தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் எங்கிருந்து தோன்றப்போகிறார்?

தமிழகம் ஒரு தனித்துவம் மிக்க வலிமையான தலைமைக்காக ஏங்கிக் கிடப்பதென்னவோ நிஜம் தான். ஆனால், அந்த வலிமை வாய்ந்த தலைமையை தீர்மானிக்கும் சக்தி எதுவென்பது தான் இன்றுள்ள சூழலில் புரியாத புதிர்!
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் எங்கிருந்து தோன்றப்போகிறார்?

தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் எங்கிருந்து தோன்றப்போகிறார்?

சாதிக்கு சிறு தெய்வம், சாதி உட்பிரிவுக்கு குல தெய்வம், மதத்துக்குப் பெரு தெய்வம் என முக்காலமும் சாதியைப் பேணும் நாம் சாதி அரசியலை எங்கனம் ஒழிக்கக் கடவோம்?!

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் நமது தெய்வ வழிபாட்டு முறைகள் இப்படித்தான் இருக்கின்றன. எவரொருவரும் அவரது சாதியை வெளிப்படையாகக் கூறத் தேவையே இல்லை. அவரவர் குலதெய்வங்களின் பெயரைச் சொன்னாலே போதும், இன்னின்னவர் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர் என்றும், குறிப்பிட்ட சாதியில் இன்ன உட்பிரிவைச் சேர்ந்தவர் என்றும் எளிதாக அடையாளம் கண்டுவிடுவார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, தெய்வ வழிபாட்டையும் அது சார்ந்த ஆன்மீக ஒழுங்கியல் கட்டுப்பாட்டு முறைகளையும் மத குருமார்கள் வாயிலாக மட்டுமே நிகழ்த்திக்கொள்ள முடியும் என்று தொன்றுதொட்டு நம்பப்படுவதால் ஒவ்வொரு சாதியிலும், மதத்திலும் தனித்தனியாக ஆன்மீக குருக்கள் எனப்படுபவர்கள் தனிச் செல்வாக்குமிக்கவர்களாக மாறிவிடுகிறார்கள். சாதிக் கட்டமைப்பில் இப்படியொரு வலுவான பின்புலத்தை வைத்துக்கொண்டு நாம் எப்போது, எப்படி சாதிகளை ஒழிக்க முடியும்? சாதிகளை ஒழிக்க முடியாத வரை நம்மால் எக்காலத்திலும் சாதி அரசியலையும் ஒழிக்க முடிந்ததில்லை. 

கடந்த வருடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கையில், பிரபல தனியார் வார இதழ் ஒன்று தமிழகம் முற்றிலும் மறுமலர்ச்சியை அளிக்கவல்ல ஒரு மாபெரும் தலைவனுக்காக காத்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அட்டைப்படம் வெளியிட்டது. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் இன்னும் அந்த அட்டைப்படத்தோடுதான் நிற்கின்றன. ஏனெனில் நாம் எல்லாவற்றையும் சாதியோடும், மதத்தோடும் முடிச்சுப் போட்டு மட்டுமே அடையாளம் காணவும், குற்றம், குறைகள் கண்டுபிடிக்கவும் பழகி விட்டோம்.

அஇஅதிமுகவின் வலிமை வாய்ந்த தலைமையான ஜெயலலிதா மரணித்துவிட்டார், கலைஞர் இன்று ஒரு வயோதிகக் குழந்தை... இருவருக்கும் சிறந்த மாற்றாக ஒரு பொழுதில் கருதப்பட்ட விஜயகாந்த் திகைத்துக் குழம்பி ஓய்ந்து போனார். அவர் மீதும் தெலுங்கர் என்ற குற்றச்சாட்டு இல்லாமலில்லை. நாம் தமிழர் சீமான் முதல் இயக்குனர் இமயம் பாரதிராஜா வரை ‘தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என்று சலங்கை கட்டிக்கொண்டு கூத்தாடாத குறை! தேர்தலுக்குத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் மாற்றி, மாற்றி கூட்டணி வைத்த மருத்துவர் ராமதாஸையும், சிறுத்தைகளையும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக எண்ணி மக்கள் ஓரங்கட்டி விட்டனர். அம்மாவின் ஆட்சி என்று கட்டியம் கூறிக்கொண்டு இன்று நம்மை ஆள்பவர்களின் அதிகாரமும் கூட மக்களிடத்தில் அவர்களுக்கிருந்த சொந்த செல்வாக்கில் கிட்டியதல்ல என்பது தமிழகத்தில் சிறு குழந்தைகளுக்கும் தெரியும். இப்படி ஒரு சூழலில் தமிழகம் ஒரு தனித்துவம்மிக்க வலிமையான தலைமைக்காக ஏங்கிக் கிடப்பதென்னவோ நிஜம்தான். ஆனால், அந்த வலிமை வாய்ந்த தலைமையை தீர்மானிக்கும் சக்தி எதுவென்பது தான் இன்றுள்ள சூழலில் புரியாத புதிர்!

