இதுதான் ரஜினி ஸ்டைல்! ஆறிலிருந்து அறுபத்தி ஏழு வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 

ரஜினிகாந்த் என்ற பெயருக்கு தமிழ்நாட்டில் ஒரு வசீகர சக்தி இருக்கிறது என்று அனைவரும் அறிந்த உண்மை.
இதுதான் ரஜினி ஸ்டைல்! ஆறிலிருந்து அறுபத்தி ஏழு வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 

ரஜினிகாந்த் என்ற பெயருக்கு தமிழ்நாட்டில் ஒரு வசீகர சக்தி இருக்கிறது என்று அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதராக தம்வாழ்வைத் தொடங்கிய சிவாஜிராவ் கெய்க்வாட் சூப்பர் ஸ்டார் ரஜினியாக உயர்ந்தது சமகால சரித்திரம். நடிப்பில் சொந்த வாழ்க்கையில் ஆன்மிகத்தில் என ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றிக் கொடி கட்டி பவனி வரும் ரஜினி அரசியலில் நுழைவதில் மட்டும் மதில் மேல் பூனையாக பல ஆண்டுகாலம் தடுமாறி வருவது ஏன்? இதற்கும் அரசியல் தான் காரணம் என்றாலும் ரஜினியின் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?

தன்னிகரற்ற நடிகராக ரஜினி

சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாவது என்பதும் மாயாஜாலத்தில் நடப்பது இல்லை. அதற்குத் தேவை கடுமையான உழைப்பும், தீவிரமாக நம்பும் ஒன்றில் முற்றிலுமாக தன்னை இழப்பதினாலும்தான் ஒருவர் அத்தகைய பெருமையை அடைய முடியும். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டாராம் ரஜினி. காலை வந்தவர், மாலை வரை படப்பிடிப்பு முடியும் வரையில் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே சிறிது நேரம் புத்தகம் படிப்பார் அல்லது ஓய்வெடுப்பார் ரஜினி.

‘எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது’ எனும் விவேகானந்தரின் பொன்மொழியை தனது வீட்டு வரவேற்பறையில் பதித்துள்ளார். ரஜினிகாந்தால் தான் விரும்பியதை எளிதில் சாதிக்க முடிந்தது. அதற்கான வழிமுறைகளை தானே கண்டடைந்தவர் அவர். தேர்ந்த நடிப்புத் திறனுடன், அதைப் பன்மடங்கு மெருகேற்றக் கூடிய ஜிமிக்ஸ் தெரிந்தவர். ‘எந்திரன்’ படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ஒரே சமயத்தில் ஒரே படத்தில் ரஜினியால் இது நடிப்பு என்ற தெரியும்படியான நடிப்பையும், அதே சமயம் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பாவனைகளையும் வெளிப்படுத்தி நடிக்க முடியும். ரஜினி ரசிகர்கள் கூட பிரித்துணர முடியாத நுணுக்கம் அது.

எந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தை உயர்த்தி காட்ட முடியுமோ அதன் உச்சத்துக்கு சென்று நியாயம் செய்வார் ரஜினி. போலவே உணர்ச்சிப் பிழம்பான காட்சிகளில் இயல்பான நடிப்பால் உருக்கமாக நடித்து கண்கலங்கச் செய்துவிடும் திறமையானவர் ரஜினி. உதாரணத்துக்கு தளபதி படத்தின் பல காட்சிகளை சொல்லலாம். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே, முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே’ பாடல் காட்சியில் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி.

நெகிழ்ச்சி, உருக்கம், கண்ணீர், மகன் என்று சொல்ல முடியாத இயலாமை, தாயின் கூந்ததிலிருந்து உதிரும் ஒற்றை மல்லிப் பூவை, கையில் ஏந்து பார்த்தல் என ரஜினி அப்பாடலைக் காண்பவரின் இதயத்தை தனது நடிப்பால் வென்றிருப்பார். இதுதான் ரஜினியின் தனித்தன்மை. அவரது உடல்மொழி, வேகம், நடை, மேனரிஸம் மற்றும் ஸ்டைல் அவரின் வெற்றியின் முக்கிய காரணிகள்.  

