தமிழக ஆட்சிக்கட்டிலை நோக்கி நகருகிறதா பாரதிய ஜனதா? என்னதான் செயல்திட்டம்?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாது என்கிற குரல்கள் வழக்கத்தை விட அதிகமாக ஒலிக்கின்றன.
தமிழக ஆட்சிக்கட்டிலை நோக்கி நகருகிறதா பாரதிய ஜனதா? என்னதான் செயல்திட்டம்?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முடியாது என்கிற குரல்கள் வழக்கத்தைவிட அதிகமாக ஒலிக்கின்றன. இந்தக் குரல்களின் ஒலிவேகம் குறைவதற்கு முன்பாகவே ஏதாவது ஓரிடத்தில் பாஜகவில் அதிமுகவினர் இணைந்து வருகின்றனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தேமுதிகவைப் பின்னுக்குத் தள்ளி பாஜக மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்போதே அந்தக் கட்சியின் வளர்ச்சி விகிதம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சிபெறுமா? என்கிற பதிலை நாம் கர்நாடகத்திலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கர்நாடகத்தில் காங்கிரஸா ஜனதா தளமா? என்ற கேள்வியே எழுந்து வந்தது. அந்த இரண்டு கட்சிகளில் ஒரு கட்சிதான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்தது. இந்திய அளவில் ஜனதாதளம் சிதைவுண்டபோது மதச்சார்புள்ள ஜனதா தள தலைவராக தேவகவுடா தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் பதவியே வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு மதச்சார்புள்ள ஜனதாதளத்தின் வாக்கு வங்கியைத் தனது செயல்திட்டத்தால் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது. 2007-ல் தென்னிந்தியாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் எடியூரப்பா. இப்போது காங்கிரஸா, பாரதிய ஜனதா கட்சியா என்ற நிலை கர்நாடகத்தில் உருவாகிவிட்டது.

தமிழகத்திலும் அதிமுகவா, திமுகவா என்ற நிலைமையை மாற்றியமைக்க ஆர்எஸ்எஸ் துணையோடு பாஜக செயல் திட்டம் வகுத்துள்ளது. தற்போது அதிமுகவில் இருக்கும் இபிஎஸ், ஓபிஎஸ், தீபா, சசிகலா அணிகளில் உள்ள யாவரும் கொள்கைப்பிடிப்பின் காரணமாக அந்தக் கட்சியில் நீடிக்கவில்லை. வலிமையான தலைமை இல்லாத சூழலில் தங்களின் தன்னலத்திற்காக எந்த முடிவையும் எடுக்கும் சூழ்நிலையிலேயே உள்ளனர். இவர்களின் மனநிலையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவின் இரண்டாம் கட்ட பொறுப்பாளர்களைத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கான செயல்திட்டங்களை வகுத்துள்ளது.

பாரதிய ஜனதாவின் இந்த முயற்சிக்கு எதிராக அதிமுகவின் தலைமை இதுவரை எந்தவித எதிர்ப்பையும் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திடும் அதிமுகவினருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவது மட்டுமின்றி, அதிமுகவைக் காலி செய்து அதன் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்கான செயல்திட்டங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் 40 சதவிகிதமாவது அதிமுகவிடமிருந்து பங்கீடு பெற்றுவிடுவோம். முதலில் எங்கள் கட்சிக்கு வருபவர்களுக்குத்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவோம் என்ற ஆசை காட்டி அதிமுகவினரை பாஜகவில் சேர்க்கவைக்கும் செயல்திட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்ந்திடும் பகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியை அப்படியே பாரதிய ஜனதா கட்சிக்குக் கொண்டுவரும் பொருட்டு, உரிய பதவிகளை வழங்கித் தாழ்த்தப்பட்டோரை ஈர்த்திட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. திராவிடக் கட்சிகளில் மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் போன்ற அதிகாரப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப்பட்டு வருவதை உற்றுநோக்கி வரும் பாஜக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பதவிகள் வழங்குவதற்கான திட்டமிடலிலும் இறங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தாய்மதம் திரும்புதல் என்ற கொள்கையை மையப்படுத்தி, இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்த ஆதித்யநாத் அவர்களுக்கு மாநில முதலமைச்சர் பதவி வழங்கி மதிப்பளித்தது பாரதிய ஜனதா கட்சி. எனவே தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முதன்மைத்துவத்தை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சி நுட்பமான அரசியல் செய்கிறது. இதன் அடிப்படையிலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அதிமுக என்பது திமுகவின் எதிர்ப்பு நிலையை மையப்படுத்தி வளர்த்தெடுக்கப்பட்டது. அக்கட்சியின் தொண்டர்கள் எந்தக் காரணத்திற்காகவும் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படமாட்டார்கள் என்ற நிலை இன்னும் தொடர்கிறது. அதிமுகவில் வலிமையான தலைமை இல்லாத சூழலில் உங்களின் தொடர் எதிரியான திமுகவை வீழ்த்துவதற்கு பாஜகதான் சரியான மாற்றாக எதிர்காலத்தில் நிலைத்திடும் என்ற பிரசாரம் வெகு எளிதில் அதிமுகவினரைக் கவர்கிறது. பதவி வழங்குவது மட்டுமின்றி, தனது செயல் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கியும் நோக்கத்தை வெற்றிகரமாக முடிக்க பாரதிய ஜனதா கட்சி முனைப்போடு செயல்படுகிறது.

