தனியார் வேன்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா? 

காலை தொடங்கி மாலை வரை எங்கும், எதிலும் அவசரத்தையும், அதிவேகத்தையும் கடைபிடித்தே பழக்கப்பட்டுப் போன தனியார் வேன் டிரைவர்களின் ஓவர் ஸ்மார்ட்னஸ், சில நேரங்களில் வொர்க் அவுட் ஆகாமல்
தனியார் வேன்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா? 

சென்னை போன்ற பெருநகரங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பள்ளிப்பேருந்துகளையும், வேன்களையும் மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. பல்லாயிரக்கணக்கான பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் வேன்கள், ஆட்டோக்கள், டாடா சுமோ, குவாலிஸ் மாதிரியான கார்கள், ஷேர் ஆட்டோக்கள் உட்பட பல வாகனங்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த வாகனங்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் கிளம்புகின்றன. காலை 7 மணி முதலே, இத்தகைய வாகனங்களின் பெருக்கம் மாநகரச் சாலைகளில் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. 7 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை நீளும் இந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளியைச் சென்றடைவதற்குள் அந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் மட்டுமல்ல அதில் பயணிக்கும் மாணவர்களும் கூட சோர்ந்து தான் போகிறார்கள். 

இந்தக் களேபரத்தில் ஊர் முழுக்க, ஒரு இடம் பாக்கியின்றி எல்லாச் சாலையோரங்களிலும் தோண்டிப் போடப்பட்டிருக்கும் சாலைப் பள்ளங்கள் வேறு வாகன ஓட்டிகளை  அதிகமும் நிம்மதியிழக்கச் செய்வதாக இருக்கின்றன. காலையில் நாம் சாதாரணமாகக் கடந்து வந்த பாதையை மாலையிலோ அல்லது இரவிலோ வீடு திரும்புகையில் அதே விதமாக எதிர்ப்கொள்ள முடிவதில்லை. அங்கே புதிதாக பள்ளம் தோண்டப்பட்டிருக்கலாம். அல்லது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மழைநீர் வடிகால் அல்லது, கழிவு நீர் குழாய்கள் சீரமைப்பு வேலைகளின் உபயங்களில் ஒன்றாக நிலத்தடிக் குழாய்களில் ஏதோ ஒன்று உடைப்பெடுத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டே இருக்க... நாம் தினம் செல்லும் பாதையில் திடீரென முளைத்த குளங்களை தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி விடுகிறோம். 

சில இடங்களில், நாம் வழக்கமாகக் கடக்கும் இடங்கள் தானே என்று நம்பி, சாலைகளைப் போகிறபோக்கில் கடந்து விட முடிவதில்லை. சென்னை அண்ணாசாலையில் அரசுப் பேருந்தை விழத்தட்டி அதிர்ச்சியூட்டிய திடீர் பள்ளம் போல நாம் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனத்துக்குக் கீழே பூமி நெகிழ்ந்து காலை வாரி விட்டு விடும் அபாயம் இன்று சென்னையின் எல்லாச் சாலைகளிலுமே உண்டு. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இங்கு எல்லாச் சாலைகளிலும், தெருக்களிலும், ஓரத்திலோ அல்லது நடுவிலோ மிகப்பெரிய யானைக்குழிகள் தோண்டப்பட்டு, அவை மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைப்பு என்ற பெயர்களில் செப்பனிடப்பட்டு மூடப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதில் நாம் கவனித்தாக வேண்டிய விஷயம், இந்தப் பள்ளங்கள் அனைத்துமே தோண்டப்பட்ட வேகத்தில் அவற்றின் கட்டுமானம் உறுதியாகி விட்டதா? இல்லையா? என்ற புரிதல் இன்றியே கூட பல இடங்களில் மக்கள் புழங்கத் தோதாக உடனடியாக மூடப்பட்டு வருகின்றன.

