'மெட்ராஸ்' ரஞ்சித் - 'அறம்' கோபி: தொடரும்  சர்ச்சைகளும் விடை இல்லாக் கேள்விகளும்!

'மெட்ராஸ்' ரஞ்சித் - 'அறம்' கோபி: தொடரும்  சர்ச்சைகளும் விடை இல்லாக் கேள்விகளும்!

கோபி நயினார், தனது 49-ஆம் வயதில், பொதுமக்களை வெகுவாகப் பாதித்து வரும் ஒரு முக்கியமான பிரச்னை பற்றிய படத்தை, விமர்சன ரீதியாக அனைவரும் பாராட்டத்தக்க வகையில், தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' 

கோபி நயினார், தனது 49-ஆம் வயதில், பொதுமக்களை வெகுவாகப் பாதித்து வரும் ஒரு முக்கியமான பிரச்னை பற்றிய படத்தை, விமர்சன ரீதியாக அனைவரும் பாராட்டத்தக்க வகையில், தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்'  என புகழப்படும் நடிகை நயன்தாராவினை கொண்டு, கலையம்சம் நிரம்பிய அரசியல் படமாக எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அதற்காக  முதலில் அவருக்கு பாராட்டும் கைகுலுக்கல்களும்..! 

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்தவர் கோபி. இதனால் 'மீஞ்சூர் கோபி' என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர். தீவிர வாசிப்பும், தன்னுடைய பகுதி மக்கள் மேம்பாடு சார்ந்த ஆழ்ந்த அக்கறையும் இவருக்கு இயல்பாக அமைந்தவை. எனவே அதுகுறித்த களச் செயல்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர்.

'அறம்' வெற்றிக்குப் பிறகு இணையதளம் ஒன்றுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்படி தனது 19-ஆம் வயதிலிருந்தே திரைப்படம் இயக்குவதற்கான ஆசைகளுடம் தயாரிப்புகளுடனும் இருந்தவர். எனவே 'அறம்' வெற்றி என்பது ஏறக்குறைய அவருடைய 30 வருட கனவின் வெற்றி என்று கூறலாம். அதற்கு முன் அவர் கடந்து வந்த பாதைகள் கடும் போராட்டங்களைத் தாங்கியுள்ளன.      

அவற்றில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் 'கத்தி' ஆகிய இரு படங்களின்  கதைகளிலும், மீஞ்சூர் கோபியின் கதை மற்றும் காட்சிகள்  பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற சர்ச்சைகள்தான்

இரு படங்களுமே 2014-ஆம் ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகியுள்ளன.இவற்றில் 'கத்தி கதைத் திருட்டு' தொடர்பாக கோபியின் விரிவான விடியோ பேட்டிகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. ஆனால் தற்பொழுது 'அறம்' திரைப்படம் வெளியானதும், அதனை வாழ்த்தி ரஞ்சித் பதிவிட்ட ட்வீட் மூலம் மீண்டும் இந்த சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ளன. எனவே அது தொடர்பாக கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். 

மீஞ்சூர் கோபி வடசென்னையில் வாழும் கால்பந்தாட்ட வீரன் ஒருவனை மையக் கதாபாத்திரமாக கொண்டு 'குதிரை' என்ற பெயரில் கதை ஒன்றினைத் தயாரிக்கிறார். 2010-ஆம் ஆண்டு வள்ளியூர் பாலு என்ற தயாரிப்பாளர் அந்தப் படத்தினை தயாரிக்க ஒப்புக் கொள்கிறார். முதலில் தாமஸ் என்ற நடிகரை நாயகனாக வைத்துத் துவங்கப்படும் படமானது பின்னர் எதோ காரணங்களால் கைவிடப்படுகிறது. 

