மரம் வளர்த்தலில் புதிய அணுகுமுறை: முன்னுதாரணமாகத் திகழும் இலுப்பையூர் கிராமம்

மரம் வளர்த்தலில் புதிய அணுகுமுறையைப் பின்பற்றி, பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இலுப்பையூர் கிராம மாணவ, மாணவியர், இளைஞர்கள் பற்றி பார்க்கலாம்.
மரம் வளர்த்தலில் புதிய அணுகுமுறை: முன்னுதாரணமாகத் திகழும் இலுப்பையூர் கிராமம்

மரம் வளர்த்தலில் புதிய அணுகுமுறையைப் பின்பற்றி, பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இலுப்பையூர் கிராம மாணவ, மாணவியர், இளைஞர்கள் பற்றி பார்க்கலாம்.
 

  • இந்தியாவில் மேகங்கள் மழை பொழிவதற்கான திறனை இழந்து வருகின்றன. 
  • சில ஆண்டுகளில், தண்ணீர்ப் பஞ்சம் மற்றும் அதிக வெப்பத்தினால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறும்.
  • மூன்றாம் உலகப்போருக்கு நீர்ப் பிரச்னை முக்கியக் காரணமாக இருக்கும். 
  • உலகம் வெப்பமயமாவதால் உணவுப்பஞ்சம் அதிகரிக்கும். 

    - இந்த மாதிரியான செய்திகளைக் காணும்போது ஆறறிவு கொண்ட எவர்க்கும் பதற்றம், பயம் வரும். 

இவை அனைத்துக்கும் மூல காரணமாக இருப்பது காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் போன்றவைதான். 

ஆனால், இன்றைய பொழுது கழிந்தால் போதும் என்கிற எந்திர கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மனித இனம், இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. 

சுற்றுப்புற சூழல் நல ஆர்வலர்கள், தொண்டு அமைப்புகள், அரசுத் திட்டங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூலம் மரம் நடுதல், வளர்த்தல் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், பிரச்னை தீரவில்லை என்பது உண்மை.

முக்கியக் காரணம், மக்களின் முழு புரிதலோடு, ஒத்துழைப்போடு மரம் வளர்த்தல் என்பதில் இருக்கிற இடைவெளிதான். 
 

இந்தக் குறையை சரி செய்யும்விதமாக, அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமம் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. 

கிராம மக்களுக்கு, குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய உடல்நலப் பிரச்னை, ஊட்டச்சத்து குறை. எனவே, இதையும் கருத்தில் கொண்டு, மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களிடம் அவர்கள் வளர்க்க விரும்பும் மற்றும் உடல் நலம் தொடர்பான இரு மரக்கன்றுகள் மற்றும் சுற்றுப்புற சூழல் தொடர்புடைய மூன்று மரங்கள் என ஐந்து மரக்கன்றுகளின் பெயர்கள் பெறப்பட்டன. 

இலுப்பையூர் ‘கிராமங்கள் வளர்ச்சி மன்றம்’, தான் சேகரித்து வைத்திருக்கும் நிதியிலிருந்து, தரமான மரக்கன்றுகளை வாங்கி விநியோகித்திருக்கிறது. மேலும், கன்றுகள் நடுவதற்கான குழிகள், ஆடு மாடுகளிடம் இருந்து காப்பதற்கான தடுப்பு அமைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் உதவியிருக்கிறது. மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களின் வேலை, தங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை வளர்ப்பது மட்டும்தான். 

மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்குபெறுவதால், அவர்கள் விரும்பிய மரங்களாக இருப்பதால், சுற்றுப்புற நலன் மட்டும் இன்றி, தனக்கும், குடும்பத்தில் இருப்பவர்களின் உடல் நலனுக்கும் உதவும் மரங்களாக இருப்பதால், பெரும்பாலான கன்றுகள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, மரங்களாகி பலன் தருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். 

