பொன்மேனி கொலை வழக்கு! அவர் கணவர் செய்தது நியாயமா?!

‘சார்... அவ என் நம்பிக்கையை கொன்னுட்டா சார், என்னால அதைத் தாங்கவே முடியலை... கொன்னுட்டு அதுக்கப்புறம் அவளை நினைச்சு நான் அழாத நாளில்லை. ஆனா... அந்த ஒரு நிமிஷம் என்னால அந்த நம்பிக்கைதுரோகத்தை தாங்கிக்க
பொன்மேனி கொலை வழக்கு! அவர் கணவர் செய்தது நியாயமா?!

(90 களில் மானாமதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்!)

அம்மா சில காலம் மானாமதுரைக்கு அருகில் ஒரு சிற்றூரில் தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். அம்மாவின் வேலையை முன்னிட்டு, நாங்களும் மானாமதுரைக்குக் குடி பெயர்ந்தோம். துறு துறுவென விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளான என்னையும், என் தங்கையையும் அங்கு நாங்கள் வசிக்கவிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தான் பொன்மேனி. எங்களை கவனித்துக் கொள்ளவென எங்களுடன் வசிக்க வந்த என் அம்மா வழிப்பாட்டி அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் தான் அந்தப் பெயரை நாங்கள் அறிந்து கொண்டோம். பெயர் வித்யாசமாக இருக்கிறதே என்று நாங்கள் ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெயருக்கு ஏற்றவகையில் பொன்மேனி பொன்னிறத்து அழகி. நிகு, நிகுவென்ற நிறத்துடன் நல்ல வாளிப்பான தேகம் என்பதால் அவரது கணவர் அவரை குஷ்பூ என்று கூட சில நேரம் அழைத்துக் கேலி செய்வதைக் கண்டிருக்கிறோம். நாங்கள் அங்கே வசிக்கச் செல்கையிலேயே அவர்களுக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியிருந்தன. ஆனால் குழந்தைப் பாக்கியம் இல்லை. பொன்மேனியின் கணவர் ஆறுச்சாமி மானாமதுரை சிப்காட் ஏரியாவில் புறநகரைத்தாண்டியிருந்த சிமெண்ட் ஃபேக்டரி ஒன்றில் வேலையிலிருந்தார். அவரிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அதில் தினமும் காலை 6 மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பி விடுவார். மாலையில் இருள் மூளத் தொடங்கும் போது வீடு திரும்புவார். நாங்கள் அங்கே வசித்த வரையிலும் இவர்கள் இருவரும் ஆதர்ஷ தம்பதிகள் என பாட்டி ரொம்பவும் மெச்சிக் கொள்வார். ஏனெனில் இருவருக்கும் ஜோடிப்பொருத்தம் மட்டுமல்ல மனப்பொருத்தமும் மிகச்சரியாக அமைந்திருந்த படியால் பார்ப்பவர் அனைவரும் திருஷ்டி கழிக்கச் சொல்லும் வகையில் ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

மாலையில் நாங்கள் பள்ளி விட்டுத் திரும்பியதும் கட்டட வேலைகளுக்காக வீட்டுக்குப் பின்புறம் கொட்டப்பட்டிருந்த ஆற்று மணலில் பொன்மேனி எங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு கதையளப்பார். எங்களுடன் தாயம் விளையாடுவார், சொட்டாங்கல் ஆடுவார். நாங்கள் இருந்தது புறநகர்ப்பகுதி என்பதோடு அருகில் கூப்பிடு தொலைவில் ரயில்வே தண்டவாளமும் இருந்ததால் அங்கே திடீர், குபீர் பேய்க்கதைகளுக்கு எந்நாளும் பஞ்சமே இருந்ததில்லை. திடீர், திடீர் என அங்கே ரயிலில் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்களென ஏதோ சில ஜோடிகளின் பெயர்கள் அடிபடும். அப்போதெல்லாம் பொன்மேனி எங்களுக்கு நிறையப் பேய்க்கதைகளை நிஜம் போலவே நம்பும் படியாகச் சொல்வார். அந்தக் காலகட்டங்களில் தான் செம்பருத்தி, சின்னக் கவுண்டர், சேரன் பாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகியிருந்தபடியால் அந்தப் படங்களுக்கெல்லாம் எங்களுடன் சேர்ந்து பொன்மேனியும் கண்டு களித்தார். அதோடு மட்டுமல்ல, மாலையில் வீடு திரும்பியதும் சோற்றைக் குழம்புச் சட்டியில் போட்டுப் பிசைந்து எடுத்துக் கொண்டு எங்கள் வாசலில் வந்து எங்களுடன் அமர்ந்து கொண்டு கூட்டாஞ்சோறு சாப்பிட்டுக் கொண்டே நாங்கள் பார்த்த படங்களில் நடித்தவர்களைப் பற்றி விமர்சனம் வேறு செய்வார். சனி, ஞாயிறுகளில் என் பாட்டியுடன் சேர்ந்து கொண்டு மானாமதுரை சந்தைக்குப் போய் காய்கறி வாங்கி வருவார். 

