இன்றைய தேதியில் 'ஒரு' ரூபாயின் வயது என்ன தெரியுமா? ஒரு ரூபாய் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்!

இன்று, ஒரு ரூபாய் நோட்டு 100 வயதை எட்டியுள்ளது. இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட முதல் ஒரு நோட்டு
இன்றைய தேதியில் 'ஒரு' ரூபாயின் வயது என்ன தெரியுமா? ஒரு ரூபாய் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்!

இன்று, (நவம்பர் 30, 2017) ஒரு ரூபாய் நோட்டு 100 வயதை எட்டியுள்ளது. இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட முதல் ஒரு ரூபாய் நோட்டு நவம்பர் 30, 1917 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரான ஐந்தாம் ஜார்ஜின் உருவப்படம் அந்த ஒரு ரூபாய் நோட்டின் இடது மூலையில் முத்திரையிடப்பட்டது.

1861-ம் ஆண்டு முதலே இந்தியாவில் நாணயங்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டில்தான் வழக்கத்தில் வந்தது. காரணம் ஒரு ரூபாய் நாணயத்தை உருவாக்க வேண்டிய வெள்ளி,  இரண்டாம் உலகப் போரில் ஆயுதத் தயாரிப்பிற்காக உருக்கப்பட்டுவிட்டது.

1917-ம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது, ஒரு ரூபாய் 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக இருந்தது. 10 கிராம் வெள்ளியின் தற்போதைய மதிப்பு ரூ.390. இந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாயின் மதிப்பு 400 மடங்கு குறைத்துள்ளது.

ஒரு ரூபாய் நோட்டுக்கள் இன்றும் சுழற்சியில்தான் உள்ளது என்றாலும், நாணயங்கள்தான் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஒரு ரூபாய் நோட்டுகளுக்கு நமது நாட்டில் எப்போதும் தனி மதிப்பு உண்டு. காரணம், திருவிழாக்கள் மற்றும் பண்டிகை தினங்களில் நூறு அல்லது ஆயிரம் ரூபாய் பணத்தை சீராக அல்லது பரிசாக வழங்கும்போது, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றினைச் சேர்த்து 101/- ரூபாயாக மொய் எழுதும் பழக்கம் காலம் காலமாக இருந்துவருகிறது. எனவே அந்த ஒரு ரூபாய் இது போன்ற சந்தர்ப்பங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் முத்திரைத் தாள்கள் ஆகியவற்றின் அருங்காட்சியகமான mintageworld.com எனும் இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஷில் குமார் அகர்வால் கூறுகையில், 'திருவிழாக்களின்போது, ​​ரூ.15,000/- வரை நூறு ஒரு ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன. ஒரு ரூபாய் நோட்டுக்களை தங்கள் பரிசுத் தொகையுடன் சேர்த்து வழங்குவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பெரும் தொகையை மொய்யாக வழங்கும்போது அதனுடன் சிறிய இந்த ஒரு ரூபாயைச் சேர்க்கிறார்கள். அப்போது அது முழுமை பெறுவதாக நம்புகிறார்கள். மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு ரூபாய் நாணயங்களை விட, ஒரு ரூபாய் நோட்டுக்களைத் தருவதையே மக்கள் விரும்புகின்றனர்’ என்று கூறினார்.

பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் ஓஸ்வால் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் கிரிஷ் வீரா இது குறித்து வித்தியாசமான கருத்தை பகிர்ந்தார். ‘1917-ம் ஆண்டில் வெளியான இந்த ஒரு ரூபாய், ஏலத்தில் உயர் மதிப்பை பெற முடியாது, ஆனால் அது வரலாற்று முக்கியத்துவம் பெற்றது’என்றார்.

பெங்களூருவைச் சேர்ந்த எழுத்தாளரான ரெஸ்வான் ரஸாக், தம்மிடம் 100 ஒரு ரூபாய் நோட்டுக்கள் உள்ளதாகக் கூறினார். இந்தச் சேகரிப்புக்கான காரணம் வரலாற்று விஷயங்களை கற்றுக் கொள்வது தனது பொழுதுபோக்கு என்றார்.

ஒரு ரூபாயின் நூற்றாண்டு தினமான இன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துரையைப் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com