உங்க ஹெல்மெட்டைக் கடைசியாக எப்போ கிளீன் பண்ணீங்க பாஸ்?!

ஆயிரக் கணக்கில் கொட்டி அழுது அழகான கச்சிதமான ஹெல்மெட்டை வாங்கி வைத்து விட்டு, அதை குறைந்த பட்சம் மாதமொருமுறையாவது சுத்தம் செய்து பளிச்சென்று வைத்துக் கொள்ள முயற்சி செய்யாவிட்டால் எப்படி?
உங்க ஹெல்மெட்டைக் கடைசியாக எப்போ கிளீன் பண்ணீங்க பாஸ்?!

ஸ்டார்ட் மியூசிக்... இது ஹெல்மெட் கிளீனிங் வாரம்...

ஹெல்மெட் அணிவது, அணியாமலிருப்பது என்பதைத் தாண்டி இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா? ஹெல்மெட் வாங்கி வருஷங்கள் பலவான பின்னும் அதை குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு வராமலே இருப்பது தான். எங்கே மனதாறச் சொல்லுங்கள் பார்ப்போம். இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் எத்தனை பேர் முறையாக அவரவர் ஹெல்மெட்டுகளை மாதம் ஒருமுறையேனும் சுத்தம் செய்து பயன்படுத்தி வருகிறீர்கள் என? உண்மையில் அப்படிப்பட்டவர்களாக சொற்ப மனிதர்களே இருப்பார்கள்.

ஹெல்மெட் சுத்தம் செய்வது அப்படி ஒன்றும் பிரமாதமான காரியமெல்லாம் இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் அது எளிதான வேலை தான்.

ஆயிரக் கணக்கில் கொட்டி அழுது அழகான கச்சிதமான ஹெல்மெட்டை வாங்கி வைத்து விட்டு, அதை குறைந்த பட்சம் மாதமொருமுறையாவது சுத்தம் செய்து பளிச்சென்று வைத்துக் கொள்ள முயற்சி செய்யாவிட்டால் எப்படி?

ஹெல்மெட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாக நான்கே நான்கு பகுதிகளில் தான். அவை முறையே;

  1. ஹெல்மெட் விஸர் என்று குறிப்பிடப் படக்கூடிய கண்களைப் பாதுகாக்கும் ஃபைபர் கண்ணாடிப் பகுதி 
  2. தலையைப் பாதுகாக்கவென வடிவமைக்கப்பட்ட உட்புற ஸ்பாஞ்ச் பகுதி,
  3. விஸர் பகுதியையும் தாடைப் பகுதி ஹெல்மெட்டையும் இணைக்கும் இறுக்கமான ரப்பர் சேஃப்டி ரிம்கள். இந்த சேஃப்டி ரிம்கள் இல்லாவிட்டால் ஹெல்மெட்டின் உள்ளே புகை, தூசு எளிதாக உள்ளே நுழையும் வாய்ப்பு உண்டு.
  4. ஹெல்மெட்டின் வெளிப்புறப் பகுதி.

இந்த நான்கு பகுதிகளையும் முறையாகச் சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்துக் கொண்டால் தரமான பிராண்டட் ஹெல்மெட்டுக்க்களின் நீடித்த உழைப்புக்கு முழு உத்திரவாதமுண்டு. 

ஹெல்மெட் சுத்தம் செய்யத் தேவையான பொருட்கள்:

  • மென்மையான ஷாம்பூ, அது பேபி ஷாம்பூவாக இருந்தால் நலம். சிலர் டிஸ்வாஷர் கூட பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும். 
  • மென்மையான ஸ்கிரப்பர் (ஹெல்மெட்டில் நிச்சயமாக கீறல்கள் உண்டாகக் கூடாது)
  • மெலிதான ஸ்பாஞ்ச்
  • காட்டன் துணி.

முதலில் விஸர் பகுதியை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைப் பற்றிக் காண்போம்...

