ஏன் தமிழகத்துக்கு இந்த நிலை? எங்களை வாழவிடுங்கள்!

எந்தத் திசையை நோக்கினாலும் பிரச்னைகள், கோஷங்கள், போராட்டங்கள். ஏன் தமிழகத்துக்கு இந்த நிலை?
ஏன் தமிழகத்துக்கு இந்த நிலை? எங்களை வாழவிடுங்கள்!


ஒரு காலத்தில் தமிழகத்தின் எந்தத் திசையை நோக்கினாலும் நம் கண்ணில் படுவது அமைதி, வளம், சுத்தமான காற்று, நிறைந்த நீர் நிலைகள், சலசலப்பில்லாத அரசியல் களம். இன்று நிலைமை அப்படி இல்லை. எந்தத் திசையை நோக்கினாலும் பிரச்னைகள், கோஷங்கள், போராட்டங்கள். ஏன் தமிழகத்துக்கு இந்த நிலை?

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாத ‘பொது விநியோகத் திட்டம். இலவச தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மிக்ஸி, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு, இலவச மின்சாரம், வீடுகளுக்கு நூறு யூனிட் மின்சாரம் இலவசம்' என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடைபெறுகிறது. 

தமிழகத்தைப் போன்ற சுத்தமான, பரவலான பேருந்து வசதியை வேறு எந்த மாநிலத்திலாவது பார்க்க முடியுமா? பின் ஏன் இத்தனை போராட்டங்கள்? இத்தகைய போராட்டங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள், வியப்பை மட்டுமல்ல எதிர்காலம் பற்றிய பயத்தையும் நம்மிடையே விதைக்கிறது.

2015-ம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதிலும் 1,09,423 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 20,450 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது, இந்தியாவில் நடந்த போராட்டங்களில் தமிழகத்தின் பங்கு 18.68 சதவீதம். அடுத்ததாக, பஞ்சாபில் 13,089 போராட்டங்களும், உத்தராகண்டில் 10,477 போராட்டங்களும் நடந்ததாக, Data on Police Organisations புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாடு ஒரு கலவர பூமி என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, போராட்ட பட்டியலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். இதைப்பற்றி எந்த அரசியல் கட்சியும் மார்தட்டிக்கொள்வதில்லை. எல்லா ஆட்சியிலும் போராட்டங்கள் குறைவில்லாமல் நடந்திருக்கிறது. தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த போராட்டங்கள் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை பார்போம்.

2009-ம் ஆண்டு 15,385 போராட்டங்கள், 2010-ம் ஆண்டு 17,172 போராட்டங்கள், 2011-ம் ஆண்டு 15,746 போராட்டங்கள், 2012-ம் ஆண்டு 21,232 போராட்டங்கள், 2013-ம் ஆண்டு 19,063 போராட்டங்கள், 2014-ம் ஆண்டு 20,950 போராட்டங்கள், 2015-ம் ஆண்டு 20,450 போராட்டங்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சில அனுமானங்களை நம்மிடைய ஏற்படுத்துகிறது. 

2012-ம் ஆண்டுக்கு முந்தைய போராட்ட எண்ணிக்கைகளைவிட, அதற்குப் பிறகு, அதாவது மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா பதவியேற்ற வருடத்திலிருந்து இந்தப் போராட்ட எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பொதுவாக, போராட்டங்கள் இரண்டு தருணங்களில் அதிகமாகக் காணப்படும். ஒன்று, ஆட்சியின் தலைமை பலவீனமாக இருக்கும்போது. மற்றொன்று, போராட்டங்களை யாராவது ஊக்கப்படுத்தும்போது. ஜெயலலிதாவின் தலைமையை பலவீனமாக யாரும் பார்க்க முடியாது. ஆகையால், இரண்டாவது காரணத்தை ஏற்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி நடக்கும் நீண்டகாலப் போராட்டங்களையும், பிரச்னைகளையும் பார்போம்.

மீத்தேன் திட்டம். இதை ஆதரித்தது திமுக. அப்போது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ்.

ஜல்லிக்கட்டு தடை. இது முடிந்த பிரச்னை. இருந்தாலும், தடை கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில். அப்போது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ்.

கட்சத் தீவு. இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது திமுக ஆட்சியில். மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ். இந்தப் பிரச்னை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேவைப்படுமானால், எதிர்காலங்களில் தூசி தட்டி எடுத்து மீண்டும் போராட்டங்கள் முளைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இலங்கைப் பிரச்னையிலும் இதே நிலை.

காவிரிப் பிரச்னையில் எந்த மத்திய அரசும் தமிழகத்துக்கு உதவவில்லை என்பது அருவருக்கத்தக்க உண்மை.