தனது கதாபாத்திரத்தின் மனநிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக நடிப்பில் பிரதிபலிக்கும் ஒருசில கதாநாயகர்களுள் ரஜினியும் ஒருவர் எனலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், கொரியா, சீனா என உலக நாடுகள் பலவற்றில் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர். ஃபெண்டாஸ்டிக் ஃபெஸ்ட் என்று அமெரிக்காவின் முக்கியமான திரைப்பட விழாவில் பாட்சா இந்த ஆண்டு திரையிடப்பட்டு அமெரிக்க ரசிகர்களின் பலத்த பாராட்டுக்களை பெற்றது. அவரது ஒரு படத்தின் குறைந்தபட்ச வர்த்தகம் ரூ 200 கோடி.

தற்போது சூப்பர் ஸ்டாரின் வயது 67. 67 வயதில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பதுடன் இந்த வயதில் இந்திய சினிமாவில் அதிக முதலீட்டுடன் எடுக்கப்படும் படமான 2.0. அதன் பட்ஜெட் ரூ 400 கோடிக்கும் மேலதிகம். இந்தப் படம் வெளிவருவதற்குள் அதன் தொலைக்காட்சி உரிமை, தெலுங்கு உரிமை வியாபாரம் மட்டுமே ரூ 250 கோடியைத் தாண்டியுள்ளது. உலக உரிமை, திரையரங்க உரிமையெல்லாம் சேர்த்தால் இதன் வர்த்தகம் கற்பனைக்கும் எட்டாதது. இதுதான் அவரை சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்த்தியுள்ளது. அவரது சம்பளத்தையும் நூறு கோடிகளாக மாற்றியது. ஜாக்கி சானுக்குப் பிறகு ஆசியாவிலே அதிகமான சம்பளம் பெறும் ஒரே நடிகர் ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய சினிமாவின் உலக அடையாளமாக புகழின் உச்சபட்ச சாத்தியங்களை அடைந்துவிட்டவர் ரஜினி. 

 ஆன்மிக பக்கங்கள்

ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு இருக்கும்போது, அது கலையிலும் பிரதிபலிக்கும். அவ்வகையில் ரஜினிதான் எனக்கு முன் உதாரணம் என்று திரைத்துறையில் எளிமைக்கும் ஆன்மிகத்துக்கும் மற்றொரு உதாரணமாக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். அது உண்மைதான். அது நடிப்பாக இருந்தாலும் சரி, தன்னைப் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளும் முயற்சிகளாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் தீவிரமாக இறங்கும்போது அதிலிருந்து நம்மை பிரித்துப் பார்க்க முடியாது. கலையின் மூலம் தன்னைக் கண்டடையும் முயற்சியை காலத்தால் அழிக்க முடியாத சிலர் இதற்கு முன்பும் செய்தே வந்திருக்கின்றனர். அவர்கள் ஜென் துறவிகளாகவும், சூஃபி மறைஞானிகளாகவும், அல்லது தனது அடையாளத்தை அழித்த சித்தர்களாகவும் இருக்கக் கூடும். புகழின் உச்சத்தை அடைந்தும் அது நிலையற்றது என அறிந்தும், அதை நிலைக்கச் செய்தபின் அதற்குள் சிக்கிக் கிடக்காமல் அடையாளம் துறக்க நினைப்பதுதான் ஞானம். ஆன்மிகப் பாதையை மனம் நாடுவதற்கு சில அடிப்படை குணங்கள் இருப்பது அவசியம். ரஜினியிடம் அத்தகைய குணங்கள் சிறு வயதிலிருந்து இருப்பதை அவருடன் பழகியவர்கள் கூறியிருக்கின்றனர்.

