தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று உரக்கச் சொன்ன சாதனைத் தமிழர்கள்!

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று முழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று உரக்கச் சொன்ன சாதனைத் தமிழர்கள்!

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று முழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடலுக்கு ஏற்ப தான் வாழும் சமூகத்துக்கும் தனக்கும் பெருமைத் தேடித் தந்த தமிழர்கள் எண்ணிலடங்காதவர்கள் இந்த மண்ணில் காலம்தோறும் உள்ளார்கள். இதில் ஐவரைப் பற்றி மட்டும் எழுதக் காரணம்  தமது துறைகளிலுள்ள ஆளுமைத் திறன் மற்றும் உலக அரங்கில் அவர்களது ஆணித்தரமான பங்களிப்பும்தான். உண்மையில் இவ்வரிசை மிக நீளமானது, மேன்மேலும் தொடர்வது. முக்கியமாக எந்தப் பட்டியலிலும் அடங்காதது.

அருணாச்சலம் முருகானந்தம்

கூகிளில் முருகானந்தம் என்று தேடினால் நாப்கின் என்ற அடைமொழியுடன் அவரைப் பற்றிய தகவல்கள் ஆயிரமாயிரமாகக் கிடைக்கும். நாப்கின் என்ற அடைமொழி அந்தளவுக்கு அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றது. பால்கி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகும் பேட்மேன் (Pad Man) முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையிலும் வெளிவர உள்ளது. அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்புதூரைத் தாண்டி, கோவை, தமிழ்நாடு, இந்தியா, ஏன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிந்த ஒரு பெயர் முருகானந்தம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க்கு, சுகாதார முறையில் பயன்படுத்தக் கூடிய சானிட்டரி நாப்கின்களை மிகக் குறைந்த விலைக்குத் தரமாக தயாரித்து மிகக் குறைந்த லாபத்துக்கு விற்பனை செய்கிறார். காரணம் ஏழை எளிய பெண்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் இதன் விலை இருப்பது அவசியம் என்ற சமூக நோக்கில் செயல்படுபவர் முருகானந்தம். தன் மனைவி சாந்தாவின் பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வாகவே இந்தத் தொழிலை தொடங்கினார் முருகானந்தம்.

சதா சர்வ காலமும் தன்னுடைய பரிசோதனையில் மூழ்கி இருந்ததாலும், தோல்விகளே தொடர்ந்த நிலையிலும் மனம் சோராமல் தான் எடுத்த முயற்சியில் சற்றும் மனம் தளராது தொடர்ந்து புதிய சோதனைகளை செய்தார் முருகானந்தம். ஒவ்வொரு முறை பரிசோதனைக்காக மனைவியை அவர் தயாரித்த சானிடரி நாப்கினை பயன்படுத்தச் சொல்லியதால் சாந்தா ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று அவரை விட்டு பிரிந்தார்.

கோவைக்கு இடம்பெயர்ந்து கையில் இருந்த கடைசி பணத்தையும் வைத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் முருகானந்தம் தயாரித்த இயந்திரம் தான் அவரின் வெற்றிக்கு முதல் படி. குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் இயந்திரம் அது. அவர் கண்டுபிடித்த சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் ஆந்திரா, பீகார், உத்தர பிரதேசம், என இந்தியாவின் பல பகுதிகளிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இந்திய தொழில் வல்லுநர்கள் பலரின் கவனத்தையும் தன் விடா முயற்சியால் திரும்பிப் பார்க்க செய்த தமிழர் இவர்.

ஒரு நாப்கினின் விலையை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு விற்பதற்கு ஒரு மனம் வேண்டும். தொழிலில் முன்னேறிய பலருக்கு சமூக நோக்கம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் முருகானந்தத்தின் இந்த உலகம் முழுக்க மகளிர் அமைப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு தமது இயந்திரங்களை வழங்கி உற்பத்தி முறைகளையும் கற்றுத்த தந்துள்ளார். இவரது முயற்சியால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் உற்பத்தியாகும் நாப்கின்களை ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக முருகானந்தத்தை டைம் பத்திரிக்கை தேர்வு செய்து உலகிற்கு அடையாளப்படுத்தியது. அதன் பின்னரே 2016-ம் ஆண்டு முருகானந்தத்தின் சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு அவருக்கு  'பத்மஸ்ரீ'
விருதளித்து கெளரவித்தது.

பல்வேறு சமூக நல அமைப்புகளின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்று வருகிறார். அதிலும் முக்கியமாக ஏழை எளிய பெண்களின் வாழ்த்துகள் அவரை என்றென்றும் தொடரும்.

