஞர்களின் இதயபூர்வமான சேவை! 

மருத்துவமனையில் உள்நோயாளிகள், உள்நோயாளிகளுக்கு உறவினர்கள், உடன் வந்திருப்பவர்கள்
மானுடம் வென்றது! கேரள இளைஞர்களின் இதயபூர்வமான சேவை! 

இடம் - திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கேரள மாநிலம் 

நேரம் - தினமும் நண்பகல் 12.00 மணி

மருத்துவமனையில் உள்நோயாளிகள், உள்நோயாளிகளுக்கு உறவினர்கள், உடன் வந்திருப்பவர்கள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற வந்தவர்கள் உள்ளிட்ட பெரிய மக்கள் கூட்டம், மருத்துவமனை வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் திரண்டு வரிசையாக நிற்கிறார்கள். அவர்கள் யாருக்காகவோ காத்திருக்கிறார்கள்...நேரம் செல்லச் செல்ல அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது...

சுமார் 12.30 மணிக்கு ஒரு வாகனம் உள்ளே நுழைகிறது...வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் பரபரப்படைகிறார்கள்…வாகனத்தின் முகப்பில் DYFI என்று எழுதப்பட்ட பதாகை உள்ளது...வாகனத்தில் வந்தவர்கள், வாகனத்தை வசதியாக நிறுத்திவிட்டு, அதில் ஏற்றி வரப்பட்ட பொட்டலங்களை வரிசையில் நிற்கும் ஒவ்வொருவருக்கும் விநியோகம் செய்கிறார்கள்...பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் நன்றி கூறி விடை பெறுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள ஏழை நோயாளிகளுக்காக, அன்றாடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) நடத்தும் உணவு விநியோக காட்சிதான் இது...இது ஏதோ ஒருநாள் இரண்டு நாள் அல்ல. நாள் தவறாது, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வரும் நிகழ்வு இது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய இளைஞர்களின் இதயமாக, மனசாட்சியாக விளங்கும் அமைப்பு. நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு, இரண்டறக் கலந்து நிற்கும் அமைப்பாகும்.

அந்த அமைப்பு, தனது புரட்சிகர நடவடிக்கைகளுக்கு இடையே 'வயிறு வாடுபவர்களின் விழி நிறையாமல் இருக்க’ என்ற முழக்கத்தோடு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஏழை நோயாளிகளுக்காக துவங்கிய திட்டம்தான் 'ஹிர்தய பூர்வம்’ (இதயபூர்வம்) என்னும் உணவளிக்கும் திட்டம். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களுக்கு துணையாக வருபவர்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு மட்டும் உணவளிப்பதாகத் துவங்கிய இத்திட்டம், இன்று திருவனந்தபுரத்தையும் தாண்டி கேரளா முழுவதும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் திட்டமாக மாறியிருக்கிறது. 

இத்திட்டம் துவங்கும் போது 2000 பொட்டலங்களுக்கு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று திருவனந்தபுரத்தில் மட்டும் 8000 பொட்டலங்கள் விநியோகம் செய்யும் அளவிற்கு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதாக சொல்கிறார் கே.எஸ். சுனில்குமார். நோயாளிகளுக்கு உணவளிக்கும் இந்த அற்புதமான சேவைத் திட்டத்தை வடிவமைத்தவர்களில் சுனில்குமாரும் ஒருவராவார். வாலிபர் சங்கத்தின் திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகியாக இருந்து திட்டத்தை வழி நடத்தியவர்.

'திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் மட்டுமல்லாது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த தன்னலமற்ற சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது; தற்போது கேரள மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 60,000 வரை உணவுப் பொட்டலங்கள் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது’என்று அவர் கூறுகிறார். இவ்வளவு பெரிய பணியை ஒரு இளைஞர் அமைப்பால் எவ்வாறு செய்ய முடிகிறது என்ற கேள்வி இயல்பாக எழும். ஆனால், தங்களின் பணி ஒரு துவக்கம்தான் என்றும், ஏழை நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பணியை, கேரளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தும் இலக்குடன் வாலிபர் சங்க கேரள மாநிலக்குழு பயணித்து வருவதாக மிகுந்த தன்னடக்கத்துடன் சுனில்குமார் தெரிவிக்கிறார். 

வாலிபர் சங்கத்தின் இந்த சேவைக்கான நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது என்று பார்த்தால் அதுவும் மிக எளிமையாகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கிறது. ஆம். யாரிடமும் நிதி பெறப்படுவதில்லை. தற்போது விநியோகிக்கப்படும் உணவைத் தயாரிக்க அன்றாடம் ரூ. 10 லட்சம் வரை பணம் தேவைப்படும். இருந்தும் பத்து பைசா கூட பணமாக யாரிடமும் உதவி பெறப்படவில்லை என்பதுதான் வியக்கத்தக்க உண்மை. 