சிவாஜிராவை ஆறு வயதில் காவிபுரம் அரசினர் கன்னட மாடல் பள்ளியில் சேர்த்தனர் அவரது பெற்றோர்கள். அந்த வயதிக்கே உரிய குறும்புத்தனமும், சுறுசுறுப்பும் சிவாஜிராவுக்கு இருந்தது. கிரிக்கெட், ஃபுட்பால், பாஸ்கெட் பால் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் சிவாஜிக்கு உண்டு. அவருடைய அண்ணன் சிவாஜியை ராமகிருஷ்ண  மடத்தில் உறுப்பினராக்கினார். அங்குதான் சிவாஜிராவ் வேதம், ஆன்மிகப் பெரியோர்களின் வரலாறு, மற்றும் இந்துமதம் சார்ந்த பல விஷயங்களையும் தெரிந்து கொண்டார். அந்த இளம் மனத்தில் பசுமரத்தாணி போல பல நல்ல கருத்துக்கள் பதிந்துவிட்டன. ராமகிருஷ்ண மடத்தில் நடத்தப்படும் சில ஆன்மிக நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதுதான் சிவாஜிராவ் ரஜினியாக மாறுவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

புறம் பேசுவதும், குறை சொல்வதும் ரஜினியின் இயல்பில் ஒருபோதும் இருந்ததில்லை. தனது பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், இசை, குறுந்தகடுகள், அல்லது மெளனமாக சுய அலசல் எனத் தனிமைத் தவம் புரிவார். ‘தளபதி’ படத்தில் நடிக்கும் போது வலது கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருந்தார் ரஜினி. பிறகு, இடது கை கட்டை விரலில் ஒரு தங்க வளையத்தை மாட்டியிருந்தார். தற்போது ருத்ராட்ச மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார் ரஜினி. இமயமலை அல்லது வேறு எந்த ஆன்மிக இடங்களுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்து வைப்பது ரஜினியின் பழக்கம். ஆனால் புற அடையாளங்களிலும் மதச் சின்னங்களிலும் பெரிய நம்பிக்கைகள் அவருக்கு இருந்ததில்லை. அது ஒரு ஆரம்பக் கட்ட ஈர்ப்பு என்றுணர்ந்தவர் அவர். ஆரம்ப காலத்தில் கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார். தற்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என வெவ்வேறு நிற வேட்டிகள் அணிகிறார். வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும். 

ரஜினி ஸ்ரீ ராகவேந்திரரின் தீவிர பக்தராக மாறியதும் அவரின் ஆன்மிகப் பார்வையும் வாழ்க்கையின் பாதையிலும் திருப்புமுனை ஏற்பட்டது. ரமணரின் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு திருவண்ணாமலைக்கு செல்லும் வழக்கத்தை பின்பற்றத் தொடங்கினார் ரஜினி. பாபாஜியின் அருளும் ஆசியும் ரஜினிக்கு உண்டு. இமயமலைக்குச் சென்று அங்கே பலநாட்கள் எளிய மனிதராக  வாழ்வார். கிடைத்ததை சாப்பிட்டும், கடுமையான குளிரில் ஒரு துண்டை விரித்துப் படுத்தும், சுய தேடலில் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பழக்கமுடையவர் ரஜினி. அவரது ஆன்மிக ஈடுபாடு குறித்த விமரிசனங்களுக்கு ரஜினி சொன்ன பதில், நான் ஆன்மிகவாதிதான், ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் நான் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை என்றாராம். 