காந்திஜியை பனியா என்கிறார் அமித்ஷா. பெரியாரைத் தெலுங்கர் என்கிறார்கள் அவரை விமர்சிக்கும் பலர். எம்ஜிஆரை மலையாளி என்போர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை பிராமணப்பெண் என்றோரும் இல்லாமலில்லை. அந்த வரிசையில், சமீப காலமாக தமிழக அரசியலில் தமக்கான இடத்தை உறுதி செய்ய பேரார்வமாகப் புறப்பட்டு வந்த கமல்ஹாசனை பார்ப்பனர் என்று பலர் சாடும் குரல் உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது. அம்பேத்கரை தலித் என்போர் இருக்கும்வரையில் இனி அரசியலில் காலடி எடுத்துவைக்க நினைக்கும் எவருமே சாதி அடையாளத்துடனோ அல்லது மத அடையாளத்துடனோதான் வரவேற்கப்பட்டாக வேண்டிய கட்டாய நிலை இன்று நேற்றல்ல பல காலமாகவே இந்தியாவின் தலையெழுத்து என்றாகிவிட்டது. ஆம், இந்தியாவில்... ஒவ்வொரு மாநில அரசியலிலுமே சாதியும், மதமும்தான் வலிமையான பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் சாதி அடையாளம் துளியுமின்றி தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் எங்கிருந்து தோன்றப்போகிறார்? என்பது மட்டும் புரியாத புதிர்.

தலைவா, தெறி, மெர்சல் என விஜய்க்கும் அரசியல் ஆசை துளிர்க்கத்தான் செய்கிறது. துளிர்க்கும்போதெல்லாம் தளபதி விஜய், ஜோசப் விஜய் ஆக்கப்பட்டுவிடுகிறார்.

‘தலைவா’ என்று திரைப்படங்களில் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் நிஜ வாழ்விலும் மனதாரப் பலராலும் தலைவா... சூப்பர் ஸ்டார் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடப்படும் ரஜினியை, அவருக்கு அரசியல் ஆசை வந்தால் போதும், உடனே ‘கன்னடத்தான்’ என்று தூஷிக்கத் தொடங்கி விடுகிறார்கள். 

நேற்று தனது பிறந்த நாள் விழாவின்போது, ‘நான் பிறந்த குலத்தை விட்டே விலகி வந்தவன் என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார் கமல். நம் மக்களா ஏற்றுக்கொள்வார்கள்! ஒருவேளை சாதாரண மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அவர்களைக் குழப்பி, சாதி, மத ரீதியிலான சஞ்சலங்களுக்கு சதா தூபம் போடக் காத்திருக்கும் சாதி, மதக் காவலர்கள் அவரது அரசியல் வெற்றியை எளிதாக ஈடேற விட்டு விடுவார்களா என்ன?

இந்திய அரசியலில் நாட்டின் முதற்குடிமகனான ஜனாதிபதி தேர்தல் முதல் கடைநிலைப் பதவியான உள்ளூர் வார்டு மெம்பர் பதவி வரை எல்லாத் தேர்தல்களிலும் சாதியும் மதமும் இல்லாமல் இருந்ததில்லை. இதையும் ஒரு ஆரோக்யமான போட்டி என்றே எடுத்துக்கொண்டு களமாடி வெற்றிபெற்றால் அவர்களுக்குத் தரலாம் தன்னிகரற்ற தலைவர் பதவியை.

அப்படி வந்தவர்கள்தானே நம் தலைவர்கள் அத்தனை பேரும்.