ஒருவேளை அவற்றின் கட்டுமானங்கள் சரியானது தான் என்றால், அவற்றால் விபத்துகள் ஏதும் இதுவரை நேரிட்டிருக்கக் கூடாது தானே? அது மட்டுமல்ல இதுவரை மூடப்பட்ட சாலைப் பள்ளங்களில் பெரும்பாலானவற்றில் மேன் ஹோல் என்று சொல்லப்படக்கூடிய சாக்கடை சிமெண்ட் மூடிகள் நகரின் பல இடங்களிலும் உடைந்து பழுதான நிலையில் கேட்பாரற்றுத் திறந்து கிடக்கின்றன. அவற்றை பலமுறை சீரமைத்தாலும் கூட வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் அந்த மூடிகள் மேலும் மேலும் உடைந்து சிதறி தினமும் அந்தச் சாலைகளை உபயோகிப்பவர்களுக்குப் பெருத்த தலைவலியாகவே மாறி வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படை காரணங்கள் என்ன? அந்தப் பணிகளை பொறுப்பெடுத்துச் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் தானே முக்கியக் காரணமாக இருக்க முடியும். அவர்களைத்தாண்டி இது பொது மக்களின் குற்றமும் தான். ஏனெனில் சாலைச் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் நாம் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தில் நடத்தப் படுபவை என்று தெரிந்திருந்தும் கூட நாம் அந்தப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற அவற்றுக்குப் போதிய அவகாசம் அளிப்பதே இல்லை. கிஞ்சித்தும் பொறுப்புணர்வே இல்லாமல் நமது தேவைகளை மட்டுமே மனதில் கொண்டு அவசரக் கோலத்தில் பணி முடிந்தும், முடியாமலிருக்கும் சாலைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விடுகிறோம். பிறகு அந்தச் சாலைகளின் தரத்தைப் பற்றிப் பேசுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும்? தரமற்ற சாலைகள் உருவாக்கத்தில் நம்மாலான பங்காக இதை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம். ஒரு பக்கம் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு மறுபக்கம் சாலைகளின் தரம் பற்றியும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம். 

சரி இப்போது மீண்டும் தனியார் பள்ளி வேன்களுக்கு வருவோம்;

‘பள்ளியில்லாத ஊர்களே இருக்கக் கூடாது’ என்ற அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் முதலில் ஆரம்பப் பாடசாலைகள் தொடங்கப் பட்டன. முதலில் திண்ணைப் பள்ளிகளாக இருந்தவை அனைத்தும் காமராஜர் காலத்தில் அரசுப் பள்ளிகளாகவும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளாகவும் மாறின. கிராமத்தின் மக்கள் தொகைப்பெருக்கத்துக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த போது ஆரம்பப் பள்ளி, அரசு நடுநிலைப் பள்ளியாக ஆனது. பின்னர் பேரூர்கள் தோறும் உயர் நிலைப் பள்ளிகள் கொண்டு வரப்பட்டன. நகரங்களில் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. 80 கள் வரை இப்படித்தான் இருந்தது தமிழகப் பள்ளிக்கூடங்களின் நிலை. நகரங்களில் பெரும்பாலும் தனியார் வசத்தில் ஓரிரு ஆண்கள், பெண்கள் மற்றும் இருபாலர் சேர்ந்து பயிலும் பள்ளிகள் இருக்கும், ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கும். மிஞ்சிப் போனால் மாவட்டத் தலைநகரங்களில் கூட அரசு மற்றும் தனியார் பொறுப்பில் ஐந்தாறு பள்ளிகள் மட்டுமே இயக்கப்படும். அன்று தனியாரை விட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

இந்த நிலை மாறி பிற்பாடு நாடார் உறவின் முறை பள்ளிகள், கம்மவார் சங்கப் பள்ளிகள், ரெட்டியார் பள்ளிகள், முதலியார் பள்ளிகள், ஆதி திராவிடர் பள்ளிகள், தேவர் பள்ளிகள், கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பள்ளிகள், இஸ்லாமியப் பள்ளிகள், என மதத்தின் பெயரிலும், ஜாதிகளின் பெயரிலும் உதிரி, உதிரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கடைசியில் இன்று தனி நபர் பெயர்களில் அமைந்த பள்ளிகளில் வந்து நிற்கிறது. அதிலும் எப்படி? ஒரு தெருவுக்கு நான்கைந்து பள்ளிகளாக இப்படி தெருவுக்கு நான்கைந்து பள்ளிகள் இருந்த போதிலும் கூட  பெரும்பாலானோர் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கக் கூடிய பள்ளிகளைக் கூட புறக்கணித்து விட்டு அவரவர் அந்தஸ்துக்குப் பொருத்தமாக நகரின் பிரபலமான டாப் டென் பள்ளிகளில் தான், தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள். இம்மாதிரியான சூழ்நிலைகளில் தூரத்தில் இருக்கும் பள்ளிகளைச் சென்றடைய பெற்றோர் தனியார் வேன்களையும், ஆட்டோக்களையும், கார்களையும் நம்புகிறார்கள். எந்த அளவுக்கு என்றால்... காலையில் வேனில் ஏற்றி விடுவதோடு பெற்றோரின் கடமை முடிந்து விட்டது என்பது வரை... மாலையில் குழந்தைகளைச் சரியான நேரத்தில் வீட்டில் இறக்கி விட வேண்டிய கடமை அந்தந்த வாகன ஓட்டிகளுக்கானது. இந்த எதிர்பார்பிலும், நம்பிக்கையிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தனியார் வேனிலோ, ஆட்டோவிலோ பள்ளி செல்லும் குழந்தைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி  சற்றே வீடு திரும்பத் தாமதமானால் போதும் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டியை அலைபேசியில் ஒருவர் மாற்றி ஒருவர் அழைத்து கேள்விகளால் திணறடிக்கப் பெற்றோர்கள் தயங்குவதே இல்லை. 

