அழுக்குப் போர்வை இனி இல்லை; புத்தம் புதுசு.. உங்களுக்கே: தடம் மாறுகிறது ரயில்வே

விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இனி அழுக்குப் போர்வை வழங்கப்படுவதாக குறைபட்டுக் கொள்ள முடியாது.
அழுக்குப் போர்வை இனி இல்லை; புத்தம் புதுசு.. உங்களுக்கே: தடம் மாறுகிறது ரயில்வே


புது தில்லி: விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இனி அழுக்குப் போர்வை வழங்கப்படுவதாக குறைபட்டுக் கொள்ள முடியாது.

ஏசி ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்போருக்கு ரூ.250 செலவில் புதிய போர்வை மற்றும் தலையணை வழங்கும் திட்டத்தை ரயில்வே ஆலோசித்து வருகிறது.

அடுத்த முறை ஏசி ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'உங்களுக்கு சுத்தமான புதிய போர்வை மற்றும் தலையணை உறை வேண்டுமா?' என்று ஒரு கேள்வி வரும். அதற்கு நீங்கள் பதிலளித்து உங்கள் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம்.

பயணத்துக்குப் பிறகு அதனை நீங்களே உங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்பது கூடுதல் வசதி.

இந்த திட்டம் தொடர்பாக காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்துடன் ரயில்வே ஆலாசனை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஏசி ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட்டுடன் இந்த போர்வை செட் ரூ.250க்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஆலோசனை அளவில் இருப்பதாகவும், டிசம்பர் இறுதியில் இது உறுதி செய்யப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதே, போர்வை மற்றும் தலையணைக்கு தனியாகக் கட்டணம் செலுத்தி புதிய போர்வை, தலையணை உறையைப் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரயில் பயணம் தொடங்கும் முன்பே, பயணிகளுக்கு புதிய போர்வை வழங்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக ஒரு ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். இதற்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த திட்டம் முதலில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, பயணிகள் புதிய போர்வையை வாங்கி பயன்படுத்திவிட்டு எடுத்துச் செல்ல விரும்புகிறார்களா? என்பதைப் பொறுத்தே திட்டம்  விரிவுபடுத்தப்படும்.

தற்போது ஒவ்வொரு முறையும் போர்வைகள் துவைக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், பல முறை போர்வைகள் சுத்தமாக இருப்பதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. அதாவது, ஒரு முறை பயணிப்பவர் என்றால் பரவாயில்லை, அதிக முறை ரயிலில் பயணிப்பவர் ஒவ்வொரு முறையும் ரூ.250 கொடுத்து போர்வை வாங்குவார்களா? பெரிய குடும்பமாகச் செல்லும் போது அத்தனை பேருக்கும் வாங்க முடியுமா? என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

எனவே, பயணிகளுக்கு, போர்வையை வாங்கிக் கொள்ளும் வசதியும், துவைத்த போர்வையை பயன்படுத்தும் வாய்ப்பையும் வழங்கி அதில் அவர்களுக்கு உகந்ததை தேர்வு செய்து கொள்ள வழிவிடுவதே சிறந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல, போர்வையை வழங்குவதற்கு பதிலாக, ரயில் பெட்டிகளில் குளிர்சாதன வசதியின் குளிர் நிலையை பயணிகளே கூட்டிக் குறைத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தரவும் திட்டமிடப்பட்டது. ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருப்பதால் அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை நிலையிலேயே விட்டுவைத்துள்ளது ரயில்வே.

எனவே, அடுத்த முறை நீங்கள் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்தால் புதிய போர்வைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com