இந்திரா காந்தி குறித்த கட்டுரை ஒன்றில் வாசிக்க நேர்ந்தது, அதில் ‘இந்திரா காந்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கையில் அண்டை நாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக பதவிமுறைப் பயணமாக ஆப்கனுக்குச் சென்றார். சென்றவர், அங்கு மாமன்னர் பாபரின் கல்லறை நினைவு மண்டபம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அறிந்துகொண்டு, இந்திய அரசின் ஒப்புதல் எதையும் பெறாமல், இந்திய அரசுக்கே அறிவிக்காமல் தனது பாதுகாவலருடன் சென்று சில நிமிடங்கள் கனத்த அமைதியுடன் தியானத்துவிட்டு வந்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாபர், ஆப்கானிஸ்தானில் இருந்து படை கொண்டுவந்து இந்தியாவை வென்ற முகலாய அரசர். அவரது கல்லறையில் ஏன் இந்திரா காந்தி தியானம் செய்ய வேண்டும்? அப்படியானால், இவர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக ஊடுருவிய முகமதியக் கூட்டத்தாரின் வழித்தோன்றல்களே என்பது இப்போது நிரூபணமாகிறதா? என்று கேள்வி எழுப்பப் பட்டிருந்தது அக்கட்டுரையில்.

இந்திரா காந்தி, பாபரின் கல்லறைக்குச் சென்றாரா? தியானித்தாரா? இல்லையா? என்பதல்ல இங்கு பிரச்னை. இந்திய அரசியல்வாதிகள், அவர்கள் ஆண்களோ, பெண்களோ எவராயினும் சரி, அவர்களைத் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நொடியிலும் மக்கள் உற்றுக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

சாதி ரீதியாக ராஜாஜியின் மீது வைக்கப்படாத தூஷனைகளா?

கல்விக் கண் திறந்த காமராஜரைக்கூட இன்று ஒரு சாதிக்கு மட்டுமே உரிமையான நபராக்கி ‘நாடார்’ என்று சுருக்கப் பார்க்கிறார்கள். இதைச் செய்வது எதிரிகளல்ல, அந்தந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களேதான்!

இப்படி நாம் தலைவர்கள் எனப் பள்ளிக்காலத்தில் கொண்டாடிய தலைவர்கள் அத்தனை பேரையும், நாம் வளர்ந்து நடுவயது தாண்டியதும், கண்டதையும் வாசித்துவிட்டு, நமக்கேதோ உலக ரகசியங்கள் அனைத்தும் தெரிந்துவிட்டதாக கருதிக்கொண்டு, அவர்களை எல்லாம் சாதியவாதிகளாக அடையாளம் காணத் தொடங்கினால் முடிவில் என்ன மிஞ்சும்?!

  • முத்துராமலிங்கத் தேவர், முக்குலத்தோர் சமூகத்துக்கு மட்டுமே சொந்தம்;
  • வீரபாண்டிய கட்டபொம்மன், கம்பளத்து நாயக்கர்களுக்கு மட்டுமே சொந்தம்;
  • வ.உ.சிதம்பரனார், சைவ வேளாளர்களுக்கு  மட்டுமே சொந்தமானவர்;
  • வீரன் அழகு முத்துக்கோன், கோனார்கள் அல்லது யாதவர்களின் தலைவர்;
  • ரெட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர்களுக்கு மட்டுமே தலைவர்;-

என்றெல்லாம் அந்தந்த சாதிகளுக்கு உரியவர்களே தங்களது சுயலாபங்களுக்காக அந்தந்த தலைவர்களின் சாதிகளையும், மதங்களையும் அளக்கத் தொடங்கினால், பிறகெப்படி சாதியும், மதமும் ஒழியும்?!

தங்கள் மீது சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளி, மேலே குறிப்பிடப்பட்ட தலைவர்கள் அனைவரும் தங்களது சாதி, மத அடையாளங்களைத் தாண்டியும் தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர்கள்.

அப்படியோர் தலைவர், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் எங்கிருந்து தோன்றப்போகிறார்?

இன்று தமிழ்நாட்டிலிருக்கும் ஏழரைக் கோடி மக்களின் ஒருமித்த கேள்வி இது ஒன்றே!


Image courtesy: science daily.com. google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com