இந்தச் செயல்திட்டத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி வலிமையிழக்கலாம், இதனால் நமக்கு எதுவும் இழப்பு வராது என்று திமுக கருதுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க திமுகவிற்கு எதிரான போர் முழக்கம் என்பதைத் திமுகவின் தலைமை உணரவில்லை. தற்போது ஆட்சி கலைக்கப்பட்டால் அது திமுகவிற்கு ஆதாயம் கிடைத்துவிடும் என்பதை பாஜக தெரிந்தே வைத்துள்ளது. பாஜக துணை இருப்பதால்தான் அதிமுக ஆட்சி கலைக்கப்படாமல் இருக்கிறது என்று திமுக புலம்புகிறது. உண்மைதான். பாஜகவின் செயல் திட்டங்கள் முடிக்கப்படும் வரை அதிமுக ஆட்சி கலைக்கப்படாது. பாஜகவின் கொள்கைகளைப் படிப்படியாக அதிமுக ஆட்சியே நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது அந்த ஆட்சியைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக கருதுகிறது.

அதிமுகவின் வாக்கு வங்கியைக் கவர்வதற்கான அத்தனை செயல்திட்டங்களையும் பாஜக வகுத்திருப்பதற்கான சூழலில், அதை எதிர்க்க வேண்டிய அதிமுகவின் தலைமைகள் தலை குனிந்தே இருக்கின்றன. கலைஞர் குடும்ப அரசியல் செய்கிறார் என்ற ஒற்றை மந்திரத்தை வைத்துக்கொண்டு அம்மையார் ஜெயலலிதா அதிமுகவைக் கட்டுப்பாடாக வைத்திருந்தார். ஆனால் இன்றோ, அதே அதிமுக அதே குடும்ப அரசியலில் சிக்கித் தவிக்கிறது. அவர்களின் தவிப்பு தற்போது பாஜகவிற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன்வயப்படுத்துவதை மட்டும் தனது செயல் திட்டமாக பாரதிய ஜனதா கட்சி வைத்திருக்கவில்லை. தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தமிழக மக்ககளிடம் கொண்டு செல்வதிலும் வெற்றி பெற்று வருகிறது. என்னதான் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிண்டல்கள் வந்தாலும் ஆர்எஸ்எஸ் வழங்கும் பயிற்சி முகாம்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

ஆர்எஸ்எஸின் கொள்கைகள், கோட்பாடுகள், பயிற்சிகள் தவறு என்று வாதிடப்பட்டாலும், தன்னுடைய கொள்கைகளை யார் மக்களிடம் வேகமாகக் கொண்டுபோய் சேர்ப்பார்களோ அவர்களுக்கே வெற்றி பக்கத்தில் நிற்கும்.

பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், காந்தியம் பேசுகிற கட்சிகள் தலைவர்களது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதில்லை. அந்தக் காலங்களில் திமுக நிகழ்த்தும் மாநாடுகள் குறைந்தது 3 நாட்களாவது நடக்கும். அந்த மாநாடுகளில் திராவிட இயக்கக் கொள்கைகள், ஜாதி மறுப்புக் கொள்கைகள், பகுத்தறிவு, சமூக நீதி குறித்த தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் பேசுவார்கள். ஆனால் தற்போது அவ்வாறான மாநாடுகள் நடைபெறுவதில்லை. கொள்கை, கோட்பாடுகளைப் பேசிய திமுக தற்போது எதிர்ப்பு அரசியலையும், கிண்டல் அரசியலையும் மட்டுமே பேசி வருகிறது. திமுகவைச் சார்ந்த இளந்தலைமுறையினரும் பெரியார், அண்ணா கொள்கைகள் குறித்த அறிதல் இல்லாமல் இருக்கின்றனர். அதற்கான பாசறை வகுப்புகள் எதுவும் தற்போது திமுகவால் நடத்தப்படுவதில்லை. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான செயல் திட்டத்தைத் திமுக வகுத்திருப்பதாகத் தெரியவில்லை.

பாஜகவின் செயல்திட்டங்களால் தேசிய அரசியலில் அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ்தான். பல மாநிலங்களில் தனது ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆர்எஸ்எஸ் முழு மூச்சில் செயல்பட்டு எங்கு பார்த்தாலும் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. ராமராஜ்ஜியம் என்ற ஒற்றைத் தத்துவத்தை மையப்படுத்தி அவர்களின் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டிருக்கிற சூழலில், அதற்கு எதிரான ஆயுதமாகக் காங்கிரஸ் தொடர்ந்து பேசி வந்த காந்தியத்தைக்கூட தற்போது பேசுவதில்லை. இந்தியாவிற்கான சுதந்திரம் காங்கிரஸால்தான் கிடைத்தது என்று இதுவரை காங்கிரஸ் பேசிவந்தது. தற்போது தேசப்பற்று என்ற ஆயுதத்தையும் பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டுக் காங்கிரஸ் செய்வதறியாது நிற்கிறது.

மாறி மாறி மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்த தேர்தலில் நிச்சயம் பாஜகவிற்கு மாற்றாகக் காங்கிரஸ்க்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் பாஜக தனக்கான ஆட்சி அதிகாரத்தை இழந்துவிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளாது. ஜிஎஸ்டி வரி விதிப்பு நிச்சயம் மக்களைப் பாதித்திருக்கிறது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்புச் சிக்கல்கள் நிலவிய சூழலிலும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவிற்கே மக்கள் வாக்களித்தனர் என்பதைக் காங்கிரஸ் மறந்து விடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை அடுத்த தேர்தலில் திமுக வென்றுவிடலாம் என்று கணக்கிடுகிறது. ஆனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல்க ளம் என்பது திமுகவின் கனவில் மண்ணை அள்ளிப்போடுவதாகவே மாறும். புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் நடுநிலையாளர்களால் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் வாக்குகள் புதிய கட்சிக்குப் போய்ச் சேரும். பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தொடங்கப்பட்டபோது இந்த நிலை உருவானது. கவர்ச்சிகரமான தலைமை என்கிற சூழலில் 10 சதவிகிதம் என்பது 15லிருந்து 20 சதவிகிதமாகவும் மாறலாம். ஆனால் இந்த வாக்கு வங்கி நிரந்தரமானதாக இருக்காது என்பது மட்டுமின்றி, ஆட்சியைப் பிடிப்பதற்கான ஆற்றல் உள்ளதாக மாறாது. ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி 70 லட்சம் வாக்குகள் வாங்கியும்கூட தனது கட்சியைக் கலைத்திடும் சூழ்நிலைக்கே தள்ளப்பட்டார். இவ்வாறான இந்த நடுநிலை வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிராக விழ வேண்டியவை. குறிப்பாகத் திமுகவிற்குப் போய் விழலாம். ஆனால் மக்கள் நலக் கூட்டணி வாக்குகளைப் பிரித்ததுபோல் ரஜினி, கமல் கட்சி தொடங்கினால் வாக்குகள் பிரியும். இந்த நடுநிலை வாக்குகள் சிதறுவதால் அது திமுகவிற்கே கேடாக முடியும். இந்தக் கேடு ஆளுங்கட்சிக்கே நன்மை பயக்கும்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது, 'பெரியாரின் வழியிலேயே எங்கள் கட்சி செயல்படும், பெரியார் ஆட்சியை நிறுவுவோம்' என்று பேரறிஞர் அண்ணா கூறினார். இது குறித்து தந்தை பெரியாரிடம் கேள்வி எழுப்பட்டபோது மிகுந்த கோபத்துடன், 'அந்தக் கட்சியில் விரைவில் வாரிசு அரசியல் உருவாகும், பல கட்சிகளாகச் சிதறும், ஊழல் செய்வார்கள், திராவிடர் இயக்கக் கண்ணாடிக் கோட்டையின் மீது பிறர் கல்லெறிய இவர்களே காரணமாகத் திகழ்வார்கள்' என்று கூறினார். அவர் கூறியது தற்போது உண்மையாகிறது.

