‘அனிதா’ - நாம் படிக்க வேண்டிய பாடம்!

நீட் சரியா? தவறா? என வாதம் செய்வதற்கு முன் நம் தேசத்தின் அரசியல் அமைப்பையும், மக்களின் வாழ்க்கை முறையையும், தேசத்தின் கட்டமைப்பையும் உணர வேண்டும்.
‘அனிதா’ - நாம் படிக்க வேண்டிய பாடம்!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அரசாங்கம் நிர்ணயித்த வறுமைக்கோட்டுக்கும் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியின் மகள். கலாம் சொன்னக் கூற்றிற்கிணங்க கனவு காணுங்கள் என்னும் வார்த்தையினை தனது மந்திரச் சொல்லாக்கி மருத்துவராகும் உன்னதக் கனவோடு பயின்று, தான் பயின்ற மேல்நிலைக் கல்வியில் 1200 க்கு 1176 மதிப்பெண்களை எடுத்து தான் மருத்துவப்படிப்புக்கு தகுதியானவள் என்று தன்னை நிரூபித்துக் காட்டிய இவளுக்கு, அடுத்து ஒரு தேர்வு அதன் பெயர் ‘நீட்’ எனச் சொன்னபொழுது ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு மட்டுமல்ல இவளைப் போன்ற பல்லாயிரம் மாணவர்கள், பெற்றோர்கள் நிலையும் இதுதான். மதிப்பெண்களை வாரிக்குவித்த இவளுக்கும், இவளைப்போன்ற மாணவர்களுக்கும் தேர்வு ஒன்றும் புதிதும் அல்ல, புதிரும் அல்ல. ஆனாலும் தேர்வை எதிர்கொண்டு தோல்வி அடைந்தவுடன் ஏமாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டெதஸ்கோப் ஏறவேண்டிய கழுத்தில் தூக்குக்கயிற்றை ஏற்றி உயிர்காக்கும் பணி செய்ய விரும்பித் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள்..

1200 க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த இவள் நீட்டை எதிர்கொள்ள முடியாத கோழை அல்ல. ஆனாலும் தற்கொலை! எவ்வகையிலும் இது ஒரு தீர்வாகாது. ஆனாலும் இந்த சமூகத்தின் மீதான எதிர்ப்பை, இந்த அரசின் மீதான ஏமாற்றத்தை, இந்தக் கல்விமுறையின் மீதான எதிர்ப்பைக் காட்ட அனிதா ஏந்திய ஆயுதம்... உயிராயுதம்!

ஒரு மாணவிக்கு வாழும் தைரியம் கொடுக்காத, வழிமுறைகள் காட்டாத இந்த சமூகமும், கல்விமுறையும் அவளை கோழை எனச் சொல்லி தங்கள் மீதான கறையைக் கழுவிக்கொள்ள முடியாது.
 
எது தவறு? எங்கே தவறு?

நீட் சரியா? தவறா? என வாதம் செய்வதற்கு முன் நம் தேசத்தின் அரசியல் அமைப்பையும், மக்களின் வாழ்க்கை முறையையும், தேசத்தின் கட்டமைப்பையும் உணர வேண்டும்.

நம் தேசம் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் மக்களாட்சி நாடாக அமைந்துள்ளது. ஆனால் ஆட்சியாளர்களால், ‘மக்களுக்காக நாடு’ என்பது,  தங்களது வசதிக்காக மறக்கப்பட்டு விட்டது.

ஏனெனில் தங்களுக்கு தேவை எனும்பொழுது சட்டத்திருத்தம் செய்யும் அவர்கள், மக்களுக்கு எனும்பொழுது மட்டும், சட்டத்தின் பெயரைச் சொல்லி தங்கள் மீது பழி விழாமல் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்திய மாநிலங்களின் ஆட்சிமுறையும், கொள்கையும் அந்த மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றம் பெறுகின்றன. இந்தியர் என்ற உணர்வால் மட்டுமே நாம் ஒன்றுபடுகிறோம். மற்றபடி முழுவதுமாக மாறுபட்டே வாழ்கிறோம்.

கல்விமுறை என்பதைக் காணும்பொழுது, ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. அதனைச் சார்ந்தே தேர்வுமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அதனைப்படித்து வளர்ந்த மாணவர்களிடம் மத்தியப் பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வினாத்தாளைக் கொடுத்து, அதில் வெற்றி பெற்றால் மட்டுமே, நீ மருத்துவராக முடியும். இல்லையேல் உனக்கு அங்கு இடமில்லை என மாணவர்களின் உரிமையைப் பறிப்பதும்,  மாநிலக் கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதே அன்றி வேறல்ல!

நாடு முழுவதுமாக முதலில் ஒரே மாதிரியான ஒருங்கிணைந்த பாடத்திட்டம் கொண்டுவராமல், ஒரே மாதிரியான தேர்வுமுறையை மட்டும் முதலில் எப்படிக் கொண்டு வந்தார்கள் என்பது இன்று நம்மிடையே மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவின் நீதியரசர்கள்  

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கத் தமிழகத்திற்கு வெட்கமில்லையா?! என்று வினவியதாகச் செய்தி படித்தேன்.

நீதிமன்றங்களிடம் எனக்கு ஒரே ஒரு கேள்விதான்;

ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர முடியாத ஒரு அரசாங்கம், எப்படி நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான தேர்வு வைக்கமுடியும்?

