தஷ்வந்த்! வெறி பிடித்த மிருகங்கள் கொல்லப்பட வேண்டியவையா? கூண்டிலிருந்து திறந்து விடப்பட வேண்டியவையா?

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை ஜாமீனில் வெளியில் விட்டால், அது எப்படி குற்றத்துக்கான தண்டனையாகும்? பழங்கால முறைப்படி முச்சந்தியில் கழுவேற்றப்பட்டாலொழிய இவர்களெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை
தஷ்வந்த்! வெறி பிடித்த மிருகங்கள் கொல்லப்பட வேண்டியவையா? கூண்டிலிருந்து திறந்து விடப்பட வேண்டியவையா?

பட்டப்பகலில் 7 வயதுச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு, அவள் அதை வெளியில் சொன்னால் ஆபத்து என்று கருதி கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி அந்தப் பிஞ்சுக் குழந்தையை கொன்று, டிராவல் பேகில் எடுத்துச் சென்று புறநகர்ப் பகுதியில் எரித்துக் கொல்லும் அளவுக்கு சைக்கோத்தனமான கொலைகாரனான தஷ்வந்தை, எப்படி நீதிமன்றம் இன்று ஜாமீனில் விடுவித்தது? என்று புரியவில்லை. இது முற்றிலும் அநீதியான தீர்ப்பு. மீடியா விழிப்புடன் தான் இருக்கிறது, அதைக் காணும் மக்களும் உயிர்ப்புடன் தான் இருக்கிறார்கள். ஹாசினி கொலை வழக்கில் நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை அத்தனையும் இதுவரை கண்டு கொண்டிருந்த மக்கள் தஷ்வந்தின் குற்றத்தை மறந்து விடவில்லை. மன்னித்து விடவும் இல்லை. அதனால் இத்தகைய தீர்ப்புகளை வழங்கி விட்டு அதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று மட்டும் யாரும் எளிதாக நினைத்து விடத் தேவையில்லை. அந்தக் குழந்தையின் பெற்றோரது  வாழ்நாள் துயரம் தீரவே தீராது எனும் நிலையில், அந்தத் துயரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைகாரனை, நீதிமன்றம் திடீரென ஜாமீனில் வெளியில் விட வேண்டிய அவசியம் என்ன வந்தது?. 

இந்த வருடத் துவக்கத்தில் ஃபிப்ரவரி 5 ஆம் நாள், ஹாசினியின் பெற்றோரது வாழ்நாள் நிம்மதியைக் காவு வாங்கும் விதமான அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து முடிந்தது. அந்தக் குழந்தையின் அவல மரணம் நடந்து முடிந்து இன்னும் முழுதாக ஒரு வருடம் திரும்பவில்லை. மக்கள் இப்போதும் ஹாசினியின் மரணத்தை மறந்தார்களில்லை. இப்போதும் பல பெற்றோர் மனதில் நீறு பூத்த நெருப்பாக அந்தக் கொலை பாதகத்தை நிகழ்த்திய தஷ்வந்த் மீதான கோபம் புகைந்து கொண்டு தான் இருக்கிறது. சட்டத்திற்கும், நீதிமன்றத்துக்கும் தெரியுமோ, தெரியாதோ? தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போதே, அவனுக்கு அந்தத் தண்டனை எல்லாம் போதாது. அதை விடக் கடுமையான தண்டனை ஏதாவது தரப்பட வேண்டும் என்று வார்த்தைகளாலும், மனதளவிலுமாகப் பொங்கிப் புழுங்கிய பெற்றோர் பலருண்டு.

இந்நிலையில் தொடர்ந்து குழந்தைகளுக்கெதிரான பாலியல் வக்கிரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில், நீதிமன்றம் என்ன காரணத்துக்காக அந்த இளைஞனுக்கு விதிக்கப் பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்? என்ற கேள்வி இந்தச் செய்தியை ஊடகங்கள் வழியாகக் காண நேர்ந்த எல்லோருக்குள்ளும் முளைத்திருக்கிறது.