திராவிட இயக்கத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் தற்போது வெற்றிபெறுகிறது. ஊழல் என்ற பேராசையில் சிக்குண்டதால் கொள்கைகளைப் பேச திராவிடக் கட்சிகள் தயங்குகின்றன. இந்துத்துவா ஆற்றல்கள் நடத்திடும் பயிற்சி முகாம்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எவ்விதமான பயிற்சி வகுப்புகளையும் திராவிடக் கட்சிகளும் காங்கிரஸும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பெரியார் பூமி என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனேதும்மி இ. பெரியார் கொள்கைகளைக் கொண்டுபோய் சேர்ப்பதில் திராவிடக் கட்சிகள் கவனம் செலுத்தாதபோது, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது.

தென்னிந்தியா முழுவதும் பாஜகவிற்கு வாய்ப்பில்லாத சூழலில் கர்நாடகவில் ஜனதா தளத்தைக் காலி செய்து பாஜக அந்த மாநிலத்தைப் பிடித்த அதே சூத்திரத்தைக் கையாண்டு, தமிழகத்திலும் அதிமுகவின் வாக்குவங்கியைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்று வருகிறது பாஜக. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் பாஜகவிற்குக் கூட்டணி வலிமையாகக் கிடைத்துவிடும் என்ற சூழலில், பெரியார் மண் என்று பேசப்பட்ட தமிழகத்தில் தனது அடித்தளத்தை நிறுவுவதில் பாஜகவிற்கு எந்தச் சிக்கலும் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களிடம் இருக்கும் செயல்திட்டம் திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமைக் கட்சிகளிடம் தற்போது இல்லை.

பாமகவும் நாம் தமிழர் கட்சியும், முறையே ஜாதிய அடித்தளத்திலும் தமிழின அடித்தளத்திலும் செயல்பட்டுத் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வலிமையைத் தர முடியாது. தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், தமாகா, விடுதலைச் சிறுத்தைகளுக்கான எதிர்காலத்தைக் கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே மக்கள் தீர்மானித்துவிட்டனர். இந்த நிலையில், அதிமுகவோடு கை பிணைத்துக்கொண்டே அதிமுகவின் வாக்குவங்கியை பறித்துக்கொண்டிருக்கிறது பாஜக. அதிமுகவுடன் கூட்டணி உருவாகிற சூழலில் உதயசூரியனுக்கு நிகராக எல்லா இடங்களிலும் தாமரைச் சின்னம் போட்டியில் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் செயல்திட்டமாகும்.

பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை, தனது கொள்கைகளுக்காக உழைப்பவர்களை, கோட்பாடுகளைப் பரப்புகிறவர்களை, நோக்கங்களை நிறைவேற்றுபவர்களை, மக்களிடம் செல்பவர்களை, களப்பணியாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகாரங்களையும் பதவிகளையும் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையிலேயே பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா, ஆதித்யநாத் உட்பட யாவரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்'

என்று வள்ளுவர் வகுத்துக் கொடுத்த செயல்திட்டம் காங்கிரஸிடமும், திராவிடக் கட்சிகளிடமும் நடைமுறையில் இல்லை. குடும்பம், பணம், கவர்ச்சி, ஜாதி, செல்வாக்கை மையப்படுத்தி அதிகாரப் பதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே தனது செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் எவ்விதச் சிக்கலும் இன்றி தனது பயணத்தைத் தொடர்கிறது பாஜக.

சி.சரவணன் -  9976252800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com