தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருந்தவர் என்ன செய்தார் தெரியுமா?

இந்தியா விடுதலைக்குக் மறைமுகமான ஒரு காரணமாக இருந்தவர் லியோ டால்ஸ்டாய்.
தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருந்தவர் என்ன செய்தார் தெரியுமா?

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் இயற்பெயர் லேவ் நிக்கொயெவிச் டால்ஸ்டாய்  (Lev Nikolayevich Tolstoy). இலக்கிய உலகம் இவரை லியோ டால்ஸ்டாய் என்றே அறிகின்றது.

ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் மிகப் பெரிய செல்வந்தரான ஒரு பிரபு குடும்பத்தில் 1828 பிறந்தவர் டால்ஸ்டாய். சிறுவனாக இருக்கும் போதே பெற்றோர்களை இழந்து, தனது அத்தையால் வளர்க்கப்பட்டார். 

ஊரின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தாலும், பெற்றவர்களை இழந்தவன் என்பதாலும் அவருக்கு செல்லம் அதிகம். தமது இளம் வயதில் எவ்வித வாழ்க்கை கொள்கைகளும் இன்றி சூதாடிப் பொழுதை கழித்து வந்தார். கேளிக்கை, கொண்டாட்டம் என்று வாழ்க்கை ஒரே சீரில் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் வேட்டையாட காட்டுச் சென்ற போது கரடி ஒன்றினை வேட்டையாடத் துரத்தினார். ஒரு கட்டத்தில் அதனை வீழ்த்திவிட்டார். குற்றுயிராகக் கிடந்த அந்தக் கரடி மரணத் தருவாயிலும், வாழ்தலுக்கான போராட்டத்தை முயற்சித்ததைப் பார்த்ததும் மனம் பதைத்து அவரது கண்கள் கலங்கிவிட்டன. அந்த மிருகத்தின் சாவினால், அதுவரை அவருக்குள் உறங்கிக் கிடந்த மனிதம் உயிர்பெற்றது. அவருக்குள் கருணை சுரந்தது. இந்த மனமாற்றத்துக்குப் பின் மெள்ள தன்னை சூழந்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபடத் தொடங்கினார் டால்ஸ்டாய். பைபிளின் ஒவ்வொரு வாசகமும் அவரது சிந்தனையை திசை மாற்றியது. ஞானத்தின் பாதையில் அவர் அடியெடுத்து வைக்கத் தொடங்கினார்.

இந்தியா ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுதலை அடைவதற்கு மறைமுகமான ஒரு காரணமாகவும் டால்ஸ்டாய் இருந்திருக்கிறார். எப்படி என்று வியக்கிறீர்களா? இந்தக் கட்டுரையின் இறுதியில் அது தெரிந்துவிடும்.

சக மனிதர்களின் மீதான அன்பும் கருணையும் அவருடைய ஒவ்வொரு புதினங்களிலும் எழுத்து மூலம் கசிந்து கொண்டே இருந்தது. தான் எழுதியதை கொண்டாடி மகிழும் கலைஞன் அல்ல டால்ஸ்டாய் மாறாக அதிலிருந்து கிடைக்கும் பணம் புகழ் ஆகிய இரண்டையுமே தனதாக அவர் கருதியதில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை மனிதர்கள் எப்படி சிக்கலாக்கிக் கொள்கிறார்கள், வாழ்நாளின் பெரும்பகுதியை இச்சமூகம் பொருள் தேடியே வீணாக்கும் அவலத்தையும், மனிதர்களின் பேராசைகளின் விளைவுகளையும் சித்திரிக்கும் வகையில் அவருடைய கதைகள் உள்ளன. ஆத்மார்த்தமாகவும் துல்லியமாகவும் மனத மனங்களை நுட்பமாக அளவிடும் கருவியாகவும் இன்றளவும் அவரது கதைகள் திகழ்கின்றன.

