இது எங்க ஏரியா, யாராவது உள்ள வாங்க! - கதறும் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த துறைமுகக் குடியிருப்பு மக்கள் (வீடியோ)

குப்பையை அள்ள சொன்னா, குப்பை தொட்டியவே அள்ளிடீங்களே!!
இது எங்க ஏரியா, யாராவது உள்ள வாங்க! - கதறும் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த துறைமுகக் குடியிருப்பு மக்கள் (வீடியோ)

இந்தியாவிலேயே மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றானது சென்னை துறைமுகம், தமிழ் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியிலும் மிக முக்கிய இது பங்கினை வகிக்கிறது. இங்குப் பணிபுரியும் சுமார் 8000-திற்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கென மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் குடியிருப்பு பகுதி உள்ளது. 

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு பகுதியில் இன்றைய சூழலில் 1000-திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பல நோய்கள் பரவுவதை தடுக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் அதே வேலையில், குப்பைத் தொட்டிகள் கூட எங்கள் பகுதியில் இல்லை என்று குமுறுகிறார்கள் இந்தத் துறைமுக வாசிகள். 

இங்கு வசிக்கும் மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியின் மாத வீட்டு வாடகை அவரது சம்பளத்தில் 30% அதாவது ரூ.10,000 ஆகும். அதை தவிர குடியிருப்பு பகுதி பராமரிப்பிற்காகவும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்தும் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டும் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளை அப்புறப்படுத்தும் குப்பை வாகனங்கள் இல்லாததால் குப்பைத் தொட்டிகளையே எடுத்துவிட்டது நிர்வாகம், கேட்டால் துறைமுகமே இழப்பீட்டில் செல்வதால் இதற்கெல்லாம் பணம் இல்லை என்கிறார்களாம் அதிகாரிகள்.

இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் குடியிருப்பு பகுதி என்பதால் மாநில அரசும் இந்த இடத்தைச் சுத்தம் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்பதே இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையில் இருக்கும் இந்தப் பகுதி சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுக்காகக் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் புரண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நட்சத்திர தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி ஆகும். தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தமிழகத்தின் பல முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் டெண்ட்டு போட்டுத் தங்கி வாக்கு சேகரித்தது இவர்களிடமிருந்து தான்.

இங்கு வாழும் மக்களுக்காகக் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே இலவச மருத்துவமனையும் அமைந்துள்ளது, ஆனால் அது இன்று சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் Central Industrial Security Force வீரர்களின் தங்கும் விடுதியாக மாறியுள்ளது. போதுமான மருத்துவர்கள் இல்லாததால் தற்காலிகமாக மருத்துவமனையில் அவர்களைத் தங்க அனுமதித்து உள்ளதாக நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து சென்னை துறைமுகம் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பிய போது நாங்களும் எங்களால் முடிந்த பணிகளை ஆய்வுகளை செய்துகொண்டு தான் இருக்கிறோம், இது மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வராமல் quasi Central ஆக இருப்பதால் அவர்கள் உதவ முன் வருவதில்லை, மத்திய அரசின் கீழ் வருவதால் மாநில அரசும் இதனுள் வருவதற்கு மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

தங்களது நிர்வாகமும் தங்களை கைவிட்ட நிலையில், வரவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலாவது இந்தப் பகுதியை சுத்தப்படுத்தாதா என்று வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள் இந்த மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com