மெர்சல் சர்ச்சை: எது கருத்துச் சுதந்திரம்?

‘மெர்சல்' திரைப்படம் அரசியல்வாதிகளின் வாய்க்கு அவலாக மாறி வசூலை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறது.
மெர்சல் சர்ச்சை: எது கருத்துச் சுதந்திரம்?

‘மெர்சல்' திரைப்படம் அரசியல்வாதிகளின் வாய்க்கு அவலாக மாறி வசூலை அள்ளிக் குவித்துக்கொண்டிருக்கிறது. படத்தின் வசனங்கள் மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசையும் விமர்சிக்கின்றன என்று ஒரு தரப்பினர் கண்டிக்கின்றனர். மறுதணிக்கைக்கு வலியுறுத்துகின்றனர். ‘அதெல்லாம் முடியாது' என்று சினிமாத் துறையின் ஒரு பகுதியினரும், எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் படத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக டிவிட்டரில், அதுவும் தமிழில் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசியல் சீண்டல், கொள்ளை லாபத்தைக் கொடுக்கும் என்ற பழைய சித்தாந்தத்துக்குப் புதிய வடிவம் கொடுத்திருக்கிறது மெர்சல். இனி லாபத்துக்காகப் பலரும் இந்த நிலையைத் தொடர்வார்கள். இது கருத்துச் சுதந்திரமா?

‘இடஒதுக்கீட்டால் ஒருசாரர் பாதிக்கப்படுகிறார்கள், இடஒதுக்கீடு யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களை இன்னும் சென்றடையவில்லை' என்ற கருத்துக்களை வலியுறுத்தி ஒரு சினிமா எடுக்க முடியுமா? இதை ‘கருத்துச் சுதந்திரம்' என்று சொல்லி பாராட்டுமா அரசியல் கட்சிகள்?

ராஜீவ் காந்தி கொலை பற்றிய படம் அமைதியுடனும், எந்த எதிர்ப்புமின்றி வெளிவந்ததா? எத்தனை ஆண்டுகள் பெட்டியில் தூங்கியது? இது கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வரவில்லையா?

முத்தலாக்கை எதிர்த்து படமெடுத்தால் ஏற்றுக்கொள்ளுமா அரசியல் கட்சிகள்? விஸ்வரூபம் பட்டபாட்டை நாமெல்லாம் மறந்திருக்கமாட்டோம். சென்சாரைத் தாண்டி, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து பல காட்சிகள் நீக்கப்படவில்லையா? கடைசியில், பிரச்னைக்குக் காரணம் அரசு என்று சொல்லி ‘இந்தியாவை விட்டே போவேன்' என்று சொன்னாரே ஒருவர்! அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள் எதிர்க்கட்சிகள்? யாருடைய கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகப் போராடினார்கள்? கமலஹாசன் என்ற டிவிட்டர் அரசியல்வாதிக்காக வாதாடிய அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஏன் கருத்துச் சுதந்திரத்தை எடுத்துச் சொல்லவில்லை?

திரைப்படத்தில் சொல்லப்படும் கருத்துகளுக்குச் சுதந்திரம் அவசியமா? அல்லது படத்தில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு எதிராகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்பவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் அவசியமா?

ஒரு குட்டிக்கதையைப் படிப்போம்.

ஒரு அரசன். கொடிய மிருகங்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேட்டைக்குச் சென்றான். காட்டில் ஒரு விஷ வண்டு அவனைக் கடித்துவிட்டது. உடனடியாக அரண்மனைக்குத் திரும்பினான். அடுத்த நாள் எழுந்து பார்த்தான்; அதிர்ந்து போனான். அடையாளம் தெரியாத அளவுக்கு அவன் முகம் வீங்கிப்போயிருந்தது. அரண்மனையை விட்டு அரசன் வெளியே வருவதைத் தவிர்த்தான்.

காட்டில் இருந்த ஒரு நரியும், கழுகும் கூடிப் பேசின. இந்தச் சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தன.

‘அரசன் காட்டில் கொல்லப்பட்டான். இதை எங்கள் கண்களால் பார்த்தோம். அரண்மனையில் இருப்பது உண்மையான அரசன் அல்ல' என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டன.

மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

‘ஆகையால், போலி அரசனை சிரச்சேதம் செய்யுங்கள். உடலை காட்டில் வீசுங்கள்' என்றது நரி.

‘பாதி உடலை காட்டில் வீசுங்கள். மீதி உடலை மலையின் மீது வீசுங்கள்' என்று பங்கு பிரித்தது கழுகு. காட்டில் வீசினால் நரிக்கும், மலையில் வீசினால் கழுகுக்கும் உணவு கிடைக்குமே!

வதந்தி பரவியது. அரசன் இறந்துபோனதாக மக்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். ஆட்சிக்கு எதிரான சிந்தனை உருவானது.

நிலைமையை உணர்ந்த அரசியார், மக்களை நேரடியாகச் சந்தித்தார். ‘அரண்மனையில் இருப்பது உண்மையான அரசர்தான். யாரும் வதந்திகளை நம்பவேண்டாம்' என்று தெரிவித்தார். பிரச்னை தீர்ந்தது என்ற மகிழ்ச்சியோடு அரண்மனை திரும்பினார்.

‘இதை நம்பாதீர்கள். உண்மையான அரசன் கொல்லப்பட்டான். இதற்கு அரசியும் உடந்தை' என்று வதந்திகளைக் களமிறக்கிவிட்டனர் அரசரின் எதிரிகள்.

நிலைமை மோசமானது. நிலைமையைச் சரிசெய்ய, மக்களைச் சந்தித்தார் மந்திரி. ‘அரண்மனையில் இருப்பது உண்மையான அரசன்தான்' என்று உறுதியளித்தார்.

‘இது பொய். அரசியும், மந்திரியும் சேர்ந்து சதி செய்கிறார்கள்' என்று புதிய புரளி கிளம்பியது.

நிலைமையைச் சரி செய்ய மக்களைச்  சந்தித்தார் அரசனின் தாயார். ‘அரண்மனையில் இருப்பது உண்மையான அரசன்தான்' என்று சொன்னார்.

‘பாவம்! தாயார் என்ன செய்வார்? அரசியின் பிடியில் அவர் இருக்கிறார். அவர் சொல்லிக் கொடுத்ததை நம்மிடம் சொல்கிறார்' என்று புதிய வதந்தி கிளம்பியது.

‘அரசியை படுபாதகியாக மக்கள் நினைக்கத் தொடங்கினர். நிலைமையை எப்படிக் கையாள்வது என்று புரியாமல் அனைவரும் விழித்தனர். சாது அழைக்கப்பட்டார்.

‘அரசே! இதுபோன்ற வதந்திகள் சரியாகக் கையாளப்பட வேண்டும். இதை யார் கிளப்பியது என்பதைவிட, இந்த வதந்தி யாருக்கு ஆதாயம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். விமர்சனங்களுக்குப் பயந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும், எதிரிகள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். ஆகையால், உங்கள் முகத்தில் வீக்கம் சரியாகும் வரை பொறுமையோடு இருங்கள். எதிர்ப்பைக் காட்டாதீர்கள். காலம் அனைத்தையும் சரி செய்யும். காலமே வதந்தியாரை அடையாளம் காட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

இது ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பொருந்தும். ஆட்சியாளர்களே! வதந்திகளுக்கும், குறைகளுக்கு பதில் சொல்வதாக நினைத்து, நிலைமையை மேலும் மோசமாக்காதீர்கள். நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் இருக்கின்றன. உங்கள் பக்கம் நியாயமிருந்தால், காலம் அதை மக்களுக்கு உணர்த்தும். வதந்திகளுக்குப் பின்னால் மறைந்திருப்பவர்களையும், ஊக்கப்படுத்துபவர்களையும் அது அடையாளம் காட்டும். ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற எதிர்விமர்சனம் எதிரிகளுக்கே சாதகமாகும். இதை நினைவில் கொள்ளுங்கள். வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைப்பதற்கு சோஷியல் மீடியாக்கள் சரியான களமல்ல.