நீட் தேர்வு. இதற்கு அனுமதி அளித்தது திமுக. அப்போது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ். ‘சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால், தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தந்தோம்' என்று சொல்கிறது திமுக. விஷத்தை சாப்பிடச் சொல்லி அதற்கு மாற்று மருந்தையும் கொடுப்பவன் சிறந்த வைத்தியனாக இருக்க முடியாது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில். அப்போது மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ்.

இதுபோன்று பல பிரச்னைகளுக்கான விஷ விதைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு முன், ஒரு குட்டிக் கதையை பார்போம்.

ஒரு நாடு. அந்த நாட்டில் விஷச் செடிகள் வளர்ந்து நாட்டின் வளத்தையும், சுவாசிக்கும் காற்றையும் விஷமாக்கிக்கொண்டிருந்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் எல்லோரும் மண்டையை பிய்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், அரசனிடம் அரண்மனை வைத்தியன் வந்தான்.

‘அரசே! என்னிடம் ஒரு மூலிகைச் சாறு இருக்கிறது. அதை நீரில் கலந்து விஷச் செடிகளின் மீது தெளித்தால், அவை அழிந்துபோகும். இது விஷச் செடிகளை மட்டுமே அழிக்கும். ஒரு வார காலத்தில், விஷச் செடிகளின் பிடியிலிருந்து நாடு விடுபடும்' என்று சொன்னான்.

அரசனுக்கு மகிழ்ச்சி. வைத்தியனின் யோசனையை ஏற்றுக்கொண்டான். வைத்தியனின் மூலிகைச் சாறு, விஷச் செடிகளை அழித்தது. வைத்தியனை மக்கள் கொண்டாடினார்கள். பரிசுகளும், வெகுமதிகளும் அளிக்கப்பட்டன. வைத்தியனுக்கு மகிழ்ச்சி.

சில வருடங்கள் சென்றன. வைத்தியன் நோய்வாய்ப்பட்டான். மரணப் படுக்கையில் இருந்தவாறு தன் மகனை அழைத்தான். அவனிடம் மூன்று பானைகளைக் கொடுத்தான்.

முதல் பானையிலிருந்து சில மண் உருண்டைகளை எடுத்தான்.

‘மகனே! இந்த உருண்டை நாட்டு ஓட்டு மண்ணில் செய்யப்பட்டது. இதன் உள்ளே விஷச் செடியின் விதை இருக்கிறது. அதேபோல், இரண்டாவது பானையில் சீமை ஓட்டு மண்ணில் செய்யப்பட்ட உருண்டை இருக்கிறது. இதனுள்ளும் விஷச் செடியின் விதை இருக்கிறது. மூன்றாவது பானையில் மலை ஓட்டு மண்ணில் செய்யப்பட்ட உருண்டை இருக்கிறது. இதனுள்ளும் விஷச் செடியின் விதை இருக்கிறது. இந்த உருண்டைகளை நாட்டில் சில இடங்களில் புதைத்துவிடு. நாட்டு ஓட்டு மண்ணால் செய்யப்பட்ட உருண்டை ஐந்து வருடங்களில் அழியும். பிறகு அதனுள்ளே இருக்கும் விதையிலிருந்து விஷச் செடி முளைக்கும். மக்கள் விஷச் செடியால் அவதிப்படுவார்கள். அந்த தருணத்தில் நீ மூலிகைச் சாற்றைக் கொடுத்து நல்ல பெயரையும், புகழையும் மட்டுமல்லாமல் நிறைய செல்வங்களையும் அடைவாய். சீமை ஓட்டு மண்ணில் செய்த உருண்டை பத்து வருடங்களில் அழியும். பிறகு, உள்ளே இருக்கும் விதையின் மூலம் விஷச் செடி முளைக்கும். மக்கள் மீண்டும் உன்னையே நாடி வருவார்கள். அதேபோல் மலை ஓட்டு மண்ணில் செய்த உருண்டை பதினைந்து வருடங்களில் அழிந்து மீண்டும் விஷச் செடி முளைக்கும். நாடு உன்னைத் தேடி வரும். ஆகையால், அடுத்த பதினைந்து வருடங்கள் நீ புகழோடும், செல்வத்தோடும் வாழ்வாய். மக்களும், ராஜ்ஜியமும் உன்னை நம்பியே இருப்பார்கள்' என்று சொல்லி வைத்தியன் இறந்துபோனான்.

மண் உருண்டைகள் புதைக்கப்பட்டன. வைத்தியனின் மகன், நாட்டைக் காக்க தனது தியாக வாழ்க்கையைத் தொடங்கினான்.

