‘நீட் தேர்வை’ எதிர்க்கிறோம் என்ற பெயரில் மேலும், மேலும் அனிதாக்களை இழக்க வழி தேடிக் கொண்டிருக்கிறோமா?

‘நீட் தேர்வை’ எதிர்க்கிறோம் என்ற பெயரில் மேலும், மேலும் அனிதாக்களை இழக்க வழி தேடிக் கொண்டிருக்கிறோமா?

ஒரு காலகட்டத்தில் இந்தித் திணிப்பை ஒழித்துக் கட்டியதைப் போல நீட் விஷயத்திலும் எதிர்பாராத திருப்பம் கிடைக்க வேண்டும் என்றால், அதற்காகப் போராட நமக்கு வலுவான மாநிலத் தலைவர்கள் வேண்டும்.

நேற்று மதியத்தில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை. நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தன்னையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொண்டு, அந்தச் சிறுமி ஊடகங்களில் பேசிய காட்சியே மீண்டும், மீண்டும் மனதைத் துணுக்குறச் செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மையப்பகுதியிலிருக்கும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி, அவளுக்கு வெகு இளமையிலேயே, தன் தாயைப் புற்றுநோயில் பலி கொடுத்ததில் தொடங்கி எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாக இருக்கிறது. மனைவியை இழந்த சோகத்தையும் தாண்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்கும் அவளது அப்பாவின் ஆசை அந்தச் சிறுமியைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த, அவள் தன்னால் முடிந்த அளவுக்கு எல்லா வகுப்புகளிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவியாகத் தேறி வருகிறாள். அவள் பள்ளியில் கழித்த கடைசி மூன்று ஆண்டுகளில் அவளுள், தானொரு மருத்துவராகியே தீர வேண்டும் என்ற கனவு அகலமாய்க் கிளை பரப்பி வளர்ந்து ஆழமாய் வேரூன்றிக் கொள்கிறது. பிளஸ் டூ தேர்வு முடிவு வெளிவந்த நாளில் அந்தச் சிறுமி, தனக்கான இட ஒதுக்கீட்டின் படி, தானெடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும், கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையிலும் தனக்கு மருத்துவக் கல்வி பயில இடம் கிடைக்கும் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்த போது ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்களால் அந்தக் கனவு தவிடு பொடியாகிறது. இதில் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்...

நீட் தேர்வில் அந்தச் சிறுமியின் மதிப்பெண்கள் குறையக் காரணம் அவள் அந்தத் தேர்வுக்குச் சரியாகத் தயார் செய்யாததால் அல்ல!

தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு ‘கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதான’ தோற்றம் தரும் இந்த நீட் தேர்வுக்குத் தன்னை எப்படித் தயார் செய்து கொள்வது? என அனிதாவுக்குத் தெரியாததால்!

அதை அவளே கூறும் காட்சியொன்றை நேற்றிலிருந்து செய்தி ஊடகங்களில் பலமுறை காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

‘எனக்கு நீட் தேர்வு பற்றியெல்லாம் தெரியாது, பிளஸ் டூவில் நான் 1176 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறேன், கட் ஆஃப் 196.75 மதிப்பெண்கள் வைத்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவு. என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாக வேண்டுமானால் மத்திய அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்று வெள்ளந்தியாக ஒலிக்கும் அவளது குரல் இன்னும் கூட கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அத்தனை அப்பாவியான அந்தப் பெண்ணிடம், இன்று அவளது மரணத்தின் பின் உரத்து ஒலிக்கும் குரலில் ஏதாவது ஒரு குரல், நீ நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்க நான் உனக்கு வழிகாட்டுகிறேன், நான் உனக்காக பயிற்சிக் கட்டணம் கட்டுகிறேன். நீ படி... நீ 12 ஆண்டுகாலம் பள்ளியில் கற்ற கல்வியைப் போன்றது தான் அதுவும். கொஞ்சம் முயன்று படித்தால் உன்னால் நீட் தேர்வை சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியும்! என்று அந்த மாணவியின் கலக்கத்தைப் போக்கி வழிகாட்ட முன் வந்திருக்குமானால் அனிதா தற்கொலை செய்து கொள்ளக் காரணமே இருந்திருக்காது. நாமிப்போது அநியாயமாக அருமையான ஒரு மாணவியை இழந்திருக்கத் தேவையும் இல்லை. 

