யாருமே வாழ்வதில்லை! ஆல்ஃபர் காம்யூ

ஆல்ஃபர் காம்யுவின் வாழ்க்கை வரலாற்று நூலை கடந்த மூன்று தினங்களாக வாசித்து முடித்தேன்.
யாருமே வாழ்வதில்லை! ஆல்ஃபர் காம்யூ

ஆல்ஃபர் காம்யுவின் வாழ்க்கை வரலாற்று நூலை கடந்த மூன்று தினங்களாக வாசித்து முடித்தேன். அந்நியன் நாவலின் நாயகனைப்போலவே எளிதில் அணுகமுடியாத, புதிர்தன்மைக் கொண்ட மனிதராகவே காம்யுவும் வாழ்ந்திருக்கிறார். அல்ஜீரியாவில் திராட்சைத் தோட்டம் ஒன்றில் பணியாற்றும் காம்யுவின் அப்பாவை அறிமுகப்படுத்தியபடியே நூல் துவங்குகிறது. தொடர்ந்து அவர் அங்கு பணியாற்ற முடியாமல் அவரது மனைவியை காய்ச்சல் தாக்குகிறது. இதனால் முதல் உலக போரில் ஜெர்மனிக்கு எதிராக சிப்பாயாக நுழைந்து, விரைவிலேயே குண்டடிப்பட்டு இறந்துவிடுகிறார். 

அப்போது காம்யு ஒரு வயதைக்கூட தொட்டிராத எட்டு மாதக் குழந்தை. இதனால் அவரது பால்ய வயதுகளில் பாட்டி வீட்டிலேயே காம்யு வளர்கிறார். அங்கு ஃபுட்பாலும், மாமாவுடனான சீட்டாட்டங்களும் அவரது பொழுதுகளை நிரப்புகின்றன. பின் அரசாங்கத்திடம் உதவித்தொகைப் பெற்று ஆரம்பப் பள்ளியில் சேருகிறார். பின்பு உயர்நிலைப்பள்ளியில். அங்குதான் அவருக்கு வறுமைக் குறித்த புரிதல்களும், தன் சக மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. 'ஆரம்பப் பள்ளியில் இருக்கும்போது எல்லோரும் என் போலவே என்று நினைத்தேன். வறுமை எல்லோருக்குமானது என்று தோன்றியது. ஆனால் உயர் நிலைப் பள்ளியில்தான் வாழ்வில் வித்தியாசங்கள் இருப்பதைத் தெரிந்துக்கொண்டேன்' என்று அதனை காம்யுவே விளக்குகிறார். 

தொடர்ந்து வாழ்க்கை அவருக்கு பல படிப்பினைகளை வழங்கியபடியே இருக்கிறது. வெளியுலகம் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் தன் ஆசிரியர் ஜீன் கிரீனரிடமிருந்து அறிந்து கொள்ளும் காம்யு, அவரைத் தன் மானசீக குருவாகவே கருதுகிறார். பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த அல்ஜீரியாவில் அரேபியர்களின் புறக்கணிக்கப்பட்ட நிலைக் குறித்து வருந்துகிறார். காம்யுவின் பிற்கால வாழ்க்கை அதிகம் மிகுந்த குழப்பமாகவே இந்நூலில் அணுகப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் காம்யு மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களின் வாயிலாகவே அக்காலக்கட்டத்தை நூலாசிரியர் எழுதி இருக்கிறார். முதலில் கம்யுனிஸ்ட்டாகவும், பின் அதிலிருந்து விலகி அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் சாதாரண மனிதர்களை முன்னிறுத்தி பலக் கட்டுரைகளை எழுதிகிறார். அரசியலற்ற ஒரு சமூக முறையை உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். 

சிறு வயது முதலே அவரை விடாது துரத்தும் காச நோய், பிற்காலத்தில் அவரை தொடர்ந்து இயங்க விடாமல் தொந்தரவுப்படுத்துகிறது. அக்காலகட்டங்களில் மரணம் குறித்தே அதிகப்படியாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறார். வாழவேண்டும் என்கிற நம்பிக்கையும், மரணம் குறித்த அச்சமும் அவரை எல்லோரிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது. அவரது சிறந்த படைப்புகளான அந்நியன், தி பிளேக் முதலியவை இக் காலக்கட்டங்களிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. A Happy man, Modesty, A free man, A man like any other முதலியன அந்நியனுக்கு அவர் முதலில் சூட்டிய பல்வேறு பெயர்கள். நிர்பந்தத்தால் இயங்குகிற மனிதர்களை குறித்து பெரிதும் கவலைப்பட்டிருக்கிறார், யாருமே வாழ்வதில்லை என்பது அவரதுக் கூற்று. 

கொடுந் துயரம் துரத்தியபோதும் சினிமா நட்சத்திரங்கள் குறித்து கிசுகிசு எழுதுவதையோ, அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா தட்டுவதையோ மிகவும் இழிவான நிலை என்று கருதி அதனை முற்றாக புறக்கணித்தார். எப்போதும் மனிதத்துவம் பற்றிய சகோதர நேசிப்பை வலியுத்தும் விதமாகவும் எழுதியும், வாழ்ந்து காண்பித்த காம்யு 'குழந்தையின் மரணத்தை விடவும் அதிர்ச்சியானது வேறெதுவும் இல்லை, கார் விபத்தில் இறப்பதை விடவும் அபத்தமானது எதுவுமில்லை' என்று தன் நண்பர்களிடம் சொல்லியிருந்தது போலவே எதிர்பாராத ஒரு நாளில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

'நான் பெரிய கதாநாயகனாகவோ, பற்றற்றவனாகவோ இருக்க விரும்பவில்லை.... ஒரு மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்’ இதுவேதான் அவரது வாழ்க்கையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com