எரியும் நெருப்பில் எண்ணெய்யைத் தான் ஊற்றக்கூடாது; ஆனால் கோகோ-கோலாவை ஊற்றலாம்! 

தீயணைப்பு வீரர் ஒருவர் கோகோ-கோலாவை ஊற்றி எரியும் தீயை அணைக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
எரியும் நெருப்பில் எண்ணெய்யைத் தான் ஊற்றக்கூடாது; ஆனால் கோகோ-கோலாவை ஊற்றலாம்! 

கோகோ-கோலாவை ஊற்றி கழிவறையை கழுவினால் கழிவறை பளிச்சிடும் போன்ற பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் கோகோ-கோலாவை வைத்துப் பற்றி எரியும் நெருப்பை எளிதில் அணைத்துவிடலாம் என்பதை அறிவீர்களா? ஆம், தீயணைப்பு வீரர் ஒருவர் கோகோ-கோலாவை ஊற்றி எரியும் தீயை அணைக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

1886-ல் அறிமுகமான இந்த கோகோ-கோலா உலகில் பல நாடுகளில் அதிகம் விற்கப்படும் குளிர்பானங்களில் ஒன்று. அதன் பிறகு வந்த பல ஆராய்ச்சி முடிவுகளில் இதைக் குடிப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்றும், உடலுக்குப் பல தீங்குகளைத் தரக்கூடியது என்றும் தெரிய வந்தது. நமது இந்தியாவில் இது வெளிநாட்டுக் குளிர்பானம் என்பதால் இதைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும், இதைப் போன்ற அந்நிய நாட்டுப் பொருட்களாலேயே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவாக உள்ளது என்று கூறப்பட்டது. மேலும் குறிப்பாக நமது தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இந்த நிறுவனங்கள் நமது விவசாயத்திற்குத் தேவையான நிலத்தடி நீரை உரிந்து எடுத்து தங்களது தொழிற்சாலைகளை அமைக்கின்றன போன்ற விஷயங்கள் தெரியவந்து வணிக நிறுவனங்களே இந்தக் குளிர்பானங்களை புறக்கணித்தன. இப்படிப் பல எதிர்ப்புகள் கோகோ-கோலாவிற்கு எதிராக இந்தியாவில் உள்ளது.

சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விஷயத்துக்கு வருவோம். நமது நாட்டில் அனைத்து வீடுகளிலும் தீயணைப்பு சாதனங்கள் இருப்பதில்லை, உண்மையைச் சொல்ல போனால் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயமாக இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்களிலேயே இவை இருப்பதில்லை. ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு எளியத் தீர்வாக கோகோ-கோலா அமையவுள்ளது.

இதைப் பயன்படுத்தி பெரிய அளவிலான தீயை அணைக்க முடியாது என்றாலும் தீ பரவுவதற்கு முன்பு அது சிறிய அளவில் இருக்கும் போதே அதை அணைத்துவிட இது உதவும். கோகோ-கோலா பாட்டிலை வேகமாக குலுக்குவதன் மூலம் அதில் அடைக்கப்பட்டு இருக்கும் காற்று அதைப் பொங்க வைக்கும், அது பொங்கி வரும் அந்தச் சந்தர்ப்பத்தில் கட்டை விரலைப் பயன் படுத்தி எரியும் நெருப்பிற்கு எதிர்த் திசையில் வேகமாகக் கோலாவை பீச்சி அடிப்பதால் தீ அணைந்து விடும். 

இதைச் செயல் வடிவில் தீயணைப்பு வீரர் ஒருவர் செய்து காட்டியுள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது. தீயணைப்பு சாதனங்களின் விலை அதிகம் என்பதாலும் பலரது வீடுகளில் அவற்றை நாம் வாங்கி வைப்பதில்லை, ஆனால் ஒரு லிட்டர் கோகோ-கோலாவின் விலை 100 ரூபாய்க்கும் கீழே தான். குழந்தைகள் எடுத்துக் குடித்து விடாமல் இருக்க வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்களான ஆஸிட் போன்றவற்றை வைக்கும் உயரமான இடங்களில் இதை வைப்பது நல்லது. எனவே அனைவரது வீட்டிலும் அதாவது தீயணைப்பு சாதனங்கள் இல்லாதவர்கள் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று கோகோ-கோலா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com