ஜீன் பியரி மெல்வில் - வாழ்வும் கலையும்

‘நீங்கள் உங்களது திரைப்படங்களை அமைதியும் இருளும் நிரம்பியிருக்கும் படத்தொகுப்பு மேசையில்தான் உருவாக்குகிறீர்கள். எனது சொர்க்கம் என் வீட்டில் தனிமையில் அமர்ந்து நான் திரைக்கதை எழுதுவதிலும், பின்னர் படத்தொகுப்பு செய்வதிலுமே இருக்கிறது. நான் படப்பிடிப்பை முற்றிலுமாக வெறுக்கிறேன். பயனற்ற வெற்று பேச்சுகளால் மட்டுமே படப்பிடிப்பு தளம் நிறைந்திருக்கிறது’ – ஜீன் பியரி மெல்வில்  

வெகு சொற்ப இயக்குனர்களுக்குத்தான் மிகச் சிறந்த போற்றுதல்களும், நினைவு கூறல்களும் காலத்தில் கிடைக்கப் பெறுகின்றன. மெல்வில் அவர்களில் மிகமிக உட்சபட்ச மரியாதையை தனக்கென உருவாக்கி வைத்துள்ளார். அறுபதுகளில் பிரெஞ்சு தேசத்தின் மிக பிரபலமான இயக்குனராக இருந்த மெல்வில், தமது 55-ஆவது வயதில் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். மெல்வில் பற்றி நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருபவை குற்றவியலை அடிப்படையாக கொண்டு அவர் இயக்கிய திரைப்படங்கள்தான் என்றாலும், பல களங்களில் தனது திரையுலக வாழ்வு முழுவதிலும் அவர் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

யூத இன குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜீன்-பியரி கிரம்புக். இவர் நாஜி படை ஆக்கிரமித்திருந்த பிரான்சிற்கு தப்பி்யோடு, பிரெஞ்சு எதிர்ப்பு படையில் இணைந்து நாஜிக்களை எதிர்த்துப் போராடினார். அப்போது தனது பெயரோடு தனக்கு விருப்பமான மெல்வில் என்ற அமெரிக்க நாவலாசிரியரின் பெயரை புனைப்பெயராக இணைத்துக்கொண்டார்.

போர் நிறைவுற்றதும் தனது புனைப்பெயரிலேயே திரைப்படங்களை இயக்கத் துவங்கிவிட்டார். அவரது திரைப்படங்கள் யாவும் அவரது போர்க் கால நினைவுகளில் இருந்தே கிளைத்திருந்தன. உலகெங்கிலும் அவருடைய படைப்புகளினால் கவர்ந்திழுக்கப்படுகின்ற திரைப்பட காதலர்களின் எண்ணிக்கையும், அதன் அசலான நோக்கமும் நம்பவியலாதபடி பெருகியிருக்கிறது என்றாலும், ஒரு சராசரி பார்வையாளனின் ரசனையை மேல்நிலைகளுக்கு நகர்த்திட உதவிடும் இவரது திரைப்படங்கள், எண்ணற்ற திரைப்பட இயக்குனர்களையும் கிளர்ச்சிக்குள்ளாக்கி அவர்களது திரைப்பட பாணியை காத்திரமாக உருவாக்கிடவும் மிகப்பெரியளவில் பங்காற்றியுள்ளது. 

ஜான் வூ (john woo), மெல்விலை தமது கடவுள் என்றே குறிப்பிட்டுள்ளார். இருவரும் முன் கால அமெரிக்க நகரத்தின் நிழல் உலகத்தை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள் என்றாலும், வூ மெல்வில்லின் புதுவகையிலான அணுகுமுறையை வெகுவாக பாராட்டியுள்ளார். 'மெல்வில் இக்களத்தை மிகமிக அறிவுப்பூர்வமாக, பண்புள்ள மனிதரைப்போல கையாண்டிருக்கிறார். மிகுந்த சுயக்கட்டுப்பாட்டோடு அவர் அணுகுயிருந்த அவரது திரைப்படங்கள் கதையளவில் பொதுப்பார்வையாளர்களிடமிருந்து விலகியும், வன்முறை நிரம்பியதாக இருந்தாலும், அவை பார்வையாளர்களிடத்தில் உணர்வுபூர்வமான மன நெருக்கத்தை வழங்கத் தவறவில்லை’. வூவின் வார்த்தைகள் மேற்கோள் காட்டிட காரணம், அவை மெல்வில்லின் திரைப்பாணியை குறித்த மிகத் தெளிவான சித்திரத்தை வழங்குகின்றன.

