ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம்: தேசத்துக்கு அவமானத்தை தேடித் தராதீர்!

இந்திய - சீனப் பிரதமர்கள் இணைந்து 1954-ல் பஞ்சசீலக் கொள்கையை பிரகடனப்படுத்திய ஐந்தே ஆண்டில், திபெத்தை சீனா கைப்பற்றியது.
ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம்: தேசத்துக்கு அவமானத்தை தேடித் தராதீர்!

இந்திய - சீனப் பிரதமர்கள் இணைந்து 1954-ல் பஞ்சசீலக் கொள்கையை பிரகடனப்படுத்திய ஐந்தே ஆண்டில், திபெத்தை சீனா கைப்பற்றியது. திபெத் அதிபராகவும், புத்த மதத் தலைவராகவும் இருந்த 14-வது தலாய்லாமா, தனது ஆதரவாளர்கள் 2 லட்சம் பேருடன் இந்தியாவுக்கு வந்தார். கதவைத் திறந்த இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் அளித்து, வாழ வசதிகள் செய்து கொடுத்தது. தலைநகர் டெல்லியிலேயே திபெத் மார்க்கெட் உருவாக்கியது. இந்தியாவிலிருந்தே திபெத்தை ஆள, இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மடமும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தலாய்லாமா அங்கிருந்தபடியே சீனாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.

சீனா ஆத்திரமடைந்து, 1962 அக்டோபர் 20-ல் இந்தியாவின் மீது போர் தொடுத்து, நவம்பர் 21-ல் தன்னிச்சையாகப் போர் நிறுத்தமும் அறிவித்தது. ஆனால், அதற்குள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் 37,555 சதுர கிலோமீட்டர் பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது. வடகிழக்கில் இப்படி என்றால், வடமேற்கில் லடாக்கின் 43,000 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்து அக்காய்சின் எனப் பெயரிட்டு, சிங் ஜியாங் பிராந்திய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

ஆண்டுகள் 55 ஆகியும், இழந்த பகுதியின் ஒரு மில்லி மீட்டர் இடத்தைக்கூட நம்மால் மீட்க முடியவில்லை. அதேசமயம், அருணாசலப் பிரதேசம் தனக்கே உரியது என சீனா இன்றும் உரிமை கொண்டாடி, அப்பகுதி மக்கள் சீனா வர தாற்காலிக அனுமதிச் சீட்டும் வழங்குகிறது. 

ஆக, இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து திபெத்திய பௌத்தர்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் கொடுத்த இந்தியாவிலிருந்துதான் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை வெளியேற்றுவோம் என மத்திய அரசு தரப்பிலிருந்து அபாய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்களும் இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான மியான்மரிலிருந்து வந்தவர்கள்தான். மியான்மரின் தென்மேற்கு பகுதியில் அமைந்தது ராக்கைன் என்ற அரக்கான் மாநிலம். இதன் வடமேற்கு பகுதி வங்கதேசத்துடன் எல்லையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிஸோரம் மாநிலம், மியான்மரின் அரக்கான் மாநிலம் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையைக் கொண்டுள்ளது. இந்திய மாநிலங்களில் மிஸோரம் மட்டுமின்றி மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் மியான்மருடன் எல்லையைக் கொண்டவை. 

பாகிஸ்தான், வங்கதேசம் எப்படி இந்தியாவுடன் இணைந்திருந்ததோ அதுபோன்றே மியான்மரும் இந்தியாவுடன் இணைந்திருந்த நாடே. அப்போது அதன் பெயர் பர்மா. 1937-ல் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு 1942-ல் ஜப்பானிடமும், இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டனிடமும் அடிமைப்பட்டு, 1948 ஜனவரி 4-ல் சுதந்திரம் பெற்றது. சுல்தான்கள் ஆட்சியில் இருந்த அரக்கான் மாநிலத்தையும் பர்மாவின் ஒரு மாநிலமாக்கி பிரிட்டன் சுதந்திரம் வழங்கிவிட்டது. 1989-ல் பர்மாவின் பெயர் மியான்மர் என்றும், தலைநகராக இருந்த ரங்கூன் யாங்கூன் என்றும் மாற்றப்பட்டது.

