காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல்

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன்.
காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல்

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. 'ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது' என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும்.

காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்துக்குள்ளாக்கியது.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்பட மேதைகளில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்க இயக்குனரான பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பல்லோ சிருஷ்டித்த காட்ஃபாதர் திரைப்படம் மாஃபியா வகை படங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை அளித்து அவ்வகை படங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. விமர்சகர்களாலும், திரைக்கலைஞர்களாலும், எண்ணற்ற ரசிகர்களாலும் கூட்டாக கொண்டாடப்படும் காட்ஃபாதர் திரைப்படத்தின் முதல் பாகத்தை உருவாக்க துவங்கியபோது கப்பல்லோவுக்கு வெறும் 29 வயதுதான். மிகவும் இளையவரான கப்பல்லோ ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாலிவுட் சினிமாவில் தான் நினைத்ததைப்போல காட்ஃபாதரை எடுத்து முடிப்பதற்குள் எண்ணற்ற சிக்கல்களையும், போராட்டங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், உறுதியுடன் அவைகளை அவர் எதிர்கொண்டார்.

சினிமா விமர்சகரான மார்வின் ஆர்.ஷங்கின்னுடனான இந்த நேர்காணலில் காட்ஃபாதர் திரைப்பட உருவாக்கத்தின் பின்னணியை மிக விரிவாக விவரித்து பேசியிருக்கிறார் கப்பல்லோ. 

உலகில் படைக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததான காட்ஃபாதர் திரைப்படத்தை இயக்க பாரமெளன்ட் நிறுவனம் (Paramount Pictures) உங்களுக்கு முன்பாக 30க்கும் மேற்பட்ட இயக்குனர்களை அணுகியதாகவும், அவர்கள் அனைவருமே இப்படத்தினை இயக்க மறுத்துவிட்டதாகவும் கேள்விpபட்டேன். உண்மையில் நடந்தது என்ன? காட்ஃபாதர் படத்தை இயக்கும் பொறுப்பு உங்களை வந்தடைந்தது எப்படி?

காட்ஃபாதர் படத்தை இயக்க முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் மறுத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், உறுதியாக சிலர் மறுத்துவிட்டனர். காட்ஃபாதருக்கு ஓராண்டுக்கு முன்னதாக தி பிரதர்ஹுட் (The Brotherhood) என்றொரு திரைப்படம் வெளியாகியிருந்தது. மாஃபியா கும்பலை பற்றிய அப்படத்தை பிக் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. கிர்க் டக்ளஸ் நடித்திருந்தார். ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதனால், மாஃபியா பின்னணியில் அமைந்திருந்த காட்ஃபாதர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பலரும் உதாசீனப்படுத்திவிட்டார்கள். அவர்கள் இது வெற்றிப்பெறப் போவதில்லை என்று உறுதியாக நம்பினார்கள்.

ஹாலிவுட்டில் எதை பற்றியும் விரைவாக முடிவெடுத்து விடுவார்கள். அதனால், காட்ஃபாதர் சீக்கிரத்திலேயே பலரால் புறக்கணிக்கப்பட்டது. பாரமெளன்ட் நிறுவனம், காட்ஃபாதர் நாவல் வெளியாகியிருந்த உடனேயே அதனை அவர்கள் மிகக்குறைந்த பொருட்செலவில் தயாரிப்பதென்றும், பணத்தை அதிகம் விரயம் செய்யாமல் சிக்கனமாக கையாளத் தெரிந்த இளைஞர் ஒருவரை இயக்குனராக நியமிப்பது என்றும் முடிவு செய்திருந்ததார்கள்.

அந்நாட்களில் இயங்கிக்கொண்டிருந்த இயக்குனர்கள் அனைவருமே ஹாலிவுட்டின் இயக்குனர் சங்கத்தின் உறுப்பினர்களாகவே இருந்தார்கள். ஹாலிவுட்டுக்கு வெளியிலிருந்த இளைஞர்கள் எவரும் ஒரு படம்கூட இயக்கியிருக்கவில்லை. எனக்கு அப்போது 29 வயது. பாரமெளன்ட் நிறுவனம் இரண்டு மில்லியனுக்கும் குறைவான பணத்தில் படத்தை தயாரிப்பதென்றும், இத்தாலியரையோ அல்லது இத்தாலிய வம்சாவழியை சார்ந்த ஒருவரையோ இயக்குனராக நியமிப்பதன் மூலம் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள குடும்ப உறவுகளை புரிந்துக்கொண்டு அதனை கையாள ஏதுவாக இருக்கும் என்று கருதினார்கள்.

அதே நேரத்தில், திரைப்பட பள்ளியில் பயின்றிருந்தவர்களில், முதன்முதலாக திரைப்படம் இயக்கும் வாய்ப்பை பெற்றவன் நான்தான். என்னுடைய 'யூ ஆர் எ பிக் பாய் நெளவ்’ (You are a big boy now) படம் நியூயார்க்கில் சிறியளவில் வெற்றி அடைந்திருந்தது. அதோடு, அப்படத்தில் கையாளப்பட்டிருந்த புதிய கருவிகள், திரைப்பட உருவாக்கத்தில் பின்பற்றியிருந்த புதிய உத்திகள், அதிக செலவு இழுக்காத தெளிவான திட்டமிடல்களை பற்றியும் பரவலாக பேசப்பட்டது.

காட்ஃபாதரை பற்றிய சுவையான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். திரைப்பட பள்ளியில் படிப்பை முடித்ததும் நானும், என்னுடன் பயின்ற சிலரும் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றோம். நாங்கள் சுயமாகவே திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டிருந்தோம். ஐம்பதுகளில் வெளியான 'தி யூரோப்பியன்' போன்ற கிளாசிக் தன்மையிலான கலைப்படங்களை இயக்க வேண்டுமென்று எண்ணங்கொண்டிருந்தோம். என்னுடன் ஜார்ஜ் லூகாஸ் என்ற இளையவன் ஒருவனும் முனைப்புடன் இருந்தான். அவன் ஒரு திரைப்பட பள்ளி மாணவன்.