லெ சாமுராய் (Le Samourai) திரைப்படம், அவர் இயக்கிய படங்களிலேயே மிகப்பெரிய புகழை அடைந்திருந்தாலும், அவர் மிகுந்த அர்ப்பணிப்போடு உருவாக்கிய மற்றைய திரைப்படங்களையும் எவராலும் எக்காலத்திலும் மறக்க இயலாது. மெல்வில் தமது உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தால், நமக்கு மேலும் பல அற்புதமான திரைப்படங்கள் கிடைத்திருக்கக்கூடும். ஆனாலும், அவர் தமது உடல் நலனை விடவும் திரைப்படங்களை இயக்குவதிலேயே மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். இருதயம் செயலிழந்து உயிர் நீங்கினாலும், அவர் தான் வாழ்ந்த காலத்தில் மிகச்சிறந்த திரைப்படங்களை நமக்காக விட்டு சென்றிருக்கிறார். அதனாலேயே, இந்த திரையுலக கவிஞனின் பணி காலத்தால் அழிவிக்கவியலாதபடியும், இக்காலக்கட்ட இயக்குனர்களால்கூட தாக்கத்திற்குள்ளாகவும் வகையிலும், உயர்ந்த மரியாதையும் ஒருங்கே பெற்றுள்ளன.

மெல்வில் பற்றி இயக்குனர் ஜான் வூ எழுதியது.

மெல்வில்லின் திரைப்படங்களில், என்னுடைய திரைப்படங்களை போலவே, மைய கதாப்பாத்திரங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் மிக மோசமான மாஃபியா கும்பலை சேர்ந்தவர்கள் மிகப் பெரும் கருணையோடு செயல்படுகிறார்கள்.

மெல்வில் எனது கடவுள்!

லெ சாமுராய் தான் நான் பார்த்த முதல் மெல்வில்லின் திரைப்படம். எழுபதுகளின் முந்தைய ஆண்டுகளில் அப்படம் ஹாங்காங்கில் வெளியாகியிருந்தது. அத்திரைப்படம் உடனடியாக ஆலைன் டெலானை (Alain Delon) ஆசியாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாற்றிவிட்டது. ஆலைன் டெலானின் முந்தைய திரைப்படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றாலும் லே சாமுராயின் வீச்சு பரந்த அளவிலான ரசிகர்களை அவருக்கு தேடித் தந்தது.

அதோடு, அத்திரைப்படம் அக்காலக்கட்ட திரைப்பட பார்வையாளர்களை வெகுவாக தாக்கத்திற்குள்ளாக்கியது. அந்த படத்திற்கு முன்பாக இளைய தலைமுறையை சேர்ந்த பார்வையாளர்கள் கிளிப் ரிச்சர்ட், எல்விஸ் பிரஸ்லே ஆகியோர் நடித்திருந்த திரைப்படங்களையும் சண்டை காட்சிகள் மிகுந்த திரைப்படங்களையும் பார்த்து களிப்புற்றிருந்தார்கள். வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது. ஆனால், லெ சாமுராய் வெளியானதும் அப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அவர்களின் வாழ்க்கை முறையினையே வெகுவாக மாற்றிவிட்டிருந்தது. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஹிப்பி வைத்துக்கொண்டு, நீண்ட மயிற்கற்றையை முதுகில் தொங்கவிட்டிருப்பேன். ஆனால், இப்படத்தை பார்த்ததும், டெலானை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு, வெள்ளை சட்டையும், டையும் அணியத் துவங்கிவிட்டேன்.

