உங்களுக்கு மிகவும் பிடித்த இந்த உணவுப் பொருட்கள் எந்த நாட்டிற்குச் சொந்தமானது எனத் தெரியுமா?

அது இனிப்பொ, காரமோ, புளிப்போ எந்தச் சுவையாக இருந்தாலும் சரி, யாருக்கும் அடங்காத பல நாக்குகளைக் கூட தனது அலாதியான சுவைக்கு அடி பணிய வைக்கும் சக்தி இந்த உணவுக்கு உண்டு.
உங்களுக்கு மிகவும் பிடித்த இந்த உணவுப் பொருட்கள் எந்த நாட்டிற்குச் சொந்தமானது எனத் தெரியுமா?

ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான சுவை இருப்பதுண்டு. அது இனிப்பொ, காரமோ, புளிப்போ எந்தச் சுவையாக இருந்தாலும் சரி, யாருக்கும் அடங்காத பல நாக்குகளைக் கூட தனது அலாதியான சுவைக்கு அடி பணிய வைக்கும் சக்தி இந்த உணவுக்கு உண்டு. இந்த வயதினர் தான் இந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது (நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை) உணவு என்று வந்துவிட்டால் நாம் அனைவரும் குழந்தைகள் தான். 

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் என பிரசித்திப் பெற்ற உணவுப் பொருட்கள் இருப்பதுண்டு, சில சமயங்களில் அது அந்த இடத்திற்கேன ஒரு தனி அடையாளத்தையும் தந்துவிடுவதுண்டு. அந்த வகையில் இன்று நம் நாட்டில் நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பல உணவுப் பொருட்கள் எந்தெந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தது என அறிவீர்களா? வாருங்கள் பார்ப்போம்.

சமோசா:

சமோசா முதன்முதலில் 10-ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மக்களால் உண்ணப்பட்ட ஒரு தின் பண்டம். 13-ம் நூற்றாண்டில் ஆசிய கண்டத்தை அடைந்து 14-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்தது. ‘சம்போசா’ என்று இருந்த இதன் பெயர் நாளடைவில் திரிந்து இப்போது ‘சமோசா’ என அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் இப்போதெல்லாம் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் அடைக்கப்பட்டிருக்கும் சமோசவில் பூசனி கூட்டு, சீஸ், கரி, நூடுல்ஸ் என ஒவ்வொரு பகுதியினரும் அவர்களுக்கு பிடித்தமான ஒவ்வொரு மசாலாவை இதனுள் அடைத்துச் சாப்பிட்டு வருகின்றனர். 

டீ:

சமோசா என்றவுடன் அடுத்த நொடி நம்முடைய நினைவிற்கு வருவது அதனுடன் சேர்ந்து குடிக்கும் சூடான டீ. பலரும் டீ இந்தியாவில் தென்றியது என்று கூறினாலும் வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்பின் அடிப்படையில் இதனுடைய தோற்றம் சீனாவில் உள்ளது. ஷாங் ராஜவம்சத்தினர் இதை ஒரு மருந்தாகப் பயன் படுத்தி வந்துள்ளனர்.

16-ம் நூற்றாண்டில் போர்ச்சிகீசிய பிரயாணி ஒருவர் இதனுடைய சுவைக்கு மயங்கி இதை தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார் பின்னர் இந்தியாவில் காலனித்துவ ஆட்சி நடைபெற்ற போது 17-ம் நூற்றாண்டில் இந்தியாவை வந்தடைந்தது ‘டீ’. இன்று கிரீன் டீ, பிளாக் டீ மற்றும் இந்தியாவின் சுவையான மசாலா டீ (மசாலா சாய்) இவையனைத்தும் நம்முடைய அன்றாட பொழுதில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது.
 
குலாப் ஜாமூன்:

டீ குடிச்சாச்சு, அது கூட காரமும் சாப்டாச்சு அடுத்து என்ன இனிப்பு தான. இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு என்றால் அது குலாப் ஜாமூன் தான். பண்டிகை காலங்களில் நாம் பரிமாறி கொள்வதும், சில சமயங்களில் கடவுளுக்கு நைவேத்தியமாகவும் படைக்கப்படும் இந்த குலாப் ஜாமூன் தோன்றியது  பெர்ஷியாவில்.

குலாப் என்பது பெர்ஷிய மொழியாகும் அதாவது ‘குல்’ என்றால் மலர், ‘ஆப்’ என்றால் நீர், நீரில் மலர் மிதப்பதைப் போல ஜீராவில் இவை மிதப்பதால் இதற்கு இந்தப் பெயர். ஆனால் ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் இது இந்தியர்களால் கண்டுபிடிக்கப் பட்ட உணவு என்றும் கூறுகிறார்கள்.

ஜிலேபி:

குலாப் ஜாமூன் என்றவுடன் அடுத்து நினைவுக்கு வருவது என்னவோ ஜிலேபி தான். சுடச் சுட நெய்யில் பொரித்து ஜீராவில் முக்கியெடுத்து தரப்படும் அதன் சுவையே தனி. இந்த ஜிலேபியின் பிறப்பிடம்  மேற்கு ஆசியா, அங்கு இதனுடைய பெயர் ‘ஜூலாபியா’. பார்ப்பதற்கே மிகச் சிக்கலாக தோன்றும் இந்த ஜிலேபி பேர்ஷியர்களால் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் 15-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்தது. 

வட இந்தியர்களின் இனிப்பு வகைகளில் இது முக்கிய இடத்தினை வகிக்கிறது. நமது தமிழகத்தில் இந்த ஜிலேபி வடிவத்திலேயே செய்யக்கூடிய ஒன்று ‘கருப்பட்டி மிட்டாய்’.  ஆனால் இவை சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களில் மட்டுமே கடைகளில் கிடைக்கும் ஒரு தின் பண்டமாக மாறிவிட்டது. 

உங்களுக்கும் இந்தக் கருப்பட்டி மிட்டாயை ருசி பார்க்க வேண்டும் என்று தோன்றினால் நீங்கள் அதற்காக சிவகாசிக்கே போக வேண்டியதில்லை, நமது தினமணி பக்கத்தில் ‘கருப்பட்டி மிட்டாய்’ எப்படிச் செய்வது பற்றியும், அதன் வரலாறு பற்றியும் கார்த்திகா வாசுதேவன் எழுதியுள்ள பதிவை பாருங்கள், அதனுடைய லிங்க் இதோ: https://goo.gl/ZVSyC3

பிரியாணி:

உணவு போருட்கள் பற்றிப் பேசும் போது பிரியாணி இல்லாமல் எப்படி? எவ்வளவு சாப்பிட்டாலும் அலுத்துப் போகாத ஒரு உணவு இன்றைய சூழலில் பிரியாணி தான். இது 16-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் இந்தியா மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்புகளைத் தொடங்கிய போது இந்தியாவிற்குள் நுழைந்தது. வட இந்தியர்கள் முதலில் இதை ‘புலாவ்’ என்றே அழைத்தனர். 

நாட்டில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருந்து ஒவ்வொரு பொருட்களை வரவழைத்துத் தயாரிக்கப்படும் இந்தப் பிரியாணி அந்த அந்தப் பகுதியை சேர்ந்தவர்களின் சுவை அரும்புகளுக்கேற்ப வித்தியாசப் படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com