அதன் பின்னால் படத்தின் கதாநாயகனாக கல்லூரி படத்தில் நடித்த அகிலும், கதாநாயகியாக அருந்ததியும் ஒப்பந்தமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஆனந்த் பாபு நடிக்கிறார். வடசென்னை மக்களின் வாழ்வு தொடர்பான கதை என்பதால், படத்தின் தலைப்பை மட்டும் 'கருப்பர் நகரம்' என்று மாற்றுகிறார்கள்.  படத்தின் இசையமைப்பாளராக தேவாவும் , ஒளிப்பதிவாளராக விஜய் ஆம்ஸ்ட்ராங்கும் முடிவு செய்யப்படுகிறார்கள். பாடல் பதிவுகள் முடிந்து நவம்பர் 2010-ல் படப்பிடிப்பு துவங்குகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு இடம் தொடர்பான பிரச்னைகளாலும், பொருளாதார காரணங்களாலும் படத்தின் படப்பிடிப்பு நின்று போகிறது. மீண்டும் துவங்கும் பொழுது கதாநாயகன் அகிலின் கால்ஷீட் கிடைக்காததால் மேலும் தாமதமாகிறது. இந்நிலையில்தான் பா.ரஞ்சித்தின் இரண்டாவது படமான 'மெட்ராஸ்' முன்னோட்டம் மற்றும் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின்றன. அதில் வடசென்னை மையக்களமாக இருப்பதையும், கதாநாயகன் கால்பந்து விளையாடுவது போன்ற  காட்சிகளையும் பார்க்கும் தயாரிப்பாளர் பாலுவும், இயக்குநர் கோபியும் அது தங்கள் படத்தின் கதையினை ஒத்திருப்பதாகக்  கருதுகின்றனர். இந்த சமயத்தில் ‘கறுப்பர் நகரம்’ கதை விவாதத்தில் ரஞ்சித் பங்கேற்றதாக தயாரிப்பாளர் பாலுவிடம் கோபி கூறுகிறார்.

பின்னர் 'மெட்ராஸ்' வெளிவரும் முன்னதாக 19.07.2014 அன்று தயாரிப்பாளர் சங்கத்தில் இரு படங்களின் கதை ஒத்திருப்பதாகக் கூறி தயாரிப்பாளர் பாலு சார்பில் புகார் ஒன்று கொடுக்கப்படுகிறது. இரண்டு படங்களின் ஒற்றுமை பற்றி அதிகாரப்பூர்வமாக  அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களாவன.

1. வடசென்னை பகுதி மக்களை அடிப்படையாகக் கொண்ட கதை. கால்பந்து அவர்களுக்கு ஒரு முக்கியமான விளையாட்டு.

2. கால்பந்து ஒரு முக்கிய அம்சம்

3.திரைக்கதை மற்றும் காட்சிகள் ஒரே மாதிரியாக உள்ளது.

4.கதாநாயகன் கால்பந்து விளையாட்டு வீரன்

5.கொலை ஒன்றில் ஈடுபடும் கதாநாயகன் ரவுடி ஆகிறான்.

பின்னர் ‘மெட்ராஸ்’ வெளியீட்டுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதே சமயம் நீதிமன்றத்துக்கு வெளியே இந்த பிரச்சினையில் சுமுக தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்பட்டது. அவை எதுவும் சரியான முடிவினைத் தராத நிலையில், படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. பின்னர் படம் 26.09.2014 அன்று ‘மெட்ராஸ்’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.       

மெட்ராஸ் படத்தினைப் பார்த்த பின்பு இது தொடர்பாக எந்த வித விவகாரங்களும் கோபி தரப்பில்இல்லாமல் நாட்கள் நகர்ந்தது. ஆனால் தற்பொழுது 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று  வெளியானவுடன் அதனை வாழ்த்தி பா.ரஞ்சித் ட்வீட் ஒன்றினை பதிவிட்டார்.அதில் அவர் இயக்குநர் கோபி பெயரினை தவிர்த்து விட்டார் என்றும், நடிகை நயன்தாராவினை 'தோழர்' என்று அழைத்தது குறித்தும் தற்பொழுது சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ளன.