லெ சாமுராய்தான் மெல்வில்லை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது. இந்த படத்தைப் பார்த்ததும் முதலில் அது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மெல்வில்லின் தொழிற்நுட்பமும், அவரது மிக நிதானமான கதைச் சொல்லும் முறையும் முற்றிலும் புதியதாக இருந்தன. மிகச்சிறந்த பண்புகளை கொண்ட ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட குற்றவியல் திரைப்படத்தை பார்ப்பதுப்போன்ற உணர்வைதான் அத்திரைப்படம் எனக்களித்தது. ஹாங் காங்கில் நான் அப்போது திரைத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சாங் செஹ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தாலும், அந்நாட்களில் நான் சில பரீட்சார்த்த திரைப்படங்களையும் தன்னிச்சையாக இயக்கிக்கொண்டிருந்தேன். பிரெஞ்சு திரைப்படங்கள் அப்போதே எங்களது திரைப்படங்களின் மீது ஆளுமையை செலித்த துவங்கியிருந்தது. குறிப்பாக, அதன் புதிய அலை இயக்குனர்களான த்ரூபா, கோடார்ட், சாப்ரோல், டெமி போன்றரது திரைப்படங்கள்.

ஆனால் அதன் பிறகுதான் மெல்வில் வந்தார்.

எனக்கும் மெல்வில்லுக்கும் பொதுவாக இருந்தது, அமெரிக்க குற்ற உலகை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பழைய திரைப்படங்களின் மீது எங்கள் இருவருக்குமே பெரும் காதல் இருந்ததுதான். மெல்வில் குற்றவியல் திரைப்படங்களைதான் இயக்கினார் என்றாலும், அவரது திரைப்படங்கள் அறிவுப்பூர்வமாக அவ்வகை திரைப்படங்களை அணுகியிருந்தது. மெல்வில் அவற்றை மிகவும் வன்முறை நிரம்பியதாக இயக்கியிருப்பினும் நமது உணர்வுகளோடு மிக எளிதாக ஒருவித பின்னலை அவர் ஏற்படுத்திவிடுகிறார்கள். கதை சொல்லும்போது மிகமிக சுய கட்டுப்பாட்டை மெல்வில் கடைப்பிடிக்கிறார். அதுதான் என்னை அவரை நோக்கி உந்தித் தள்ளியது.

எனது திரைப்படங்களில் நான் ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த ஏராளமான ஷாட்டுகளை மாற்றிமாற்றி உபயோகித்தபடியே இருப்பேன். மிக நெருக்கமான அண்மைக் காட்சிகளையும், ஷாட்களை அவ்வப்போது முன்னும்பின்னுமாக நகர்த்தியும் அக்காட்சிகளை படம் பிடிப்பேன். ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக, மெல்வில் கேரமாவை நிலையான கோணத்தில் வைத்தே படம் பிடிக்கிறார். இதன் வழியாக நடிகர்கள் தாங்களாகவே தங்களது உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்த வைக்கிறார். பார்வையாளர்களுக்கு காட்சியில் என்ன நிகழ்கிறது என்பது இதன்மூலம் முழுவதுமாக உணர்ந்துக்கொள்ள முடிகிறது. அதனால், அவரது திரைப்படங்கள் உளவியல்ரீதியாகவும் அறிவுப்பூர்வமாக பார்வையாளர்களிடம் உறவுக்கொள்கிறது.