சில ஹெல்மெட்டுகளில் விஸர் பகுதி, புகை மற்றும் பனியைக் கூட ஊடுருவும் தன்மையுடன் விசேஷ ஃபைபர் கண்ணாடி கொண்டு தயாரிக்கப் பட்டிருக்கும். அப்படிப்பட்ட பிரத்யேக விஸர்கள் உங்கள் ஹெல்மெட்டில் பொருத்தப் பட்டிருந்தால், ஹெல்மெட் சுத்தம் செய்யும் போது, முதலில் விஸர் பகுதியை கழற்றித் தனியாக மென்மையான ஷாம்பூ கொண்டு ஸ்பாஞ்சால் அவற்றைத் துடைத்துக் காய வைத்து எடுக்கலாம். இல்லை உங்களது ஹெல்மெட்டில் சாதாரண ஃபைபர் கண்ணாடி தான் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட அவற்றையும் கூட ஸ்கிரப்பர் கொண்டு அழுத்தித் தேய்த்து கழுவாமல் மென்மையாக ஸ்பாஞ்ச் மூலமாகவே சுத்தம் செய்ய வேண்டும். விஸர் பகுதியில் அதிக கீறல்கள் இல்லாமல் இருப்பது ஹெல்மெட்டுகளின் அழகு மாத்திரமல்ல, பயணத்தின் போது மேடு, பள்ளங்களைத் துல்லியமாகக் கணிக்க அவை உதவும் என்பதற்காகவும் தான்.

ஹெல்மெட்டின் உட்புற ஸ்பாஞ்ச் பகுதி...

சிலர் விஸர் பகுதியை கழற்றி விட்டு ஹெல்மெட்டை அப்படியே பேசினில் நிறைந்திருக்கும் மென்மையான ஷாம்பூ கலந்த நீரில் 10 நிமிடங்களேனும் ஊற வைத்து விட்டு, பிறகே... மென்மையான ஸ்கிரப்பர் மூலமாகச் சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி செய்வதில் தவறேதும் இல்லை. என்றாலும் அப்படி முழுவதுமாக நீரில் முக்கியெடுத்துச் சுத்தம் செய்கையில் ஹெல்மெட்டுகள் நன்றாக காய்ந்து விட்டதா? என்பதைச் சோதித்த பிறகே அவற்றைப் பயன்படுத்த தொடங்க வேண்டும். ஏனெனில் அவை சரியாகக் காயாத போது உட்புற ஸ்பாஞ்ச் பகுதியிலிருக்கும் ஈரத்தன்மையால் அதில் காயாமலிருக்கும் ஷாம்பூ, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வண்டி ஓட்டிச் செல்கையில் வியர்வையில் கரைந்து தலைமுடியை பிசுபிசுக்கச் செய்து முடி கொட்டுவதற்கான காரணங்களில் ஒன்றாகி விடக்கூடும். முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துச் சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுமே ஷாம்பூ நுரை கொண்டு உட்புற ஸ்பாஞ்ச் பகுதியை அழுத்தித் துடைத்து சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி, ஒருமுறைக்கு இருமுறை ஸ்பாஞ்ச் பகுதி முற்றிலுமாகக் காய்ந்து விட்டதா? இல்லையா? என்பதை சோதித்த பிறகு மட்டுமே அந்த ஹெல்மெட்டை அணிய வேண்டும்.

ரப்பர் சேஃப்டி ரிம்கள்...

ஹெல்மெட் விஸர் பகுதியுடன் இணையுமிடத்தில், கார்க் கதவுகளில் பொருத்தப்பட்டிருப்பதைப் போல அழுத்தமான ரப்பர் சேஃப்டி ரிம்கள் பொருத்தப் பட்டிருக்கும். இவை, நாம் ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்தும் தன்மைக்கேற்ப நாளடைவில் இற்று விழுந்து விடும். இந்த ரப்பர் ரிம்கள் தான் புகை, தூசு, நாற்றம் முதலியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாப்பவை. இவை இல்லாவிட்டால் அந்த மெல்லிய இடைவெளியில் எளிதில் புகை ஹெல்மெட்டின் உள்ளெ நுழைந்து விடக்கூடும். ஹெல்மெட்டைச் சுத்தம் செய்யும் போது இந்த ரிம்களை கவனமாகக் கையாள வேண்டும். இல்லா விட்டால் அவை லூஸாகி கழன்று விழுந்து விடக் கூடும்.

