3 வருடத்தில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட 100 குற்றவாளிகளைச் சந்தித்த பெண்!

வெளிநாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு முயற்சிக்கும் இவர், ஆய்வுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 100 குற்றவாளிகளை பேட்டி எடுத்துள்ளார்.
3 வருடத்தில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட 100 குற்றவாளிகளைச் சந்தித்த பெண்!

கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட தண்டனை கைதிகளை நேர்காணல் செய்ய முதன்முதலாய் மதுமித்தா பாண்டே திகார் சிறைக்கு சென்ற போது அவருடைய வயது 22. வெளிநாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் முனைவர் பட்டத்திற்கு முயற்சிக்கும் இவர், ஆய்வுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 100 குற்றவாளிகளை பேட்டி எடுத்துள்ளார்.

2012-ல் இந்தியாவையே பதர வைத்த ஒன்று தில்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு. நாட்டின் தலைநகரத்தில் இரவு தன் ஆண் நண்பனுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த ஒரு பெண் ஓடும் பெருந்தில் கற்பழிக்கப்பட்டு, சுய நினைவு இல்லாத நிலையில் ஆடைகள் ஏதும் இல்லாமல் சாலையில் வீசப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தேசிய குற்றப் பிரிவின் அறிக்கையின்படி 34,651 பெண்கள் 2015-ல் கற்பழிக்கப் பட்டுள்ளனர். இதுவே சமிபத்திய ஆண்டுகளில் பதிவான மிக அதிகமான கற்பழிப்பு புகார்கள் ஆகும்.

நிர்பயா வழக்கு இந்தியர்கள் பலரை தெருக்களில் இறங்கி போராட வைத்தது. ஜி-20 மாநாட்டில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது, சவுதி அரேபியாவைவிட மோசமான நிலையில் ஆண் பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண் வாழ இயலாத நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. 

தில்லியை சேர்ந்தவரான மதுமித்தா இந்த சம்பவத்தின் போது இங்கிலாந்தில் ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பை படித்துக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் வெடித்ததால் தேசிய செய்தி ஊடகங்களில் கற்பழிப்பு குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. தான் வசித்த தில்லியை ஊடகங்களில் வெறு ஒரு புதிய பரிமானத்தில் பார்த்த மதுமித்தா அதிர்ந்து போனார். “ஏன் இந்த ஆண்கள் இவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள்? இதயமுள்ள எந்த மனிதனாவது இப்படி செய்வனா? இது மிருகத்தன்மையையும் தாண்டி அரக்கத் தன்மையானது இல்லையா?” என்றெல்லாம் இவரது மனதில் கெள்விகள் எழுந்துள்ளது.

“ஆண்களை இவ்வாறு மனித நேயம் இல்லாமல் நடந்துக்கொள்ள செய்வது எது? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. இதற்கான பதில்களை அவர்களிடமே கேட்க முடிவு செய்தேன், அதன் காரணமாக திகார் சிறைச்சாலைக்கே சென்று சிலரிடம் இந்த கேள்விகளை எழுப்பினேன்” என்கிறார் மதுமித்தா பாண்டே. கற்பழிப்பு வழக்குகளில் சிக்கி தண்டனை அனுபவிப்பவர்களில் வெகு சிலரே பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார்கள், மற்றும் சிலர் உயர் நிலை வகுப்பு வரை, பெரும்பாலானோர் மூன்றாவது அல்லது நான்காம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள். “நான் ஆராய்ச்சியை துவங்குவதற்கு முன்பு இந்த ஆண்களை அரக்கர்கள் என்று நினைத்தேன், ஆனல் அவர்களிடம் பேசும்போதுதான் தெரிந்தது அவர்கள் அசாதாரணமானவர்கள் அல்ல உண்மையில் அவர்களும் சாதாரண மனிதர்களே என்று.”