இதனைப் பற்றி பார்ப்பதற்கு முன்பாக முதலில் 'மெட்ராஸ்' திரைப்படம் கோபியின் 'கறுப்பர் நகரம் கதைதான் என்ற குற்றசாட்டு பற்றி கொஞ்சம் கவனிக்கலாம். மூன்று விஷ்யங்கள் நம்முன் உள்ளன. முதலாவதாக  கறுப்பர் நகரம் கதை விவாதத்தில் இயக்குனர் ரஞ்சித் பங்கேற்றதாக கோபி தரப்பில் கூறப்படுவதே தவறு. இதற்கு முன்பு இருவரும் தனியாக ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளனர். அதுவும் இருவரும் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக..! ரஞ்சித் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவராக இருந்த பொழுது, பல்வேறு விஷயங்களுக்காக அவரது ஆசிரியர்களைச் சந்திக்கும் பொருட்டு கோபி அங்கு வருகை தருவார். அப்படியான ஒரு தருணத்தில் மட்டுமே அவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பின்னர் ரஞ்சித் உதவி இயக்குநராகச் சேர்ந்த பிறகு, இந்த பிரச்னை வருமுன் அவர்கள் இருவரும் சந்தித்ததே இல்லை. இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நெருங்கிய வட்டாரங்களில் உறுதி செய்துதான் இந்த  தகவல் வெளியிடப்படுகிறது.  

இரண்டாவது 'கறுப்பர் நகரம்' வடசென்னையில் வாழும் கால்பந்தாட்ட வீரன் ஒருவனை மையக் கதாபாத்திரமாக கொண்டு நிகழும் கதை என்று மீஞ்சூர் கோபி  தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.ஆனால் மெட்ராஸ் படம்  பார்த்தவர்களுக்கு அது எந்த மாதிரியான கதை என்ற மிக அடிப்படையான இந்த வித்தியாசம் தெரிந்திருக்கும். அதே போல வடசென்னை என்றாலே உங்களால் தவிர்க்க இயலாத அடையாளங்களாக அவர்களின் கால்பந்து, குத்துச்சண்டை, கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள், (தேசிய அளவில் விளையாடியுள்ள பல வீரர்கள் அங்கிருந்து உருவாகியுள்ளனர்) அவர்களின் கானா இசை மற்றும் நெருக்கமான குடிசை மாற்று வாரிய வீடுகள் எல்லாம் நினைவினில் வந்து போகும். அப்படி இருக்க இதனை ஒரு பெரிய ஒற்றுமையாக கூற இயலாது என்று எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் சினிமாவில் இத்தகைய கதையின் சூழல் மற்றும் நடக்குமிடம் பற்றிய புகார்களை எழுப்புவது கஷ்டம்.. உதாரணமாக மதுரை பிரதேச கதை ஒன்றினைப் படமாக எடுப்பதென்றால் உங்களுக்கு முன்னால்  காதல், பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் என்று  பல படங்கள் வரிசை கட்டி நிற்கும். அந்த வாழ்வியலின் ஏதாவது ஒரு கூறு இந்த படங்களில் இடம்பெற்றிருக்கும், இதனைத் தவிர்க்க இயலாது என்பதுதான் நிஜம். சில வருடங்களுக்கு முன்னால் அந்தப்பகுதியில் கேரம் விளையாடும் ஒரு வாலிபனை மையமாக வைத்து 'சுண்டாட்டம்' என்று ஒரு படமே வந்ததே..!

கதை நடக்கும் இடம், காட்சிகளின் ஒற்றுமை மூலம் ஒரு படம் காப்பி என்று நாம் கூற தலைப்படுவோமே ஆனால், கோபியின் அறமே கூட 1983-இல் வெளிவந்த 'மல்லூட்டி' என்ற மலையாளப் படத்தின் காப்பி என்று தாராளமாகக் கூறலாம்.அந்தப் படத்திலும் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட சிறு பெண் குழந்தையினை காப்பாற்றும் கதைதான்.  ஜெயராம், ஊர்வசி, பேபி ஷாம்லி ஆகியயோர் நடித்த படம் இது.

இந்த சர்ச்சை குறித்து 'கறுப்பர் நகரம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த விஜய் ஆம்ஸ்ட்ராங் விரிவான பதிவொன்றை தனது வலைப்பூவில் எழுதியுள்ளார். அதில் இருந்து சில வரிகள்...! 