பர்மாவின் ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் நீவின் ராணுவப் புரட்சி நடத்தி, 1962 மார்ச் 2-ல் ஆட்சியைக் கைப்பற்றினார். தொழில்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. தொழில்களை இழந்த இந்திய வம்சாவளியினர் அகதிகளாகத் திரும்பினர். இந்தியா முழுவதும் பர்மா பஸார்கள் உருவாயின.

மியான்மரில் ராணுவ ஆட்சி உருவானதுமே ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சோதனைகளும் உருவாயின. 1974-ல் ராணுவ ஆட்சியில் புதிய அரசியல் சட்டம் பர்மாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 2 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு விரட்டியடிக்கப்பட்டனர். 1982-ல் ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் நெவின் கொண்டுவந்த பர்மிய குடிமக்கள் சட்டப்படி, 13 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்களும் நாடற்றவர்களாக்கப்பட்டனர். எந்த உரிமையும் கிடையாது.

இந்த 55 ஆண்டுகளில் எத்தனையோ வன்முறை கலவரங்கள், ஒவ்வொரு கலவரத்திலும் ஆயிரக்கணக்கில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை, லட்சக்கணக்கில் வெளியேற்றம் 2012-ல் நடைபெற்ற கலவரம் கட்டுக்கடங்காமல்போய், ஜூன் 10 அன்று மியான்மர் அரசு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. அப்போதுதான் சர்வதேச பார்வை ரோஹிங்யாக்கள் மீது விழுந்தது.

2016 அக்டோபர் மாதம் முதல், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை மியான்மர் ராணுவம் மீண்டும் தொடங்கியது. அதன் உச்சகட்டமாக, மலைப்பகுதிகளில் கூடாரம் அடித்து தங்கி வாழ்ந்துவந்த பாவப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களை அப்புறப்படுத்த ராணுவம் பலாத்காரத்தில் இறங்கியது. முஸ்லிம்கள் எதிர்த்தனர். நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்யப்பட்டது. ராணுவத்துடன் சேர்ந்து பௌத்த பேரினவாதிகளும் வன்முறையில் ஈடுபட்டனர். ஏராளமான முஸ்லிம்கள் உயிரிழந்தனர். எண்ணற்றோர் அகதிகளாக வெளியேறினர்.
 

இக்காலகட்டத்தில்தான், “தி அரக்கான் ரோஹிங்யா சால்வேஷன் ஆர்மி” என்ற பெயரில் அதாவுல்லாஹ் தலைமையில் ஆயுதப் போராளிகள் உருவாயினர். இந்தப் போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து கொடூரக்கொலைகளமாகியுள்ளது அரகான் மாகாணம்.

2017 ஆகஸ்டு 25 தொடங்கி, இரண்டே வாரங்களில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எண்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ண உணவின்றியும், நோய்வாய்ப்பட்டும், படுகாயமுற்றும் மரண விளிம்பில் துடிக்கின்றனர். ஐ.நா. அறிவிப்பின்படியே, இரண்டே வாரங்களில் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரம் பேர். இந்தியாவின் மிஸோரம் மாநிலத்துக்கும் அகதிகள் வந்துகொண்டுள்ளனர்.

இந்த இரண்டு வார காலத்தில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் ராணுவமும், பௌத்த வன்முறையாளர்களும் சேர்ந்து நடத்தும் தாக்குதல் மனித இன வரலாறு இதுவரை சந்தித்திராதவை. பெண்கள், முதியோர், பச்சிளம் குழந்தைகள் என எவரும் வன்முறையிலிருந்து தப்ப முடியவில்லை. அவர்கள் கொல்லப்படும் அல்லது சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் மிகக் கொடூரமானவை. சமூக வலைதளங்களில் பரவும் அக்காட்சியை பார்ப்போர் அலறித் துடிக்கின்றனர். ரோஹிங்யாக்களை வெளியேற்ற நினைப்போர் ஒருமுறை அந்த காட்சிகளை பார்க்கட்டும். ரோஹிங்யா அகதிகள் சாக வேண்டும், அது இந்த மண்ணில் அல்ல - சொந்த மண்ணில் என நினைத்து விரட்டுபவர்கள் இதயமில்லாதவர்கள். 