மிக முக்கியமாக, மரக்கன்றுகளைப் பராமரிக்கத் தேவைப்படும் செலவு மிகக்குறைவாக இருக்கும். மேலும், மாணவ, மாணவியர் சார்ந்த அணுகுமுறையாக இருப்பதால், இந்த அணுகுமுறை மூலம், ஒரே நேரத்தில் மிக அதிகமான மரங்களை, குறைந்த செலவில் நாடு முழுவதும் வளர்க்க முடியும். இது உலக வெப்பமயமாதல் என்கிற மனிதகுலத்துக்கான அச்சுறுத்தலை சமாளிப்பதற்குப் பெரிதும் துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை. 
 

கிராமத்துக்கு 1000 மரம் வளர்ப்போம் என்கிற திட்டம் குறித்து, இலுப்பையூர் 'கிராமங்கள் வளர்ச்சி மன்றம்' அமைப்பின் உறுப்பினர்களின் சார்பாக, பழனிவேல் மற்றும் தங்கவேல் கூறுவதைக் கேட்போம்.

மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் உணர்ந்து, எங்கள் மன்றத்தின் மூலம் ஏற்கெனவே நிறைய மரங்கள் நட்டு வளர்த்திருக்கிறோம். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப விவசாயக் கருத்தரங்கம் ஒன்றுக்காக, இந்தத் துறையில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள திருச்செல்வம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். 

எங்கள் கிராம மக்களின் மனப்பாங்கை பெரிதும் பாராட்டிய அவர், தங்களுடைய தொழில்நுட்பக் குழு ஆந்திர மாநிலத்தில், தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் விவசாயத் தீர்வை செயல்படுத்தியபோது, அங்கிருந்த கிராம மாணவ மாணவியரின் மூலம் கிராமத்துக்கு 1000 மரம் என்கிற மேற்கூறிய அணுகுமுறையை செயல்படுத்தியதாகவும், அதேபோல் எங்கள் ஊரில் செயல்படுத்தினால் வெற்றிகரமாக அமைந்து, மற்ற கிராமப் பள்ளிகளுக்கும், மாணவ மாணவியருக்கும் முன்னுதாரணமாக அமையும் என்றும் கூறினார்.

மிக நன்மை பயக்கக்கூடிய திட்டமாக இருந்ததனால், எங்கள் கிராமங்கள் வளர்ச்சி மன்றம் இதை எங்கள் ஊரில் செயல்படுத்த தீர்மானம் இயற்றி, இன்று ஏறக்குறைய 75 சதவீத பணியை முடித்துள்ளோம்.

இத்திட்டத்தில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதற்காக, மூன்று ஆண்டுகள் சிறப்பாக மரக்கன்றுகளைப் பராமரிக்கும் மாணவ மாணவியருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளோம். மரங்கள் வளர்ப்பதன் பயனை உணரும் மாணவ மாணவியர், அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் மரங்களைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் செய்வதுடன், அடுத்துவரும் தலைமுறைக்கும் இதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பார்கள். இது ஒரு தொடர் பயணத்துக்கு வழிவகுக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. 
 

நகரங்களைவிட கிராமங்களுக்குத்தான் மழை மிக முக்கியமானது. எனவே, நாட்டுக்கு எங்கள் கிராமம் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், தயவு செய்து தங்கள் கிராமங்களில் இந்த அணுமுறையை செயல்படுத்துங்கள். நாளைய பாரதம் வலிமையாகவும், வளமையாகவும் இருப்பதற்கு இந்த அணுகுமுறை பெரும் உதவியாக இருக்கும்.

இத்திட்டத்தை தங்கள் கிராமத்தில் செயல்படுத்த விரும்பும் கிராமத்தினர், ஆலோசனை உதவி தேவைப்பட்டால்  பழனிவேல்  மற்றும் தங்கவேல் இருவரையும் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புக்கு – பழனிவேல் – 9751853298; தங்கவேல் - 9047485269.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com