கமல் அவர்களே! இதென்ன புதுக்கதை... வீர பாண்டிய கட்டபொம்மன் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லையா?

தனியார் வார இதழில் கமல் ஹாசன் எழுதி வரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் இன்றும் ஒரு குழப்பத்துக்கு வித்திட்டுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பட்டியலில் நாம்
கமல் அவர்களே! இதென்ன புதுக்கதை... வீர பாண்டிய கட்டபொம்மன் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லையா?

தனியார் வார இதழில் கமல் ஹாசன் எழுதி வரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் இன்றும் ஒரு குழப்பத்துக்கு வித்திட்டுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பட்டியலில் நாம் இன்றும் பெருமை பேசும் கட்டபொம்மனை சுதந்திரப் போராட்ட வீரராக எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்வது எனப் பொருள்படும்படி ஓரிரு வரிகள் அந்தக் தொடரில்அவரால் சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் அடங்கி இருக்க மாட்டோம் எனும் சுதந்திர உணர்வு கொண்டவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்களன்றி வேறு யார்? இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 56 குட்டிக் குட்டி பிரதேசங்களாகச் சிதறுண்டு இருந்ததாக இன்று புத்தகங்களில் வாசிக்கிறோம். அது இன்றைய நமது பார்வை. ஆனால் அன்று, அது ஒவ்வொன்றும் ஒரு தனிப்பெரும் தேசமாகத்தான் அதனதன் தலைவர்களால் கருதப்பட்டது. 

வட இந்தியாவை விட்டுத்தள்ளுங்கள். தெற்கில் கட்டபொம்மன் பாளையங்குறிச்சியை ஆண்ட காலத்தில் இங்கே இன்னும் பல சிறு, குறு அரசுகள் இருந்தனவே... கட்டபொம்மனுக்கு முன்பே நெற்கட்டும்சேவலில் பூலித்தேவர் இருந்தார். கட்டபொம்மனின் இணைக்காலத்தில் சிவகங்கையில் மருது சகோதரர்கள் இருந்தார்கள், கொங்கு நாட்டில் தீரன் சின்னமலை இருந்தார். இவர்களெல்லாம் அப்போது அவர்கள் வாழ்ந்த பிராந்தியங்களில் சுதந்திர வேட்கையை முன்னெடுத்திருக்கா விட்டால் எங்கிருந்து கிளர்ந்தெழுந்திருக்கக் கூடும் அன்றைய நம் மக்களின் சுதந்திர உணர்வு?! அன்று அவர்கள் வித்திட்டிருக்காவிடில், அதை அன்றைய மக்கள் தெருக்கூத்துக்களாகவும், மேடை நாடகங்களாகவும், நாட்டார் கதைப்பாடல்களாகவும், திரைப்படங்களாகவும் எடுத்து அவர் தம் பெருமைகளை நாடறியச் செய்திரா விட்டால் இந்திய சுதந்திரத்துக்கான மூலவிதை தென்னகத்தில் எங்கிருந்து முளைவிட்டிருக்கக் கூடும்? அவர்களைப் போய் வெள்ளைக்காரர்கள் வரி கேட்டதால் ‘ராஜாவையே வரி கேட்கிறாயா? என்று ஈகோவில் கட்டபொம்மன் அவர்களுடன் யுத்தத்திற்கு கிளம்பி விட்டார் என்ற தொனியில் எழுதி இருக்கிறீர்கள்?! அது மட்டுமல்ல, அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிற்றரசுகள், பாளையக்காரர்கள், ஜமீந்தார்கள், பண்ணையார்கள் என எல்லோருமே சுதந்திர வேட்கை கொண்டவர்களாக இருந்திருக்கவில்லையே. கட்டபொம்மன் கதையின் எட்டப்பர்களாக அன்றும் வெள்ளை அரசாங்கத்துக்கு தங்களது ஏகோபித்த ஆதரவை நல்கி, அவர்களுக்குப் பயந்து அடங்கி, ஒடுங்கி பொம்மை ராஜாக்களாக காலம் தள்ளியவர்களும் அன்றும் உண்டு. அவர்களைப் போல கட்டபொம்மனோ, மருது சகோதர்களோ, பூலித்தேவரோ இல்லை என்பதால் அல்லவா அவர்களை சரித்திரம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக்கி அழகு பார்க்கிறது. அதற்கும் வேட்டு வைக்க நினைத்தால் எப்படி?

கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளுக்கும் இடையிலான யுத்தம் கிஸ்திக்காக நடந்த யுத்தமா? வெள்ளை அதிகாரிகளுக்கு என்ன தெரியும்? தெற்கத்திக்காரர்களின் பஞ்ச காலத்தைப் பற்றி. வானம் பார்த்த பூமியில் விளைச்சலுக்கு மேலதிகமாக கிஸ்தி கேட்டால் அதை அரசனாலும் கட்டி விட முடியுமா? அப்படியே கிஸ்தியை அடிப்படையாக வைத்து நடந்த யுத்தமாகவே அதைக் கருதினாலும் கூட அதில் எந்த இடத்தில் சுதந்திர உணர்வுக்கு பங்கம் வந்தது? 1857 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சிப்பாய் கலகம் கூட பசுக்கொழுப்பும், பன்றிக் கொழுப்பும் தடவப்பட்ட உறைகளுடன் கூடிய தோட்டாக்களை, அன்றைய வெள்ளை அரசாங்கம் கட்டாயப்படுத்தி தங்களது துணைப்படைத்திட்டத்தில் அங்கம் வகித்த இந்திய வீரர்களுக்கு அளித்ததால், அதை சகித்துக் கொள்ள முடியாத மாவீரன் மங்கள் பாண்டே முன்னெடுத்தது தானே மீரட் புரட்சி எனப்படும் சிப்பாய் கலகம். இதையுமே சுதந்திரப் போராட்டமில்லை, அது ஏதோ தோட்டாவைப் பயன்படுத்த மாட்டேன் என்று ராணுவ வீரன் ஒருவன் தனது மேலதிகாரிக்கு கீழ்படியாமல் கடமை மறந்து ஈகோவால் முன்னெடுத்த கிளர்ச்சி என்பீர்களா? இப்படி எந்த லாஜிக்கும் இல்லாமல் எப்படி போகிற போக்கில் அவர்களது சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனும் பிம்பத்தின் மீது கல்லெறிய முடிகிறது?!

அதே போலத்தான் உங்கள் ஒருங்கிணைந்த இந்தியப் பார்வை குறித்த கூற்றும். என்று உதித்தது ஒருங்கிணைந்த இந்தியா? இந்திய விடுதலைக்குப் பின் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபாய் படேலும், பிரதமராக நேரு தலைமையில் அமைந்த அன்றைய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் அல்லவா உருவாக்கினார்கள் இன்று நாம் வரைபடத்தில் காணும் இந்தியாவை. இவையெல்லாம் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்தவை. தென்னகத்தில் கடைக்கோடியில் ஆண்ட ஒரு பாளையக்காரர்களுக்கு இந்த ஞானம் அப்போதே இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது உங்களது மேட்டிமைத்தனம் இல்லாமல் வேறென்ன? அவர்கள் அனைவருமே அவர்கள் சார்ந்திருந்த பிராந்திய விடுதலைக்காகப் போராடினார்கள். அந்தப் போராட்டம் பிற்பாடு இந்தியா முழுவதும் அந்நியத் துணிகள் பகிஸ்கரிப்பு, உப்புச் சத்யாகிரஹம், வெள்ளையனே வெளியேறு, எனப் பல்வேறு விதமாக வியாபித்த இந்திய சுதந்திரப் போராட்டங்களுக்கு ஒரு விதையானது. அதை மறுதலிக்க நினைக்காதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com