ஃபாலன் ஏஞ்சல்ஸ் - இயக்குனர் வாங் கார் வொய்

இரண்டு வெவ்வேறு கதைகளை ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்து அழகியலுடன் சுவாரஸ்யமாக
ஃபாலன் ஏஞ்சல்ஸ் - இயக்குனர் வாங் கார் வொய்


இரண்டு வெவ்வேறு கதைகளை ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்து அழகியலுடன் சுவாரஸ்யமாக அதிவிரைவான காட்சியமைத்து இறுதியில் ஒரு புள்ளியில் அக்கதைகளை இணைக்கிறார் இயக்குனர் வாங் கார் வய். 

முதல் கதை – 

காதலும், தனிமையும், விரகமும், வன்முறையுமான இக்கதை நாயகி போதை மருந்து கடத்துதல், கொலை, கொள்ளைகளை நிகழ்த்தும் அப்பகுதியின் அதிரடியான பெண். அந்த அழகான கிரிமினல் பெண்ணின் பெயர் மிச்சேல் ரீஸ். தன் தொழில் பார்ட்னருடனான கருத்து வேற்றுமையினால் அவனை விட்டுப் பிரிகிறாள். ஆனால் அவனுடனான உடல் நெருக்கத்தை மறக்க முடியாமல் இரவு நேரங்களில் மிகவும் துயரடைகிறாள். அவன் நினைவின் வலி தாங்க இயலாமல் கண்ணீர் வழியும் விழிகளால் மீண்டும் எங்காவது சந்திப்போமா என ஏங்குகிறாள். அவளுடைய முரட்டுத்தனமான ஈகோ தொலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ளாமல் தடுக்கிறது. அவனும் அவளை விட்டுப் பிரிந்து வேறொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் பஸ்ஸில் பழைய நண்பனை சந்திக்கிறான். அவன் ஒரு விபத்து காப்பீட்டு ஏஜெண்ட். தன்னுடைய திருமண அழைப்பிதழை அவனுக்குத் தருகிறான். தேதியை மனதில் குறித்துக்கொண்ட அவன் அந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறான்.

புதிய ஊரின் தெருக்கள் அவனுள் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. நிழல் உலகின் சந்து பொந்துக்களை அறிந்து கொள்கிறான். ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்த பெண் ஒருத்தியின் மீது ஈர்க்கப்பட்டு அவளுடன் அவள் வீட்டிற்கு சென்று விடுகிறான். இவனைக் கண்டதும் காதல் வசப்பட்டுவிட்ட அப்பெண் அவனை தன் அறைக்கு அழைத்துச் சென்று அவளுடனே தங்கச் சொல்கிறாள். ரீஸ் உடனான பிரிவுத் துயரை மறக்க மதுவையும் அந்த புதிய மங்கையும் அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால் மனத்தின் ஓரத்தில் பழைய நினைவுகள் உறங்க விடாமல் செய்கின்றன. அவள் என்றேனும் தன்னை தேடி வருவாள் என்ற நம்பிக்கையில் அவளுக்காக பாடல் எண் 1818 தேர்ந்தெடுத்து மறைமுக குறிப்பொன்றை அந்த ஹோட்டலில் ஜுக் பாக்ஸில் அவளுக்காக விட்டுச் செல்கிறான். என்னை மறந்துவிடு என்பதாய் தொடங்கும் அப்பாடலை சில நாட்கள் கழித்து அந்த ஹோட்டலுக்கு வந்த ரீஸ் கேட்கிறாள். அவன் அங்குதான் இருக்கிறான் என்பதை அறிந்து பரபரப்பு அடைகிறாள். அந்த ஊரில் தனக்குரிய ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கி அவனைத் தேட ஆரம்பிக்கிறாள்.

மழை நாளொன்றில் அவன் வீட்டைக் கண்டுபிடித்து மாடியில் அவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் புதிய காதலி கீழே இருந்து அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்க முடியாமல் ஆத்திரத்துடன் மன அமைதியின்றி எட்டிப் பார்க்க முயல்கிறாள். அவனின் புதிய காதலைப் பற்றித் தெரிந்து கொண்ட ரீஸ் வேலை இருக்கிறது பிறகு சந்திக்கலாம் என விடைப்பெற்று சென்றுவிடுகிறாள். மீண்டும் ஊருக்கே கிளம்ப முடிவெடுக்கிறாள். அவனின் நிலை மிகவும் பரிதாபமாகிவிட்ட்து. ரீஸ்தான் அவன் மனதிற்கு உகந்தவள், உடலுக்கான இப்புதிய பெண்ணிடம் அவன் மனம் லயிக்கவில்லை. மழையில் நனைந்தபடியே புதியவளை தவிக்கவிட்டு விட்டு ரீஸைத் தேடிக் கிளம்புகிறாள். அவளும் கிடைக்காமல் இவளும் நிலைக்காமல் அவன் தனிமையில் விடப்படுவதாக என்பதாய் இக்கதை முடியாமல் முடிகிறது.

