பலூன் வியாபாரி: கமலஹாசனுக்கு மூன்று கேள்விகள்!

சர்ச்சை நாயகன் கமலஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இருக்கிறது', என்று ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார்.
பலூன் வியாபாரி: கமலஹாசனுக்கு மூன்று கேள்விகள்!


சர்ச்சை நாயகன் கமலஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இருக்கிறது', என்று ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார்.

உண்மையில் இந்து தீவிரவாதம் என்ற ஒன்று இருக்கிறதா? அது எங்கிருந்து இயங்குகிறது? அதன் தலைவர் யார் என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்து தீவிரவாதத்தை கண்டறிந்த கமலஹாசன்தான் பதில் சொல்ல வேண்டும். கமலஹாசன் போன்ற அதிபுத்திசாலிகளுக்கு மதச்சார்பின்மை பற்றிய உண்மையான புரிதல் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் பேசும் அவரின் பேச்சுக்கள்தான் உண்மையிலேயே மத துவேஷத்தை கிளப்புகிறது.

தமிழகத்தில், இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவது பற்றிய கேள்விக்கு, கமலஹாசன் அளித்த பதில்:
‘கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இது தொடர்பாக சினிமா கலைஞர்களையும் ஜாதி வாரியாக பிரித்து, பட்டியலிடும் வேலையையும் அவர்கள் துவக்கிவிட்டனர். இதுவரை, வாதங்கள் செய்த விஷயங்கள் முடியாமல் போகவே வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர். ‘எங்கே ஓர் இந்து தீவிரவாதியை காட்டுங்கள்', என சவாலை அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவி இருக்கிறது. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை விட, வலிமையே வெல்லும் என்ற நம்பிக்கை, காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடும். சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக, தமிழகம் மாறும் நிலை, வெகு தொலைவில் இல்லை, இன்றைய நிலையில், கேரளா, முன்னுதாரணமாக திகழ்கிறது', என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

கமலஹாசன் அவர்களே உங்களிடம் மூன்று கேள்விகள்:

‘கலாசாரம், பண்டிகை, இறைவழிபாடு', என பல வழிகளில் பழமையை பரப்ப சிலர் முயன்று வருகிறார்கள்', என்று சொல்கிறீர்கள்.

இந்து பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகைக்கும் புதிய திரைப்படங்களை வெளியிட்ட போது அது பழமையை ஊக்குவிப்பதாக உங்களுக்கு தோன்றவில்லையா? அப்படி படம் வெளியிட்டவர்கள் பழமைவாதிகளா? கார்த்திகை மாதம் வந்தவுடன் சுவாமி ஐயப்பன் பற்றிய திரைப்படங்களும், ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் பற்றிய திரைப்படங்களும் வெளிவந்தபோது இந்த கருத்தை ஏன் சொல்லவில்லை? அப்போது இவையெல்லாம் ஜாதி, மத துவேஷமாக ஏன் உங்களுக்கு தோன்றவில்லை? ஆகையால் உலகை திருத்தும் முன், நீங்கள் சார்ந்த திரைப்படத் துறைக்கு இந்த போதனையை முதலில் தெரிவியுங்கள்.

கமலஹாசன் அவர்களே! ‘எங்கே ஓர் இந்து தீவிரவாதியை காட்டுங்கள்', என சவாலை அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவி இருக்கிறது', என்று சொல்கிறீர்கள். உங்கள் கருத்துப்படி பார்த்தால் தீவிரவாதம் என்பது மற்ற மதங்களில் ஏற்கனவே இருப்பது போன்றும், தற்போதுதான் அது இந்து மதத்திற்கும் வந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் வார்த்தைகளின் இடையே புதைந்திருக்கும் விஷயங்களுக்கு பதிலளிக்கும் கடமை எல்லா மதத்தினருக்கும் இருக்கிறது. அப்படியில்லாமல் அமைதி காப்பவர்களின் மதத்தில் தீவிரவாதம் இருக்கிறது என்று மக்கள் நம்ப வேண்டிய சூழல் ஏற்படும்.