மெல்வில் எப்படி தனது கலாச்சாரத்தோடு கீழைதேச தத்துவங்களை இணைக்கிறார் என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. அதனால்தான் அவரது திரைப்படங்களுக்கு ஹாங் காங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. தமது திரைப்படங்களின் துவக்கத்தில் கீழைதேச பழமொழிகளை மெல்வில் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். சீன தேசத்து தத்துவத்தை அந்த நாட்டின் குடிமக்களை விடவும் மெல்வில் அறிந்து வைத்திருக்கிறார். என்னால் அவரது திரைப்படங்களின் மீது ஒன்றி பயணிக்க முடிகிறது என்றால் அதற்கான காரணம், மனிதர்களின் மீது அவர் கொண்டுள்ள கரிசனம் நமது கீழைதேச மரபிலிருந்து உருவானது என்றே கருதுகிறேன்.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிழல் உலக மனிதர்கள் எப்போதும் தங்களுக்கேயான பிரத்யேக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே நடப்பார்கள் என்றாலும், தங்களது மரபை விட்டுக்கொடுக்காது அதன் மீது பெருமையுடனே இருப்பார்கள். அதன் சுய அடையாளங்களை எப்போதும் போற்றவே செய்வார்கள். மெல்வில்லின் திரைப்படங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் மிக மெலிதாக பயணித்தபடியே இருக்கும். அவரது கதாப்பாத்திரங்கள் புதிரானவர்களாகவே இருப்பார்கள். அவரது செயல்கள் ஒருபோதும் யூகிக்கக்கூடியதாக இருக்காது. நம்மால் ஒருபோதும் அவர்களது அடுத்தடுத்த செயல்களை கணித்துவிட முடியாது. ஆனால் அவர்களது செயல்கள் எப்போதுமே வாழ்க்கையை விட மிகப்பெரியதாக இருக்கும். உங்களால் எந்தவொரு கோட்பாடுகளையோ, ஒழுக்க நியாயங்களையோ கொண்டு அவரின் கதாப்பாத்திரங்களை அணுகி விளக்கிவிட முடியாது.

டெலான் லெ சாமுராய் திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாப்பாத்திரம் சீன செவ்வியல் கதை ஒன்றின் நாயகனை எனக்கு நினைவூட்டியது. அவன் மிகப் பிரபலமான கொலைக்காரன். இறுக்கமும், துளி கருணையும் அற்ற அவன் தனது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்காகவும்கூட எதை வேண்டுமானாலும் செய்து முடிக்கும் குணம் கொண்டவன். அரசன் ஒருவனை கொலை செய்யும் வேலை அவனிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால், தனது நண்பன் ஒருவனை காப்பற்ற முயலும் அவன், அரசனை கொல்லும் திட்டத்தில் தோல்வியுற்று இறுதியில் கொலையுண்டு சாகிறான். கிட்டதட்ட லெ சாமுராய் கதாப்பாத்திரமும் இதே வகையில்தான் உருவாக்கப்பட்டிருந்தது.

நான் ஐம்பது மற்றும் அறுபதுகளில் இருத்தலியல் கோட்பாடுகளால் கவரப்பட்டிருந்தேன். என்னுடைய அவதானிப்பின்படி மெல்வில்லும் ஒரு இருத்தியல்வாதிதான். அவரது கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் தனிமையில் பீடிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எவர் ஒருவரும் அவர்களுக்காக காத்திருக்கவில்லை. உண்மையில் யாரும் அவர்களை அறிந்துவைத்திருக்கவில்லை. அவர்கள் முற்றிலும் தனியர்களாக, துயரார்ந்த சம்பவங்களினால் பாதிப்பிற்குள்ளானவர்களாக, தங்களது உள்ளார்ந்த தேடுதலில் தொலைந்துப்போனவர்களாகவுமே இருக்கிறார்கள்.

கிரேக்க துன்பியல் நாடகங்களும் அவரது திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய மற்றொரு மிக முக்கியமான கூறு. எனது திரைப்படங்களிலும் கிரேக்க துன்பியல் நாடகங்களின் வலுவான தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. மெல்வில்லின் கதாப்பாத்திரங்களைப்போலவே எனது கதாப்பாத்திரங்களும் எப்போதும் துயரார்ந்த தனித்து இயங்கும் மனிதர்களாகவே இருப்பார்கள். கிட்டதட்ட யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்ட மனிதர்களாகவும், இறுதியில் மரணத்தை தழுவுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், அவரது கதாப்பாத்திரங்களின் இறுதி முடிவுகளை பார்க்கிறபோது, அவர் ஒரு பெசிமிஸ்ட்டாக (ஒவ்வொன்றிலும் துயரத்தை மட்டுமே காண்பவர்கள்) இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுக்கிறேன். அவரது கதாப்பாத்திரங்கள் நிதானமாகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதைப்போல தோன்றினாலும், அவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய மற்றவர்களின் நலன் மீது அக்கறைக் கொள்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.