நாங்கள் தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையே வேண்டாம் என்கிறோமே! பிறகெதற்கு இந்த வழிகாட்டி வேலையெல்லாம் பார்க்க சொல்கிறீர்கள்? என நீட் எதிர்ப்பாளர்கள் எவரேனும் கேள்வி எழுப்பலாம். அவர்களுக்குச் சொல்லிக் கொள்ளச் சில வார்த்தைகள் உண்டு. ஐயா, உங்களைப் போலவே எனக்கும் நீட் தேர்வு வேண்டாத ஒன்று தான். எனக்கும் மாநிலப் பாடத்திட்டத்தில் பெறக்கூடிய மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வுமுறை  போதும் தான். ஆனால் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றம் நாடு முழுவதுக்குமாக மருத்துவக் கல்விக்கான அனுமதி பெற நீட் எனும் நுழைவுத் தேர்வை இரண்டாண்டுகளுக்கு முன்பே தகுதித் தேர்வாக அறிவித்து விட்டது. அதைப் பிற மாநிலங்கள் முதலில் எதிர்த்தாலும் இப்போது அங்கெலாம் நீட் நடைமுறையில் உள்ளது. ஒருவேளை இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்திலிருந்து ஒரு காலகட்டத்தில் இந்தித் திணிப்பை ஒழித்துக் கட்டியதைப் போல நீட் விஷயத்திலும் எதிர்பாராத திருப்பம் கிடைக்க வேண்டும் என்றால், அதற்காகப் போராட நமக்கு வலுவான மாநிலத் தலைவர்கள் வேண்டும். இன்றிருப்பவர்களுக்கு தங்களது பாகப் பிரிவினைகளைச் சரி செய்யவே நேரமில்லாத பட்சத்தில் அவர்களை நம்பி நம் மாணவர்கள் நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டிலும் தங்களுக்கு விலக்கு கிடைத்து விடும் என நம்பியது துரதிர்ஷ்டம். இந்த விஷயத்தில் ஆளும் கட்சியை மட்டுமே குற்றம் சொல்வதற்கு வழி இல்லை. எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் கூட நீட் வேண்டாம் என்பதைத் தான் உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தனவே தவிர, ஒருவேளை அது நடைமுறைப்படுத்தப் பட்டு விட்டால் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? என அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 

2015 ஆண்டில் இருந்தே நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப் படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.

கடந்த ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் பிடிவாதத்தால், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு குறித்து அவதானிக்கவும், தேர்வுமுறை பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவும் அப்போது தமிழகம் சந்தித்த இயற்கைச் சீற்றங்களைக் கணக்கில் கொண்டு உச்சநீதிமன்றம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முன்வந்தது. ஆனால் தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல், ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், என அதற்கடுத்த ஆண்டிலும் நாம் நீட் தேர்வு குறித்து யோசிக்க மறுத்து சமூகப் போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்தத் தலைப்பட்டோம். எப்படியும் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்து விடும் என்றே கடைசி வரை நமது அப்பாவி மாணவர்கள் நம்பினார்கள். காரணம் நமது மத்திய, மாநில அரசியல்வாதிகள் அன்று வரையிலும் அளித்து வந்த முன்னுக்குப் பின் முரணான தெளிவற்ற உத்திரவாதங்கள்... 

இதனாலெல்லாம் தான் ‘நீட் தேர்வுக்குத்’ தயாராக தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவகாசமில்லாது போயிற்று?

