ஆதார் அட்டை இல்லாததால் உயிரிழந்த 11 வயது சிறுமி: அவரைக் கொன்றது பட்டினி மட்டுமா?

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், அரிசி கிடைக்காமல், ஜார்க்கண்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் அட்டை இல்லாததால் உயிரிழந்த 11 வயது சிறுமி: அவரைக் கொன்றது பட்டினி மட்டுமா?


ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், அரிசி கிடைக்காமல், ஜார்க்கண்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி தங்கள் ஜீவனத்தை நடத்தி வந்த ஏழைக் குடும்பங்கள் பரிதவிப்புக்கு உள்ளாகின.

ஜார்க்கண்ட் மாநிலம் கரிமதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமாரி என்ற சிறுமி கடந்த செப்டம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்து பல நாட்கள் ஆன நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வந்துள்ளத.

அவர்கள் வீட்டு ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்காததால், அது ரத்து செய்யப்பட்டு, அரிசி முதலியவை கிடைக்காமல், பட்டினியால் சிறுமி மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்த தகவல் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. சந்தோஷியின் தாய் உட்பட 10 பேர் கொண்ட இந்த குடும்பத்துக்கு கடந்த 6 மாதங்களாக ரேஷனில் பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால், இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல நாட்கள் பட்டினியாகவே தங்கள் நாட்களை கழித்து வந்துள்ளனர்.

2013ம் ஆண்டு முதல், ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், அந்த உத்தரவை மீறும் வகையில் அரசுகள் நடந்து கொள்வதையே இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது. ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது, இருப்பவர்கள் இணைத்துக் கொள்ளலாம் என்றே உச்ச நீதிமன்றம் கூறி வந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு எந்த அரசு பதிலளிக்கப் போகிறது. பொறுப்பேற்றுக் கொள்ளப்போகிறது.

ஆதார் இணைப்பினால் பல நன்மைகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைத்திருப்பதாக மத்திய அரசு மார்தட்டிக் கொண்டாலும், அது நடக்காமல் போயிருந்தாலும் யாருக்கும் ஒன்றும் ஆகியிருக்காதோ? ஆனால் கட்டாயம் என்ற ஒற்றை வார்த்தையால், இப்படி ஒரு உயிர்தானா? இல்லை வெளிச்சத்துக்கு வராமல் எத்தனை உயிர்கள் போயிருக்குமோ என்றே அஞ்ச வேண்டியுள்ளது.

பல்வேறு விஷயங்களில் களையெடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், எடுத்ததுமே ஏழை, எளிய மக்களின் அடிப்படை வசதிகளிலேயே குறி வைப்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

மத்திய அரசும், மறைமுகமாக, ஆரம்பத்தில் இருந்தே ஏழை எளிய மக்களின் பலாபலன்களில்தான் முக்கியக் கவனம் செலுத்தி வந்தது. சிலிண்டர் மானியம், ரேஷன் பொருள் மானியம் என ஏழை மக்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச சலுகைகளைக் கூட இரும்புக் கரம் கொண்டு அடக்கி, லட்சமும் இல்லாமல் கோடியும் இல்லாமல், லட்சக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்கள்கு அதேக் கையால் டாடா காண்பித்துக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கு எதிரான நல(?) திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டும் எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை பாகுபாடு காட்டியதே இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com