மக்கள் தங்களின் உதவியை உணவாகவே வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்கும் மனித நேயம் கொண்ட கேரள மக்கள், தங்களின் வீடுகளில் உணவு தயாரித்து அதைப் பொட்டலமாகவே வழங்குகின்றனர். இவ்வாறு தனித்தனியாக பெறப்படும் பொட்டலங்களை ஒருங்கிணைக்கும் வாலிபர் சங்கத்தினர் அவற்றை மருத்துவமனைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று ஏழை நோயாளிகளுக்கு விநியோகிக்கின்றனர். செலவு என்று பார்த்தால் உணவுப் பொட்டலங்களை ஏற்றிச் செல்லும் வாகன வாடகை மட்டுமே. அதை அந்தந்த வாலிபர் சங்கப் பகுதிக் குழுக்கள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு நாளும் இந்த பணியை உள்ளார்ந்த நேயத்துடன் வாலிபர் சங்கத் தோழர்கள் செய்து வருவதில்தான் அவர்களின் அர்ப்பணிப்பு அடங்கியிருக்கிறது.

உணவு தயாரித்து வழங்கும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுவிடாத வகையிலேயே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'எல்லா நாளும் ஒரே பகுதி மக்களிடமிருந்து உணவு பெறப்படுவதில்லை. அதே போல எல்லா நாளும் குறிப்பிட்ட தோழர்களே உணவு விநியோகப் பணியில் ஈடுபடுத்தப்படுவதும் இல்லை. உணவு பெறப்படுவதற்கும், உணவு விநியோகிப்பதற்கும் பகுதி வாரியாக அட்டவணை போடப்பட்டுள்ளது. இந்த நாளில் இந்த பகுதியைச் சேர்ந்த தோழர்கள் உணவு விநியோகம் செய்ய வேண்டும் என்று பொறுப்பு ஒதுக்கப்படுகிறது. 

திருவனந்தபுரத்தையே எடுத்துக் கொண்டால், இந்த மாவட்டம் சுமார் 320 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 320 பகுதிகளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியினர் சுழற்சி அடிப்படையில் உணவு விநியோகிக்க வேண்டும். இதன்படி பார்த்தால், ஒரு குடும்பத்தினர், வருடத்திற்கே ஒன்று அல்லது இரண்டு முறைதான் வாலிபர் சங்கத்தின் இருதயப்பூர்வம் திட்டத்திற்கு ஒன்றிரண்டு உணவுப் பொட்டலங்களை வழங்க வேண்டியது இருக்கும்’ என்கிறார் சுனில்குமார். இப்படித்தான் வாலிபர் சங்க பகுதிக்குழு நிர்வாகிகள், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தினத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வீட்டுக்கொரு உணவுப் பொட்டலத்தை தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். 

குறிப்பிட்ட நேரத்தில், தங்களால் முடிந்தவரை தரமாகத் தயாரித்த உணவுப் பொட்டலத்தை தயாராக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்கள் வாலிபர் சங்க தோழர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்...'ஒருமுறை பொட்டலம் தயாரித்துக் கொடுத்தவர்கள் வாலிபர் சங்கத் தோழர்களை அணுகி அடுத்து எப்போது உணவுப் பொட்டலம் தரவேண்டுமென்று ஆர்வத்தோடு கேட்பதுதான் கள அனுபவமாக இருக்கிறது’ என்கின்றனர் இப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தோழர்கள். ஒரே நாளிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட பொட்டலங்களை கொடுப்பவர்களும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இன்னும் சில பொதுமக்கள், மருத்துவமனைக்கே உணவுப் பொட்டலத்தை கொண்டு வந்து, வாலிபர் சங்க வாகனத்தில் ஒப்படைத்துச் செல்லும் அளவிற்கு மக்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் பெருகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வாலிபர் சங்கத்தின் இந்த முன்மாதிரித் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதை அறிந்த நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஊடகங்கள் இது சம்பந்தமான செய்திகளை ஆச்சரியத்துடன் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் எந்த ஒரு அமைப்பும் செய்யாத மிகப் பெரும் பணியை வாலிபர் சங்கம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக எழுதுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை இது பற்றி தனது ஊழியர்களை கேரளத்திற்கே அனுப்பி, ஒரு கள ஆய்வை நடத்தி, இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை அறிந்து தனது வியப்பையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

தனி ஒருவனுக்கு உணவில்லையேல் என்று வருந்தி ஆதங்கப்பட்ட தமிழ்க் கவி பாரதியாரின் கனவு நம் அண்டை மாநிலத்தில் நிறைவேறிக் கொண்டிருப்பது நிஜம். இதற்காக அந்த தன்னலமற்ற இளைஞர்கள் ஜகத்தை அழிக்கவில்லை தங்கள் ஈகோவை மட்டும் அழித்துக் கொண்டார்கள், அதுவும் தங்களுக்காக அல்ல, தன்னலமற்ற சேவைக்காக என்பது குறிப்பிடத்தக்கது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com