இதேபோல்தான் இன்றைய தமிழக அரசியல் இருக்கிறது. தேவைப்படும்போது முளைக்கும் வகையில் பிரச்னைகள் விதைக்கப்பட்டுள்ளன. அதன் தாக்கம் என்ன? அது எப்போது அழிவைத் தொடங்கும்? என்பது நம்மைப் போன்ற சாதாரண பிரஜைகளுக்குத் தெரியாது. ஆனால், விதைத்தவர்களுக்குத் தெரியும்.
 

டாஸ்மாக் கடைகளைப் பெண்கள் அடித்து நொறுக்குவதை செய்தித்தாள்கள் பெருமையாக வெளியிடுகின்றன. இந்த வன்முறை பாசிடிவானதா? இதே மதுக்கடைகள் தனியார்வசத்தில், அரசியல்வாதிகளின் பிடியில் இருந்தபோது, இத்தகைய பாசிடிவான அடாவடியை நாம் யாராவது செய்ய முயற்சித்தோமா? அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று பாசிடிவ் அடாவடிகளுக்குத் தெரியும். தற்போது டாஸ்மாக் கடைகள் அரசின் வசம் இருக்கிறது. அடித்து நொறுக்கினால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். தமிழகத்தில் இருக்கும் அத்தனை கட்சிகளும் பக்கத்து யூனியன் பிரதேசத்தில் இருக்கின்றன. அங்கு ஆட்சியில் இருப்பது, தமிழக அரசியலை நிர்ணயம் செய்யும் ஒரு தேசியக் கட்சி. அங்கு தெருவுக்குத் தெரு தனியார் மதுக்கடைகளையும், பார்களையும் திறந்துவைத்துள்ளது. தமிழகத்துக்குப் பாதகமான ஒரு விஷயம், அதே தமிழ் பேசும் பக்கத்து மாநிலத்துக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமா? இப்படிச் சொல்வதால், இந்தக் கட்டுரை டாஸ்மாக் கடைகளுக்கு ஆதரவானது என்று முடிவு செய்ய வேண்டாம். வன்முறையின் நியாயம்கூட இடத்துக்கு இடம் மாறுபடுகிறது என்பதைச் சொல்வதுதான் இதன் நோக்கம்.

ஒரு ஆட்சியாளர், சில வருடங்களுக்கு முன் பஸ் கட்டணத்தையும், மின் கட்டணத்தை உயர்த்தினர். அதற்காக அன்றைய எதிர்க்கட்சி போராட்டம் நடத்தியது. சில நாட்களுக்குப் பின், அந்தப் பிரச்னையை அப்படியே போட்டுவிட்டு அடுத்த பிரச்னையை கையில் எடுத்தனர். முதல் பிரச்னையே தீரவில்லை, அதற்குள் அடுத்த போராட்டம் துவக்குவது சரியா? இதையாவது ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராட்டம் நடத்திய கட்சி, ஆட்சிக்கு வந்ததும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும், பஸ் கட்டணத்தையும் குறைத்ததா? அப்படியானால், இவர்களின் போராட்டம் அரசுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்த மட்டும்தானா? கட்டண உயர்வால் கிடைத்த கூடுதல் வருவாயை இவர்கள் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள் அல்லவா? ஆக, பாதிப்பெல்லாம் சாதாரண மக்களுக்குத்தான்.

எல்லா போராட்ட கோரிக்கைகளும் தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால், தேவையில்லாத கோரிக்கைகளைக் கொண்ட சுயநலப் போராட்டங்கள், அவசியமான போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது. போராட்டக்களம் சிலரின் விளையாட்டு மைதானமாக இருக்கிறது.

‘வேலை செய்யாவிட்டால் ஊதியமில்லை என்பது ஆசிரியர்களுக்கு மட்டும்தானா? என்று அடுத்தவர்களை உசுப்பேற்றுகிறார் ஒரு நடிகர். இது நியாயமான கேள்விதான். இதை ஒரு திரைப்பட நடிகர் கேட்பதுதான் எரிச்சலூட்டுகிறது. உடல் நிலை சரியில்லாததால், ஒரு மக்கள் பிரதிநிதி வெளியில் செல்லாமல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஊதியம் வழங்கக்கூடாது என்று சொல்வீர்களா? யதார்த்தமாக யோசித்தால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் வீட்டு அடுப்பு அரசு சம்பளத்தில் எரிவதில்லை. உங்கள் கருத்துப்படியே, உழைக்காத பிரதிநிதிகளின் சம்பளத்தை கட் செய்வதாக வைத்துக்கொள்வோம், இதனால் அரசுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட, சினிமாத் துறைக்கு அளிக்கப்படும் மானியங்களை கட் செய்வதால் அரசுக்குக் கிடைக்கும் ஆதாயம் மிக மிக அதிகம்.

