ஆகஸ்டு மழையால் தமிழக மாவட்டங்களில் நீராதாரங்கள் நிறையாவிட்டாலும் கூட நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் பற்றாக்குறையாக மழைப்பொழிவைப் பெற்றுள்ள மாவட்டங்கள் எனில் அவை; கன்யாகுமரி, நீலகிரி, மற்றும் காரைக்கால் மாவட்டங்களே!
ஆகஸ்டு மழையால் தமிழக மாவட்டங்களில் நீராதாரங்கள் நிறையாவிட்டாலும் கூட நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, தமிழக நீர்வளத்துறை மற்றும் நீர் ஆதாரத் தரவு மையங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் மொத்தத் தமிழகத்திலுமே நிலத்தடி நீர் மட்டம் என்பது அதல பாதாளத்திற்குச் சென்றிருந்தது. இந்த ஆண்டும், கடந்த ஆண்டுகளைப் போல மழை நீர் வீணாக்கப் பட்டாலோ, அல்லது பருவ மழை பொய்த்துப் போனாலோ தமிழக மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை சந்தித்தாக வேண்டிய கடுமையான சூழல் நிலவி வந்தது. ஆனால் தற்போது, சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத் தரவு மையங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முறை தேவைக்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் தவிர்த்து மேலும் சில மாவட்டங்களிலும் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அந்த மாவட்டங்கள் முறையே சென்னை மற்றும் தேனி. இந்த மாவட்டங்கள் அனைத்தும் ஆகஸ்டு மாதத்தில் அதிக மழைப்பொழிவைப் பெற்றதால் அவற்றின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த மாதங்களை விட அதிகரித்து திருப்திகரமான முன்னேற்றம் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில் மழைப்பொழிவின் அளவு 5.14 மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது. 

தமிழகம் முழுவதுமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த மழைப்பொழிவு 305.3 மில்லிமீட்டர். இந்த அளவீடு இதுவரையில் கடந்தகாலங்களில் தமிழகம் ஆண்டு முழுவதும் பருவமழையால் பெறக்கூடிய மழைப்பொழிவின் பொதுவான அளவீடான 217 மில்லிமீட்டர்களைக் காட்டிலும் அதிகம். தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் பற்றாக்குறையாக மழைப்பொழிவைப் பெற்றுள்ள மாவட்டங்கள் எனில் அவை; கன்யாகுமரி, நீலகிரி, மற்றும் காரைக்கால் மாவட்டங்களே!

நீர்வளத்துறை மற்றும் நீர் ஆதாரத் தரவு மையம் வெளியிட்ட அளவீடுகளின் படி தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவு கடந்த ஓரிரு மாதங்களாக அதிகரித்திருப்பினும், நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது குறைவானதாகவே பதிவாகியுள்ளது. உதாரணமாக திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் கடந்த மாதம் தேவைக்கு அதிகமான மழைப்பொழிவு பதிவான போதும் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைவானதாகவே கருதப்படுகிறது. 

மாலையில் தொடங்கி இரவில் மழை என்பது சென்னையைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் வழக்கமாக இருக்கிறது. இந்த மழையால், மழைப்பொழிவு அதிகமெனப் பதிவானாலும் கூட நிலத்தடி நீர்மட்டம் கடந்த மாதங்களை விட அதிகரித்திருக்கிறது என்றே கொள்ள முடியுமே தவிர, இந்த அளவீடுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை திருப்திகரமான உயர்வாகக் கருத இயலாது. இப்போதுள்ள உயர்வு தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் மேலும் மழைப்பொழிவு தேவைப்படுகிறது. மழை பொய்க்காமல் இருந்தால் மட்டுமே சென்னை, மெட்ரோ வாட்டர் வெளியிட்ட, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திய நிலத்தடி நீர்மட்ட அளவீடான 3.40 மீட்டர் எனும் இலக்கை எட்ட முடியும்.

ஆக நீர் வளத்துறை மற்றும் நீர் ஆதாரத் தரவு மையம் வெளியிட்டுள்ள அட்டவணையின் படி சென்னை, திருவள்ளூர், தேனி உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் கடந்த மாதத்தில் அதிக மழைப்பொழிவைப் பெற்றிருந்த போதிலும் அது முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு இல்லை என்பது தெளிவு. கடந்த மாத மழைப்பொழிவால் தமிழக நீர் ஆதாரங்களில் போதுமான நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு மழை இல்லாமல் போனாலும் கூட கடந்த மாதத்திய அதிக மழைப்பொழிவால் ஓரளவுக்கு அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த மக்களின் குடிநீர்த் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் நீர்வளத்துறை நிபுணர்கள் சொல்ல விரும்புவது ஒன்றே. கடந்த மாத அதிக மழைப்பொழிவால் நீர் ஆதாரங்களில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளமுடியாமல் போயிருந்தாலும் கூட நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிட்ட அளவுக்கு உயர்ந்துள்ளது திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தமிழக நிலத்தடி நீர் மட்டத்தைப் பொறுத்தவரை நிச்சயம் வரவேற்கத்தக்க மாற்றம் தான் என்கின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com