உலகின் பல்வேறு பகுதி மக்களையும் ஹாரி பாட்டர் வசீகரிக்க காரணம் என்ன?

நம் எல்லோருக்கும் ஹாரி பாட்டரைத் தெரியும். அதன் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங்கை தெரியும்.
உலகின் பல்வேறு பகுதி மக்களையும் ஹாரி பாட்டர் வசீகரிக்க காரணம் என்ன?

நம் எல்லோருக்கும் ஹாரி பாட்டரைத் தெரியும். அதன் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங்கை தெரியும். கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு கனவு உலகத்தை சிருஷ்டித்து, ஒட்டுமொத்த சிறார்களையும் அதில் சஞ்சரிக்கச் செய்த மாய எழுத்துக்கள் ரவுலிங்குடையது. சும்மாவல்ல, இன்று ரவுலிங் பிரிட்டிஷ் மகாராணியை விடவும் செல்வந்தர் ஆக உயர்ந்து நிற்கிறார்.

ஹாரி பாட்டரின் இறுதி பாகத்தை ரவுலிங் நிறைவு செய்தபோது, பலர் கண்ணீர் விட்டு அழுத செய்தியை, நாளேடுகளின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக, உலகின் பல்வேறு பகுதி மக்களையும் வயது வேற்றுமை இல்லாமல் ஹாரி பாட்டர் வசீகரிக்க காரணம் என்ன?

ஹாரி பாட்டரின் ஆசிரியரையே கவர்ந்திழுத்த 'தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' எனும் ஆயிரத்து இருநூறு பக்கங்களைக் கொண்ட பெரும் மாய வெளியைப் படைத்த டோல்கீன் மாற்றுத் துணிக்கூட இல்லாமல் வறுமையில் மரித்துப் போனதும், ரவுலிங் பெரும் செல்வந்தர் ஆனதுக்குமான முரண் எங்கிருந்து? இத்தனைக்கும் டோல்கீன் பதிமூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கிய நாவல் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ். 

ஆயிஷா நடராஜன் என்று அறியப்படும் இரா.நடராஜனின் 'அயல்மொழி அலமாரி’ எனும் நூல் மேற்குறிப்பிட்ட வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கிறது. வாசிப்பு என்பது பரந்த தளத்தில் இருக்க வேண்டுமென்கிற உயரிய குறிக்கோளுடன் எழுதப்பட்டுள்ள அயல்மொழி அலமாரி, இலக்கியம், அறிவியல், புதினம், கணிதவியல் என பல தளங்களில் உலகெங்கிலும் புகழ்பெற்ற பல நூல்களை நமக்கு மிகவும் எளிமையான முறையில் அறிமுகம் செய்கிறது.

பரிணாமவியல் தத்துவ ஞானியான டார்வினுக்கு உயிரோடு இருக்கும்போதே மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டதிலிருந்து, கண் பார்வையற்ற ஹெலன் ஹெலர் 64 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்பது வரை பல ஆச்சரியமான, சுவையான செய்திகள் அயல்மொழி அலமாரியில் விரவிக் கிடக்கின்றன. இத்தனையையும் நடராசன் தனது சுய அனுபவத்திலிருந்தும், தனக்கு எவ்வாறு அந்தப் புத்தகங்கள் அறிமுகமாயின என்றும் மிகவும் சுவாரஸ்யமான நடையில் எழுதியுள்ளார்.

பல்வேறு தளங்களில் நம் அறிவை விருத்தியடையச் செய்யும் முக்கியமான நூல்களை அறிமுகம் செய்யும் அயல்மொழி அலமாரி எனும் இச்சிறிய நூலின் விலை ரூ.60, பாரதி புத்தகாலயம் வெளியீடு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com