கமலஹாசன் அவர்களே! ‘இன்றைய நிலையில், கேரளா, முன்னுதாரணமாக திகழ்கிறது', என்று சொல்லியிருக்கிறீர்கள். இது தொடர்பாக இன்றைய செய்திதாள்களில் வந்திருக்கும் ஒரு விஷயத்தை பார்ப்போம்.
கேரளத்தில் செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா', என்ற அமைப்புக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக ஸ்டிங் ஆபரேஷன் மூலம் ஒரு பிரபல செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மத மாற்ற தொழிற்சாலையாக பிஎப்ஐ விளங்குவதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்த ஆறு பேர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்த செய்தி இன்றைய செய்திதாள்கள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

‘லவ் ஜிகாத் என்ற பெயரில் கேரளாவில் தீவிரவாத செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கேரளாவை முஸ்லிம் மாநிலமாக்கவும், அங்குள்ள மக்களை அடிப்படைவாதிகளாக்கவும் ஏராளமான அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன', என்ற தகவல் சில மீடியா செய்திகள் மூலம் அம்பலமாகி இருக்கின்றன. ஹரியத் மாநாட்டு அமைப்பின் டேப்பில் உள்ள தகவல்களின் அடிப்படையில் காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு ஹவாலா பணம் சப்ளை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து என்ஐஏ நடவடிக்கை எடுத்து வருகிறது', என்ற தகவலை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இப்படி இருக்கும் கேரளாவிடமிருந்து தமிழகம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்? எதற்கு கேரளா முன்னுதாரணமாக இருக்கிறது? இந்துக்களை மத மாற்றம் செய்வது, ஹவாலா பண மோசடி, லவ் ஜிகாத்', என்ற பெயரில் கேரளாவில் தீவிரவாத செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன', என்ற குற்றச்சாட்டுகளுக்கு கமலஹாசன் என்ன பதில் சொல்லப்போகிறார்? இதுதான் சமூக சீர்திருத்தமா? மதச்சார்பின்மையா?

எது மதச்சார்பின்மை என்பது பற்றிய ஒரு குட்டிக்கதையை படிப்போம்

ஒரு அரசன். மக்கள் கூடும் இடத்திற்கு சென்றான்.

‘மக்களே! நம் நாடு மதக் கலவரங்கள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. இதற்கு காரணம் மதச்சார்பின்மை. நம்மில் யார் சிறந்த மதச்சார்பற்றவர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்போகிறேன்', என்ற அறிவிப்பை வெளியிட்டான்.

கூட்டத்திலிருந்து ஒருவன் எழுந்தான்.

‘அரசே! நான் ஒரு மதத்தைச் சார்ந்தவன். என்னுடைய மனைவி மற்றொரு மதத்தைச் சார்ந்தவர். நானே உண்மையான மதச்சார்பற்றவன்', என்றான்.

‘இருப்பது இரண்டு மதங்கள் மட்டுமல்ல! உன்னால் ஒவ்வொரு மதத்திலிருந்தும் ஒருவரை திருமணம் செய்ய முடியாமா? அதனால் நீ மதச்சார்பற்றவன் அல்ல', என்றான் அரசன். மற்றொருவன் எழுந்தான்.

‘அரசே! எல்லா மதத்தினருக்கும் சரி சமமாக தானங்கள் செய்கிறேன். நானே மதச்சார்பற்றவன்', என்றான் அவன்.

‘தானம் என்பது கொடுப்பவரின் மனமும், பெறுபவரின் தேவையும் சம்பந்தப்பட்டது. இதில் எப்படி மதம் நுழைந்தது? ஆகையால் தேவையின் அடிப்படையில் உதவிகளை செய். மதத்தை களமாக்காதே!' என்றான் அரசன்.

அடுத்ததாக ஒருவன் எழுந்தான். அவன் ஒரு பயங்கர கொலைகாரன்.

‘அரசே! நான் தான் உண்மையான மதச்சார்பற்றவன். எந்த பாகுபாடுமின்றி எல்லா மதத்தவர்களையும் கொன்றிருக்கிறேன்', என்றான் பெருமையோடு.

முறைத்தான் அரசன். ‘பிடியுங்கடா அவனை!' என்று கத்தினான் அரசன். கொலைகாரனை துரத்திக்கொண்டு ஓடினார்கள் காவலர்கள்.

‘அரசே! நமது வேப்பமர துறவிதான் மதச்சார்பற்றவர். பரிசை பெற அவர்தான் தகுதியானவர்', என்றான் ஒருவன்.

‘முட்டாளே! அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த துறவி. அவர் எப்படி மதச்சார்பற்றவராக இருக்க முடியும்?' என்று பொரிந்து தள்ளினான் அரசன்.

‘அரசே! என் பெயர் சப்பாணி. நான் தான் உண்மையான மதச்சார்பற்றவன். பாகுபாடுமின்றி எல்லா மத விழாக்களுக்கும் சென்றிருக்கிறேன். முடியும்வரை அங்கேயே இருந்து விழாக்களை சிறப்பித்திருக்கிறேன்', என்றான் மற்றொருவன்.

அரசர் மகிழ்ந்து போனார். பாராட்டினார். பொற்காசு மூட்டையை எடுத்தார். அப்போது கூட்டத்திலிருந்த சாது எழுந்தார். சப்பாணியிடம் சென்றார். விரல்களை மடக்கி மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார்.