நாங்கள் American Zoetrope என்றொரு திரைப்பட இயக்கத்தை தொடங்கினோம். நான் அதற்கு முன்பே மூன்று ஆண்டுகள் திரைக்கதை ஆசிரியனாக பணியாற்றிக்கொண்டிருந்ததால், என்னிடம் ஜாக்குவார் கார் ஒன்றும், இரண்டு வீடுகளும் இருந்தன. ஆனால், திரைப்பட இயக்கம் தொடங்குவதென்று முடிவு செய்ததும், நான் என்னிடமிருந்த அனைத்து உடமைகளையும் விற்று விட்டேன்.
சரியாக அத் தருணத்தில்தான், அல் ரூடி மற்றும் க்ரே பிரெட்ரிக்சன்னிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் என்னிடம் 'நாங்கள் ராபார்ட் ரெட்ஃபோர்டை வைத்து படமொன்றை எடுக்கப் போகிறோம், அதனால் உங்களை சந்திக்க விரும்புகிறோம்' என்றனர். அவர்கள் வருவதாக தெரிவித்திருந்த அன்றுதான், சண்டே டைம்ஸில் இடம்பெற்றிருந்த சிறிய அளவிலான 'மேரியோ புஸோவின் காட்ஃபாதர்' என்ற புத்தக விளம்பரம் என் கண்ணில் தென்பட்டது.

நான் மேரியோ புஸோ எனும் பெயரால் ஈர்க்கப்பட்டேன். அப்பெயர் ஒரு அறிவுஜீவி தோற்றத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இட்டாலோ கால்வினோ போன்ற எழுத்தாளராக இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.

நான் அந்த விளம்பரத்தை அதிக ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். யார் இந்த மேரியோ புஸோ? இவர் ஒரு இத்தாலிய எழுத்தாளரா? என்று கேள்விகள் தொடர்ந்து எனக்குள் முளைவிட்டபடியே இருந்தன. அந்த புத்தக விளம்பரம், அதுவொரு அசாத்திய சக்தியை பற்றியது எனும் தோற்றத்தை ஏற்படுத்தியது.

நான் காட்ஃபாதரால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். சரியாக அதே நிமிடத்தில், என் வீட்டின் காலிங் பெல் அலறியது. என்னை காண அல் ரூடி மற்றும் க்ரே பிரெட்ரிக்சன் வந்திருந்தனர்.

நான் அப்போது 'தி கன்வர்சேஷன்' (The Conversation) என்றொரு திரைக்கதையை எழுதி முடித்திருந்தேன். அதனை மர்லன் பிராண்டோவுக்கு அனுப்பியும் வைத்திருந்தேன். அவருடன் எனக்கு அப்போது நேரடி பரிச்சயம் இல்லை என்றாலும், அவரது நடிப்பு என்னை பெருமளவு கவர்ந்திருந்ததால், எனது தி கன்வர்சேஷன்  படத்தில் அவர்தான் நடிக்க வேண்டுமென்று உறுதிக் கொண்டிருந்தேன். நான் காட்ஃபாதர் நாவலின் விளம்பரத்தை கையில் வைத்துக்கொண்டு அல் ரூடி மற்றும் க்ரே பிரெட்ரிக்சனோடு உரையாடிக்கொண்டிருந்தபோது எனக்கொரு அழைப்பு வந்தது. நான் ஃபோன் காலை அட்டன்ட் செய்து காதில் வைத்ததும் ஆச்சர்யத்தில் தடுமாறிப் போனேன். ஃபோனில் மார்லன் பிராண்டோ அழைத்திருந்தார்.

அவர் என்னிடம் 'கதை எனக்கு பிடித்திருக்கிறது, ஆனால், நிச்சயமாக எனக்கு ஏற்றதல்ல' என்றார். நானும் தொடர்ந்து அவரிடம், 'உங்களது பாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது' என்று சொல்லி வற்புறுத்திய போதும், 'இல்லை, நான் நடிக்கவில்லை' என்று மறுத்துவிட்டார். பிறகு, நான் என் எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம் 'மர்லன் பிராண்டோ தான் அழைத்திருந்தார்' என்று தெரிவித்தேன்.

பிற்காலத்தில் காட்ஃபாதர் படத்தை தயாரிக்க போகிறவர்கள் என் எதிரில் அமர்ந்திருவர்கள்தான் என்றோ, படத்தை இயக்க போகிறவன் நான்தான் என்றோ, மர்லன் பிராண்டோதான் காட்ஃபாதராக என்றென்றும் நிலைத்து நிற்க போகிறார் என்றோ எங்களில் யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை. அவ்வறையில் நாங்கள் அன்றைய தினத்தில் முதன்முறையாக இணைந்திருந்தோம். அது முற்றிலும் எதிர்பாராத அதிசயத்தக்கதொரு நிகழ்வு.

ஆனால், சில மாதங்களிலேயே நாங்கள் பிரிந்துவிட்டோம். அல் ரூடி மற்றும் க்ரே பிரெட்ரிக்சன் வேறு வேளைகளில் மூழ்கி விட்டார்கள். இந் நிலையில் நானும் லூகாஸும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டோம். எங்களது தற்காலிக அலுவலகத்துக்கு வாடகை பாக்கி வேறு அதிகம் இருந்ததால், எப்போதும் அலுவலகம் காலி செய்யப்படலாம் எனும் சூழல் நிலவியது. லூகாஸ் 'நாம் எதையாவது செய்தே ஆக வேண்டும்' என்று என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தான்.                

