கமல் அவர்களே! முதலில் உருப்படியான யுக்தியைக் கையாளுங்கள்... பிறகு ஊழலை ஒழிக்கப் பா(டு)ட்டுப் பாடலாம்!

கடவுள் அனுக்கிரகத்தால் விண்வெளியில் கால் வைத்தேன் என்று சொன்ன நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு இல்லாத பகுத்தறிவு கமலஹாசனிடம் மட்டும் இருக்கிறதா? பகுத்தறிவு' என்பது மனிதனை விலங்குகளிடமிருந்து
கமல் அவர்களே! முதலில் உருப்படியான யுக்தியைக் கையாளுங்கள்... பிறகு ஊழலை ஒழிக்கப் பா(டு)ட்டுப் பாடலாம்!

ஒருவரைப் பார்த்து நீங்கள் ஆத்திகரா? நாத்திகரா? என்ற கேள்வி கேட்டால் எத்தகைய பதில் கிடைக்கும்? பதிலளிப்பவர் ஆத்திகராக இருந்தால் ‘ஆத்திகர்', என்று சொல்லுவார். நாத்திகராக இருந்தால், ‘நாத்திகர்', என்று சொல்லுவார். இந்த இரண்டையும் சாராதவராக இருந்தால், ‘அக்னோஸ்டிக் ' என்று சொல்லுவார். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாத, கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியாத நிலை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் எதுவுமே புரிந்திராது ஆனால் எல்லாம் புரிந்திருப்பது போலவும், எல்லாம் புரிந்திருக்கும் ஆனால் எதுவுமே புரிந்திராதது போலவும் ஒரு ஒரு மனநிலை வாய்த்தால் அவர்களைத் தான் ‘அக்னோஸ்டிக்’ என்பார்கள்.

கமலஹாசனைப் பற்றி கட்டுரை எழுதலாம் என்றெண்ணியவுடன் வார்த்தைகள் இப்படித்தான் கும்மாளமடிக்கின்றன. உண்மையான அக்னோஸ்டிக்கு, ‘கடவுள் இல்லை', என்ற நிலையையும், ‘கடவுள் இருக்கிறார்', என்ற நிலையையும் சம தூரத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவம் அவசியம். ஆனால், உலகத்தின் பெருவாரியான அக்னோஸ்டிக்குகள், நாத்திகர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல். அப்படிப் பார்த்தால் அக்னோஸ்டிக்கள் நாத்திகர்கள் ஒளிந்துகொள்ளும் ஒரு கூடாரம் என்று கூடச் சொல்லலாம். நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயத்தைப் பொறுத்தவரை, ஆத்திகர், நாத்திகர், அக்னோஸ்டிக்', என்ற மூன்று நிலைதான் இருக்க முடியும். ஆனால், நேற்று கமலஹாசன், ‘ஒரு சிலர் என்னை நாத்திகன் என அழைப்பதை நான் ஏற்கவில்லை. நான் ‘பகுத்தறிவாளன்', என்று பேசியிருக்கிறார். 

கமலஹாசன் ஆத்திகரல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காகத் தன்னை ‘நாத்திகர்’ என்று மற்றவர்கள் அழைப்பதையும் தான் ஏற்கவில்லை என்கிறார். பகுத்தறிவுக்கும் இறை நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் பகுத்தறிவுவாதிகள் அல்ல! என்று சொல்கிறாரா கமலஹாசன்? கடவுள் அனுக்கிரகத்தால் விண்வெளியில் கால் வைத்தேன் என்று சொன்ன நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு இல்லாத பகுத்தறிவு கமலஹாசனிடம் மட்டும் இருக்கிறதா? பகுத்தறிவு' என்பது மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்துவதற்காக அறிவியல் சான்றோடு சொல்லப்பட்ட பதம். இவர் பகுத்தறிவாளர் என்றால், மற்றவர்கள் விலங்குகளா? ஆகையால், பகுத்தறிவாளர்கள், இறை நம்பிக்கையற்றவர்கள் என்று கண்மூடித்தனமாக நினைத்துக் கொள்ளக்கூடாது. பகுத்தறிவாளர் என்ற பட்டம் யாரோ ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல.

நேற்று, ‘உங்களுக்கு பிராமண சமூகம் உதவுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?', என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
பிராமண சமுதாயத்தை தேடி நான் சென்றது இல்லை. பாலச்சந்தர் என்னை அறிமுகபடுத்தியது தவிர வேறு எதுவும் அங்கிருந்து பெற்றது இல்லை. என்னை அவர்கள் தான் இந்து விரோதி என்கிறார்கள். ஒரு சிலர், என்னை நாத்திகன் என அழைப்பதை நான் ஏற்கவில்லை. நான் பகுத்தறிவாளன். பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. என்னை இந்து மத விரோதி என்று விமர்சிக்கின்றனர். நான் இந்து மத விரோதி இல்லை. என்னை பிராமணர்களும் ஏற்க வேண்டும். அல்லாதவர்களும் ஏற்க வேண்டும்', என்று பதிலளித்தார்.

திரு கமலஹாசன் அவர்களே! இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் என்ற மேதையை ஒரு குருவாகத்தான் இத்தனை காலம் நீங்கள் பார்த்தீர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், ‘பாலச்சந்தர் என்னை அறிமுகபடுத்தியது தவிர வேறு எதுவும் அங்கிருந்து பெற்றது இல்லை', என்று சொல்வதன் மூலம், திரு. பாலச்சந்தரை பிராமணப் பிரதிநிதியாகத்தான் இத்தனை காலம் பார்த்திருக்கிறீர்கள்... என்பதை எங்களால் யூகிக்க முடிகிறது.