இப்படித்தான் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து மருத்துவக்கல்வி பெறும் கனவுகளோடு புறப்பட்ட எண்ணற்ற மாணவ, மாணவிகளின் லட்சியக் கனவை தமிழக அரசும், அரசியல்வாதிகளுமாக முனை முறித்துத் தெருவில் வீசினார்கள். அதனால் தான் சென்ற கல்வியாண்டின் கடைசி நாட்கள் வரை அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு நீட் தேர்விலிருந்து கண்டிப்பாக விலக்கு கிடைத்து விடும் என முற்றிலும் நம்பிக் கெட்டார்கள். உண்மையில் தமிழக அரசுக்கு தனது மாணவர்களின் நலனில் அக்கறை இருந்திருக்குமானால், எத்தனை நெருக்கடியான அரசியல் சூழலிலும் கூட கிராமப்புற மாணவர்களுக்கென அன்றே இலவச நீட் பயிற்சி வகுப்புகளை நடத்தத் துணிந்திருக்கும். ஆனால் அது மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத ஒரு சுயநல அரசு தான் என்பதை இன்று மத்திய அரசின் கைப்பாவையாகி ‘நீட்’ தேர்வு குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பே தராமல், அவர்களை அதை வெறுக்கச் செய்து பிறகு வலியக் கொண்டு வந்து வலிக்க, வலிக்க அவர்கள் மேல் திணித்து ‘இனி இது தான் உங்கள் தலைவிதி(வலி)!’  என்றால் அதை ஏற்றுக் கொண்டு அடுத்த சாய்ஸ் என்ன? என்று தேடக் கூடிய மனமுதிர்ச்சி அனிதா போன்ற கிராமப்புற அப்பாவி மாணவிகளிடம் இருந்தே ஆக வேண்டிய கட்டாயமில்லையே!

அவளுக்குத் தன் திறமை மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தனக்கு மறுக்கப்பட்ட மருத்துவக் கல்வி மீதான ஆழந்த மனப்பிணைப்பு அவளை தூங்க விடாமல் இம்சிக்க, கடைசியில் முடிவெடுக்கத் தெரியாமல் இனிமேல் தனக்கு மருத்துவக் கல்வி பெற முகாந்திரமே இல்லை என நினைத்து, வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொண்டாள்.

12 ஆண்டுகள் பள்ளி மூலம் பெற்ற கல்வி, அனிதாவுக்கு பிளஸ்டூவில் 1176 மதிப்பெண்களைப் பெற்றுத்தந்தது. சரியான வழிகாட்டுதலோ அல்லது சரியான பக்கபலமோ இருந்திருந்தால் நிச்சயம் அவளால் அடுத்த முறை ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் இங்கு நம்மில் பெரும்பான்மை மக்கள் ‘நீட் தேர்வை’ தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பதில் காட்டிய முனைப்பை, ஒருவேளை அந்தத்தேர்வு உள்ளே வந்து விட்டால் அதை எப்படிக் கையாள்வது? அதில் நமது அப்பாவி மாணவர்களின் மருத்துவக் கனவு பலியாகாமல் தடுக்க என்ன விதமான முயற்சிகளை எடுப்பது? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. 

அப்படி யோசித்தவர்கள், யோசித்ததை செயல்படுத்த பொருளாதார வசதி இருந்த பெற்றோர்களில் பலர் தங்கள் பிள்ளைகளை எப்பாடுபட்டாவது நீட் நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். இத்தனைக்கும் மேலே சில தனியார் பள்ளிகள் கடந்த பல வருடங்களுக்கும் மேலாக 6 ஆம் வகுப்பில் இருந்தே தங்களது மாணவர்களில் ஐஐடி தேர்வுக்குத் தயாராக விரும்பியவர்களுக்கென தனி வகுப்புகளையே நடத்தி வருகின்றன. (அதற்கெனத் தனியாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு தான்) தினசரி வகுப்புகளுடன் இப்போது புதிதாக உள்நுழைக்கப்பட்ட நீட் பாடத்திட்டத்தையும் இணைத்துக் கொண்டு நீட் மற்றும் ஐஐடிக்குரிய ஸ்பெஷல் வகுப்புகளில் அவற்றிற்குரிய பாடத்திட்ட முறையில் அந்த மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதலே பயிற்சி பெறத் தொடங்கி விடுகிறார்கள். தனியார் பள்ளிகளைப் பற்றி எப்போதும் நெகட்டிவ்வாகப் பேசுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் சிலருக்கு இதெல்லாம் தெரியுமா? தெரிந்திருந்தால் அப்போதே அரசுப் பள்ளிகளிலும் இவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க வேண்டுமில்லையா? அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களால் நீட் தேர்வுக்குரிய பயிற்சிகளை அளிக்க முடியாதா என்ன? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் தகுதியும், அர்ப்பணிப்பு உணர்வும், தனியார் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் தகுதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டிலும் எந்த விதத்தில் குறைந்ததாக இருந்ததில்லையே!