அப்போதுதான் பாராமெளன்ட் நிறுவனம் மேற்சொன்ன காரணங்களுக்காக காட்ஃபாதரை என்னை இயக்கச் சொல்லி அணுகியது. அதோடு அல் ரூடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்றும் தெரிவித்தது. ஆனால் நான் 'தி கான்வர்சேஷனை' படமாக்க விரும்பினேன். இருப்பினும், ஜார்ஜின் தொடர் வற்புறுத்தலால் காட்ஃபாதர் நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். அதிலிருந்த சகோததர்களுக்கிடையிலான உறவு, தந்தையின் கதை மற்றும் மாஃபியா போன்ற சமாச்சாரங்கள் என்னை வசீகரித்தன. ஆனாலும், காட்ஃபாதரில் இடம்பெற்றிருந்த பெண்ணினது பகுதி மிகவும் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தது.

நான் ஜார்ஜிடம் 'இதை என்னால் செய்ய முடியாது, நாவல் மிகவும் அலுப்பு மிக்கதாக இருக்கிறது' என்றேன். ஆனால் ஜார்ஜ், 'நாம் இப்போது அதிக நெருக்கடியில் இருக்கிறோம். அதனால், காட்ஃபாதர் நாவலில் உள்ள சுவாரஸ்யமான புள்ளிகளை மட்டுமாவது கையிலெடுத்துக்கொள்ளுங்கள்' என்று தொடர்ந்து வலியுறுத்தினான். அதனால், அதில் அடங்கியிருந்த மாஃபியா எனும் புள்ளியை கையிலெடுத்துக்கொண்டு, நூலகங்களில் மாஃபியாக்கள் குறித்த தகவல்களை திரட்டத் துவங்கினேன்.

அப்போது உங்களுக்கு மாஃபியா கும்பல்களை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை இல்லையா?

நிச்சயமாக எதுவும் அறிந்திருக்கவில்லை. மாஃபியாக்கள் குறித்து நான் தெரிந்து வைத்திருந்ததெல்லாம் என் சிறு வயதில் தந்தையோடு இணைந்து பார்த்த பிளாக் ஹேன்ட் (Black Hand) எனும் திரைப்படம் மட்டும்தான். அது மாஃபியா கும்பலை பற்றிய படம். மாஃபியாக்களை பற்றி அறிந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை தாண்டி, அவை எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்தோ, மாஃபியாக்கள் எங்கிருந்து உருவாகிறார்கள் என்றோ எனக்கு எதுவும் தெரியாது.

நான் முன்னதாகவே சில போர் சார்ந்த திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அவைகளில் ஒரு நேர்த்தி இல்லாதிருந்தது. அதனால், இம்முறை கவனமாக திரைக்கதையை கையாள வேண்டுமென்று முடிவெடுத்தேன். நூலகத்திலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்க தொடங்கினேன்.

அந்த புத்தகங்களை இப்போதும் நினைவு வைத்திருக்கிறீர்களா?

ஆம். அவை நியூயார்க் நகரில் வேர்விட்டிருந்த மாஃபியா கும்பல்களை பற்றிய புத்தகங்கள். அதில் நியூயார்க்கில் மாஃபியா கும்பல்களின் வரலாறு விரிவாக விளக்கப்பட்டிருந்தது. அதோடு, சால்வடோர் மாரன்சானோ எனும் மிகப்பெரிய மாஃபியா தலைவனின் கொலைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்த புத்தகத்தை எழுதியிருந்தவர் லக்கி லூஸியானா. அதோடு மேலும் சில மாஃபியா தலைவர்களை பற்றியும் அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அவை எல்லாமே வெவ்வேறான மாஃபியா கும்பல்களுக்கிடையிலான உறவினை ஆழமாக அலசியிருந்தன.

நான் இத்தகைய தகவல்களால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். நியூயார்க் நகரில் சில மாஃபியா குடும்பங்கள் சட்டவிரோதமான செயல்களை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, அவற்றை நடைமுறை படுத்திக்கொண்டிருந்ததை வாசிக்க வியப்பாக இருந்தது. சிலர் போதைப் பொருட்களின் விற்பனையை தங்கள் கைவசம் வைத்திருந்தனர். சிலரோ விபச்சார தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். இவை அனைத்தும் எவ்வித இடையூறுமின்றி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் இவர்களிடம் விரும்பி சென்றுக்கொண்டிருந்தார்கள்.

இறுதியாக, மாஃபியா கும்பல்களின் உலகம் அதிக சுவாரஸ்யமானது என்பதை புரிந்துக்கொண்டேன். அப்போது என் நினைவுக்கு 'டிரிக்கர்' மைக் கப்போலோ எனும் நியூ யார்க் நகரத்தின் மாஃபியா ஒருவர் நினைவுக்கு வந்தார்.  

அவர் உங்களின் உறவினரா?      

இல்லை. அவர் என் உறவினர் இல்லை. ஆனால், என் தந்தையும் மாமாவும் அவ்வப்போது அவரை பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலொன்று, 30 அல்லது 40-வது ஆண்டில் நடன மங்கை ஒருத்தியை அவர் திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே உறவு எப்போதும் நிலையற்றதாகவே இருந்திருக்கிறது. அதோடு என் பிரியத்திற்குரிய மாமா ஒருத்தருக்கும் மாஃபியா கும்பல்களை பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்திருந்தது. அதனால், வீட்டில் எப்போதும் மாஃபியாக்களை பற்றியே நாங்கள் பேசியபடி இருந்தோம்.

இதன்மூலம் எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்திருந்தது. நான் மீண்டுமொரு முறை காட்ஃபாதர் நாவலை வாசிக்கத் துவங்கினேன். இம்முறை நிறைய விஷயங்களை அடிக்கோடிட்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.

எனக்கு கிடைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு திரைக்கதை வடிவத்தை வரைந்தெடுத்தேன். அதோடு ஒவ்வொரு காட்சியைப் பற்றிய சிறுசிறு துணுக்குகளையும், படத்தில் உள்ள மனிதர்களுக்கிடையிலான உறவினையும் உருவாக்கி வைத்துக்கொண்டேன்.