அவரது கணவர் ஆறுச்சாமியும் அவ்வப்போது வீட்டுக்கு வந்து ஈ.பி பில் கட்டுவது, பேருந்து சரியான நேரத்துக்கு வராத காலங்களில் அம்மாவை மானாமதுரை பேருந்து நிலையம் வரை கொண்டு சென்று இறக்கி விடுவது, குழந்தைகளான எங்களில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால் மானாமதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, என்று நாங்கள் அங்கு இருந்தவரை அந்தத் தம்பதியினர் இருவரும் எங்கள் குடும்பத்துக்கு  மிகுந்த ஒத்தாசையுடன் இருந்து வந்தனர்.

நாங்கள் மானாமதுரையில் வசித்தது ஓராண்டுக்கும் குறைவான காலகட்டமே. மீண்டும் அம்மாவுக்கு சொந்த ஊருக்கே மாற்றலாகி விட்டபடியால் உடனே அரக்கப் பரக்கப் பள்ளியில் டி.சி வாங்கிக் கொண்டு பொன்மேனியையும், அவரது கணவரையும் அதிரசப்பாட்டியையும் (அதிரசப் பாட்டியைப் பட்டியை பிறிதொரு சமயம் விரிவாகப் பேசலாம்), பேய்கள் நடமாடும் ரயில் தண்டவாளங்களையும் பிரிய மனமின்றிப் பிரிந்து சொந்த ஊர் போய்ச் சேர்ந்து விட்டோம். இதெல்லாம் நடந்தது 1990 க்கு முன்பு. எனவே அப்போதெல்லாம் பிளாக் & வொயிட் டி.வி எத்தனை பிரபலமோ அத்தனை பிரபலம் அனேக வீடுகளில் நிச்சயமாக டெலிஃபோன் வசதி என்பதே இருப்பதில்லை என்பதும். ஊருக்குள் ஒன்றிரண்டு வீடுகளில் இல்லாவிட்டால் தபலாஃபீஸில் என்று எங்காவது சென்று தான் நமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளைப் பேசியாக வேண்டும். அம்மாதிரியான காலகட்டத்தில்... காலஓட்டத்தில் யாரையாவது பிரிந்து விட்டோமென்றால் பிறகு அவர்களைச் சந்திக்க பிரம்மப்பிரயத்தனப் படவேண்டியிருக்கும் அப்போது. அன்றெல்லாம் இப்போதைப் போல ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பெல்லாம் இருந்ததா என்ன?

அதனால் நாங்கள் அந்த ஊரை விட்டு வந்து சில வருடங்கள் உருண்டோடிய பின், பொங்கலுக்குப் பாட்டி ஊருக்குச் சென்றிருக்கையில் இரண்டாம் நாளில் எங்களை வந்தடைந்தது ஒரு அதிர்ச்சி செய்தி.

மானாமதுரையில் என் பாட்டியின் ஊரைச் சேர்ந்த இன்னொருவரும் ஆசிரியராகப் பணியிலிருந்தார். அவர் எப்போதாவது தான் பிறந்த ஊருக்கு வருவார். என் அம்மாவுக்கு தம்பி முறை. அவரும் அந்த முறை பொங்கலுக்காகத் தன் அம்மாவீட்டுக்கு மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தார். வந்தவர்... நாங்களும் அங்கே இருப்பதை அறிந்து எங்களைப் பார்த்து விட்டுச் செல்ல பாட்டி வீட்டுக்கும் வருகை தந்திருந்தார். அப்படி வந்தவர் மூலமாகத்தான் எங்களுக்கு அந்த பேரதிர்ச்சி தரும் செய்தி தெரியவந்தது.

‘பொன்மேனியை அவரது கணவரே துண்டு துண்டாக வெட்டிக் கொன்று விட்டு, இப்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருக்கிறார்’ என்ற தகவலைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் நாங்களனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்று விட்டோம். 