அதிகமான கல்வியறிவு உள்ள இந்திய குடும்பங்களிலும் இன்றும் பெண்களை பாரம்பரியம் என்கிற பெயரில் கட்டுப்பாடுத்திதான் வைக்கப்பட்டிருக்கிறார்கள், என்று பாண்டே கூறுகிறார். “பல பெண்கள் தங்கள் கனவனின் பெயரைக்கூட சொல்ல மாட்டார்கள், ஒரு பரிசோதனைக்காக நான் என் சில நண்பர்களை தொடர்புக்கொண்டு உங்கள் அம்மா உங்களது அப்பாவை எப்படி அழைப்பார்கள் என்று கேட்டேன், அதற்கு அவர்கள் கூறிய பதில்கள், ‘என்னங்க’, ‘ஏங்க’, ‘....(பிள்ளைகளின் பெயரை சொல்லி) அப்பா’ என்று.

“ஆண்கள் தவறானவற்றை இதுதான் ஆண்மை என்று கற்றுக் கொள்கிறார்கள், அதே வீட்டில் உள்ள பெண்கள் ஆணுக்கு அடங்கிப் போவதே பெண்மை என்று கற்றுக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு, இவையே கற்பழிப்புகளுக்கு வழி வகுக்கிறது. இந்த கற்பழிப்புவாதிகளை வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து வந்தவர்களை போல் நாம் பார்க்கிறோம் ஆனால் அவர்களும் இந்த சமூதாயத்தில் ஒரு பகுதியே என்பதை மறந்துவிடுகிறோம்” என்று மதுமித்தா தெரிவுத்துள்ளார்.

“இத்தனை நபர்களுடன் பேசிய அனுபவத்தில் சொல்கிறேன், இவர்களில் பலருக்கு எது கற்பழிப்பு என்றே தெரியவில்லை, இந்த மிருக தனத்தைதான் ஆண்மை என்று நம் சமூகம் இவர்களுக்கு கற்று தந்துள்ளது”. பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படாத பாலியல் கல்வி, மேலும் பாலியல் ரீதியான வார்த்தைகளை கூட தங்கள் குழந்தைகள் பேசாமல் பார்த்துக்கொள்ளும் பெற்றோர்கள், இவைதான் இந்த சமூதாயத்தை பாலியல் ரீதியான அத்துமீறலுக்கு இட்டுச்செல்கிறது. 

“நேர்காண்லின் போது அநேக ஆண்கள் சாக்குகள் பல கூறினார்கள் அல்லது தங்களது செயல்களை நியாயப்படுத்த முயற்சித்தனர், இன்னும் சிலர் பாலியல் பலாத்காரமே செய்யவில்லை என்று மறுத்தனர், நாங்கள் தற்போது மனந்திருந்திவிட்டோம் என்று மூன்று அல்லது நான்கு குற்றவாளிகளே தெரிவித்தனர், மற்றவர்கள் அனைவரும் தங்களது செயல்களை நியாயப்படுத்தி, நடுநிலைப்படுத்தி அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் நடவடிக்கையில் குற்றம் கூறினர்” என்கிறார் பாண்டே. 

குறிப்பாக 49 வயதான அவர்களில் ஒருவர் “ஆம் நான் அவளை கற்பழித்தேன், அவளது வாழ்க்கையை பாழாக்கினேன், இனிமேல் அவள் கன்னியல்ல, அவளை யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள், என் தண்டனை காலம் முடிந்து நான் வெளியே சென்றதும் அவள் என்னை ஏற்று கொண்டால் அவளை திருமணம் செய்துக் கொள்வேன்” என்று கூறியது மதுமித்தாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பாண்டே தனது ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் சில மாதங்களில் வெளியிடுவார், “பலரும் நினைக்கிறார்கள் இதோ மற்றுமொரு பெண்ணியவாதி, இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பெண் கண்டிப்பாக ஆண்களை தவறாகத்தான் பிரதிபலிப்பாள் என்று, என்னை பொருத்தவரை அவர்களது கருத்துக்கள் நிச்சயம் மாற்றப்படும் என்பதே” என்று மதுமித்தா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com