ஏன் மேஜை கட்டிலாக இருக்கக் கூடாது?

எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஜெர்மனிய எழுத்தாளர் பீட்டர் பிஷெல்லின் மேஜை
ஏன் மேஜை கட்டிலாக இருக்கக் கூடாது?

எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஜெர்மனிய எழுத்தாளர் பீட்டர் பிஷெல்லின் மேஜை மேஜைதான் என்ற சிறுகதையும் ஒன்று. உண்மையில் இது மிகவும் வினோதமான ஒரு கதை. இந்த கதையை தமிழில் மொழிப்பெயர்த்துள்ள கவிஞர் சுகுமாரன் கூட தனது முன்னுரையில் இது விநோதமாக பட்டதால் மொழிப்பெயர்த்தேன் என்று எழுதுயுள்ளார்.  இக்கதை லயோலா எனும் பெரும் பாம்பின் கதை எனும் தொகுப்பில் உள்ளது.

தன் சொந்தபந்தங்களை இழந்து தனிமையில் வாழும் ஒரு முதியவரை பற்றிய கதை இது. அந்த முதியவர் ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறார். தினமும் உறங்குவதும், எழுந்து சற்று உலா போவதும், பின் மீண்டும் வந்து கட்டிலில் வீழ்வதுமாக தனது நாட்களை நகர்த்தும் முதியவருக்கு அந்த வாழ்க்கை சலித்து விடுகிறது. நின்று பேசக்கூட நிமிட நேரம் செலவழிக்காத மனிதர்களை நினைத்து அவரும் மிகவும் வருந்துகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு நாள் திடீரென்று நாள் முழுவதும் வானம்  இருட்டிக்கொண்டு நிற்கிறது. மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று அந்த சூழலை ரசிக்கின்றனர்.

இந்த நிகழ்வால் முதியவரும் மகிழ்கிறார். அவரை யாரும் கண்ணெடுத்தும் பார்க்கவில்லையென்றாலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் பார்த்து நேசத்துடன் சிரிக்கிறார். பின் தன் அறையை நெருங்கி அதன் கதவை திறந்து பார்ப்பவருக்கு அதிர்ச்சி. அந்த அறையில் எதுவும் மாறவில்லை. மேஜை மேஜையாகவே இருக்கிறது. கடிகாரம் கடிகாரமாகவே இருக்கிறது, கட்டில் கட்டிலாகவே இருக்கிறது. மீண்டும் முதியவர் சோர்ந்து போகிறார். ஏன் தனக்கு மட்டும் எதுவும் மாறவில்லை என்று வருந்துகிறார். பிறகு ஏன் கட்டில் கடிகாரமாக இருக்கக்கூடாது, மேஜை ஏன் கட்டிலாக இருக்கக் கூடாது என்று எண்ணி அப்படியே அவைகளுக்குப்  பெயர் மாற்றம் செய்து விடுகிறார்.

அன்று முதல் அவருக்கு மேஜைதான் கட்டில், கட்டில்தான் கடிகாரம். இப்படி அவர் அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு பெயர்கள். அதை நினைவில் நிறுத்திக் கொள்ள மனனம் செய்து சிறப்பு பயிற்சியும் பெறுகிறார். இத்தகைய செயல் அவருக்கு மிகவும் புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவருடைய கண்டுபிடிப்புச் சொற்கள் அவருக்கே ஒரு புது மொழியாகவும் மாறிவிடுகின்றது. ஆம் அது அவருக்கு மட்டுமே புரியும் மொழி. அதன் பிறகு அவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது யாரேனும் சாலையை சாலை என்றால் அவருக்கு சிரிப்பு வந்தது. அவர்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை, அவர்களாலும் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை.

உண்மையில் இது வேடிக்கை கதை அல்ல. ஒரு மனிதன் தனது வாழ்நாளை முழுமையாக அனுபவித்துவிட்டு, வயதாகி தளர்ந்துவிட்ட பிறகு அவனது மனம் மீண்டும் ஒரு குழந்தையாவே மாறிவிடுகின்றது. அவர் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார். மிச்சமிருக்கும் தனது ஒவ்வொரு கணத்தையும் அவர் சந்தோஷமாக வாழவே விரும்புகிறார். மனித கூட்டத்தில் தான் எதிர்பார்க்கும் மகிழ்வை தேடி அலைகிறார். பெரும்பாலும் அது அவனுக்கு கிடைப்பதில்லை.

இந்தக் கதையில் வரும் முதியவர் தனக்கான அந்த மகிழ்வை தானே உருவாக்கிக் கொள்கிறார். அவர் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார். இந்தக் கதையை முதல் முறையாக வாசித்தபோது அப்படியொன்றும் எனக்கு சிறப்பாக தோன்றவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் வாசித்தபோதுதான், இது மிக சிறந்த கதைகளுள் ஒன்று என எனக்குப்பட்டது அதன் பின் மிகவும் பிடித்த கதையானது இக்கதை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com