‘ஆ . . . முருகா!' என்று அலறினான் சப்பாணி.

‘அரசே பார்த்தீர்களா! ‘ஆ . . . . கடவுளே! என்று பொதுப்படையாக இவன் அலறியிருந்தால் இவன் மதச்சார்பற்றவன். ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை சொல்லி கத்தியதால், இவன் மதச்சார்பற்றவன் அல்ல', என்றார் சாது.

‘அட ஆமாம்! ஆனால் இவன் எல்லா மத விழாக்களிலும் முழுமையாக கலந்து கொண்டிருக்கிறானே?' என்று கேட்டான் அரசன்.

‘அரசே! சப்பாணி ஒரு பலூன் வியாபாரி. இவனைப் பொறுத்தவரை பலூனை விற்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தில் வசதியாக வாழ வேண்டும். அதற்காக கூட்டம் கூடும் இடங்களிலெல்லாம் கடைவிரிப்பான். இது மக்கள் கூட்டம், பலூன், வருமானம் ஆகியவை சம்பந்தப்பட்டது. இதில் மதச்சார்பின்மை எங்கிருந்து வந்தது? இவன் சம்பாதிக்கும் பணத்திற்கு வேண்டுமானால் மதம் இல்லாமல் இருக்கலாம். அந்த பணத்தை மதச்சார்பற்ற பணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்', என்றார் சாது.

மீண்டும் சாது பேச்சை தொடர்ந்தார்.

‘அரசே! துறவி ஒரு குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமானவர். தன்னுடைய மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். ஆனால், மற்ற மதங்களை அழிக்க வேண்டும் என்ற சித்தாந்தம் இல்லாதவர். அடுத்த மதத்தவர்களின் சுதந்திரத்தில் நுழையாத ஒவ்வொருவரும் மதச்சார்பற்றவர். “என்னுடைய மதம் உயர்ந்தது. அதில் மற்ற மதத்தினர் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்பவனும், என்னுடைய மதத்தை விட மற்ற மதங்கள் எல்லாம் உயர்ந்தது என்று பேசுபவனும் குழப்பவாதிகள். அழிவு சக்திகள். இவர்களை அடையாளம் கண்டுகொள்வது அவசியம்', என்றார் சாது.

யார் மதச்சார்பற்றவர் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ! யார் குழப்பவாதி? யார் அழிவு சக்தி என்பது அரசனுக்கு தெரிந்தது. நாமும் இதை தெரிந்து கொள்வது அவசியம். இந்துக்களையும், இந்து மத வழக்கங்களையும் குறை சொல்பவர்கள் குழப்பவாதிகள். அழிவு சக்திகள்.

அடுத்தவர் மதங்களை கேவலப்படுத்துவது, தான் சார்ந்த மதத்தை கேவலப்படுத்துவது, ஓட்டுமொத்தமாக எல்லா மதங்களையும், கேவலப்படுத்துவது இவையெல்லாம் மதச்சார்பின்மை அல்ல. அசிங்க அரசியல். இப்படிப்பட்ட அசிங்க அரசியலைத்தான் சில காலமாக தமிழகத்தில் பார்க்கிறோம். இத்தகைய கூட்டத்தின் புதிய இணைப்பு திரு. கமலஹாசன்.

அடுத்த மதத்தை அசிங்கப்படுத்துவது இந்துக்களின் நோக்கமல்ல. அதே நேரத்தில் எங்கள் மதத்தின் உயர்வைச் சொல்லுவதில் எந்த தவறுமில்லை.

பக்கத்து மாநிலத்தின் சாக்கடையையும், அதன் துற்நாற்றத்தையும் மறைத்து, கும்மாளமிடும் கொசுக்களை புகழ்வது எந்த விதத்தில் சரி?

ஜனநாயகத்தின் பேச்சுரிமையை வில்லாக வளைத்து அடுத்தவர் மீது துவேஷ அம்புகளைச் செலுத்தும் போக்கு வருத்தத்திற்குறியது. இதைச் சொல்பவர் கருத்து கந்தசாமியாக இருந்தாலும் சரி, பலூன் கந்தசாமியாக இருந்தாலும் சரி, பதிலடி கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மதத்தினருக்கும் இருக்கிறது. குறிப்பாக இந்து மதத்தினருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அப்படிச் செய்தால் தான் கமலஹாசன் என்ற பலூன் வியாபாரி சொன்னதைப் போன்ற ஒரு தீவிரவாதம் எங்கள் வீடுகளில் இல்லை என்பதை உலகம் உணர்ந்து கொள்ளும்.

அன்புடன் சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com