அவரது மிகச் சிறந்த படைப்பான அன்னா கரீனினா அவருக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்த புதினமாகும். அவரது போரும் அமைதியும் (War and Peace) இன்றளவும் பலரால் வியந்தோகப்படும் அற்புதப் படைப்பாகும். அவரது எழுத்தில் உருவான ‘மூன்று துறவிகள்’ (The Three Hermits) மதம் குறித்த பல அடிப்படை விஷயங்களைக் கேள்விக்கு உட்படுத்தி, சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருக்கும். இந்தக் கதையில் பிரார்த்தனை, ஜெபம் போன்ற மதம் சார்ந்த விஷயங்களின் மீதான தீவிர விசாரணையை முன் வைக்கிறது. ரஷியாவில் வழங்கி வரும் ஒரு பழங்கதை இது என்ற முன்குறிப்பை டால்ஸ்டாய் குறிப்பிட்டிருப்பார்.
 

டால்ஸ்டாயின் எளிமையான கோலத்தைப் பார்த்து, அவர் ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சமயம், ஒரு சீமாட்டி அவரை அழைத்து தனது பெட்டியைத் தூக்கி வரும் படி கூறினார். டால்ஸ்டாய் மறுப்பேதும் கூறாமல், அதைச் செய்து முடித்த பின் கூலியைக் கொடுத்தார். அவர்தான் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்ற விஷயம் தெரிந்து அந்தப் பெண் மனம் பதறி மன்னிப்புக் கேட்டு தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு டால்ஸ்டாய் புன்னகைத்தபடி இது நான் உழைத்து சம்பாதித்த பணம், அதை திருப்பித் தரலாகாது என்று கூறியுள்ளார். தமது வீட்டினருடன் ஏற்பட்ட பிரச்னையில் வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் அஸ்டபோவ் எனும் ரயில் நிலையத்தில் சில காலம் தங்கினார். 1910-ல் தனது 82-வது வயதில் உயிர் நீத்தார் அந்த மாமனிதர்.

தன்னை செதுக்கி தன் வாழ்க்கையை மட்டுமல்லாமல் தான் எழுதிய காவியங்கள் மூலம் பலரது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் இலக்கிய மேதை டால்ஸ்டாய். மகாத்மா காந்தியடிகளின் தமது அகிம்சை கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டது லியோ டால்ஸ்டாயின் எழுத்தையும் வாழ்க்கையையும் பார்த்துதான்.

ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்த பிறகுதான், அகிம்சை பற்றிய புரிதல் டால்ஸ்டாயிக்கு ஏற்பட்டது. அதன் கோட்பாடுகள் அவர் மனத்துக்குள் பல மாற்றங்களை விளைவித்தது. அகிம்சை, எளிமை, ஏழைகளுக்கு உதவுதல் ஆகியவற்றை தமது வாழ்க்கையின் கொள்கைகளாகப் பின்பற்றினார் டால்ஸ்டாய். தன்னிடம் தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கிறது என்றுணர்ந்த டால்ஸ்டாய் ஏழைகள், பிச்சைக்காரர்கள், ஆகியோருக்கு அந்தப் பணத்தை தானம் செய்துவிட்டார்.

வன்முறை எதற்கும் பயனில்லை, அன்பும் அகிம்சையும் தான் ஒருவரது மீட்சிக்கான வழி என்று தமது படைப்புக்கள் மூலம் வலியுறுத்திக் கூறிய டால்ஸ்டாயின் தாக்கத்தில், காந்தி தன்னுடைய தென் ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார். திருவள்ளுவரைப் பின்பற்றிய டால்ஸ்டாயைப் பின்பற்றிய காந்தி அதன்பின் டால்ஸ்டாயின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் எனும் போது நமக்கு விடுதலை கிடைத்தது யாரால்? காலத்தால் அழிக்க முடியாத கருத்துக்களை உலக மக்களுக்கு விட்டுச் சென்ற திருவள்ளுவராலா, அதை வாழ்நாள் முழுவதும் போற்றி தனது இலக்கியத்தையும் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அதன் அடிப்படையில் கட்டமைத்துக் கொண்ட டால்ஸ்டாயா? அல்லது அவரை வழிமொழிந்த அண்ணல் காந்தியடிகளா? இவர்கள் மூவர் உட்பட, தங்கள் நலத்தில் துறந்து தாய்நாட்டுக்காக ரத்தம் சிந்தி போராடிய ஒவ்வொரு வீரரும் நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்கள் என்று கூறலாம் தானே? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com