மகளைப் பறி கொடுத்த தந்தையாக, ஹாசினியின் தந்தை பாபு, இவ்விஷயம் குறித்துப் பேசுகையில்; ‘குற்றவாளியான தஷ்வந்தின் தந்தை; என் மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்து காட்டுகிறேன் பார்‘ என்று எங்களிடம் சவால் விட்டார்’ அதன்படியே அவன் இன்று ஜாமீனில் வெளியில் விடப்பட்டுள்ளான். தஷ்வந்த் வெளியில் வந்தால் என் மகளைப் போல இன்னும் பல குழந்தைகள் பாதிக்கப்படலாம், அவன் வெளியில் வந்தால் கொலை செய்யக்கூட அஞ்சாத அளவுக்கு அவனுக்கு தைரியம் வந்து விடும். அப்படிப்பட்டவனை நீதிமன்றம் வெளியில் விட்டது ஆட்சேபத்துக்கு உரியது. விவரம் அறியாச் சிறுமியான என் மகளை இரக்கமின்றி பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு அளிக்கப் பட்ட தண்டனை போதாது. அவனை சட்டம் இன்னும் கடுமையாகத் தண்டித்திருக்க வேண்டும், என்று நாங்கள் வருந்திக் கொண்டிருக்கையில்... இப்படி திடீரென்று நீதிமன்றம் அவனது தண்டனையை ரத்து செய்து ஜாமீனில் வெளியில் விட்டது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது’ என்று தனது மனக்குமுறலைப் பதிவு செய்தார். பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறலாக மட்டும் இதை நினைத்து விடத் தேவையில்லை. தஷ்வந்த் ஜாமீனில் விடுவிப்பு என்ற செய்தியை ஊடகங்கள் வழியாகக் கண்டு கொண்டிருந்த மனசாட்சியுள்ள அத்தனை பேரின் மனக்குமுறலும் அது தான்.

தஷ்வந்தின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு மிக எளிதான காரணம் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அது இது தான்;  ‘தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தஷ்வந்தின் தந்தை தொடுத்திருந்த வழக்கில், காவல்துறை உரிய பதில்களை அளிக்கவில்லை என்பதால், அதைக் காரணமாக்கி, சென்னை உயர்நீதிமன்றம் அவன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறது’

இப்படி எளிதான காரணம் சொல்லி சட்டத்திலிருந்து தப்பும் அளவுக்குத் தான் நமது சட்டங்கள் இருக்கின்றன என்றால்; முதலில் குற்றவாளியாக நாம் கருத வேண்டியது  யாரை?

ஒரு முக்கியமான வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டு குற்றவாளிக்குத் தண்டனையும் வழங்கப்பட்ட பிறகு, அவனது தந்தை குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உடனடியாக வழக்குத் தொடர்வதே அநீதி எனும் போது, அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, வழக்கின் தன்மை குறித்து அறிந்து கொண்ட பிறகல்லவா அதன் மீதான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும்? இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஹாசினி கொலை வழக்கு முடிந்து அதற்கு அளிக்கப் பட்ட தீர்ப்ப்பின் படி குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவதோடு அந்த வழக்கு நிறைவுறுகிறது. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட குண்டர் சட்ட அடிப்படையிலான தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறிதொரு வழக்கை, ‘ஹாசினி கொலை வழக்கு’ எனும் மூல வழக்கோடு ஒப்பிட்டுப் பார்த்து தானே நீதிபதி இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும்?!

இந்த வழக்கைப் பொறுத்தவரை தஷ்வந்தின் தந்தை, தன் மகனின் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுத்ததே மிகப்பெரிய குற்றம். வழக்குத் தொடுக்க சட்டத்தில் வழி இருப்பதால் தானே இப்படியெல்லாம் குற்றம் நிரூபணமான பிறகும் மனதில் ஈரமே இல்லாமல் வழக்குத் தொடுக்க முடிகிறது. தன் மகன் சித்ரவதை செய்து கொன்றது ஒரு அறியாச் சிறுமியை என்ற உணர்விருந்திருந்தால் அந்தத் தந்தையால் இப்படி ஒரு வழக்கைத் தொடுத்திருக்க முடியுமா?! ஊரறிந்த ஒரு அப்பட்டமான குற்றவாளியை வீட்டுக்கு அழைத்து வந்து வைத்துக் கொண்டு இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?!

பிறகு சிறுமி கொலைக்கான நீதி தான் என்ன?