பல நொடிகளுக்கு ஏன், ஏன், ஏன் இப்படி ஆனது? என்ற கேள்வியே மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதில் இருந்து எனக்கும், தங்கைக்கும் நாங்கள் பொன்மேனியுடன் பழகிய நாட்கள் நினைவுக்கு வந்தது. அவர் பேசியது, சிரித்தது, எங்களைக் கேலி செய்தது, விளையாடியது, வீட்டைக் காலி செய்து கொண்டு ஊருக்குக் கிளம்பியதும் கண்கலங்க எங்களை வழியனுப்பியது இவையெல்லாம் நெஞ்சை விட்டு அகலாமல் மீண்டும், மீண்டும் மறைவேனா என்று கண் முன் நிழலாடிக் கொண்டிருந்தது.

ஆறுச்சாமி மிகவும் நல்ல மனிதர் ஆயிற்றே! மனைவி மேல் உயிரையே வைத்திருந்த அந்த மனிதரா, தன் கையால் தன் மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக் கொன்றார்? அப்படி என்ன பகை அவருக்குத் தன் மனைவி மேல்? என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் முளைத்தன. பிறகு அம்மா சொல்லி நாங்கள் அறிந்து கொண்டது; நாங்கள் அங்கிருந்து காலி செய்து கொண்டு வந்த மறு ஆண்டில் ஆறுச்சாமி வேலை பார்த்து வந்த மில்லில் ஆட்குறைப்பு செய்ததில் அவருக்கு வேலை பறிபோனது. கணவன் மனைவி என இரண்டே ஜீவன்கள் தான் என்றாலும் வாழ்க்கையை ஓட்டப் பணம் வேண்டுமே! அது மட்டுமல்ல, பொன்மேனி பழகுவதற்கு மிக, மிகத் தண்மையான பெண் தான் என்றாலும் அவருக்கு தன்னை அழகு செய்து கொள்வதில் எப்போதும் மிகுந்த ஆர்வமிருந்ததை அங்கிருந்த நாட்களில் நாங்கள் அறிவோம். 

அதிகாலையில் எழுந்து விடும் பொன்மேனி குளித்து நறுவிசாய் உடுத்துக் கொண்டு மஞ்சள் மினுங்கும் முகத்துடனும், கை நிறைய சிவப்புப் பட்டுக் கண்ணாடி வளையல்களுடனும் பான்ட்ஸ் பவுடர் வாசத்துடனும் தான் வீட்டை விட்டு வெளியில் வருவார். கண்ணுக்கு மையெல்லாம் எழுதாமேலே அழகான குண்டுக் கண்கள் அவருக்கு, சிரிக்கும் போது கண்களும் சேர்ந்து சிரிக்கும். இயல்பில் வெள்ளந்தியான குணம். ஆனால் மனித மனம் சில வசதிகளுக்குப் பழகிப் போனால் அதற்காக ஏங்கித் தவிப்பது வாடிக்கை. அதிலும் பொன்மேனி இளம்பெண்ணாக இருந்தாலும் எங்களையொத்த சிறுமிகள் போலத்தான் இருக்கும் அவரது நடவடிக்கைகள் அனைத்தும். குழந்தைகள் இல்லாததால் மனைவியைக் குழந்தை போலப் பாவித்து தினம் வேலை விட்டு வரும் போது மனைவிக்கெனத் தனியாக திண்பண்டங்கள் வாங்கி வருவது ஆறுச்சாமியின் வாடிக்கை! இதற்கு நடுவில் குழந்தையில்லாத குறை தீர்க்க அவ்வப்போது கோயில், குளம் பரிகாரம் என்று வேறு சுற்றுவார்கள். இப்படி சமர்த்தாக பளிங்குத் தரையில் வழிந்து செல்லும் பாலாறு போல தங்கு தடையின்றி நகர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்வில் ஆறுச்சாமிக்கு வேலை போனதும், போன வேலை ஒரு வருடத்திற்கு மேலாகியில் திரும்பக் கிட்டாததில் பொன்மேனி சிறுகச் சிறுக குணம் சீர்கெடத் தொடங்கினார். (அப்படித்தான் சொன்னார்கள் அவரது கதையைச் சொன்னவர்கள்!)