ஹெல்மெட்டின் வெளிப்புறப்பகுதி...

ஹெல்மெட்டில் சுத்தம் செய்ய எளிதான பகுதி என்றால் அது இது தான். வெளிப்புறப் பகுதி கடினமானது தானே என்று ஸ்கிரப்பர் கொண்டு அழுத்தித் தேய்த்துக் கழுவி அதில் கீறல்கள் விழ வைத்து விடத் தேவையில்லை. மென்மையான ஸ்கிரப்பர் பயன்படுத்தி அழுத்தித் தேய்த்தாலே போதும். வெளிப்பகுதி மீண்டும் பழைய கிளாஸி லுக்குடன் நமக்குத் திரும்பக் கிடைத்து விடும்.

ஹெல்மெட்டைச் சுத்தம் செய்வதா? அடப்போங்க சார் வேற வேலை இல்லை! என்று சொல்வீர்களானால் கொஞ்சம் பொறுமையாக கீழுள்ளதையும் படித்து விடுங்கள்...

ஹெல்மெட்டை எதற்கு சுத்தம் செய்ய வேண்டுமென்றால்;

ஹெல்மெட் நம் தலையை காப்பதற்காக மட்டுமே நாம் அணிவதில்லை. மழைக்காலங்களில், இருளில் வாகனத்தில் செல்லும் போது, காற்றசைவில் பூச்சிகள் பறந்து வந்து நம் கண்களையும், மூக்கையும் பதம் பார்க்காமலிருக்கவும் ஹெல்மெட் தான் உதவுகிறது. அது மட்டுமல்ல குறுஞ்செடிகள் மற்றும் சிறு மரக்கிளைகள் தலையைப் பதம் பார்க்காமலிருக்கச் செய்வதோடு, சரளைக் கல் சாலையில் வாகனம் செல்கையில் தெறித்து நம் கண்களை நோக்கி பாய்ந்து வரும் பொடிக் கற்களையும் தடுத்து நிறுத்தி நம் கண்களைக் காக்கவும் ஹெல்மெட்டே உதவுகிறது. அதோடு மட்டுமல்ல, சென்னை போன்ற பெருநகர வாகன நெரிசலில் யுகங்களென நீளும் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க நேர்கையில் சக வாகன ஓட்டிகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பின் அவை ஒட்டி நிற்கும் பிற வாகன ஓட்டிகளுக்குப் பரவாமல் தடுப்பதிலும் ஹெல்மெட்டுகள் மட்டுமே உதவுகின்றன. காற்றில் கலந்திருக்கும் மாசுக்களும், நச்சு வாயுக்களும் நமது சுவாசத்தை மட்டுமல்ல கேஷத்தையும் கூட பாதிக்க வல்லவை. அந்தப் பாதிப்பையும் குறைக்க வல்லவை ஹெல்மெட்டுகளே! இத்தனை அனுகூலங்களை அளிக்க வல்ல ஹெல்மெட்டுகளை நாம் சுத்தம் செய்யாமல் வருடக் கணக்காக அப்படியே அழுக்குடனும், கீறல்களுடனும், பிச்சைப் பாத்திரங்களைப் போல படு திராபையான கோலத்தில் பயன்படுத்தி வந்தோமென்றால் ஹெல்மெட்டுகள் நாளடைவில் நோயுண்டாக்கும் மினி குப்பைக் கிடங்குகளாக மாற வாய்ப்புகளுண்டு.

ஆகவே; ஹெல்மெட்டுகளைச் சுத்தம் செய்து முடித்த பின் அவை நன்றாகக் காய்ந்து விட்டதா? என்று சோதித்து உறுதி செய்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது ஹெல்மெட் சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்... நாளடைவில்... பழக்கதோஷத்தில் அது வாரம் ஒருமுறை என்று மாறினால் பிறகு சட்டைக் காலரைத் தூக்கி விட்டு அல்லத் ஹெல்மெட் விஸரைத் தூக்கி விட்டுக் கொண்டு உங்களது சாமர்த்தியத்தை நீங்களே மெச்சிக் கொள்ளலாம் போங்கள்.