இப்போதைய வழக்கு ஹாசினி வழக்கு அல்ல; இது குற்றவாளியின் தந்தை, தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு. இப்படி ஒரு பிரதான வழக்கில் இருந்து பல வழக்குகள் பிரிந்தாலும் கூட, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இதன் மூல வழக்கான சிறுமி கொலை வழக்கு, தமிழ்நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பான அதிர்வுகளைப் பற்றி அறியாதவராக இருக்க முடியாது. இவ்வழக்கின் தன்மையை ஆராயும் போது குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தைக் காட்டிலும் கடுமையான தண்டனை கிடைத்தே ஆக வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இந்த வழக்கை உற்றுக் கவனிப்போர் அனைவருக்குமே இருந்தது. அது நியாயமான எதிர்பார்ப்பும் கூட. என்ன தான் நீதிபதிகள் மாறினாலும், காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டாலும் கூட வழக்கு ஒன்றே. அது அப்பட்டமான படுகொலை வழக்கு. திட்டமிட்டு நிகழ்த்தப் பட்ட குரூரமான வன்முறை என்று நிரூபணம் ஆன பிறகு தான் குண்டர் சட்டத்தில் அவனை சிறையில் அடைத்தார்கள். பிறகு இப்போது, காவல்துறை உரிய பதிலை அளிக்கவில்லை, என உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறி, ஜாமீனில் வெளிவர முடியாத விதிகளைக் கொண்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஏன்? அப்படியானால் ரத்து செய்த நீதிபதிக்கு தஷ்வந்த் செய்த குற்றத்தின் தன்மை தெரியாதா? அல்லது அது மிக, மிக மோசமான வன்கொடுமை என அவர் நம்பவில்லையா? எந்த அடிப்படையில் அவர் குண்டர் சட்டத்தை ரத்து செய்தார்? என்பதற்கு போதிய விளக்கங்களைக் காணோம்.

அதோடு தஷ்வந்தின் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், சரியான பதில்களை அளித்து, முறையாகத் தனது கடமையைச் செய்ய வேண்டிய காவல்துறை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி எழுப்பிய போது, உரிய விளக்கம் அளித்து அவனது தண்டனையை மேலும் உறுதி செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தது? இப்போது குற்றவாளி ஜாமீனில் வெளியில் வந்த பிறகு அதை வேடிக்கை பார்க்கத்தான் அன்று அவனைக் கைது செய்து, சிரமப்பட்டு குற்றத்தை உறுதி செய்து சிறையில் அடைத்தார்களா? என்ன விதமான நீதி இது?! 

கடந்த வாரத்தில் டெல்லி குருகிராம் சர்வதேசப் பள்ளிச் சிறுவன் ஒருவன் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு பள்ளிக் கழிப்பறையில் சடலமாக மீட்கப்பட்டான். அடுத்த நாளே பெங்களூரில் இரண்டாம் வகுப்பு மாணவியொருத்தியை அலுவலக உதவியாளன் எனும் போர்வையில் ஒரு மிருகம் சிதைத்தது. 

முதலில் டெல்லி நிர்பயா, பிறகு அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, டெல்லி மாணவன், பெங்களூர் மாணவி என குழந்தைகளுக்கெதிரான குற்றங்களில் பட்டியல் நீண்டு கொண்டே தான் போகிறது. குற்றங்கள் குறையாததற்கு முதல் காரணம் நமது சட்டங்களிலுள்ள ஓட்டைகள் தான். எந்தத் தவறையும், எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி  அனயாசமாகச் செய்து விட்டு, அதற்கான தண்டணையைக் கூட முழுதாக அனுபவிக்காமல் தப்ப வழியிருக்கும் போது குற்றவாளிகள் ஏன் குறையப் போகிறார்கள்? குற்றங்களும் தான் ஏன் குறையப் போகின்றன?

இந்தியாவில் மலிந்து கிடக்கும் பிற குற்றங்களை விடுங்கள். பச்சிளம் குழந்தைகளைக் காவு வாங்கும் இந்தப் பாலியல் குற்றங்களிலாவது குற்றம் செய்பவர்களை அச்சுறுத்தும் விதமாக நமது அரசு மரண தண்டனை விதித்தால் என்ன? பாலியல் பலாத்காரத்தின் போது விபரம் அறியாத அந்த குழந்தைகள் பட்ட வேதனைகளை உணரும் தன்மை கொண்ட எந்த அரசும் முதலில் செய்ய வேண்டியது அதைத் தான். இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்கியே தீரவேண்டும். இப்போதெல்லாம் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும், கொலையாகும் ஆண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை ஜாமீனில் வெளியில் விட்டால், அது எப்படி குற்றத்துக்கான தண்டனையாகும்? பழங்கால முறைப்படி முச்சந்தியில் கழுவேற்றப்பட்டாலொழிய இவர்களெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை! 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com