பொன்மேனிக்கு ஒரு ஓரக்கத்தி இருந்தார். அவரது பெயர் பவளம். பவளத்தின் கணவருக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை. அவர்களுக்கு நண்டும், சிண்டுமாய் 4 மகன்களும், ஒரே ஒரு மகளும் உண்டு. நாங்கள் அங்கு வசிக்கையில் அந்த மகளுக்கு 1 வயது கூட நிரம்பியிருக்கவில்லை. பார்க்க கண்ணுக்கு லட்சணமாக கொள்ளை அழகு அந்தக் குழந்தை. முதலில் சில நாட்கள் அந்தக் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்ச நாங்கள் அந்த வீட்டுக்குச் செல்வதுண்டு. ஆனால் அக்கம்பக்கம் இருந்த பிற பெண்கள் அம்மாவிடம் வந்து; அந்த வீட்டுக்கு குழந்தைகளை விடாதீங்க டீச்சர், அந்தப் பொன்மேனியோட ஓரக்கத்தி அத்தனை நல்லவ இல்லை, அவ நடவடிக்கை எதுவும் குடியும், குடித்தனமுமா இருக்கறவங்க நடந்துக்கற முறையில இல்லை. பார்த்துக்கோங்க! என்று கொளுத்திப் போட, அன்றிலிருந்து அங்கே சென்று விளையாட எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதோடு சரி நாங்கள் அந்தம்மாளைப் பற்றியும், குழந்தையைப் பற்றியும் மறந்து விட்டோம். ஏனென்றால் எங்களுக்குத் தான் கூட விளையாட, கதை பேச பொன்மேனி இருந்தார். அப்போது பொன்மேனிக்கும் அவர்களோடு பேச்சு வார்த்தை இல்லாமலிருந்தது. சொந்த அண்ணன் குடும்பம் தான், பக்கத்து, பக்கத்து வீடுகள் தான் என்றாலும் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். அப்படி இருந்தவர்கள் தான்.

அதற்குப் பின் தனக்கு வேலை போன பிறகும் கூட ஆறுச்சாமி அண்ணன் குடும்பத்தோடு அண்டவில்லை. ஆனால், பொன்மேனி சிறுகச் சிறுக தன் ஓரக்கத்தியுடன் ஒன்றத் தொடங்கி இருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு இருந்த கூடாநட்புகள் அனைத்தையும் பொன்மேனியும் சிறுகச் சிறுக பழகிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார். விஷயமறிந்து இடையிடையே அரசல் புரசலாகக் கணவர் கண்டித்த போதும் கூட தனது தற்காலிக வசதிகளை விட மனமின்றி பொன்மேனி கணவரது கண்டிப்பை அலட்சியப் படுத்தத் தொடங்கி இருக்கிறார். எப்போதென அறியாத ஒரு நாளில், எமன் வாகனத்தில் பாசக்கயிற்றுடன் வாசலில் காத்திருந்த ஒரு பொழுதில் பொன்மேனியின் வீட்டில், தம்பதிகளுக்குள் ஒரு வாய்த்தகராறு முற்றி, நான் வேண்டுமென்றால், நீ அவனுடனான பழக்கத்தை முறித்துக் கொண்டு இங்கே இரு, இல்லாவிட்டால் ஒரேயடியாக உன் அம்மா வீட்டுக்குப் போய்த்தொலை என ஆத்திரத்தில் ஆறுச்சாமி தன் மனைவியை வெறி தீருமட்டும் அடித்து விட, வெள்ளந்தி என நாங்கள் நம்பிய பொன்மேனி, மிகத் தீர்மானமான குரலில், ‘ நீ எனக்கு வேண்டாம், நான் அவனுடனே வாழ விரும்புகிறேன், என்னை அத்து விடு’ என்று சொல்லி முடித்திருக்கவில்லை. ஆறுச்சாமி வீச்சருவாளை எங்கிருந்து எடுத்தார் என்பது அவருக்கே விளங்காத ஒரு தருணத்தில் எடுத்தை கையோடு வீசிய வீச்சுகள் ஒவ்வொன்றும் அவர் ஆசை தீர இதுநாள் வரை மனமொத்து வாழ்ந்து வந்த பிரியமான மனைவியின் உடலில் இன்ன இடம் என்றில்லாமல் பதிந்து, பதிந்து இறங்கியதில் அலறித்துடித்து இறந்திருக்கிறார் பொன்மேனி. பொன்மேனி யாருடன் வாழ விரும்பினாரோ அவனையும் தேடி ஓடிய ஆறுச்சாமி அந்த மனிதனையும் தெருவில் ஓட, ஓட விரட்டி வெட்டியதில் அவனுக்கும் உயிர் போகுமளவுக்கு பலத்த காயமென்று சொன்னார்கள்.