  • பெற்றோர்களின் கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிர்பந்தம்.
  • காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டுமாகத் தங்களது பயண நேரத்தை முறைப்படுத்திக் கொள்ளாமல், ஓய்வு ஒழிச்சலின்றி மீந்திருக்கும் எல்லா நேரங்களிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கென தனித்தனியாக ட்ரிப் சவாரி அடித்து சம்பாதிக்க நினைக்கும் சில தனியார் ஓட்டுனர்களின் பேராசை!
  • காலை தொடங்கி மாலை வரை எங்கும், எதிலும் அவசரத்தையும், அதிவேகத்தையும் கடைபிடித்தே பழக்கப்பட்டுப் போன தனியார் வேன் டிரைவர்களின் ஓவர் ஸ்மார்ட்னஸ், சில நேரங்களில் வொர்க் அவுட் ஆகாமல் நேற்றைய சம்பவத்தைப் போல காலை வாரி விட்டு விடுகிறது. நேற்று அயனம்பாக்கத்தில் இருந்து வேலம்மாள் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு அயப்பாக்கத்துக்குச் சென்ற தனியார் பள்ளி வேன் ஒன்று சாலையோரமிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்ததில், அதிலிருந்த மாணவர்களை ஜன்னல்களை உடைத்து மீட்க வேண்டியதாகி விட்டது. (இந்தச் சம்பவத்தில் அதிக சேதங்கள் இல்லை என்ற போதிலும் அதில் பயணித்த மாணவர்களின் மனநிலை மற்றும் அவர்களது பெற்றோர்களின் மனநிலைகளை எண்ணிப் பாருங்கள். பல இடங்களில் இம்மாதிரியான அசம்பாவிதங்களில் உயிரிழந்தவர்கள் பலருண்டு.) 

ஆகவே தனியார் வாகனங்களில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ஒன்றிற்கு பலமுறை தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்ள மட்டும் தவறவே கூடாது. என்பதை நாம் உணர வேண்டும்.

  • அந்த உறுதிப் படுத்துதல் என்பது சம்மந்தப்பட்ட டிரிவரை எரிச்சலூட்டக் கூடியதாகவோ, சோர்வுறச் செய்வதாகவோ இல்லாமல் அவர்களையும் நட்பு ரீதியாக அணுகப் பெற்றோர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • எல்லாப் பெற்றோர்களும் வாரம் ஒருமுறையாவது, குறைந்த பட்சம் வேன் கட்டணம் செலுத்தும் போது மட்டுமாவது தங்களது குழந்தைகளின் பள்ளி வேன் டிரைவரைத் தொடர்பு கொண்டு, வேனில் பயனிக்கையில் பிற மாணவர்களுடன் தங்களது பிள்ளைகளின் அணுகுமுறை பற்றியோ அல்லது நட்புறவு பற்றியோ கேள்வி எழுப்பி சகஜமாகப் பேசிக் கொள்ளத் தயங்கக் கூடாது.
  • பள்ளி வேன் டிரைவர்களும் நம்மைப் போன்ற சக மனிதர்களே தான் என்பதால், அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டிய பொறுப்பும் நம்முடையதாகிறது. சில வேன் டிரைவர்களுக்கு தங்களது வேன் உரிமையாளரைக் காட்டிலும் வாடிக்கையாளரான சில குழந்தைகளின் பெற்றோர் என்றால் தான் அடி வயிற்றில் பயம் உருளத் தொடங்கி விடுமாம். ஏனென்றால் அப்படியொரு டெர்ரர் முகத்தை அவர்கள் டிரைவர்களுக்கென ஸ்பெஷலாக பராமரித்து வருகிறார்களாம்.

முடிவாக ஒரு விஷயம்; ‘மித வேகம் மிக நன்று’ என்பதை நாமுணர்ந்து கொள்வதோடு மட்டுமன்றி டிரைவர்களுக்கும் எப்போதும் உணர்த்தத் தவறாதவர்களாவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com