"என்னைக்கேட்டால், இருவேறு திரைப்படங்களை ஒப்பிடும் போது, அதன் கதை, அக்கதையின் மைய ஓட்டம், அதன் பின்புலம், களம், அதன் கதாப்பாத்திரங்கள், அதன் அரசியல், அதன் திரைக்கதை, அது பயணிக்கும் பாதை, நோக்கம் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெறும் ஒற்றை வரியை மட்டும் வைத்துக்கொண்டோ, அதன் கதாப்பாத்திரங்களின் ஒன்றுமையை மட்டும் வைத்துக்கொண்டோ, அதில் இடம் பெறும் சில காட்சிகளைக் கொண்டோ, வசனங்களை கொண்டோ மதிப்பிட முடியாது, கூடாது.

எனில், இவ்விரு படங்களின் கதைக் களம் ஒன்றாக இருப்பதனாலும், அதன் சில கதாப்பாத்திரங்களிலிருக்கும் ஒன்றுமையினாலும் இவை ஒரே கதை என்று சொல்ல மாட்டேன். இரண்டும் வெவ்வேறான கதைகள். இரு வெவ்வேறான கலைஞர்களின் வாழ்விலிருந்து வந்த படைப்பு என்றே நினைக்கிறேன். "

முழுமையான பதிவை வாசிக்க:   http://blog.vijayarmstrong.com/2017/11/blog-post_15.html?spref=fb

அதேபோல தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் படத்தினையே பார்க்காமல் திரைக்கதையும் காட்சிகளும் ஒரே மாதிரியானவை என்று கோபி தரப்பில் புகார் கொடுத்துள்ளனர் என்பது விளங்கும்.

மூன்றாவதாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதிமன்றத்துக்கு வெளியே சமரச முயற்சி ஏன் என்று கேட்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக முதல்நாள்கூட ஏதாவது ஒரு காரணத்தால் உங்களால் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்க முடியும். நிலைமை அப்படி இருக்க பல பேரின் கூட்டு உழைப்பால் உருவான , தயாரிப்பாளர் ஒருவரின் லட்சக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ள ஒரு  படைப்பானது முடங்காமல் இருக்க முயற்சிகள் எடுக்கப்படும் பொழுது,  சம்பந்தப்பட்ட ஒருவர் தனது தனிப்பட்ட தரப்பை மட்டுமே பார்த்து  கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க முடியாது என்பதே திரையுலக யதார்த்தம்.

நாம் தற்போதைய நிலைக்கு வரலாம். அறம் திரைப்படம் வெளியாகி விட்டது. ரஞ்சித் மற்றும் கோபி இருவருமே ஒரே சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு நினைவில் கொள்ளவும்.எனவே அறம் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதனை நீங்கள் பதிவு செய்யவில்லையே என்று சிறிய அழுத்தம் ரஞ்சித்துக்கு கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர் படம் பார்த்து விட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ''#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி...#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர் நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த இடத்தில் ரஞ்சித் மனநிலையில் இருந்து இந்நிகழ்வினை கொஞ்சம் கவனிக்கலாம். என் கதையை நீ திருடி விட்டாய் என்றொரு கடுமையான குற்றசாட்டு அவர் மீது வீசப்படுகிறது. படம் வெளியான பின்னர் அது குறித்து தெளிவான பின்னரும், அந்த குற்றச்சாட்டினைத் திரும்பப் பெரும் அளவில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. ஆனாலும் அதனை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு  சக கலைஞனாக படத்தினைப் பார்த்து விட்டு அவர் கருத்தினைப் பதிவு செய்கிறார். ஆனாலும் எதையும் யோசிக்காமல் படத்தின் இயக்குநர் பெயரைக் குறிப்பிடவில்லை; நயன்தாரவினை தோழர் என்று அழைத்து விட்டீர்கள் என்று சர்ச்சை. ! பெரும்பாலும் ரஞ்சித்தின் அரசியல் சிந்தனை சார்புகள் மற்றும், அவர் சார்ந்த சமூகம் குறித்து பொது புத்தியில் இருக்கும் ஒரு விதமான  வன்மமே இவ்வாறு வெளிப்ப்டுகிறது என்று கூட நாம் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.