நாவலில் இருந்து எத்தனை தூரம் விலகி நீங்கள் உங்கள் திரைக்கதையை அமைத்தீர்கள்? 

நான் காட்ஃபாதரை இயக்கியபோது நாவலையோ, திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. சேகரித்து வைத்திருந்த குறிப்புகளையே பயன்படுத்தினேன். இந்த குறிப்புகள் படப்பிடிப்பு துவங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்டது. இந்த குரிப்புகளிலிருந்தே நான் திரைக்கதையினை வடிவமைத்தேன். ஒவ்வொரு சிறு துணுக்கையும் தேவைக்கேற்ப விரிவாக்கி, அதனை காட்சிகளாக மாற்றினேன்.

காட்ஃபாதர் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெரும் என்று முன்னதாகவே கணித்தீர்களா?    

இல்லை. படம் வெளியானதற்கு பிற்பாடுதான் எல்லாமும் நிகழ்ந்தது. உண்மையில் பாரமெளன்ட் நிறுவனத்தின் நிலைதான் பரிதாபகரமானது. அவர்களுக்கு என்னுடைய ஐடியா பிடிக்கவில்லை. எனது திரைப்படம் பிடிக்கவில்லை. என்னையும் சுத்தமாக அவர்களுக்கு பிடிக்கவில்லை.

நான் ஒரு கட்டுரையில் காட்ஃபாதர் உருவாக்கத்தின் பின்னணியில் பாரமெளன்ட் நிறுவனத்தினர் பலரும் பங்குகொண்டதாக தகவல் ஒன்றை படித்தேன். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது?  

அவர்கள் எனக்கு பின்னால் இருந்தது உண்மைதான். ஒரு இளைய இத்தாலிய இயக்குனரை நியமிப்பதன் மூலம் அவர்கள் மூன்று விஷயங்களை சாத்தியப்படுத்திவிட முடியுமென்று நம்பினார்கள். முதலாவது, படத்தை மிகக் குறைந்த செலவில் எடுத்து முடித்துவிட முடியும். இரண்டாவது, எப்போதும், நான் அவர்களின் கண்காணிப்பிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள முடியும். மூன்றாவது படத்துக்கு இத்தாலிய சாயலையும் கச்சிதமாக பூசிவிட முடியும். அவர்கள் இரண்டு மில்லியனுக்கும் குறைவான தொகையிலேயே படத்தை எடுத்து முடித்துவிட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் புத்தகம் வாசகர்களிடம் லேசான கவனிப்பை பெற்றிருந்தது.

படத்தை முடித்தபோது எவ்வளவு தொகை மொத்தமாக செலவிடப்பட்டிருந்தது?

6.2 மில்லியன்.    

காட்ஃபாதர்  1972 ஆம் ஆண்டுதான் வெளியானது இல்லையா?

ஆமாம். முதலில் உருவாக்கிய திரைக்கதை நிகழ்காலத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. அதோடு அதில் ஹிப்பிகளும் இடம் பெற்றிருந்தார்கள். ஏனெனில், காட்ஃபாதரை வரலாற்று படமாக அல்லாமல், நிகழ்காலத்தில் நடைபெறுவதைப்போல திரைக்கதையை அமைப்பதன் மூலமாக செலவுகளை அதிகளவில் குறைக்க முடியும். அதோடு உடைகள், செட்டுகள் என எதற்கும் அதிக மெனக்கெடல் தேவைப்படாது. நாம் வீதியில் இறங்கினால் போதும், நமக்கு வேண்டிய அனைத்தும் நமக்கு எளிதாக கிடைத்துவிடும்.

ஆனால், நான் புத்தகத்தில் நடைபெறுவதைப்போல 40-களில் நடப்பதாகவே படத்தையும் இயக்க விரும்புவதாக ஸ்டுடியோக்காரர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதனை ஏற்கவில்லை. எனினும், எனக்கு ஹிப்பிகளை வைத்துக்கொண்டு படத்தை இயக்க துளியும் விருப்பமில்லை. நான் காட்ஃபாதரை கிளாசிக் தன்மையிலேயே உருவாக்க விரும்பினேன். ஷேக்ஸ்பியர் கதையைப்போல கிளாசிக் தனிமையிலேயே காட்ஃபாதரையும் உருவாக்க விரும்பினேன்.

அதேப்போல, படத்தை நியூயார்க் நகரத்தில் படம்பிடிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையையும் ஸ்டுடியோவினர் நிராகரித்தனர். நியூயார்க்கில் படம் பிடிப்பது அதிக பணத்தை இழுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். வேறு ஏதேனுமொரு சிறிய நகரில் படம்பிடிக்க வலியுறுத்தினர். இல்லையெனில், காட்ஃபாதரை கைவிட்டு விட்டு, அப்போது அதிகளவில் விற்பனையாகிக்கொண்டிருந்த வேறொரு நாவலை படமாக்க தூண்டினார்கள்.

நான் கான்சாஸ் நகரத்திலேயே படப்பிடிப்பை நடத்திக்கொள்கிறேன் என்று அவர்களிடம் ஒப்புக்கொண்டு, அந்த நகரில் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய அங்கு சென்றிருந்தேன். ஆனால், விரைவிலேயே அது துளியும் சாத்தியமில்லாதது என்பதை உணர்ந்துக்கொண்டேன். இது நியூயார்க் நகரத்தின் ஐந்து மாஃபியா குடும்பங்களை பற்றிய கதை. தவிர வரலாற்று படமும்கூட.