ஒரு திரைப்படம் வெளியாகிறது. பெரும் தோல்வியைத் தழுவுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறுகிறது. எந்த நடிகராவது டிக்கெட் பணத்தை ரசிகர்களுக்கு திருப்பித் தந்திருக்கிறாரா? ஒரு காலத்தில், படம் சரியில்லை என்றால் ஓடாது. ரசிகர்கள் அந்தப் படத்தை பார்ப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், இன்று அப்படியா? படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ. ரசிகர்களின் கருத்து தெரிவதற்கு முன், அதாவது இரண்டு வாரத்தில் வசூல் வேட்டை நடத்தி பெட்டி நிரப்பப்படுகிறது. 

ஆகவே, திடீர் நியாயம் பேசும் நடிகர்களே! நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துக்களை பேசாதீர்கள். எத்தகைய கண்டனங்களையும் செய்ய உங்களுக்குத் தகுதியில்லை. சினிமா அசிங்கங்களையும், ஒழுங்கீனங்களையும் முதலில் சரி செய்யுங்கள். பிறகு அடுத்த வீட்டை எட்டிப் பாருங்கள். தோல் சுருங்கி, சினிமாவில் ஓய்வு பெறும்போது, ஒரு நடிகருக்கு அரசியல் பிரவேச ஆசை துளிர்விடுகிறது. தமிழக அரசியல் முதியோர் இல்லமல்ல. ஊழலை ஒழிப்பேன் என்று காற்றில் வசனங்களை எழுதாதீர்கள். உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் போராட்டங்களை ஊக்குவிக்கிறது. தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுகிறது.

எத்தகைய போராட்டமாக இருந்தாலும் சரி, போராட்டத்துக்குக் காட்டிய ஆர்வத்தை, தீர்வை எட்டுவதற்கு அரசியல் கட்சிகள் காட்டுவதில்லை. போராட்டம் செய்வதன் மூலம் மக்களின் ஆதரவை வளைத்துப்போடலாம் என்ற நினைப்பு எல்லா அரசியல் கட்சிகளிடமும் காணப்படுகிறது. இது தவறு. தேவையில்லாமல் திணிக்கப்படும் தொடர் போராட்டங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளார்கள். போராட்டங்களினால் மக்களைக் கவரும் எண்ணத்தைக் கைவிடுங்கள். பிரச்னைகளுக்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வை கொடுக்க முயலுங்கள். ஒரு தரப்பை திருப்தி செய்யும் வகையில் முன்வைக்கும் யோசனைகள், மறு தரப்பில் விதைக்கப்படும் போராட்ட விதைகள். இதை நினைவில் கொள்ளுங்கள். அழுகின்ற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். இது எந்த அளவு உண்மையோ, அது மற்ற குழந்தைகளையும் அழவைக்கும் என்ற உண்மையையும் புரிந்துகொள்ளுங்கள்.

இவங்களுக்கு பதிலாக அவங்க ஆட்சி வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று நாம் கணக்குப் போட்டால், அது வடிகட்டிய முட்டாள்தனம். ஆட்சியைப் பிடிக்க போராட்டமே சிறந்த வழி என்று அரசியல் கட்சிகள் கணக்குப்போடும் வரை, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு இருக்காது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டுமானால் போராட்டக்களம், போர்க்களமாகத் தெரியலாம். ஆனால், மற்றவர்களுக்கு நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்கும் விரயக்களம். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் எந்த விஷயமும் புரியாத சாதாரண மக்களின் மீது திணிக்கப்படுகின்றன. எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காத நாங்கள் இந்தப் பளுவை ஏன் சுமக்க வேண்டும்? அரசு இயந்திரத்தைச் செயலிழக்கச் செய்யும் இந்த முயற்சியை நடுநிலையாளர்கள் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்?

விஷச்செடிகள், வைத்தியர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் வேண்டுமானால் கற்பகவிருட்சமாக காட்சி அளிக்கலாம். எங்களைப் போன்றவர்களுக்கு அது விஷச் செடி. எங்களை மட்டுமல்ல, அடுத்த தலைமுறையையும் அது பாழாக்கும். நீங்கள் நன்றாக வாழ்கிறீர்களா என்பது எங்களுக்கு முக்கியமல்ல; எங்களை வாழவிடுங்கள்!

- சாது ஸ்ரீராம் 
மின்னஞ்சல் முகவரி : saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com