அரை நூற்றாண்டுக்குப் பின் ஜனநாயக ஆட்சி மலர்ந்து மியான்மரின் அதிகாரத் தலைவியாக ஆங்சான் சூகீயீ பொறுப்பில் இருந்தாலும், வன்முறையை தடுக்க எந்த ஒரு சிறு முயற்சியும் எடுக்கவில்லை. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து விமர்சனங்கள் எழுந்து, அமைதிக்கான நோபல் பரிசை அவரிடமிருந்து திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்ற பின்பே அவர் வாய் திறந்தார். அதிலும் அரக்கான் மாகாணத்தில் அனைவரும் பாதுகாக்கப்படுவர்; அங்கு படுகொலைகள் நடப்பதாகச் சொல்லப்படுவது தவறான செய்தி என்று நாகூசாமல் கூறினார். அப்படி அவர் சொல்லாவிட்டால், பதவியில் இருக்க ராணுவம் அனுமதிக்காது. உள்துறையும், பாதுகாப்புத் துறையும் ரோஹிங்யா விவகாரமும் இன்றும் ராணுவம் வசமே உள்ளது.

கடந்த 5-ம் தேதி, மியான்மர் தலைநகர் நைபிடாவ்வில் சூகீயீயை சந்தித்த பிரதமர் மோடி, ராக்கைன் விவகாரத்தில் மியான்மர் அரசுக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மியான்மரில் நரேந்திர மோடி இருக்கும்போதே மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘இந்தியாவின் பல மாநிலங்களில் வாழும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள்; அவர்களை உடனே அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த அகதிகளில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டியபோது, “ஐ.நா. பதிவால் எந்த பயனும் இல்லை, அத்துடன் அவர்களை உடனடியாக வெளியேற்றுவது குறித்து விமர்சிக்கவோ, மனிதநேயத்தைப் பற்றி பாடம் நடத்தவோ வேண்டாம்” என கோபத்துடன் குறிப்பிட்டார் புத்தரின் சீடரான ரிஜிஜு.

“மியான்மர் பௌத்தர்கள் இந்தியா வர கட்டணமில்லா விசா; இந்தியாவிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் விரட்டியடிப்பு” என்ற நிலைப்பாட்டை நரேந்திர மோடி எடுத்திருப்பதற்குக் காரணம், மியான்மரை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். ஆனால், மியான்மர் என்றைக்கோ சீனாவின் நட்பு நாடாகிவிட்டது. 

1990-களில், மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் பிரச்னை நடைபெற்றபோது, அதற்கு தலைமையேற்று நடத்திய ஆங்சான் சூகீயீயை இந்தியா ஆதரித்ததால், மியான்மருடனான் உறவு சீர்குலைந்தது. அப்போதே சீனாவின் பக்கம் மியான்மர் சாய்ந்துவிட்டது. மியான்மருக்கு பெரிய துறைமுகம் ஒன்றை கட்டித்தரும் சீனா, மியான்மரின் கோகோ தீவில் மிகப்பெரிய ராடார் ஸ்டேஷனை அமைத்து, இந்து மகா சமுத்திரத்தையே கண்காணித்துக்கொண்டிருக்கிறது. பௌத்த நாடான இலங்கையும் சீனாவின் வலைக்குள் விழுந்துவிட்டது. 

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்னை இன்று சர்வதேச விவகாரமாகிவிட்டது. “திபெத்திய பௌத்தர்களுக்கு அடைக்கலம் அளித்த இந்தியா, ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற காரணம், முஸ்லிம்கள் என்பதால்தான்” என்ற விமர்சனம் சர்வதேச அரங்கில் நிச்சயம் எதிரொலிக்கும். அது பா.ஜ.க. தலைமைப் பீடத்துக்கு சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால், இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தும்.

- காயல் மகபூப் (9790740787 / 044-45546066)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com