சரியாக, அந்த தருணத்தில்தான் ஸ்டுடியோவினர் வேறு சில இயக்குனர்களை காட்ஃபாதரை இயக்கும்படி அணுகி இருக்கிறார்கள். அதிக தொந்தரவு அளிக்கக்கூடிய என்னை அவர்கள் துளியும் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் அணுகிய அனைவருமே காட்ஃபாதரை விரும்பவில்லை. அதில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என்று விலகிவிட்டார்கள்.  அதனால் மீண்டும் அவர்கள் என்னிடமே திரும்பி வந்தார்கள்.

அதே தருணத்தில், நான் விட்டோ கார்லியோனின் கதாப்பாத்திரத்தை வடிவமைப்பத்தில் அதிக முனைப்புடன் ஈடுபட துவங்கினேன். விட்டோ கார்லியோன் கதாப்பாத்திரம் நிஜ மாஃபியாக்களான Vito Genovese மற்றும் Joe Profaci ஆகியோரின் ஒருங்கிணைந்த வடிவமே. மேரியோ புஸோ நாவல் முழுவதும் இதுப்போன்ற பல நிஜ சம்பவங்களையும், மனிதர்களையும் உலவ விட்டிருந்தார்.

அதன்பிறகுதான், சிக்கல்கள் வரிசையாக துவங்கின. நியூயார்க் நகரிலேயே எப்படி மிகக்குறைந்த செலவில் படத்தை இயக்குவதென்று நான் தீவிரமாக சிந்தித்தபடியே இருந்தேன். அதோடு, நடிகர்களை தேர்வு செய்வதிலும் நாங்கள் கவனம் குவிக்கத் துவங்கினோம். ஆனால், ஸ்டுடியோவினர் வரலாற்று படமாக இதனை உருவாக்கினால் இரண்டு மில்லியன்களை நிச்சயாக கடந்துவிடும் என்பதிலேயே நிலையாக நின்றிருந்தனர்.

நான் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கும் குழுவினரை தேர்வு செய்ய துவங்கிவிட்டேன். மைக்கேல் கதாப்பாத்திரத்திற்கு ராபர்ட் ரெட்ஃபோர்டை சிபாரிசு செய்தனர். ஆனால், அவர் இத்தாலிய சாயலில் இல்லை என்று சொல்லி, அதனை நான் நிராகரித்துவிட்டேன். என்னை தேர்வு செய்ததே என்னை எளிதாக கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்பதால்தானே. அதனால் அவர்கள் தொடர்ந்து பல நடிகர்களை சிபாரிசு செய்தபடியே இருந்தனர். ஆனால், அதனை எதையும் நான் ஏற்கவில்லை.

விட்டோ கார்லியோனின் கதாப்பாத்திரத்திற்கு யார் பொருத்தமானவர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், மைக்கேல் கதாப்பாத்திரத்திற்கு அல் பாசினோ என்பவர்தான் மிக சரியான தேர்வாக இருப்பார் என்று சொன்னேன். உடனே அவர்கள், 'யார் அந்த அல் பாசினோ?' என்று கேட்டார்கள். நான், 'அவர் ஒரு மிகச் சிறந்த நாடக நடிகர். இன்னும் திரைப்படங்கள் நடிக்கவில்லை. எனினும், மைக்கேல் கதாப்பாத்திரத்திற்கு அதிக நியாயம் சேர்க்கக்கூடியவர் அவராகத்தான் இருக்கும்' என்றேன். உடனேயே அவர்கள் அதனை மறுத்துவிட்டனர். காட்ஃபாதரில் அல் பாசினோ நிச்சயமாக இல்லை. நியூயார்க்கில் படப்பிடிப்பு நடக்கப்போவதுமில்லை. மேலும், இதுவொரு வரலாற்று படமும் இல்லை என்றார்கள் தீர்மானமாக.

அதனால், பல பகுதிகளில் இருந்தும் நிறைய இளைஞர்களை வரவழைத்து நேர்முகத் தேர்வு நடத்தினோம். எனினும், இதன்மூலம் நிறைய தொகை செலவழிந்ததே ஒழிய, ஆரோக்கியமாக எதுவும் நடக்கவில்லை. ஸ்டுடியோவினர் நடிகர்களில் குறையில்லை, இயக்குனரிடம்தான் குறையுள்ளது என என்னையே குற்றம்சாட்டினார்கள்.

உடனேயே, 'காட்ஃபாதர் கதாப்பாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான் 'உலகத்திலேயே மிகச்சிறந்த இரண்டு நடிகர்கள் லாரன்ஸ் ஆலிவரும், மர்லன் பிராண்டோவும்தான். ஆனால், மர்லன் பிராண்டோ இன்னும் இளையவராகவே இருக்கிறார். அவருக்கு வயது 47 தான். அதனால் நாம் ஏன் ஆலிவரை அணுகக்கூடாது' என்றேன். அதற்கு அவர்கள், 'ஆலிவர் இனியும் நடிப்பதாக இல்லை. அவர் விரைவிலேயே இறந்து விடுவார்' என்றார்கள். 'அப்போது நாம் மர்லன் பிராண்டோவை ஏன் அணுகக்கூடாது?' என்றேன்.

பாரமெளன்ட் நிறுவனத்தினருடனான அடுத்த அமர்வில் நான் மர்லன் பிராண்டோவை முன் மொழிந்தேன். ஆனால், அவர்கள் 'மர்லன் பிராண்டோ இறுதியாக பர்ன் (Burn) என்றொரு படத்தில் நடித்திருந்தார். ஒருவேளை அவர் அதில் நடித்திருக்காவிட்டால், படம் சிறப்பாக வந்திருக்கும். அதனால் மர்லன் பிராண்டோவை காட்ஃபாதராக கற்பனை செய்து பார்ப்பதைக்கூட தவிர்த்துவிடுங்கள்' என்றனர்.