சமீபகாலமாக, எதை எடுத்தாலும் நக்கல், நையாண்டி என்று ஏளனக் கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. இது, ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக மட்டுமல்ல, எதிரணியில் இருப்பவர்களுக்கும் எதிராகச் செய்யப்படுகிறது. இது, தமிழக அரசியல் களத்தை மேலும் சேரும் சகதியுமாக ஆக்கியிருக்கிறது. இதுதான் கருத்துச் சுதந்திரமா?

மெர்சல் பட உரிமையாளருக்கு எந்தக் கருத்தையும் சொல்ல உரிமை இருக்கிறது. தணிக்கையைத் தாண்டி வந்த பிறகு, எந்தக் காட்சியையும் வெட்ட வேண்டிய அவசியமில்லை. அதேபோல, படத்தில் சொல்லப்பட்ட வசனங்களைக் குறை சொல்லவும், மறுதணிக்கை வேண்டும் என்று கேட்பதற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிமை இருக்கிறது. ‘மறுதணிக்கை' என்ற கோரிக்கையே கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

சினிமா துறையில் கால்பதிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பை நிறைய கதைகளை அள்ளிக்கொண்டு முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளின் வாசலில் அமர்ந்திருக்கும் பலரைப் பார்க்கிறோம். நடிக்க வாய்ப்பு கேட்டு அலையும் எதிர்கால ஹீரோக்களையும் பார்க்கிறோம். சினிமா ஆசையில் வாழ்க்கையை இழந்து, இருண்ட உலகின் நாயகர்களாக வாழும் பலரையும் பார்க்கிறோம். ரஜினிகாந்த் சொன்னதுபோல, சினிமா ஒரு மாயாபஜார். எதையும் கணிக்க முடியாது. சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் பலர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் வீழ்ந்து கிடப்பதையும், தனிப்பட்ட வாழ்க்கையில் நிஜ ஹீரோக்களாக இருப்பவர்கள் சினிமா துறையில் தோற்றுப்போனதையும் பார்க்கிறோம்.

இந்தத் தருணத்தில், சினிமா துறைக்கும் முன்னணி ஹீரோக்களுக்கும் ஒரு வேண்டுகோள். மற்றவர்களுக்குக் கிடைக்காத அருமையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. எந்தவகையான திரைப்படத்தை எடுப்பது என்பது உங்கள் முடிவு, உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. காலத்தால் வெல்ல முடியாத அற்புதமான அம்சங்களைக் கொண்ட படங்களை ரசிகர்களுக்குக் கொடுங்கள். அப்படிப்பட்ட பல படங்கள் மக்களின் மனத்தில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். குறுகியகால ஆதாயங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்தும் எண்ணத்தில் யாருக்கோ எதிராகப் படங்களை உருவாக்காதீர்கள். திரையிடப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு பெட்டியில் உறங்கும் கும்பகர்ண திரைப்படங்களை உருவாக்காதீர்கள். காலம் தூக்கியெறிந்த பல டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே என்று வருந்துவதைப் பார்க்கிறோம். அத்தகைய நிலை உங்களுக்கும் ஏற்படக் கூடாது. அரசியல்வாதிகளின் பாராட்டுகள் உங்களை மாரீச மானாகக் களமிறக்கியிருக்கிறது. இதில் ஆதாயம் நிச்சயம் உங்களுக்கல்ல.

நான் முதலமைச்சராக வேண்டும்; நாட்டை ஆள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அரசியல் களத்தில் குதியுங்கள். தெருவில் இறங்கி உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். அப்படியில்லாமல், மக்களை அரசுக்கு எதிராகத் திசைதிருப்ப, சினிமா துறையில் உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தாதீர்கள். நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள். ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

‘எங்களால் இது முடியும். இது எங்கள் கருத்துச் சுதந்திரம்' என்று நீங்கள் சொன்னால், ‘அவர்கள் அது முடியும், அது அவர்களின் செயல் சுதந்திரம்' என்று அது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். எல்லாமே சட்டபடி சரியாகத் தோன்றினாலும், எதுவுமே நியாயப்படி சரியல்ல.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com