அட... அதெல்லாம் அனாவசியம்... நாங்கள் நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்! இங்கே வந்து  தேவையற்று நீட் பாடத்திட்டம், பயிற்சி வகுப்பு என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?! என்று சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் அந்த வறட்டுக் கோபங்களுக்கு கிடைத்த விலை தான் சிறுமி அனிதாவின் தற்கொலை.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் கல்வியில் மட்டுமல்ல அரசியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், தனி மனித அங்கீகாரம், என எல்லா விஷயங்களிலும் பாரபட்சம் நிலவத்தான் செய்கிறது. எதை நம்மால் இதுவரை தடுக்க முடிந்திருக்கிறது? நீட் தேர்வை வேண்டாம் என்று விலக்கி விட்டால் மட்டும் போதுமா? தமிழகத்தில் அனிதாவைப் போல உயர் மதிப்பெண் பெற்ற அத்தனை தலித் மாணவ, மாணவிகளுக்கும் இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி கிடைத்து விடுமா? அதற்குள்ளும் எத்தனை நுண்ணரசியல் இருக்கக் கூடும் என்று அறியாதவர்களா நாம்?! நமது அரசியல் கட்சிகள் நாட்டில் முளைக்கும் பரபரப்பான எல்லா விஷயங்களையுமே அரசியலாக்கி லாபம் தேடிக் கொண்டு குளிர்காய நினைக்கின்றன. 

அனிதா தற்கொலைக்குப் பிறகு மீண்டும் நீட் தேர்வு வேண்டாம் என்ற முழக்கத்தையே கையில் எடுத்திருக்கின்றன பல போராட்ட அமைப்புகள்.

அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

எத்தனை கதறினாலும் சபை ஏறாத விவசாயிகளின் போராட்டத்தைப் போலவும், நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் போலவும் தான், நீட் தேர்விலும் விளைவுகள் இருக்கப் போகின்றன. அது தெரிந்திருந்தும் ஏன் முன்னிலும் மூர்க்கமாக அதை எதிர்க்கிறீர்கள்?! தயவு செய்து நீட் தேர்வுக்கு தயாராகி அதை வெல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசியுங்களேன். நீட் தேர்வை எதிர்ப்பதை மத்திய அரசை எதிர்ப்பதாகக் கருதிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டால் நஷ்டம் நமக்குத்தான்.

நீட் தேர்வு குறித்து நமக்குள் ஆளுக்கு ஆள் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அந்தத் தேர்வில், மாநில வழிக் கல்வி பெற்ற நமது தமிழக மாணவர்களால் பெரிதாகத் தேற முடியாது என்ற மனப்பான்மை நம்மை நாமே இழிவு செய்து கொள்வதற்கு ஒப்பாகாதா? நீட் தேர்வைப் பொறுத்தவரை இனி தமிழக மாணவர்கள் செய்ய வேண்டியது;

அந்தத் தேர்வே வேண்டாம் எனப் புறக்கணிப்பதல்ல;

அந்தத் தேர்வை வெற்றிகரமாக வெல்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது மட்டுமே!

நீட் தேர்வு என்பது ஜல்லிக்கட்டு போராட்டம் போல எமோஷனலாகவோ அல்லது சென்ட்டிமென்ட்டலாகவோ கையாளப் படவேண்டிய விஷயம் அல்ல! அது நம் மாணவர்களின் எதிர்காலம். அதில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு அவகாசம் தாருங்கள். நம் மாணவர்கள் நீட் தேர்வு குறித்த தெளிவைப் பெற்று விட்டால், அதற்காக அரசின் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப் படுமானால் அடுத்த ஆண்டில் இன்று நாம் இழந்த ஒரு அனிதாவுக்கு ஈடாகப் பல எதிர்கால அனிதாக்களின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறலாம். அந்த வாய்ப்பை வலிய மறுத்தவர்களாக நம்மை நாளைய தலைமுறை பழிக்கும் நிலை வேண்டாம்.

குறிப்பு: 

எப்படி நீட் தேர்வை வேண்டாம் என்று மறுக்கப் பலருக்கு எத்தனை உரிமை உண்டோ அதே விதமாக அதை ஆதரிக்கவும், வேறு மார்க்கமின்றி வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்ளவும் கூடப் பலருக்கு உரிமை இருக்கிறது என்று எண்ணுகிறேன். 

Image courtesy: Ndtv.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com