அதோடு, இன்னொரு அமர்வுக்கும் என்னை அழைத்திருந்தனர். அதில் பாரமெளன்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் துளி ஆதரவுமின்றி கைகளில் விலங்கிடப்பட்டவனைப்போல என்னை உணர்ந்தேன். அவர்களின் பிரெசிடென்ட், 'இந்த படத்தில் மர்லன் பிராண்டோ நிச்சயமாக இல்லை' என்று திடமாக சொன்னார். அதற்கு நான், 'என்னை இயக்குனராக நியமித்திருக்கிறீர்கள். ஆனால், என் கருத்தை துளியும் நீங்கள் ஏற்பதில்லை. இப்போது நீங்கள் எனக்கு கட்டளையிடுகிறீர்கள். தயவுக் கூர்ந்து இந்த ஒன்றிலாவது என் பேச்சை கேளுங்கள்' என்று மன்றாடினேன்.

இறுதியாக அவர்கள் மர்லன் பிராண்டோ படத்தில் இடம்பெற வேண்டுமானால் மூன்று விஷயங்களை உடனடியாக செய்தாக வேண்டுமென்று தெரிவித்தார்கள். முதலாவது, காட்ஃபாதரில் படத்தில் நடிப்பதற்கு பிராண்டோவுக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படாது. இரண்டு, அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதாவது, படப்பிடிப்புக்காக திட்டமிடப்பட்ட செலவு தொகை அவரால் விரயமாகுமானால், அதற்கு அவரே முழுப் பொறுப்பும் ஏற்று அந்த தொகையினை திருப்பிக்கொடுக்க வேண்டும். மூன்றாவது, அவர் ஸ்கிரீன் டெஸ்டிற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். மர்லன் பிராண்டோவை எப்படியாவது இதில் நடிக்க வைத்துவிட வேண்டுமென்பதில் உறுதியுடன் இருந்ததால், அவர்கள் முன் வைத்த எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க நான் தயாராக இருந்தேன்.

ஆனால், மனதினுள் எப்படி இதனை சாத்தியப்படுத்தப் போகிறேன் என்று சிந்தித்தபடியே இருந்தேன். மூன்று கோரிக்கைகளில் எனக்கு பெரும் பிரச்சனையாக தெரிந்தது ஸ்கிரீன் டெஸ்ட்தான். அதனால், பிராண்டோவுக்கு போன் செய்து, 'நாம் காட்ஃபாதர் கதாப்பாத்திரத்துக்கான ஒத்திகை ஒன்றினை நிகழ்த்திப் பார்க்கலாமா? சிறிய வீடியோ கேமரா ஒன்றில் அதனை பதிவு செய்து கொள்ளலாம், காட்ஃபாதர் கதாப்பாத்திரத்தை மெருகேற்ற அது பெரிதும் துணை புரியும்' என்றேன். இதுவொரு ஸ்கிரீன் டெஸ்ட் என்பதை அப்போது அவரிடம் தெரிவிக்கவில்லை. அவரும் உடனடியாக என்னை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

நான் பிராண்டோ பற்றி அதிகம் படித்திருந்தேன். அதனால் என்னுடைய குழுவினரிடம், 'பிராண்டோ அதிகம் சத்தத்தை விரும்ப மாட்டார். அவருக்கு இரைச்சல் துளியும் பிடிக்காது. அதனால் நாம் கறுப்பு உடையில் செல்வோம். அதோடு துளி சத்தமும் எழுப்பாமல் அமைதியாக நமது சம்பாஷனையினை நிகழ்த்துவோம்' என்று தெளிவுப்படுத்தியிருந்தேன். என்னிடம் மிகச்சிறிய கேமரா ஒன்று இருந்தது. நாங்கள் ஒரு காலைப்பொழுதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்த ஏழாம் நம்பர் வீட்டின் கதவை தட்டினோம். முதிய பெண்ணொருத்தி வீட்டின் கதவை திறந்து எங்களை வரவேற்றார்.

நான் இத்தாலிய மாஃபியாக்கள் பயன்படுத்தக்கூடிய பல பொருட்களை என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். அவைகளை பிராண்டோவின் அறையில் பரப்பி வைத்துவிட்டு பதற்றத்துடன் காத்திருந்தேன். பிராண்டோ உறக்கத்திலிருந்து மெல்ல எழுந்து என் அருகே நடந்து வந்தார். நான், 'காலை வணக்கம் பிராண்டோ' என்றேன். அவர் தனது பாணியில், 'ம்ம்ம்' என்றுவிட்டு தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட் ஒன்றினை பற்ற வைத்துவிட்டு, 'ம்ம்ம்' என்றார்.

பிறகு, அவர் எழுந்து சென்று தன் தலை கேசத்தை வழித்து சீவினார். அதோடு, தன் ஷுக்களுக்கு பாலிஷ் செய்தார். அவர் தன் சட்டை காலரை சுருட்டியபடியே, 'அவர்களின் சட்டை காலர் எப்போதும் சுருங்கியிருக்கும்' என்றார். அவர் மெல்ல காட்ஃபாதராக உருமாறிக்கொண்டிருந்தார். தன் மேல் கோட்டை அணிந்துக்கொண்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார். நாங்கள் அனைத்தையும் படம் பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றோம். எப்படி 47 வயதுடையவரான பிராண்டோவால் காட்ஃபாதராக கச்சிதமாக உருமாற முடிந்திருந்தது என்று வியந்தபடியே அங்கிருந்து கிளம்பி சென்றோம்.

நான் நேராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்த சார்லியின் அலுவலகத்திற்கு சென்றேன். அவர்தான் பிராண்டோ கூடாது என்பதில் அதிக தீவிரத்துடன் இருந்தார். அதனால், பிராண்டோவின் ஸ்கிரீன் டெஸ்ட் வீடியோவினை சுமந்துக்கொண்டு அவரிடம்  சென்று, அவரின் அறை கதவை தட்டி, வீடியோவை போட்டுக் காண்பித்தேன். பிராண்டோவை அந்த வீடியோவில் பார்த்ததும் முதலில், 'இது அவசியமில்லை..' என்று சொல்லிக்கொண்டே இருந்தவர். வீடியோ டேப் முழுவதும் முடிந்திருந்தபோது, 'பிராண்டோதான் காட்ஃபாதருக்கான சரியான தேர்வு' என்றார்.