இரண்டாவது கதை - 

ஹோ அழகான இளைஞன். அவனால் சரியாக பேச முடியாது. எக்ஸ்பைரி தேதி முடிந்த அன்னாசி பழக்கூழ் அடைத்த டின்களை வாங்கி சாப்பிட்டதால் அவனுக்கு பேசும் திறன் பறிபோனது. வயோதிகரான தந்தையுடன் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தான். (இந்த கெஸ்ட் ஹவுசில்தான் பார்ட்னரைத் தேடி வந்த ரீஸ் தங்குகிறாள்). ஹோவிற்கு மற்றொரு வேலையும் உண்டு. இரவு நேரத்தில் கடைகள் எல்லாம் மூடப்பட்ட பின் ஏதோ ஒரு கடையை உடைத்துத் திறந்து அங்குள்ள பொருட்களை விற்க ஆரம்பித்துவிடுவான். அதுவும் ஏமாந்த கஸ்டமர் கிடைத்துவிட்டால் போதும் அவர்களை அரட்டியும் மிரட்டியும் அடம்பிடித்து பொருட்களை வாங்கச் செய்வான். விளையாட்டுத்தனங்கள் நிறைந்த அவனுடைய வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். ஏதேச்சையாக டெலிபோன் பூத்தில் சந்தித்த அப்பெண் காதல் தோல்வி அடைந்தவள் என்பதை அறிந்து அவளுடன் சில நாட்கள் ஆறுதல் வார்த்தைகள் பேசியும், அவளின் கோபத்தை போக்க வழிகள் சொல்லியும் அவளுடன் தன் பைக்கில் சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் அவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரு நாள் அவனை விட்டுப் பிரிந்தாள்.

குறுகிய காலமாக பழகியவள் ஆயினும் அவள் மீது மிகுந்த காதலாக இருந்தவனுக்கு அவளின் செய்கை வருத்தம் அளித்தது. இந்நிலையில் அவனுடைய ஒரே உறவான தந்தை வேறு இறந்துவிட, மீளாத் துயரில் வீழ்கிறான் ஹோ. அர்த்தமற்ற வாழ்க்கையில் இனி செய்வது என திகைத்து அதிவிரைவாக தன் பைக்கை ஓட்டிச் செல்கிறான் அப்போது காதலுடனான பிரிவிலும் அவனின் துரோகத்தாலும் மனம் உடைந்த ரீஸ் அவனிடம் லிப்ட் கேட்கிறாள். ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்களாததால் இருவரும் ஒன்றாக நெடிய சாலையில் ஒன்றிணைகிறார்கள். அவர்கள் இருவரும் அப்படியே பிரிந்து போகலாம், அல்லது அவர்களுக்குள் ஓடும் மென்சோகம் வெளிப்பட்டு இருவரும் காதலிக்கவும் தொடங்கலாம் எனும் அனுமானங்களுடன் நிறைவடைகிறது இத்திரைப்படம். இந்தப் பாடல் வரிகளையும் நினைவிலிருந்து மீட்டெடுத்துச் சென்றது.

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே....

Wong Kar Wai - குறிப்புகள்

1958-ல் சீனாவில் ஷங்காய் நகரில் பிறந்தார்.

திரைப்படங்களுக்கு கதையாசிரியராக தன் திரையுலக வாழ்வை தொடங்கி, கதை, ஒளிப்பதிவு மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளித்து காவியத்தன்மையுடைய கவிதையைப் போல திரையோவியத்தை போல போதையேற்றும் இசையின் சுழற்சிப் போல தன் திரைப்படங்களை உருவாக்குபவர் இவர்.

கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை பெற்றிருக்கும் வொங் கார் வய் ஹாங்காங்கின் மிக முக்கியமான சம கால இயக்குனராவார். படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வரை கதையை தீர்மானிப்பதில்லை இவர். 1995-ம் ஆண்டில் இவர் இயக்கியிருக்கும் ஃபாலன் ஏஞ்சல்ஸ் திரைக்கதையில் சில பரிசோதனை முயற்சிகள் செய்திருக்கிறார்

இவர் இயக்கியிருக்கும் படங்கள் முக்கியமான திரைப்படங்கள் சில 2046, E4ros, Ashes of Time, As Tears Go By, Days of Being Wild, In the Mood For Love, Chungking Express, My Blueberry Nights, The Grand Master 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com