ஆர்.கே. நகரில் களைகட்டியது தேர்தல் திருவிழா: உண்மையில் இது யாருக்கான சவால்?

இரட்டை இலைச் சின்னம் இல்லாத ஒரு தேர்தலை சந்திக்காமல் தவிர்த்த ஆர்.கே. நகரில் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்பட்டு, மீண்டும் களைகட்டியுள்ளது தேர்தல் திருவிழா.
ஆர்.கே. நகரில் களைகட்டியது தேர்தல் திருவிழா: உண்மையில் இது யாருக்கான சவால்?

சென்னை: இரட்டை இலைச் சின்னம் இல்லாத ஒரு தேர்தலை சந்திக்காமல் தவிர்த்த ஆர்.கே. நகரில் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்பட்டு, மீண்டும் களைகட்டியுள்ளது தேர்தல் திருவிழா.

சென்னையின் முக்கியத் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3வது முறையாக இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடைசியாக அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் கானல் நீரானது. ஆனால், அப்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட டிடிவி தினகரன், ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலில் வாரி இறைத்ததாக வருமான வரித்துறை அறிவித்தத் தொகை வெறும் 89 கோடிகள். முதலில் வெறும் விஐபி தொகுதியாகப் பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர், அந்த இடைதேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பண மழை கொட்டும் தொகுதியாக உருவகப்படுத்தப்பட்டது.

கடைசியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் இடைத்தேர்தலே ரத்து செய்யப்பட்டது.

அது முடிந்த கதை. இப்போதைய காட்சியே தலைகீழாக மாறியது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது முடக்கப்பட்ட அதிமுக என்ற கட்சியின் பெயர், இரட்டை இலைச் சின்னம் அனைத்தும் ஆளும் பழனிசாமி அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
 

தினகரனை எடுத்துக் கொண்டால் இது வாழ்வா? சாவா? என்பது போன்ற போராட்டம்தான். ஒருவேளை, இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு சசிகலாவின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் தினகரன் தோல்வி அடைந்தால், அதன்பிறகு அவரது அரசியல் வாழ்க்கை எனும் கனவும் தவிடுபொடியாகிவிடும். தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அவர் உறுதியாக அறிவித்துவிட்டார். அவர் தனது பண மழைக் கொட்டும் அட்சயப் பாத்திரத்தை ஆயுதமாக எடுக்கலாம் என்றால், தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தீவிர கண்காணிப்பு, அட்சய பாத்திரத்தையே கவிழ்த்துப்போட்டுவிடும் போல தெரிகிறது. எனவே, அவர் அரசியலில் புதிய வியூகத்தைத்தான் கையாள வேண்டும். 

அதே சமயம், 9 மாத காலம் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்து வரும் பழனிசாமி அரசுக்கும் இது முக்கியமான சாவல்தான். இந்த இடைத்தேர்தலில் பழனிசாமி அணியின் வேட்பாளர் வெற்றிபெறுவதுதான், அரசு மீதான மக்களின் ஒட்டுமொத்த அபிமானமாகப் பார்க்கப்படும். எனவே, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை, பழனிசாமி அணி நிச்சயம் நிரூபித்தாக வேண்டும்.

அது மட்டும் இல்லாமல், கடந்த ஏப்ரல் 12ம் தேதி அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலின் போது, அதிமுக அம்மா அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரனை ஆதரித்துப் பேசி வாக்கு சேகரித்தார் முதல்வர். இந்த முறை அவருக்கு எதிராகப் பேசி வாக்கு சேகரிக்க வேண்டும். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அது மட்டுமா? எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணி இணைந்த பிறகு இரு அணியும் சேர்ந்து சந்திக்கும் இடைத்தேர்தல் இது. எனவே, இதனை ஒரு ஆளும் கட்சியாக பார்த்தால் இழக்கவே முடியாத தேர்தலாக  இருக்கும். ஒரு வேளை இழந்துவிட்டால், பழனிசாமி அரசின் பணியை மக்கள் நிராகரித்துவிட்டதாக கருதப்படும்.

கடந்த தேர்தலில் சசிகலாவின் சார்பில் டிடிவி தினகரனும், பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். அதோடு, திமுக, சிபிஎம், பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளும் சுயேட்சைகளும் போட்டியிட்டன. 

இந்த முறை, அதிமுகவின் ஒருங்கிணைந்த அணி சார்பில் மதுசூதனனே அறிவிக்கப்படலாம். திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில்லை என்று தேமுதிக அறிவிக்கலாம்.

திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கட்சியை வழி நடத்தி வரும் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் ஒரு பொதுத் தேர்வாகவேக் கருதப்படுகிறது. இரண்டு முக்கியக் கட்சிகளின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் மரணம் அடைய, மற்றொரு தலைவர் உடல் நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பல கட்சியின் தலைவர்களும், சில சினிமா நடிகர்களும் கூட தன்முனைப்புக் காட்டி வரும் நிலையில், பல ஆண்டு காலமாக அடுத்தத் தலைவர் என்ற அடைமொழியுடன் வளம் வரும் ஸ்டாலின் தனது இடத்தை வெற்றிப் புள்ளிகளுடன் தக்க வைக்கவே விரும்புவார். எனவே, அவர் கட்சியின் தலைமை இருக்கையில் எவ்வாறு பொருத்தமாக அமர்ந்திருக்கிறார் என்பதை சோதிக்கும் களமாகவும் ஆர்.கே. நகர் அமைந்துவிட்டது.

இந்த நிலையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை அதிமுக நிச்சயம் வெல்லும் என்று உறுதியோடு கூறியுள்ளார். வெறும் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றதால் மட்டும் ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்று விட முடியும் என்று நம்பலாமா? என்ற கேள்விக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதிக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதோடு, தற்போது ஆளும் அரசும் தனது சிறப்பான திட்டங்களை மக்களுக்காக வழங்கியுள்ளது. எனவே, இந்த தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

எனவே, ஒரே ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் என்று பார்க்காமல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகான அரசியல் களம் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் ஒரு கண்ணாடியாகவே இந்த தேர்தல் முடிவை சமூகம் உற்று நோக்கும் என்பதால், ஒவ்வொருவருக்கும் இது அக்னிப்பரீட்சையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com