நாங்கள் நீட் தேர்வுக்கு அஞ்சியவர்கள் அல்ல, ஆனால், போட்டியிலேயே கலந்துகொள்ளாமல் தோற்கடிக்கப்படுவது எவ்வகையில் நியாயம்?

அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

மாநிலப் பாடத்திட்டத்தை ஒழித்துவிட்டு நாடு முழுமைக்கும் ஒரே விதமான பாடத்திட்டத்தை அமல் செய்ய வேண்டும். அதுவரை நாடு முழுமைக்கும் ஒரே நுழைவுத்தேர்வு என்னும் நடைமுறையை உடனே நிறுத்திவைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி அமைச்சர்கள், நிர்வாகம் என செயல்படும்பொழுது நேரடியாகத் தன் விருப்பப்படி முடிவெடுக்க இது என்ன ரயில்வே துறையா? அல்லது தபால் துறையா?
நாட்டை வடிவமைக்கும் கல்வித்துறை.

தனிமனித ஒழுக்கம் எப்படி நாட்டை சீர்படுத்துமோ, அதே போலத்தான் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் இந்த தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி கட்டமைக்கப்படும்.

மாநிலங்களின் உரிமைகளில் அல்ல, மக்களின் உரிமைகளைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை என்னும் உண்மையை அரசாங்கம் உணர வேண்டும்.

தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுக்கத்தான் இந்த ‘நீட நடைமுறை என்றால் அது கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அதை விடுத்து மாநிலங்களின் உரிமையினை, மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது.

கடைசியாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுண்டு!

தற்கொலை செய்துகொண்டதால் அனிதா கோழைமனம் படைத்தவள் எனச் சொல்லி அவள் சாவை அசிங்கப்படுத்தி விடாதீர்கள்..
 
இத்தனை மதிப்பெண்கள் எடுத்தும் அவளால், அவள் விரும்பிய படிப்பை படிக்க முடியவில்லையே!

இப்போது மட்டும் ‘நீட்’ தேர்வு பற்றி இந்த அரசாங்கம் அரசுப் பள்ளி மாணவர்களான அனிதாவைப் போன்றவர்களுக்கு தெளிவாகச் சொல்லி விளங்க வைத்து விட்டதா என்ன?! 

சொல்லி இருந்தால் அவர்களும் கூட படித்து இருப்பார்களே! கடைசி வரை நீட்டுக்கு விலக்குப் பெற்றுத்தரும் இந்த அரசு என்று நம்பிக் கொண்டிருந்து தானே பல நூறு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு இன்று அனிதாவுக்கு இணையாக சரிந்திருக்கிறது.

இந்நாள் வரை மருத்துவக் கல்வி தவிர வேறெதையுமே யோசித்திருக்கவில்லை. இதைத்தவிர வேறு என்ன படிப்பது? மூட்டை தூக்கும் அப்பாவிடம் நான் எதைக் கேட்பது?

எங்கு பயிற்சி வகுப்பு இருக்கிறது? யார் நடத்துவது? என எதுவும் தெரியாமல்

தவியாய்த் தவித்து, வலியின் கொடுமையைப் பொறுத்து தூக்குகயிற்றால் இறுக்கி தன்னையும், தன் கனவையும் கொன்று புதைத்த அனிதாவைக்  கோழையென்று சொல்லி, அவள் இறப்பைக் கொச்சைபடுத்தி விடக்கூடாது..

அவள் தன்னை மெழுகுவர்த்தி ஆக்கி அரசுக்கும் இந்த சமூகத்துக்கும் ஒரு வெளிச்சம் கொடுத்துள்ளார். மதிப்பெண்கள் வாழ்க்கை அல்ல, மதிப்பான எண்ணங்களே வாழ்க்கை என்னும் பாடம் கொடுத்துள்ளார்.

மருத்துவம் என்பது மட்டுமே படிப்பல்ல, அதனைக் கடந்து சாதிக்க எத்தனையோ விசயங்கள் இருக்கிறது எனும் தன்னம்பிக்கை கல்வியியைக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை நம் அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளார்.

அனிதா ஒவ்வொரு பெற்றோருக்கும் பெரும்பாடம். தங்களது பிள்ளைகளை  இலக்கு நோக்கி பயணிக்கச் செய்ய வேண்டுமே தவிர, தள்ளிக்கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் இலக்குகள் தவறும்பொழுது இயல்புநிலைக்கு திரும்புதல் சிரமம் ஆகிவிடும்.

அனிதாவின் மறைவிலிருந்து, இன்றைய மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயமாக ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. 

‘நாங்கள் எத்தகைய தேர்வையும் எதிர்கொள்ளத்தயார்... ஆனால் வாய்ப்புகளை சமமாக வழங்கிவிட்டு, எங்களின் தகுதியினைத் தீர்மானியுங்கள்’ என்பதுதான் அந்தத் தீர்மானம்.

ஆகவே, மாணவர்களே!

‘ஏட்டுப்புழுவாக மட்டும் இருக்காதீர்கள்... தூசு படர்ந்து கிடக்கும் நூலகங்களை தூசு தட்டுங்கள்..
தினந்தோறும் செய்திகளைத் தேடிப்படியுங்கள்..
தொலைக்காட்சியில் செய்திகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள்... வீட்டில் உள்ளோருக்கும், நாட்டில் உள்ளோருக்கும் நல்ல ஆட்சியாளர்களை அடையாளம் காட்டப் பழகுங்கள்..
நீட் மட்டுமல்ல, நிலவும் உங்கள் காலடியில்’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com