‘பிராமண குலத்திலிருந்து விலகி வந்தவன்’ என்பதைப் பெருமையோடு சொல்கிறீர்கள். பிராமணர்களை ஏற்கக்கூடாது என்று மக்கள் என்றுமே நினைத்தது கிடையாது. இதற்கு மறைந்த எம்ஜிஆரும், செல்வி. ஜெயலலிதாவும் உதாரணங்கள். அவர்கள் தங்களை மனிதர்கள் என்று மட்டுமே நினைத்தார்கள். தங்கள் குலத்திலிருந்து விலகி வந்துவிட்டேன் என்று ஒரு போதும் அவர்கள் சுட்டிக்காட்டியது கிடையாது.

அரசியலில் கால் வைத்தவர்கள் எவரேனும், எப்போதேனும், தங்களுக்குரிய ஜாதியிலிருந்து விலகிவந்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்களா? ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? மக்களின் அன்பைப் பெற்றவர்களை அரசியல் களம் என்றுமே நிராகரிப்பதில்லை. அரசியல் ஆதாயத்திற்காக எங்கிருந்தும் விலகி வரவேண்டிய அவசியமுமில்லை.
‘நான் பிராமணன் அல்ல’ என்று சொல்வதால் எத்தகைய ஆதாயம் கிடைக்கும்? என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுடைய இந்தப் பேச்சு தேவையற்ற ஜாதிய விதைகளை மக்கள் மனத்தில் விதைக்கிறது.

ஒரு குட்டிக்கதை சொல்கிறேன்... கேளுங்கள்;

ஒரு அரசன், நகரில் நடந்து கொண்டிருந்தான்... செல்லும் பாதையில் ஒரு கோவில்... பக்கத்தில் ஒரு குளம்... குளக்கரையின் படியில் சந்தனம் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அரசன் மனத்தில் அருவருப்பு ஏற்படவே... ‘த்தூ...' என எச்சிலைத் தரையில் உமிழ்ந்துவிட்டு நகர்ந்தான். பக்கத்தில் இருந்த மந்திரி, அரசன் எதற்கு உமிழ்ந்தான்? என்று தெரியாமல் அவனும் உமிழ்ந்தான். அதைப் பார்த்த சேவகன் அவன் பங்கிற்கு தானும் உமிழ்ந்தான். இதைப் பார்த்தவர்களான அங்கிருந்த அத்தனை மனிதர்களும் அதே இடத்தில் தொடர்ந்து உமிழ்ந்த் விட்டு சென்றனர்.
ஒரு நாள் திடீரென்று அரசன் நோய்வாய்பட்டான். நாட்டிற்கு புதிய அரசனை தேர்ந்தெடுக்க முடிவு செய்தான் அரசன். தகுதியுள்ளவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினான். அதில் பலர் கலந்து கொண்டனர். அதில் சப்பாணியும் ஒருவர்.
‘நீ அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வாய்?' என்று கேட்டான் அரசன்.
‘நான் நேர்மையாக நடப்பேன்', என்றான் சப்பாணி.
‘இதைத் தான் எல்லோரும் சொல்கிறார்கள். வேறு ஏதாவது தகுதி உன்னிடம் இருக்கிறதா?' என்று கேட்டான் அரசன்.
‘நான் ஊழலை ஒழிப்பேன்', என்றான் சப்பாணி.
‘இதையும் எல்லோரும் சொல்கிறார்கள். வேறு என்ன தகுதி உன்னிடம் இருக்கிறது', கேட்டான் அரசன்.
‘நாட்டின் மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. அங்கே தவறு நடக்கிறது, இங்கே தவறு நடக்கிறது', என்று ஒரு பட்டியலை அரசனிடம் கொடுத்தான் சப்பாணி.
இதைத் தானே எல்லோரும் செய்கிறார்கள். உன்னிடம் வேறு என்ன தகுதி இருக்கிறது?
யோசித்தான் சப்பாணி
‘அரசே! தினமும் குளக்கரைக்குச் செல்கிறேன். உங்களுக்கு பிடித்தது போல் குளக்கரையில் காரி உமிழ்ந்து வருகிறேன்', என்றான்.
புருவங்களை உயர்த்தினான் அரசன்.
‘காரி உமிழ்வது எனக்குப் பிடிக்கும் என்று யார் சொன்னது? அன்று ஏதோ அருவருப்பில் செய்தேன். அதை அப்போதே மறந்துவிட்டேன். காரி உமிழ்வதெல்லாம் ஒரு தகுதியா? அடுத்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது ஒரு சாதனையைச் செய். பிறகு அரச பதவிக்கு ஆசைப்படு', என்று சொல்லி அனுப்பினான் அரசன்.
கதையில் வரும் அரசன் தான் இன்றைய தமிழக மக்கள். அக்ரஹாரங்கள் முற்றிலும் அழிந்துவிட்ட இன்றைய காலத்தில் இன்னும் மக்கள் பிராமணர்களை வெறுக்கிறார்கள் என்ற ஒரு மாயத் தோற்றத்தை கமலஹாசனின் பேச்சு மறைமுகமாக ஏறபடுத்துகிறது.

திரு. கமலஹாசன் அவர்களே! மக்கள் மனத்தில் இடம் பிடிக்க ஏதாவது உருப்படியான யுக்தியை கையாளுங்கள். எல்லா ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாகப் பாவிக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்படியில்லாமல், ஒரு ஜாதியினரையோ, ஒரு மதத்தினரையோ அசிங்கப்படுத்தினால் ஆதாயம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டால், ‘என் பெயர் கோபால கிருஷ்ணன்’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டு திரிய வேண்டியதுதான். உங்கள் மனதின் ஊனம் உங்களை சப்பாணியாகவே மற்றவர்களைப் பார்க்க வைக்கும்.    

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

Image courtesy: Zee news.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com