இ.மயூரநாதன்

தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் அளப்பரிய செயலை செய்து வருபவர் இ.மயூரநாதன் இணையத்தின் தமிழ் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் தமிழில் தனது பங்களிப்பை முன்னெடுக்கும் மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்தார் மயூரநாதன். கட்டடக் கலையில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் கொழும்பில் 17 ஆண்டு காலம் பணியாற்றினார். அதன்பின் துபாய்க்குப் புலம் பெயர்ந்தவர். தமிழ் அறிவியல் துறையில் பல கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. விக்கிப்பீடியாவின் மகத்துவத்தை உணர்ந்த அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார்.

முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதன் பின் இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக் குழுமமாக அதை நிறுவினார். அவ்வகையில் தமிழ் மொழியை நவீன அறிவுத் தேவைகளுக்கு ஈடுபடுத்தியும், தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் மூலம் அவரது பங்களிப்பு அபாரமானது.

மேலும்  எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. தமிழ் விக்கிப்பீடியா இத்தகைய மகத்தான பங்களிப்பைச் செய்த இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கியது. இவரது சாதனை தமிழ் கூறும் நவீன நல்லுலகம் என்றென்றும் மறவாது.

கே.சிவன்

ஊடகவியலர்களால் விண்வெளித் தமிழன் என்று புகழப்படும் கே.சிவன் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராவார்.

நாகர்கோவிலுக்குப் பக்கத்தில், வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூரில் பிறந்தவர் சிவன். மேல்படிப்புக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்து எம்.ஐ.டி-யில் படித்தார். தனது கடின உழைப்பால் படிப்படியாக வளர்ந்து, இன்று விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநராக வளர்ந்து பல சாதனைகளின் நாயகனாகத் திகழ்கிறார். இவர் படித்த பட்டப் படிப்புகளும் இவர் வாங்கிக் குவித்த விருதுகளின் பட்டியலுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. சிவனின் சாதனையைப் போலவே இவை இரண்டும் நீளமானவை.

கணினியில் இளம் அறிவியல் பட்டம் பெற்ற பின் சென்னையில் உள்ள எம்.ஐ டி.யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்தார். பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். 2006-ம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார்.

கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு உள்ளது. சந்திராயன், மங்கள்யான் உட்பட பல வெற்றிகளில் சிவனின் பங்களிப்பு முக்கியமானது. ராக்கெட் வடிவமைப்புப் தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருள் ஒன்றினை உருவாக்கியிருக்கிறார். தற்போது ‘மார்க் 3’ என்கிற புதுமையான விண்கலனை உருவாக்கும் ஆய்வில் இருக்கிறார் சிவன்.  


 
இதுவரை சிவன் வாங்கிய விருதுகள் :

  • சிறி அரி ஓம் ஆசிரம் பிரடிட் டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது (1999)
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மெரிட் விருது (2007)
  • டாக்டர் பிரன் ராய் விண்வெளி அறிவியல் விருது (2011)
  • மதிப்புமிகு அலும்னஸ் விருது (எம்.ஐ.தி. அலும்னஸ் கழகம்) (2013)
  • சத்தியபாமா பல்கலைக் கழக அறிவியல் முனைவர் விருது (2014)

மேன்மேலும் பல விருதுகளை பெறவிருக்கும் சிவன் தான் சார்ந்த துறையில் தன்னிகரற்ற சாதனைத் தமிழர் என்ற தனிப்பெருமை பெறுகிறார்.

வெற்றி மாறன் 

தமிழ் திரைப்படம் பல திறன் மிகு இயக்குநர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் மறுக்க முடியாத ஒருவர் தன் பெயரிலேயே வெற்றியைத் தக்க வைத்துக் கொண்ட இயக்குநர் வெற்றி மாறன். தமிழ் சினிமாவை அழகியலுடன் தொழில்நுட்பத்தை இணைத்து பல திரைக்காவியங்கள் படைத்த இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநனராகத் தன் திரைப் பயணத்தை துவங்கியவர் வெற்றி மாறன்.  

வெற்றி மாறனின் முதல் படமான பொல்லாதவன் ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. மிக நல்ல அறிமுகமாக அப்படம் அவருக்கு அமைந்தது. அடுத்து இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011-ம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தன. 