நட்பை பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், நாம் ஒருவரின் மீது மிக அதிகமாக அன்பு கொண்டிருந்தாலும், அவர் அதனை உணர்ந்துக்கொள்ளும் வகையில் நடந்து கொள்ளாததுதான். உங்களால் அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவற்றை அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லாமலேயே செய்து முடிப்பது. ஒருவேளை நாம் தனிமையில் எவரும் அறியாமலேயே இறந்துவிட்டாலும், நாம் விரும்புகின்ற மனிதருக்கு நம்மால் முடிந்ததை செய்துவிட்டால்போதும். இப்படித்தான் மெல்வில்லின் கதாப்பாத்திரங்கள் நடந்துக்கொள்கிறார்கள். மெல்வில்லும் இதுப்போல மற்றவர்களின் மீது கருணைக் கொண்ட மனிதரென்றே நம்புகின்றேன்.

தொழிற்நுட்பரீதியாக அவரது திரைப்படங்களில், மெல்வில் ஒரு செயலை நிகழ்த்துவதற்கு முன்பாக கட்டமைக்கின்ற பதற்றத்தை நான் விரும்புகின்றேன். லெ சாமுராயில் பாலத்தில் நிகழும் காட்சியை நினைத்துக்கொள்கிறேன். டெலான் தனக்கு பணம் தர வேண்டிய மனிதர் ஒருவரை அந்த பாலத்தில் சந்திக்கிறான். ஆனால், இது முழுவதும் திட்டமிடப்பட்ட சூழ்ச்சி என்பதை அவன் அறியாமல் இருக்கிறான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்துச் செல்கிறார்கள் விஷேஷமாக எதுவொன்றும் நிகழவில்லை என்றாலும், நமக்கு ஒருவித பதைபதைப்பை இக்காட்சி உருவாக்கிவிடுகிறது. உடனடியாக, மெல்வில் வைட் ஷாட் ஒன்றை காண்பிக்கிறார். நமக்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. மீண்டும் டெலானை அண்மைக் காட்சியில் காண்பிக்க அவனுக்கு குண்டடிப்பட்டிருக்கிறது. இவ்வகையிலான திரைப்படங்கள் பொதுவாக, வேறுவிதமான முடிவு அமைக்கப்பட்டிருக்கும். இறுதிக் காட்சியில் பெரும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்துக்கொண்டிருக்கும். ஆனால், மெல்வில் அக்காட்சியினை மிக அடக்கமாக, கவித்துவமாக உருவாக்கி இருப்பார்.

நான் பலமுறை மெல்வில்லை எனது திரைப்படங்களில் பின்பற்ற முயன்றிருக்கிறேன். எனது முதல் திரைப்படத்திலேயே அத்தைகைய முயற்சியில் நான் ஈடுபட்டேன். மெல்வில் தனது கதாப்பாத்திரங்களுக்கு கொடுக்கும் மயக்கும் இருண்மையான தன்மையை எனது திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்கும் கொடுக்க முனைந்தேன். எனது முதல் திரைப்படத்திற்கு பின்பும், மெல்வில்லின் சாயலில் நிறைய படங்களை எடுக்கும் விருப்பம் எனக்கு இருந்தது. ஆனால், ஸ்டூடியோக்கள் என்னை தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களை இயக்கவே அணுகினார்கள்.

