எம்.ஜி.ஆரும் திமுகவும்

நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951)
எம்.ஜி.ஆரும் திமுகவும்

1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம்  வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.

1937 ஆம் ஆண்டு வெளியான  “சதி  அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.

திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.

திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.

நேரடியாக  திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...

நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன. 

திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது.  அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.

1947-இல் வெளியான  “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.

1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான  “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.

பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...

பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;

“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா

அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!

”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)

இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)

முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.

“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா

“சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”

அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க

என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.

காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.

முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)

ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.

அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.

இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.

சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் உழைப்பும் உண்டு.
 

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com