சிவ நடனம்  

சிவ நடனம்  


முன்பொரு காலத்தில் குரு நாட்டுக்குத் தலைவனாக ஒரு அரசன் இருந்தான். அவன் காட்டில் ஒரு வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த வசிஷ்ட முனிவரைப் பார்த்தான். அவரை வணங்கி வலம் வந்தான். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தான். கைகுவித்து அவரிடம் பேசினான்.

‘முனி ராஜரே, இந்தக் காட்டில் எத்தனையோ முனிவர்களை இதற்கு முன் சந்தித்து உள்ளேன். ஆசி பெற்றுள்ளேன். ஆனால் இது வரை காணாத ஒரு நிம்மதியை உங்களைக் கண்டதும் அடைந்தேன். என் மனம் ராஜ போகம் இல்லற வாழ்க்கை போன்றவற்றில் சிக்கிக் கிடக்கிறது. எத்தனை முறை முயற்சி செய்தும் இறைவனின் மீது பூரணமாக என்னை ஒப்படைக்க முடியவில்லை. உங்களைப் பார்க்கையிலே நீங்கள் ஒப்பற்ற இறையருளாளர் எனத் தெரிகிறது. இல்லற வாழ்வில் கட்டுப்பட்டவர்களுக்கு பூரணமான இறை சிந்தனை அடைய எதாவது வழி உள்ளதா?’ என்று கேட்டான்.

வசிஷ்டர் புன்னகையுடன் அரசனை நோக்கி, அரசனே இல்லற வாழ்வு நீங்க வேண்டும் என்றால் பசு பாசங்களை விலக்கி அருள்பவரும் காலகாலரும் மகாருத்திரமாகிய பசுபதியை நாள்தோறும் வழிபட வேண்டும். தினமும் நீ சிவார்ச்ச்சனை செய்ய வேண்டும். இதனால் மட்டுமே பாசம் அழியும். வேறு ஒரு செயலும் அதனை அழிக்க இயலாது. அரச போகத்தை விட்டு விட்டு இங்கு வந்து சிவ பூஜை செய். நிச்சயம் முக்தி கிடைக்கும்.

சிவனை அர்ச்சிப்பதன் மூலம் நீர்க்குமிழி போலவும், கானல் நீர் போலவம் கணந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் இல்லறமாகிய துக்கப் பொருள்களை சுகம் என்று எண்ணி மாயையில் சிக்கி கலங்க வேண்டாம்.சிற்றின்பங்களில் மனதை அலைபாய விட வேண்டாம். அதை தோற்றுவிப்பனும் சிவனே. எனவே எதன் மீதும் பெரும் ஆசை வைக்காமல் சிவ பூஜை ஒன்றையே செய்து வா. சிவன் பேரானந்தத்தை அளிப்பனும் ஆனந்தனாகிய பரமசிவனே ஆவான் என்றார்.

அரசன் குழப்பம் நீங்கியவனாக முனிவரைப் பார்த்து சிவனின் இருவகை நடனம் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று பவ்யமாகக் கேட்க வசிஷ்டர் மேலும் தொடர்ந்தார்.

இறைவன் இருவகை நடனம் ஆடுகிறார். ஒன்று ஞான நடனம். இந்த ஞான நடனம் அருள் சக்தியானது உயிரைச் சிவத்தோடு இணைக்கும் போது உயிர் பேரானந்த நடனம் புரிகிறது. மற்றது ஊன நடனம், இது பிறப்பில் உழன்று நிற்கும் நிலை. இறைவனைச் சார்ந்து நிற்கும் முத்தி, நிலை ஞான நடனம். ஆக இவ்விரண்டிற்கும் இடையில் தான் உயிர் உள்ளது என்று விளக்கிச் சொல்லவும் ஐயம் தெளிவடைந்த அரசன் அவரை வணங்கிச் சென்றான்.