நட்பு, அன்பு, பாசம், கோபம், பயம், வன்முறை போன்ற ஆழமான உணர்வுகளை தனது கதாபாத்திரங்களின் மூலம் திரையில் ஆழமாகப் பதிவு செய்வது வெற்றி மாறனுக்கு வெகு இயல்பாக அமைந்துவிட்டது. அவரது மூன்றாவது படமான விசாரணை முந்தைய சாதனைகளை முறியடித்துவிட்டது. சமூக ஆர்வலராக மாறிய சந்திரகுமார் என்பவர் தனக்கு நேர்ந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாக்கிய ‘லாக்கப்’ எனும் நாவல்தான் வெற்றி மாறனின் ‘விசாரணை’ படத்துக்கு மையமானது.

இத்திரைப்படம் வெளியான சமயத்தில் இது தாண்டா சினிமா என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் ஒட்டுமொத்த பாராட்டை பெற்றது. சிறந்த தமிழ் படம் உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. மேலும் விசாரணை உலக அரங்கில் ஒரு தமிழ் சினிமா எனும் வகையில் தமிழ் சினிமாவின் தரத்தை உரக்கச் சொன்னது. மறக்க முடியாத திரை அனுபவமாக விசாரணை தமிழ் சினிமா வரலாற்றின் நிலைத்தது விட்டது. 

72-வது வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படம் ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா' என்ற பிரிவில் ‘விசாரணை' படம் திரையிடப்பட்டு உலக திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரை ஆர்வலர்களின் பாராட்டை குவித்தது. மேலும் அவ்விழாவில் விருதையும் வென்றது. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம், வெற்றி மாறனின் தமிழ் படமான ‘விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது.  72 வருட கால வெனிஸ் திரைப்பட விழா வரலாற்றில் விருது வாங்கிய ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையும் தனதாக்கிக் கொண்டது.

வெற்றி மாறன் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் 'புத்தக வாசிப்பு, ஒருவனுக்கு என்ன கொடுத்துவிடும்?' என சிலர் கேட்பது உண்டு. பாலுமகேந்திரா போன்ற ஒரு பெருங்கலைஞனின் எதிரே அமர்வதற்கான இருக்கையை அதுதான் எனக்கு வாங்கித் தந்தது. புத்தக வாசிப்பில் தொடங்கிய அவரது பயணம் திரைப்படங்களில் தொடர்ந்து அவரது படைப்பு மனத்துக்கு அடித்தளமாக விளங்கியது.

புனைவாகட்டும், சினிமாவாகட்டும் பார்வையாளர்களின் பங்களிப்பைக் கோரும் படைப்பு சிறந்த படைப்பாகிவிடும். அவ்வகையில் எளிய மனிதர்களின் ஆற்றாமையும், கோபமும், சமூகம் சார்ந்த அக்கறையுடன் திரையில் காட்சி படுத்திவரும் சமகால படைப்பாட்த இவர் எனலாம். அதே சமயத்தில் அவரது படங்களில் எதார்த்த அம்சங்களுடன் ஒத்திசைவாய் பொழுதுபோக்கும் அம்சங்களையும் சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்று ஆழமாக உணர்த்தியவர் இவர். சமரசங்கள் அதிகமற்ற அவரது முன்று படங்களுமே அவரது தீவிர படைப்பாளுமைக்கு சாட்சிகளாய் உள்ளது. இனிதே தொடரட்டும் இந்த வெற்றித் தமிழனின் திரைப்பயணம்.

பழனி குமணன்

அமெரிக்கா நியூயார்க் நகரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகவும், இதழியல் அறிஞராகவும் பணியாற்றி வருபவர் பழனி குமணன். கோயமுத்தூர் பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர்.

பழனி குமணனுக்கு 2015-ம் ஆண்டிற்கான ஆன்லைன் இன்வட்ஸ்டிகேஷன் ஜர்னலிசம் துறைக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. (தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் அந்த சிறப்பு இடம் பெற்றது).

1917-ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வரும் புலிட்சர் விருது  ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு துறைகளுக்காக வழங்கப்படும் உயரிய விருது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள, கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. ஜோசப் புலிட்சர் என்ற பத்திரிக்கையாளர் பெயரிலே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனை தமிழராகிய பழனி குமணன் பெற்றிருப்பது ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடையச் செய்தது.

மென்பொருள்துறை, தகவல் பரிமாற்றம், இதழியல் குறித்தான பணிகளில் புதிய வடிவமைப்புகளைக் கண்டறிந்து அதற்கான உரிமங்களைப் பெற்றிருக்கிறார் பழனி குமணன். இது குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். இவர் தமிழ்நாட்டு அரசியல் அறிஞர் பழ.நெடுமாறனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com