1986ல் A better tomorrow திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், நான் முழுமையாக மெல்வில்லின் பாணியில் படம் இயக்க முடிந்தது. அந்த படத்தின் கதை நிகழ்கால நகர்புற வாழ்க்கையை பிண்ணனியாக கொண்டிருந்த த்ரில்லர் வகையை சேர்ந்தது. அதனால், மெல்வில்லின் பாணியில் செயல்படுவது எளிதாக இருந்தது. லெ சாமுராயின் டெலான் சாயலிலேயே எனது திரைப்பட கதாப்பாத்திரத்தினை உருவாக்கினேன். அவனது தோற்றம், அவன் பேசும் விதம், அவனது பார்வை என அனைத்தையுமே லெ சாமுராயின் டெலான் தோற்றத்திலேயே உருவாக்கினேன். ஹாங் காங்கில் மக்கள் ரெயின் கோட் அணிந்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது. அதனால் எனது படத்தின் நாயகன் ரெயின் கோட் அணிந்துக்கொண்டிருந்தது முற்றிலும் புதியதாக இருந்தது. மெல்வில்லின் தாக்கம் இப்படத்தில் முழுவதுமாக நிறைந்திருந்தது.

A better tomorrowல் ஒரு நீண்ட காட்சி இருக்கும். அதன் நாயகன் உணவு விடுதி ஒன்றிற்குள் தனது முதல் கொலையை நிகழ்த்த நுழைவான். உள்ளே செல்லும்போது தனது துப்பாக்கியை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிடுவான். பின், ஓர் அறைக்குள் நுழைந்து தான் தேடி வந்தவனை கொலை செய்துவிடுவான். பிறகு அவ்விடத்திலிருந்து, முன்பு மறைத்து வைத்த துப்பாக்கியின் துணையுடனேயே வெளியேறுவான். இக்காட்சி முற்றிலும் லெ சாமுராயில் டெலான் கொல்லப்படுவதற்கு முந்தைய காட்சியின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டதே. அக்காட்சியில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றினுள் நுழையும் டெலான் அங்கிருக்கும் பாடகரை கொல்ல குண்டுகள் இல்லாத துப்பாக்கி ஒன்றை எடுத்துச் செல்வான். இக்காட்சியின் பாதிப்பிலிருந்தே நான் எனது திரைப்படத்திற்கான காட்சியை உருவாக்கினேன்.

மெல்வின் பாணியிலேயே நான் உருவாக்கிய திரைப்படங்கள், The Killer, Hard Boiled மற்றும் Bullet in the head. இதில் The Killerதான் கிட்டதட்ட மெல்வின் சாயலிலேயே உருவாக்கியிருந்த திரைப்படம். இப்படத்தின் துவக்க காட்சியில் லெ சாமுராய் திரைப்படத்திலிருந்து ஒரு பகுதியையே நான் பயன்படுத்தியிருக்கிறேன். 1988-89களில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இப்படத்தை நான் மெல்வில்லிக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று சொன்னபோது, மிகப்பெரிய அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது. அங்கிருந்தவர்களில் எவருமே மெல்வில்லின் பெயரையோ அல்லது லெ சாமுராய் திரைப்படத்தையோ கேள்விப்பட்டிருக்கவில்லை. இளைய தலைமுறையினர் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்திதான்.

இப்போது மெல்வில் மிகவும் பரவலாக அறியப்பட்டிருக்கிறார். ஒருவேளை நானும் க்விண்டின் டெரண்டினோ போன்றவர்களும் அவ்வப்போது அவரை பற்றி பேசுவதாலும் இருக்கலாம். நான் பங்கேற்கும் அனைத்து திரைப்பட விழாக்களிலும் மெல்வில்லின் பெயரை குறிப்பிடாமல் இருக்க மாட்டேன். ஒருவேளை இதன் மூலமாக அவர் இன்றைக்கு பரவலாக அறியப்பட்டிருக்கலாம். நான் The Killer திரைப்படத்துடன் அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது, பல அமெரிக்க திரைப்பட ரசிகர்களும் மெல்வில்லை பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்கள். மெல்வில்லின் திரைப்படங்களை பார்க்கும் எந்தவொரு பார்வையாளர்களும் மற்றைய அமெரிக்க திரைப்பட இயக்குனர்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுப்பட்டவர் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அவரது திரைப்பட கலை ஒருவிதமான தெய்வாதீன தன்மைகளை கொண்டிருக்கிறது.

