பெண்களை தலைக்கவசம் அணியுமாறு சச்சின் வலியுறுத்தக் காரணம் இதுவாக இருக்குமோ?

கேரளாவில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தப் பெண்களை அழைத்து தலைக்கவசம் அணியுமாறு சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பெண்களை தலைக்கவசம் அணியுமாறு சச்சின் வலியுறுத்தக் காரணம் இதுவாக இருக்குமோ?


திருவனந்தபுரம்: கேரளாவில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தப் பெண்களை அழைத்து தலைக்கவசம் அணியுமாறு சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், சமீப காலமாக இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பார்க்கும் போதெல்லாம் தலைக்கவசம் அணியுமாறு வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியாவில் வாகன விபத்து குறித்த புள்ளி விவரம் அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துக்கள் 4.1% குறைந்திருப்பதாகவும், அதே சமயம், சாலை விபத்துகளால் நேரிடும் உயிரிழப்புகள் 3.2% ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், 2017ம் ஆண்டின் முதல் பாதி வரையிலான புள்ளி விவரங்களில், சாலை விபத்துகள் 3% குறைந்திருப்பதாகவும், உயிரிப்புகளும் 4.75% குறைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே, மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அதுவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வேகமாகப் பரவுவதால் சச்சின் இந்த வழியைக் கையாண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நான்காவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் கேரளாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனை அழைக்கச் சென்றார் சச்சின் டெண்டுல்கர்.

நவம்பர் 17ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க வருமாறு கடவுளின் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனை அழைக்கச் சென்ற டெண்டுல்கர், காரில் சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண்களை அழைத்து தலைக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் ஒரு விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், அவர், சாலையில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களை அழைத்து 'நீங்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்று சைகைக் காண்பிக்கிறார். சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சச்சின், தன்னுடன் சாலையில் செல்லும் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர்களை அழைத்து தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருக்கும் விடியோவுடன், "வாகனத்தை இயக்குபவரோ, பின்னால் அமர்ந்திருப்பவரோ இருவரது உயிர்களுமே சமம்தான். எனவே தயவு கூர்ந்து ஹெல்மெட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்" என்று கருத்துக் கூறியுள்ளார்.

அதோடு அவர் அந்த விடியோவில், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியுங்கள். ஏன், வாகனத்தை ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் அணிய வேண்டும். அங்கு நான் பார்த்த இரண்டு பெண்களுமே ஹெல்மெட் அணியவில்லை. இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஓட்டுநருக்கு அடிபடும் என்றால் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் தானே அடிபடும். எனவே எப்போது இரு சக்கர வாகனத்தில் சென்றாலும் ஹெல்மெட் அணியுங்கள் என்று தெரிவித்தார்.
 

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சச்சின் வலியுறுத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஒரு விடியோவில், வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சச்சினுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டனர். அப்போது அவர்களை அழைத்து சச்சின், இனிமேல் ஹெல்மெட் அணிவோம் என்று உறுதி மொழி அளிக்க வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் கேரளாவில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, கொச்சியில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com