பொன்மேனியைத் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளியான ஆறுச்சாமி பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். கோர்ட்டில் வழக்கு நடந்தது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் பொன்மேனியின் பிறந்த வீட்டார், மருமகன் செய்தது தான் சரி, எங்கள் மகள் செய்தது துரோகம் என்று கோர்ட்டில் சாட்சி சொல்ல சில ஆண்டுகள் வழக்கு இழுத்தடிக்கப் பட்டாலும் கூட பிறகு எப்படியோ ஆறுச்சாமிக்கு விடுதலை கிடைத்தது. இன்று அவர் சுதந்திரப் பிறவி. மனைவியின் அதாவது பொன்மேனியின் கடைசி சகோதரி ஒருத்தியை அவருக்கு பொன்மேனியின் பெற்றோரே திருமணம் செய்து வைத்தார்களாம். அவர்களுக்கு குழந்தை இருப்பதாகக் கூட கேள்வி! நாங்கள் அறிந்தது இதுவரை மட்டுமே!

பொன்மேனி செய்தது தவறு எனினும் அவருக்கு ஆறுச்சாமி கொடுத்த தண்டனை சரியா? எந்தத் தவறுக்கும் கொலை தீர்வாகுமா? அவர் எத்தனை நல்ல மனிதர் என்றாலும் அவர் செய்த கொலையை நியாயப்படுத்த முடியாது இல்லையா? உயிருக்கு உயிரான மனைவி... அந்தப் பெண்ணை நீ ஒரு குழந்தை மாதிரி தானே நடத்தி இருக்கிறாயாம்? பிறகெப்படி அவளை துண்டு துண்டாய் வெட்டிக் கொல்ல உனக்கு மனம் வந்தது? என்று பொன்மேனி கொலை வழக்கில் ஆறுச்சாமியின் வழக்கை ஏற்று நடத்திய வழக்கறிஞர் கேட்டதற்கு; ஆறுச்சாமியின் பதில்,  ‘சார்... அவ என் நம்பிக்கையை கொன்னுட்டா சார், என்னால அதைத் தாங்கவே முடியலை... கொன்னுட்டு அதுக்கப்புறம் அவளை நினைச்சு நான் அழாத நாளில்லை. ஆனா... அந்த ஒரு நிமிஷம் என்னால அந்த நம்பிக்கைதுரோகத்தை தாங்கிக்கவே முடியலையே... நான் வேண்டாம்னு கண்டிக்க, கண்டிக்க எனக்கு  ‘அவன் தான் முக்கியம்னு’ எங்கிட்டயே சொல்றா சார். நான் அவளை தேவதையா தாங்கினவன் என்னைப் பார்த்து அவ அப்படிச் சொல்லும் போது... நான் என்ன சார் செய்வேன்!’ என்று கேவிக் கேவி அழுதிருக்கிறார். இதைச் சொல்லி விட்டு அந்த வழக்கறிஞர் சோகத்துடன் வெட்டவெளியை வெறித்தார் என்றார் எங்களிடம் இந்தக் கதையைச் சொன்னவர்.

நாங்களும் அதையே தான் செய்ய வேண்டியதாயிருந்தது.

பொன்மேனிக்காக அழுவதா? அல்லது ஆறுச்சாமிக்காக வருந்துவதா? என்று யோசிக்கையில் தான் தோன்றியது. தாம்பத்யம் என்பது இல்லற வாழ்வும் அன்றாட லெளகீக வாழ்க்கை முறைகளும் மட்டுமே அல்ல. அது இரு மனங்களுக்கு இடையிலான வலுவான நம்பிக்கையினால் கட்டமைப்படும் ஒரு ஆத்மார்த்தமான பந்தம். அதைக் கூடுமான வரை தம்பதிகளுக்கிடையே மனக்கசப்பு வராமலும், ஒருவர் பால் மற்றவர் கொண்ட நம்பிக்கைக்கு குந்தகம் வராமலும் நகர்த்திச் செல்வதில் தான் இருக்கிறது தாம்பத்ய வாழ்வின் வெற்றி என்பது புரிந்தது.

பொன்மேனி இயல்பில் நல்ல குணவதி. அவளுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டதும் எங்களுக்கு எங்கள் பாட்டி சொன்ன ரேணுகாதேவி கதை தான் நினைவிலாடியது. எப்போதும் தண்டனை ரேணுகா தேவிகளுக்கு மட்டுமே! ஜமதக்னிகள் தண்டிக்கப் பிறந்தவர்கள் போலும் என்று யோசனை நீண்டதின் வெளிப்பாடு தான் இந்தக் கட்டுரைக்கான புகைப்படத்தேர்வில் எதிரொலித்திருக்கிறது.)
 

Image courtesy: flikr.com (firoze shakir photographer.)

டிஸ்க்கி: (உண்மைச் சம்பவம் எனினும்... வழக்கில் சம்பந்தப்பட்டவர்களது உணர்வுகளைக் கருத்தில் கொண்டு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com