ஹெல்மெட் சுத்தம் செய்யும் போது தவிர்க்க வேண்டியவை...

  • ஹெல்மெட் சுத்தம் செய்கிறேன் என்கிற பெயரில் ஹெல்மெட்டின் உட்புறத்தில் துர்நாற்றத்தைப் போக்க, ஃபோம் ஃப்ரெஷ் ரெஃப்ரஷனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை கோடைகாலங்களில் வியர்வையுடன் கலந்து தலைமுடி உதிர்வுக்கு காரணமாவதோடு, முகத்திலும் கூட முன் நெற்றிப் பகுதியில் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியவை.
  • ஹெல்மெட் சுத்தம் செய்த பின், அது ஈரம் போக நன்றாகக் காய்வதற்கு போதுமான நேரம் அளிக்க வேண்டும். அதாவது விடுமுறை நாட்களில் ஹெல்மெட் சுத்தம் செய்வது நல்லது. ஈரமான ஹெல்மெட்டுகளில் பூஞ்சை பாதிப்பு உண்டாகி, அது பல்வேறு சருமம் மற்றும் உடல்நலக் கோளாறுகள் உருவாகக் காரணமாகி விடும்.
  • ஹெல்மெட்டுகளை எப்போதும் இருளான இடங்களில் வைப்பதை விட சூரிய வெளிச்சம் தாராளமாக ஊடுருவக் கூடிய இடங்களில் வைத்திருப்பதே அவற்றின் நீடித்த உபயோகத்துக்கு நல்லது.

ஹெல்மெட் அணியும் போது மறக்கக் கூடாதவை...

  • ஒவ்வொரு முறை ஹெல்மெட் அணியும் போதும் முடி உதிர்தல் உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பின் ஹெல்மெட் வாங்கும் போதே அவற்றின் உள்ளே அணிவதற்கு காட்டன் அல்லது பனியன் மெட்டீரியல் துணியாலான கேப் ஒன்றையும் சேர்த்து வாங்கிப் பயன்படுத்தலாம்.
  • ஹெல்மெட் சேஃப்டி ரிம்கள் பழுதானால் அவற்றை உடனடியாகச் சரி செய்து கொள்ள வேண்டும்.
  • விபத்தின் போது ஹெல்மெட் சிரசை விட்டு அகலாமல் இருக்க மறக்காமல் ஹெல்மெட் லாக்கை சரியாகப் பொருத்திய பின்பே வாகனத்தை ஓட்டத் தொடங்க வேண்டும்.

கட்டாய ஹெல்மெட் சட்டம்...

கட்டாய ஹெல்மெட் சட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கொண்டு வரப்பட்ட சமீபத்தில் அந்தச் சட்டத்தை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என உயர் நீதிமன்றம் கட்டாய ஹெல்மெட் சட்டத்தின் விதிகளைக் கடுமையான பின் ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அதிலும் கூட வாகனம் ஓட்டிகள் மட்டுமல்லாது, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கூட ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கூட சட்டத்தின் ஷரத்துகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் பெண்களின் ஆட்சேபணைக்குப் பிறகு, அந்த விதி மட்டும் தளர்த்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பில்லியனில் அமர்ந்து செல்லும் போது ஹெல்மெட் அணிவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.  ‘தலைக்கவசம் உயிர்க் கவசம்’ என்று தெரிந்திருந்த போதும் கூட பலருக்கும் ஹெல்மெட் அணிவதில் பெரிதாக விருப்பங்கள் இருப்பதில்லை. அது ஏன் என்றால் ஹெல்மெட் அணிவதால் சிலருக்கு தலைமுடி கொட்டுவது, மூச்சுத்திணறல், நீண்ட தூரம் பயணிக்க நேரும் போது ஹெல்மெட்டின் உட்பகுதியில் தாங்க முடியாத அளவுக்கு முடை நாற்றம், அதனாலான தலைவலி, உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படக் கூடும். இவையெல்லாம் தவிர்க்கக் கூடியவையே என்பதால் அரசு ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என்பதை வலியுறுத்தி தற்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com