திருவருட் பயன் குறட்பா வில் வரும் வரிகள் இவை

ஊன நடனம் ஒருபால் ஒரு பாலா
ஞான நடம்தான் நடுவே நாடு


ஊன மற்றும் ஞான விஷயங்களில்  நடுவே எதையாவது ஒன்றைப் பற்றி நிற்கும் இயல்பை உடையது ஆன்மா. அதாவது ஆன்மாவின் இயல்பு என்னவென்றால் அது எதைச் சார்ந்து இருக்கிறதோ அது போல் அல்லது அதாகவே ஆகிவிடுதல். ஆன்மா முன்பு செய்த தவப்பயனால் இதுவரை உள்ளிருந்து இறையின் இருத்தல், பின்னர் ஒரு கட்டத்தில் குருவாக வெளியில் தோன்வர்.   குரு தன் சிஷ்யனாகிய சீவன் அறிய வேண்டியதை அவன் அறிவில் பொருத்தி அறிவிப்பார்.  குருவின் உபதேசத்தால் ஆன்மா சிவனின் திருவடியைச் சேரும். 

சிவனின்  ஊன நடனம் பாச ஞானத்தையும், ஞான நடனம் பதி ஞானத்தையும் ஆன்மாக்களுக்கு கொடுக்கிறது. பதி ஞானத்தையும் பாச ஞானத்தையும் ஒரே சமயத்தில் ஒன்றாகப் பெறப் முடியாது. காரணம் பந்த பாச சேற்றில் சிக்கியிருக்கும் மனித மனம் ஞானத்தை அத்தனை எளிதில் அடைந்துவிடாது. அதை பற்றி நிற்கும். ஆன்மா அதை விட்டால் தான் பதி ஞானம் கிடைக்கும்.

சிவ‌ மறைபொருள் இத்தகைய‌ பதிக்கும் பாசத்துக்கும் இடை நடுவிலே சிக்கி உள்ள‌ ஆன்மாவை தூய்மைபடுத்தி, பக்கச் சார்பின்றி நடுவு நிலையில் நிலைக்கச் செய்து,  பொய்யான பாசப்பொருளைப் மாயை என்பதை விளக்கிக் காட்டும். 

பாசம் என்பது ஆணவம் கர்மம் மாயை என்ற மூன்று பொருள் ஆகும். இதில் ஆணவத்துக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளையே கர்மம்.இந்தக் கர்மம் இருவினையாக செயல்படும். அதாவது நல்ல செயல்களுக்கும் தீயச் செயல்களுக்கும் சேர்த்த‌ கர்ம பலன்கள் உதய‌மாகும். இதன் மூல காரணம் எதுவென்றால் அறிவும் அறியாமை ஆகிய இரண்டும் தான். 

இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தின் பக்கங்களை திருப்பினால் நாணயம் அழிந்துவிடுமா என்ன? அது போலத் தான் நிறைந்த அறிவின் மூலம் செய்யும் நற்செயல்களால்  கர்மம் அகன்றூவிடாது. நன்மையை செய் தீமை நீங்கிவிடும் என்பது மெய்யுணர்வு இல்லை.

நல்ல செயலால் புண்ணியமும் தீய செயலால் பாவமும் உண்டாகின்றன. தீச்செயல்க: புரிகின்ற போது மனம் மேலும் மேலும் மாயையில் சிக்கி உண்மை நிலையை அறியாமல் பிறவிகளை எடுத்துக் கொண்டே இருக்கும்.மனத்தை கெடுக்கும் தீய‌ உணர்ச்சிகளை நீக்கிச் சுத்தம் செய்தலே அறமாகும். ஒருவன் தன் மனதில் இருவினையாகிய குற்றம் மாசு எதுவும் இல்லாதவனாக இருப்பதே அறம். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படும் எந்தச் செயல்களும் வெறும் ஆரவாரத் தன்மை உடையது. இத்தகைய‌  உண்மையான அறம் சார்ந்த நற்செயல்கள் அடுத்தடுத்த உயர்வான தேடல்களுக்கு வழி வகுக்கும். ஆனால் புண்ணியம் செய்தாலும் சரி பாவம் செய்தாலும் சரி அதனத‌ன் கர்ம பலன் ஆன்மாவில் படிந்திருக்கும். எத்தனை பிறவி எடுத்தாலும் அது தீப்பந்தமாகத் தொடர்ந்துவிடும். அதை களைந்து எரிந்து பற்றற்ற செயல்களால் உள்ளில் இருக்கும் சிவனை அறிந்து ஆன்மா விடுதலை அடைவதே சிவ தத்துவத்தின் சாரம்.

