போதை மருந்து நோய் தீர்க்கும் எனில் அதனை பயன்படுத்தலாமா? பெரு நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது?

 மரிஜுவானா எனும் போதை தரக்கூடிய இலைகளை மருத்துவக் காரணங்களுக்காக
போதை மருந்து நோய் தீர்க்கும் எனில் அதனை பயன்படுத்தலாமா? பெரு நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது?

மரிஜுவானா எனும் போதை தரக்கூடிய இலைகளை மருத்துவக் காரணங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மை வாக்களித்து கடந்த அக்டோபர் மாதம் அதை நிறைவேற்றியும் உள்ளது. அதன் மூலம் மரிஜுவானாவின் மீதான கட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக தளர்த்தி உள்ளது. சில போதை மருந்துகளின் மருத்துவ பயன்பாட்டை சட்டபூர்வமாக்கும் வரிசையில் ஆறாவது லத்தீன் அமெரிக்க நாடாகியுள்ளது பெரு. ஆனால் இச்செய்கை அங்குள்ள மக்கள் சிலருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் பெருவில் கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவை இதன்மூலம் சட்டபூர்வமாகி விட்டது. கடுமையான உடல் நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு கஞ்சாவில் இருந்து எண்ணெயை பிரித்துக் கொண்டிருந்த சில பெற்றோர்களை, காவல் துறையினர் கைது செய்த பின்னர்தான் பெரு நாட்டில் இது குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்தது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மரிஜுவானாவை மருத்துவத்திற்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நாட்டு அரசு முன்மொழிந்தது.

மேலும் மரிஜுவானா அல்சைமர் நோய்க்கும் மருந்தாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 2050-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் அல்சைமரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்நிலையில் மரிஜுவானா என்ற இலை அல்சைமர் நோயை உருவாக்கும் பீட்டா அமிலாய்ட் புரதத்தை நரம்பு செல்களிலிருந்து முழுமையாக அகற்றுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் மூளைக்கு தகவல் அளிக்கும் நரம்புகளிள் செயல்பாட்டையும் இந்த மரிஜுவானா வலுப்படுத்துகிறது. இதனால் நினைவுத்திறன் மேம்படவும் கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெரு நாட்டில் இதன் மீதான தடை அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கதே என்கிறனர் அந்நாட்டின் மருத்துவ ஆய்வாளர்கள். 
 
பெருவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் மரிஜுவானா பயிரிட சட்டப்படி அனுமதி பெறுவதைப் பற்றி ஆய்வாளர்கள் பேசி வருகின்றனர். போதை மருந்துகளை உயிர் காக்கும் மருந்துகளாக பயன்படுத்துவது நல்ல விஷயம் தான் என்று அவர்கள் கூறினாலும், சமூக ஆர்வலகர்களும் எதிர் கட்சியினரும் இதற்கு பலத்த எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய திட்டங்கள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டால் மரிஜுவானாவின் பயன்பாடு அதிகரித்து இளைஞர்கள் சீரழிவார்கள் என்று கவலைப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com