அவருக்கு பிறகு, பாரமெளன்ட் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு அந்த டேப்பினை காண்பித்தேன். அவர்கள் எல்லோரும் பிராண்டோவின் தோற்றத்தால் அசந்துப்போயிருந்தார்கள். அதனால், எல்லோருமே அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும், அவருக்கு சராசரி நடிகருக்கான சம்பள தொகை தருவதோடு, எந்த ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட வேண்டிய அவசியமுமில்லை என்றும் தெரிவித்தனர். நான் அவர்களை சம்மதிக்க வைத்தேன்.

அதன் பிறகு அல் பாசினோவை உள்ளிழுப்பதிலும் அதிக சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. பாரமெளன்ட் நிறுவனத்தினர் அல் பாசினோ, காட்ஃபாதரில் இடம்பெறுவதை துளியும் விரும்பவில்லை. அதனால் அல் பாசினோ வேறொரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிஸியாகிவிட்டார். பிராண்டோவும் வேறொரு படத்தில் நடிக்கத் துவங்கிவிட்டார். நான் அவ்வப்போது பிரண்டோவை அவரது படப்பிடிப்பு தளத்தில் சென்று சந்தித்து வருவேன்.

அப்போதுதான், அல் பாசினோ நடித்து வெளியாகியிராத 'தி பானிக்' (The Panic) என்ற படத்தின் சில காட்சிகளை பாரமெளன்ட் நிறுவனத்தினர் பார்த்திருந்தனர். அப்படத்தில் அல் பாசினோ சிறப்பாக நடித்திருப்பதாகவும், இனி அவர் காட்ஃபாதரில் நடிப்பதில் தங்களது பிரச்சனை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். ஆனால், அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால், என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், மற்றொரு நடிகர் சில மாஃபியாக்களின் துணைக்கொண்டு அல் பாசினோவை அவர் நடித்துக்கொண்டிருந்த திரைப்படத்திலிருந்து விலக செய்து அந்த பாத்திரத்தை தானே ஏற்றுக்கொண்டார். இதனால் அல் பாசினோ என்னுடன் இணைந்துக்கொண்டார். எனினும், பல்வேறு பிரச்சனைகளுடன்தான் காட்ஃபாதர் முதல் பாகத்தை என்னால் இயக்கி முடிக்க முடிந்தது.

காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தை பற்றி சொல்லுங்கள்?

காட்ஃபாதர் முதல் பாகம் முடிந்ததுமே நான் அதிலிருந்து முழுவதுமாக விலகி விடுவதென்று முடிவு செய்திருந்தேன். மேலும்மேலும் மாஃபியாக்கள் குறித்து எதையும் ஆராய்ந்துக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. ஆனால், சார்லி என்னிடம் 'உங்களுக்கு சக்சஸ் பார்முலா தெரிந்திருக்கிறது, அதனால் இன்னொரு காட்ஃபாதரை செய்யுங்களேன்' என்றார். நான் அதற்கு துளியும் இணங்கவில்லை. எனக்கு அது அவசியமில்லை என்று பட்டது. 'காட்ஃபாதர் சரியான இடத்தில் நிறைவு பெற்றுவிட்டது, மேலும் அதிலிருந்து நீட்டித்து இழுக்க எதுவுமில்லை' என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன்.

சரியாக இந்த தருணத்திலிருந்து காட்ஃபாதரின் இராண்டாம் பாகம் எப்படி சாத்தியமானது?

காட்ஃபாதர் அப்போது மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. 'கான் வித் தி வின்ட்' (Gone with the wind) திரைப்படத்தை விடவும் மிகச்சிறந்த படம் என்று பலராலும் பாராட்டப்பட்டது. அக்காலக்கட்ட திரைப்பட வரலாற்றிலேயே காட்ஃபாதர் அளவுக்கு வெற்றி அடைந்த படமென்று எதுவும் இருந்திருக்கவில்லை. அதனால், அவர்கள் என்னிடம் காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தை பற்றிய பேச்சை தொடங்கினார்கள். ஆனால், நான் வேறு எந்த படத்தை இயக்கும் முன்பாகவும் என்னுடைய தி கன்வர்சேஷனை இயக்கிவிட வேண்டுமென்று பிடிப்புடன் இருந்தேன்.

காட்ஃபாதர் திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டபோது, அது மிகச்சிறந்த திரைப்படத்துக்கான விருதினை பெற்றது. ஆனால், மிகச்சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கவில்லை. எனக்கு இது மிகப்பெரிய மன உளைச்சலை அளித்தது. ஏனெனில், ஒரு இளைய இயக்குனரான எனக்கு ஆஸ்கார் என்பது பெரும் கனவாக இருந்தது. ஆனாலும், எனக்கு வேறு சில விருதுகள் கிடைத்திருந்தன. இதன்மூலம், நான் கொஞ்சம் வசதியானவனாகவே மாறியிருந்தேன். அப்போது சார்லி தொடர்ந்து என்னை வந்து சந்தித்தபடியே இருந்தார். எப்படியாவது என்னை காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தை இயக்க வைப்பதில் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருந்தார். ஆனால், எனக்கு காட்ஃபாதர் இரண்டாம் பாகம் செய்வதில் ஆர்வமேதுமில்லாததால், 'நான் திறமையான இளைஞன் ஒருவனை பிடித்துத் தருகிறேன். என்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் அவனுக்கு செய்கிறேன். ஆனால், நிச்சயமாக நான் இயக்க மாட்டேன். பாரமெளன்ட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து வேலை செய்ய முடியாது' என்றேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதனால் நான் மார்டின் ஸ்கார்ஸசியின் பெயரை பரிந்துரைத்தேன். மேலும், திரைக்கதை உருவாக்கத்தில் அவருக்கு நானும் மேரியோ புஸோவும் உதவி புரிவதாகவும் சொன்னேன். ஆனால், அவர்கள் 'நிச்சயமாக மார்ட்டின் ஸ்கார்ஸசி காட்ஃபாதர் இராண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை' என்று மறுத்துவிட்டார்கள். மீண்டும் என்னையே இயக்கும்படி வற்புறுத்தினார்கள்.