1961ல் வெனிஸ் திரைப்பட விழாவில் மெல்வில்லிடம் எடுக்கப்பட்ட ரேடியோ நேர்காணல்:

உங்களது எழுத்து முறையைப் பற்றி சொல்லுங்கள்.

எழுதுவது முற்றிலும் கடினமான பணியாகவே இருக்கிறது. எதுவொன்றையும் மற்றவர்களிடம் விளக்கிச் சொல்லுவதைவிட திரைப்படமாக எடுத்துவிடுவது மிகவும் எளிதானது என்பதே எனது கருத்து. ஆனால், ஒரு கதை எழுதுவது மிகுந்த சிரமத்திற்குரிய பணி. ஹெம்மிங்வே போலவோ ஃபால்க்னர் போலவோ எழுதுவது சாத்தியமில்லாதது.

பலர் உங்களது திரைப்படங்களை பற்றி சொல்லும்போது, அறை ஒன்றில் தனிமையில் பேனா பேப்பருடன் அமர்ந்துக்கொண்டு எழுதுவது பெரிய விஷயம் அல்ல. ஸ்டுடியோவில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வைத்துக்கொண்டு படம் இயக்குவதுதான் கடினமானது என்று குறைச் சொல்கிறார்களே?

இல்லை. நிச்சயமாக இல்லை. எழுதுவது மிக மிக கடினமான பணி.

சுய அடக்கத்தின் காரணமாக இவ்வாறு சொல்கிறீர்களா?

ஆமாம். அதோடு சில வருடங்களுக்கு பிறகு, முந்தைய வருடங்களில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று எடுத்துப் பார்த்தால் அது மிகவும் சராசரியாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்துக்கொள்ள முடியும்.

எழுத்தைப்போலவே திரைப்படங்கள் இயக்கும்போதும் அது நிகழும் அல்லவா?

நிச்சயமாக.

நீங்கள் திரைப்பட உருவாக்கத்தில் நிகழும் தவறுகளைவிட எழுதும்போது ஏற்படும் தவறுகளை அபாயகரமானவை என நினைக்கிறீர்களா? நாம் திரையில் பார்க்க விரும்பாத ஒரு தவறு எளிதாக நமது கட்டுப்பாட்டையும் மீறி திரைப்பட உருவாக்கத்தில் நிகழ்ந்துவிட சாத்தியம் இருக்கிறதா? ஆனாலும், எழுதும்போது எதை வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளலாம் இல்லையா? அதனால் எனக்கு எழுதும்போதே நிகழும் தவறுகளை சரி செய்துக்கொள்வது எளிதானதாக தோன்றுகிறது.

எழுத்தைவிட திரைப்படத்தில்தான் நம்மால் முழுமையான வடிவத்தை எளிதாக உணர்ந்துக்கொள்ள முடியும். நமது தவறுகளை உணர்ந்துக்கொள்ள முடியும்.

ஆனால் ஏன் இவ்வாறு நிகழ்கிறது. மக்கள் ஒவ்வொரு துறைக்கும் புரிகின்ற எதிர்வினை வேறுபடுகிறது என்று நினைக்கிறீர்களா? திரைப்படத்தைவிட எழுத்தை மக்கள் அதிக முக்கியத்துவத்துடன் விமர்சனரீதியாக அணுகுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

நான் இரண்டு விஷயங்களை முயற்சித்திருக்கிறேன். எழுதுவதும், திரைப்படங்களை இயக்குவதும். என்னளவில் திரைப்படங்களை இயக்குவது எளிதானது.

நீங்கள் இதனை சுய அனுபவத்தின் வாயிலாகத்தான் சொல்கிறீர்களா?

ஆம். மிக உறுதியாக.

உங்களது பதிலில் இருந்து நீங்கள் திரைப்படம் இயக்குவது மிக எளிதானது என்பதால்தான் அதனை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிதானே?

நான் சில விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகின்றேன். அதனால் திரைப்படங்களை இயக்குகின்றேன். ஆம். எனது இளம் வயதில் நான் பலமுறை எழுத முயற்சித்திருக்கிறேன். ஆனால், அது மிக கடினமானது.    

தமிழில்: ராம் முரளி      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com