அரசியல் நிலைப்பாடு

ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர்களின் வரலாறு தொடர்பான புத்தகங்களில் ரஜினிக்கு அதிக ஆர்வம் எப்போதும் உண்டு. தமிழ், மராத்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ரஜினியால் சரளமாக உரையாட முடியும். ரஜினி இடதுசாரி அல்ல, வலதுசாரியாகவும் இருந்ததில்லை. தன் சுயம் சார்ந்து நடுநிலையுடன், இருப்பதே ரஜினியின் விருப்பம். அவ்வகையில் அரசியலில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று தன் தரப்பிலிருந்து கூறியது மிகச் சரியானதே!

கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது கடவுள் விருப்பம் என்றால் அரசியலின் பாதையை அவர் தேர்ந்தெடுப்பார் என்றார். ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் முடிவு செய்கிறார். இப்போது, ​​அவர் என்னை ஒரு நடிகர் ஆக விரும்புகிறார் மற்றும் நான் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். கடவுள் விரும்பினால், நான் நாளை அரசியலில் நுழைவேன். நான் நுழைந்தால், மிகவும் உண்மையாக இருப்பேன், பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக உள்ள மக்களை மகிழ்விக்க மாட்டேன். நான் அத்தகைய மக்களுக்காக வேலை செய்ய மாட்டேன் என்றதுடன் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்றும் கூறியிருந்தார் ரஜினி. வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். 

ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரை வணங்குவதற்காக சென்றிருந்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெறுவதற்காக மந்த்ராலயம் சென்றுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அரசியல் களத்தில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று கூறியிருக்கிறார் ரஜினி. எனது பிறந்த நாளான வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரசிகர்களைச் சந்திப்பேன் என்றும் கூறினார். ரஜினிகாந்த் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது எந்த அவசரமும் இல்லை என்று ரஜினி கூறியிருப்பது இத்தகைய கேள்விகளுக்கான முற்றுப்புள்ளியாக இருக்கும்.

ஒரு சாராசரி மனிதன், அதன் பின் தேர்ந்த நடிகன், அதிலும் உலகப் புகழ் பெற்ற நடிகன், இனி அடைவதற்கு என்னவிருக்க முடியும் என்ற நிலையில் தனது இருப்பை, தான் யார் என்ற தவிப்பை ஒருவர் உணர்ந்துவிட்டால் அதற்கான விடை கிடைக்கும் வரை அவரால் ஓய்வெடுக்க முடியாது. முடிவற்ற அகத் தேடலில் ஞானப் பாதையில் அவரது ஒவ்வொரு அடியும் இருக்கும். வெளிப் பார்வைக்கு அவரது தொழில் அல்லது வாழ்க்கையில் அதே அக்கறையுடன் அவர் இருந்தாலும், அகவழிப் பயணத்தில் அவர் அடைந்து கொண்டிருக்கும் தெளிவும் விழிப்புணர்வும் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்றுதான். காரணம் அப்பாதையில் பயணிக்காதவர்களுக்கு அது ஒரு கட்டுக் கதை அல்லது கற்பனாவாதம். அது அவரவர் தேடிக் கண்டடைய வேண்டிய ஒரு இருத்தல் விதி. அல்லது இருத்தலற்றலுக்காக ஒருவர் தனக்குச் செய்து கொள்ளும் சுய பரீட்சார்த்தம்.

ரஜினி தன்னை அலசி தன்னை கூறு போட்டு தன்னில் தான் வெளிச்சம் தேடும் அகல் விளக்கு. அவரால் நூறு கோடி விளக்குகளை ஏற்ற முடியும். ஆனால் தன்னில் ஒடுங்கி அவர் தேடும் ஞானத்தின் பூரணத்துவம் விரைவில் அவருக்குக் கிடைக்கும். ஆன்மிகமோ அரசியலோ காலம் எது சொல்கிறதோ, சூழல் எதனை நிர்ப்பந்திக்கிறதோ அதனை ஏற்றுக் கொள்வார் ரஜினி.

தன்னுடைய கர்மாவை சரியாகச் செய்து முடிக்கும் ஒருவராக இருக்கவே விரும்புகிறார் சிவாஜிராவ் கெய்க்வாட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com