சுருக்கமாகப் புரிந்து கொள்வதென்றால் ஒரு படைப்பாளியாக ரஞ்சித் அவர் படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக் கொள்வதில் அவருக்கு பிரச்சினை இருக்காது என்று நாம் கருதலாம். ஆனால் அவரது அடிப்படை நேர்மை குறித்த குற்றச்சாட்டுகளை, அவர் சார்ந்திருக்கும் சமூகம் குறித்த காழ்ப்புடன்  பேசுவது படைப்பாளியாக வலியையும் கோபத்தையும் தரலாம்.

இந்தப் பக்கம் கோபி நயினாரை பொறுத்த வரை ஒரு படைப்பினை எத்தனையோ சிரமங்களுக்குப் பிறகு திரைக்குக் கொண்டு வருவதன் வலியினை அறிந்தவர். தற்பொழுது  வெற்றியின் ருசிப்பவர். அவர் உண்மையாக  நினைத்தால் இந்த பிரச்சியினையின் மைய வேரை ஒரே வார்த்தையில் அறுத்து எரிந்து விடலாம். ரஞ்சித் கதை விவாதத்தில் பங்கேற்பு, இரு படங்களின் அடிப்படைக் கரு, போக்கு குறித்து தெளிவாகப் பேசினால் எல்லாமே சரியாகி விடலாம்.

ஆனால் படம் வெளியாகி நான்கைந்து நாட்கள் வரை கூட, சர்ச்சைகள் சூழும் வரை அமைதியாகத்தான் இருந்தார். பின்னர்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் '’இயக்குநர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள்.; நாங்கள் இருவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போதுதான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும்.

ஆதலால், உறவுகளைச் சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று முடித்திருக்கிறார்.

இங்கும் கூட நேர்மையாக செய்திருக்க வேண்டியதை அவர் செய்யவில்லை என்று கருதலாம்.

அதற்கு பின்னர்  ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூட இந்த கேள்விகளை அவர் தவிர்த்திருக்கிறார். இதுபற்றி பேட்டி எடுத்த ஊடகவியலாளர் தன்னுடைய முகநூல் பதிவில் கூட கோபி கேள்விகளை தவிர்த்ததனையும், ஏதோ ஒன்றை மறைப்பது போன்ற தொனியில் அவரது பேச்சு அமைந்திருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். அதனை விட்டு கோபி  வெளிப்படையாகப் பேசுவதே சரி என்றும் அவர் பதிவு செய்திருந்தார்.

அறம் பற்றிய ஒரு சமீபத்திய கலந்துரையாடலில் கூட கதைத்திருட்டு தொடர்பான கேள்விக்கு, 'நான் எந்த பகை உணர்ச்கியையும் மனதினில் சுமக்க விரும்பவில்லை. அது அப்படியே போகட்டும்; நான் வேறு இடத்திற்கு நகர்ந்து விட்டேன்' என்றுதான் பதிலளித்திருந்தார்.  

இதேபோல மற்றொரு தரப்பினரும் முகநூலிலும் பொதுவில் உண்டு. அவர்கள் கூறுவது யாதெனில், 'இருவருமே ஒரே சமூகத்தினைச் சேர்ந்தவர்கள்; எனவே இதனை பெரிதுபடுத்தாமல் இருந்து விட வேண்டும என்பது அவர்கள் வாதம். இதன்மூலம் இவர்கள் பிரதிபலிக்கும் மனநிலையும் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

இறுதியாக 'அறம்' கோபி நயினாருக்கு ஒரு வேண்டுகோளுடன் முடித்துக் கொள்ளலாம். உங்களது படத்தின் தலைப்பினைப் போன்றே நீங்களும் செயல்பட்டு ஒரு விரிவான பேட்டி மூலம் clear the air என்பதைப் போன்று 'மெட்ராஸ் கதைத் திருட்டு'  பற்றிய ரஞ்சித் மீதான குற்றச்சாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். செய்வீர்கள் என்று நம்பலாம். ஏன் என்றால் எப்படியும் 'அறம் வெல்லும்தானே!'

மற்றபடி அறம்-2 வுக்கு அட்வான்ஸ் மனமார்ந்த வாழ்த்துகள்..!    

(புகைப்படங்கள் நன்றி: சவுக்கு இணையதளம், இண்டியாக்ளிட்ஸ் இணையதளம் & ஸ்ருதி டிவி முகநூல் பக்கம்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com