நிச்சயமாக நான்தான் அவர்களுக்காக காட்ஃபாதர் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டுமானால், சில கோரிக்கைகளை பின்பற்றியே ஆக வேண்டுமென்று தெரிவித்தேன். முதலாவது, நிச்சயமாக நான் கான்வர்சேஷன் படத்தை முடித்துவிட்டுதான் காட்ஃபாதரை கையிலேடுப்பேன் என்றேன். இரண்டாவது, எனக்கு சம்பளமாக ஒரு மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றேன். அடுத்தது, படத்துக்கான முழு பட்ஜெட்டையும் நானே முடிவு செய்வேன் என்றேன். இறுதியாக, இந்த படத்தை 'தி ரிடர்ன் ஆஃப் மைக்கேல் கார்லியோன்' (The Return of Michael carleone) என்று அழைப்பதற்கு பதிலாக, காட்ஃபாதர் இரண்டாம் பாகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றேன்.

அவர்களும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு, நான் திரைக்கதையினை தனியே அமர்ந்து எழுதி எடுத்துச் சென்று மேரியோ புஸோவிடம் காண்பித்தேன். இறுதியாக, நானும் புஸோவும் பேசி சில மாற்றங்களை திரைக்கதையில் கொண்டு வந்தோம்.

காட்ஃபாதர் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட அதிக வசூலை குவித்ததா?

இல்லை. நிச்சயமாக இல்லை. எனினும் எனக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை பெற்று தந்தது. அதோடு, முதல் பாகத்தை விடவும் சிறந்த படமென்று பலராலும் பாராட்டப்பட்டது.

அதோடு, பல வருடங்களுக்கு பிறகு காட்ஃபாதர் மூன்றாவது பாகத்தையும் நான் இயக்கினேன். ஆனால், எல்லோரும் முதல் பாகத்தைதான் பெரிதும் விரும்புகிறார்கள். அதன் வசனங்களை இப்போதும் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், அப்படத்தில் எல்லாமும் சிறப்பாக அமைந்திருந்தது. மர்லன் பிராண்டோ எனக்கு கிடைத்திருந்தார். மிகச்சிறந்த தொழிற்நுட்ப கலைஞர்கள் எனக்கு கிடைத்திருந்தார்கள்.

என்னைப்போலவே பின்னாட்களில் இதுப்போன்ற கச்சிதமான குழுவினை ஒருங்கிணைத்து மாஃபியா வகை படங்களை மேலும் சிறப்பாக கையாண்டவர் மார்ட்டின் ஸ்கார்ஸசிதான். நான் காட்ஃபாதரை கிளாசிக் தன்மையில் படமாக்கினேன் என்றால், மார்ட்டின் குட்ஃபெலாசை (Goodfellas) மிகுந்த எதார்த்தமாக உருவாக்கி இருந்தார். இதற்கு காரணம், அவர் அத்தகைய சூழலில்தான் வளர்ந்தார்.

காட்ஃபாதர் திரைப்படத்தின் நான்காவது பாகத்தை இயக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?       

இல்லை. இரண்டாவது பாகத்தையே நான் இயக்க விரும்பவில்லை. இருந்தும், மூன்றாவது பாகத்தை செய்ததன் காரணம், அத்தருணத்தில் நான் மிகவும் சரிவடைந்திருந்தேன் என்பதால்தான்.

காட்ஃபாதர் திரைப்படத்தை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? அப்படம் தான் உங்களை புகழின் உச்சிக்கு உயர்த்தியது இல்லையா?

உண்மையில் நான் காட்ஃபாதர் திரைப்படம் உருவாக்கப்பட்டதன் பின்னணியை மறக்கவே விரும்புகிறேன். அத்தனை தூரம் எனக்கு மன உளைச்சலை அளித்த திரைப்படம் காட்ஃபாதர். தி கன்வர்சேஷன் திரைப்படத்தை உருவாக்கும்போதுதான் அதிக மன நிம்மதியுடன் என்னால் பணியாற்ற முடிந்தது. ஏனெனில், அது நானே எழுதி இயக்கியப் படம்.

இருப்பினும், காட்ஃபாதர்தான் என்னை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது என்பதையும் மறுக்க முடியாது. காட்ஃபாதர்தான் என்னை உலகில் அடையாளப்படுத்தியது. அந்த படம்தான் எனக்கு தி கன்வர்சேஷனையும், அப்போகாலிப்ஸ் நெளவ்வையும் இயக்கும் வாய்ப்பையும் எனக்களித்தது.

காட்ஃபாதர் திரைப்படம் என்னுடைய உழைப்பால் மட்டுமே சாத்தியமான படமல்ல. மர்லன் பிராண்டோ, அல் பாசினோ, மேரியோ புஸோ, எனது ஒளிப்பதிவாளர் வில்லிஸ், கலை இயக்குனர் கிளைமர் என்று பலருடைய உழைப்பும் அதில் கலந்திருக்கிறது. எல்லா படங்களுமே கூட்டு உழைப்பால் மட்டுமே சாத்தியமாகின்றன. வாழ்க்கையிலும் நாம் சக மனிதர்களின் உறுதுணையுடன்தானே ஒவ்வொரு நாளை கடத்திக்கொண்டிருக்கிறோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com