நல்வினை தீவினை ஆகிய இரண்டிலும் பற்று அற்று இருந்தால் மட்டுமே இந்த இருவினையால் ஏற்படும் கர்மா அழியும். அப்போது இறைவனின் அருள் சக்தி ஆன்மாவின் மீது பதியும். இதுவே சத்திபாதம் என்கிறது சைவ மரபு. சத்தி நிபாதம் பெறுவதற்காக‌  இருவினையை இறைவனிடமே ஒப்புவித்துவிட வேண்டும். அப்போதுதான் பதி ஞானத்தை அடைய முடியும்.

அற்புதக் கூத்தில் ஒரு பாடல்

சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழுந்து நஇரண்டு
ஒத்த ஆனந்தம் ஒரு நடமாமே


இன்புறு நிலை எல்லாவற்றிலும் சத்தியின் கலப்பு உள்ளது

சீவர்களின் ஆனந்தம் அடையத் தோன்றும் சகல வடிவமும் சத்தியின் வடிவமே ஆகும். சீவனது அறிவில் சத்தாக சித்தாகவும் ஆனந்தமாகவும் நிலைபெற்ற ஆனந்தமே உமையம்மையின் திருமேனியாகும். சத்தியினது வடிவு சீவர்களிடத்து விளங்கி, சீவனும் சிவனும் கலப்பதில் உண்டாகும் ஆனந்தமே ஒரு நடனமாகும்.

சிவம் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. சீவன் சிவத்தை விரும்பி அதில் திளைப்பதில் சீவனும் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் ஆகிறது. சீவன் முற்றிலும் சத்து சித்து ஆனந்தம் ஆகிவிடில் சிவனே சீவனுக்குச் சத்தியாகிவிடும். அப்போது இரண்டும் ஒத்தநிலை அமைகிறது. சீவனும் சிவனும் ஒத்த நிலையில் விளையும் ஆனந்தமே அற்புத நடனமாகும்.
  
அனுதினமும் நொடி தோறும் சுவாசமே சிவனாக இருக்கும் நிலை தான் உண்மையான ஆன்மிக நிலை. ஓம் நமசிவாய என்ற நாமம் இயல்பாகவே உள்ளுள் உறைந்திருக்க வேண்டும். நமசிவாயா என்ற நாமத்தின் விரிவாக்கம் 

துடு - சி
வீசு கரம் - வா
அபயகரம் - ய‌
அங்கி எனப்படும் நெருப்பு - ந‌
மிதிக்கப்படும் முயலகன் - ம‌

உலக வாழ்க்கையில் வாழும் மனிதர்கள்  இல்லறத்தில் இருந்து கொண்டே விலகி இறைவனை உணர வேண்டும். அதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும்.

மனதில் ஒலிக்கும் ஓம் என்ற பிரணவ ஓசையை உணர்ந்து அதனை சிவத்தின் திரு நடன ஒலியாக உணர்ந்து அதனுடன் ஒன்றி இருக்க வேண்டும். சிவனையும் அவன் அருளையும் மட்டுமே நினைத்திருக்க ஆன்மா வயப்படும். வேற்று எண்ணங்கள் உலக மாயைகள் நீங்கி இறைவனை மட்டுமே எண்ணும் போது இறை உணர்வு இயல்பாக நமக்குள் உறைந்துவிடும். நம் இயல்பிலேயே சிவனை அடையும் கருவிகல் நமக்குள் இருக்கிறது. அக்கருவிகளைக் கொண்டு முயற்சி செய்தால் இறைவழி காட்டும். 

சிவனை அறிதலே வாழ்வின் ஒட்டுமொத்த தேடலின் பயன். அவனை உணர்தலே இன்பம். சிவத்துக்குரிய எல்லைகளை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. ஆன்மாவால் சொற்களால் புரிந்து கொள்ளவே முடியாது. 

சிவ தாண்டவங்கள் 108 உள்ளன. அதில் பன்னிரு தாண்டவங்கள் சிறப்பானவை. அனைவரும் அறிய வேண்டிய அற்புத பொக்கிஷம் அவை.

ஆனந்த தாண்டவம்

சந்தியா தாண்டவம்

சிருங்கார தாண்டவம்

திரிபுர தாண்டவம்

ஊர்த்துவ தாண்டவம்

முனித் தாண்டவம்

சம்ஹார தாண்டவம்

உக்ர தாண்டவம்

பூத தாண்டவம்

பிரளய தாண்டவம்

புஜங்க தாண்டவம்

சுத்த தாண்டவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com