உலகப் புகழ் பெற்ற 3 பெண் உளவாளிகள் யார் என்று தெரியுமா!

எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிச் செல்வதுதான் எதிரியிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான
உலகப் புகழ் பெற்ற 3 பெண் உளவாளிகள் யார் என்று தெரியுமா!

எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிச் செல்வதுதான் எதிரியிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும், உளவுத் துறையின் மிக முக்கியமான வேலை ஒற்று அறிவதுதான். எதிரி முகாமின் அளவு, வலிமை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உளவாளிகளால் தான் கொண்டு வர முடியும். நூற்றாண்டு காலமாக ஆண்களைப் போல பெண்களும் உளவுத் துறையில் சிறந்து விளங்கியுள்ளார்கள். சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று பெண் உளவாளிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

நூர் இனாயத் கான் (Noor Inayat Khan)

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத். நோரா பேக்கர் என்று ஜெர்மனியரால் அறியப்பட்ட இந்திய இளவரசி ஆவார்.

பிரான்ஸ் நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்த சமயத்தில், அங்கு உளவுப் பணிக்காக நூர் அனுப்பப்பட்டார். 1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற வேறொரு பெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் தொடங்கினார். தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கிய நூர் அவ்வப்போது முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு ரேடியோ செய்திகளாக  அனுப்பி வந்தார்.

நூரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு, திடீரென்று அவரைக் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர் நாஜிப் படையினர். பலவிதமான சித்திரவதைக்கு உட்படுத்தி உண்மையைக் கூறும்படி துன்புறுத்தப்பட்டும் நூர் தான் சார்ந்த எந்தவொரு தகவலையும் சொல்ல மறுத்தவிட்டார். இதற்கு மேல் வதைக்கமுடியாது எனும் நிலையில் நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனாயத் கானின் வயது 30 தான். போர்க்கள வீராங்கனை (War Hero) என்ற புகழுடன் நூர் நினைவுக் கூறப்படுகிறார். இறக்கும் தருவாயில் நூர் கூறிய கடைசி வார்த்தை ‘லிபர்த்டே’ (விடுதலை).

நூர் இனாயத் கான் பற்றிய புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘ஸ்பை பிரின்ஸஸ்’ என்ற தலைப்பில் அதை எழுதியவர் சப்ரானி பாசு. பிரின்ஸஸ் ஸ்பை என்ற ஆவணப்படமும் அவரைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

அன்னா சாப்மேன் (Anna Chapman)

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் நாயகியைப் போல் தோற்றம் அளிக்கும் அன்னா சாப்மேன் ரஷ்யாவை பூர்விமாகக் கொண்டவர். அழகில் மட்டுமல்ல, அறிவுக் கூர்மையும் அன்னாவின் சொத்து. நியூயார்க்கில் அவர் வாழ்ந்த சமயத்தில் அவரது ஐக்யூ 162 என்று கண்டறியப்பட்டது.

27, ஜூன் 2010-ம் ஆண்டு அன்னா சாப்மேன் அமெரிக்க படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் ஒன்பது பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு உளவுத் துறையின் கீழ் இயங்கும் எஸ்விஆர் (Sluzhba Vneshney Razvedki) என்ற அமைப்பிற்காக உளவு வேலை செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார் அன்னா. பின்னர் அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடெனுக்கு தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார் அன்னா. ஸ்னோடென், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று அன்னா சாப்மேன் கேட்டுள்ளார். இதற்கு பதில் வராத நிலையில், எனது குழந்தைகளை பார்த்துக் கொள்வீர்களா? என்று அன்னா கேட்டுள்ளார். இதற்கும் ஸ்னோடென் பதில் அளிக்கவில்லை.

நாடு கடத்தப்பட்டும் அன்னாவின் இத்தகைய பதிவுகளால் அமெரிக்க ராணுவம் அது உண்மையில் அன்னாவின் டிவிட்டர் கணக்கா என்று ஆராய்ச்சி செய்தது. இதுவரை அது குறித்து அவர்களிடம் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாத்தா ஹரி (Mata Hari)

மாத்தா ஹரியின் இயற்பெயர் மார்கரெத்தா கீட்ருய்டா ஸெல்லி. நெதர்லாந்தில் ஆகஸ்ட் 7, 1876-ம் ஆண்டு பிறந்தவர்.  இவர் ஆண்களின் காதல் பார்வைக்கும் பெண்களின் பொறாமைக்கும் உள்ளான பேரழகி.

18 வயதில் மார்கரெத்தா டச்சு கேப்டன் ருடால்ஃப் மெக்லியோட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 20 வருடங்கள் வயது வித்தியாசம். மண வாழ்க்கை கசந்து கணவரைப் பிரிந்தார் அவர். பாரீஸ் சென்று ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். சர்க்கஸில் குதிரை ஓட்டும் பெண், ஓவியர்களுக்கு மாடல் என வெவ்வேறு பணிகளைச் செய்தார். அவரது அழகு தான் அவருக்கு எதிரியாக இருந்தது.

எதிலும் நிலைத்திருக்க இயலாமல் கடைசியாக நடன மங்கையானார் மார்கரெத்தா. இத்துறை அவரைக் கைவிடவில்லை. காரணம் அழகியலுடன் கவர்ச்சியும் கைகோர்த்து அவரது நடனம் உலகப் புகழ்ப்பெற்றுவிட்டது. தன்னுடைய பெயரை மாத்தா ஹரின் என்று மாற்றி வைத்தார் மார்கரெத்தா. அவரோடு பழகுவதற்கு ஐரோப்பாவின் செல்வாக்கு மிக்கவர்கள் போட்டி போட்டனர். 1905-ல் ஆரம்பித்த அவருடைய நடனப் பயணம், 1915 வரை தொடர்ந்தது. வீழ்த்தியது. முதல் உலகப் போரின் போது ஜெர்மனியை உளவு பார்க்க பிரான்ஸ் மாத்தா ஹரியின் உதவியை நாடியது.

போரின் இறுதிக் கட்டத்தில் அவர் ஜெர்மனியின் உளவாளியாக இருப்பாரோ எனச் சந்தேகித்த பிரான்ஸ், அவரைக் கைது செய்தது. 1917-ம் ஆண்டு அக்டோபர் 15-ல் மாத்தா ஹரி சுட்டுக் கொல்லப்பட்டார். அழகிய உளவாளியான மாதாவின் மரணம் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மனத் துயரை அளித்தது.

ப்ரான்ஸில் வாழும் தமிழ் எழுத்தாளர் நாகரத்னம் கிருஷ்ணா மாத்தா ஹரி பற்றிய புத்தகம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com