நவோதயா பள்ளிகளுக்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் பின்னுள்ள நுண்ணரசியலில் மக்களுக்கான சுயவிருப்பத்தின் மதிப்பென்ன?

உண்மையில் அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பது நவோதயா பள்ளிகளையா? அல்லது கல்வி வியாபாரத்துக்கு நாளடைவில் முட்டுக்கட்டையாக நவோதயா போன்ற மாடல் பள்ளிகள் மாறி விடக்கூடும் எனும் அப்பட்டமான உண்மை..
நவோதயா பள்ளிகளுக்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் பின்னுள்ள நுண்ணரசியலில் மக்களுக்கான சுயவிருப்பத்தின் மதிப்பென்ன?

ஜவஹர் நவோதயா பள்ளிகளை 1986 ல் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி துவக்கி வைத்தார். இப்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு பள்ளி என்ற விகிதத்தில் தமிழகம் நீங்கலாக, நாடு முழுவதும் 598 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கமும் முதலில் இந்தப் பள்ளிகளை எதிர்த்து வந்த போதிலும்; பின்னர் அம்மாநிலத்தில் நவோதயா பள்ளிகள் துவங்க அனுமதி அளித்தது அம்மாநில அரசு. இந்தியாவில், நவோதயா பள்ளிகளே இல்லாத மாவட்டம் என்றால் அது தமிழகம் மட்டுமே!

நவோதயா பள்ளிகளின் முக்கியமான சிறப்பு அம்சங்கள் என்னவென்று பாருங்கள்...

  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உருவாக்கியுள்ள ‘நவோதயா வித்யாலயா சமிதி’ என்ற சுயாட்சி நிறுவனம் தான் ஜவஹர் வித்யாலயா பள்ளிகளை நடத்தி வருகிறது. 
  • இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்ந்து பயிலலாம்
  • 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி இந்தியாவில் இதுவரை 598 பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இந்தப் பள்ளிகள் இல்லை.
  • இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையானது ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வின் வழியாக மட்டுமே நிகழ்கிறது.

நவோதயா பள்ளிகளின் கட்டண விகிதங்கள்...

ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதக் கட்டணம் வெறும் 160 ரூபாய்கள் மட்டுமே. மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதக் கட்டணம் அதே தான், மேல் நிலைக் கல்வியில் கணிதம் இல்லாமல் பயாலஜி எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மாதம் 200 ரூபாய் கட்டணம். பொதுப்பிரிவினர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு மேலிருப்பவர்களுக்கு மட்டும் மாதம் 200 ரூபாய் ‘வித்ய விகாஸ் நிதி’ என்ற பெயரில் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.. மற்ற பிரிவினருக்கு முற்றிலும் இலவசக்கல்வி.

உண்டு, உறைவிடப் பள்ளி...

இந்தியாவில் முதல் ஜவஹர் நவோதயா பள்ளி, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ‘அமராவதி’ எனுமிடத்தில் நிறுவப்பட்டது. அதுமட்டுமல்ல இது ஒரு உண்டு, உறைவிடப் பள்ளி என்பதால், இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பள்ளியில் தங்கி கொண்டு அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு தான் பயில வேண்டும். அதற்கான கட்டணம் அவர்களுக்கு இலவசம். இந்தப் பள்ளியின் விதிகளில் ஒன்று மாணவ, மாணவிகள் மட்டுமல்ல; அப்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களும் கூட மாணவ, மாணவிகள் உண்பதையே தான் உண்ண வேண்டும் என்பதோடு, உறைவிடப் பள்ளி என்பதால் ஆசிரியர்களும், மாணவர்களோடு அங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்பது. அதோடு, இந்தத் திட்டமானது இந்தியாவின் கிராமப்புற மாணவர்களின் நலன் நாடும் நோக்கில் அவர்களை மையமாக வைத்தே என்பதால் பள்ளிக்கான அனுமதி கிடைத்து, அது அமைவதும் கூட மாவட்டத் தலைநகரில் அல்லாது கிராமப்புறப் பகுதிகளில் தான் அமைக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட சிறப்பு அம்சங்கள் தவிர; இப்பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுக்காக தினமும் 2 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் ஆரோக்யமான விஷயம். வாரம் 2 முறை மட்டுமே விளையாட அனுமதி கொண்ட மாணவர்களுக்கும், தினமும் 2 மணி நேரம் விளையாட அனுமதி தரும் பள்ளிகளுக்கும் இடையில் நிச்சயம் வேறுபாடு உண்டு தானே!

நவோதயா பள்ளிச் சேர்க்கையில்  இட ஒதுக்கீட்டு முறை...

இந்தப் பள்ளிகளில் 75% கிராமப்புற மாணவர்களுக்கும் 25% நகர்ப்புற மாணவர்களுக்குமாக கல்விச் சேர்க்கை அனுமதி நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையான கல்வியைப் பெற முடியும் என அப்பள்ளிகள் நம்புகின்றன.

நவோதயா பள்ளிகளில் பிராந்திய மொழிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்...

மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா, நவோதயா பள்ளிகளைப் பற்றி பேசுகையில், ஜவஹர் நவோதயா பள்ளிகளில் பிராந்திய மொழிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை எங்களது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட நாங்கள் பின்பற்றுவதில்லை. கேந்திரிய பள்ளிகளில் பிராந்திய மொழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் ஜவஹர் நவோதயா வித்யாலயா சுருக்கமாக JNV பள்ளிகளில் அப்படியில்லை அங்கே கிராமப் புற மாணவர்களானாலும் சரி நகர்ப்புற மாணவர்களானாலும் சரி ஆங்கிலம் மற்றும் இந்தியை அடுத்து அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழியை மூன்றாவதாகக் கற்றூக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தமிழகம் அனுமதிக்கும் போது, கிராமப்புற மாணவர்களின் நலன்கருதி அவர்களுக்காகவே உருவாக்கப் பட்ட ஜவஹர் நவோதயா கல்வித் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்துவதில் என்ன தயக்கம்? என்கிறார்.

அதைத் தாண்டி நவோதயா பள்ளிகளில் ‘இன்டர்னல் ஸ்டூடண்ட் எக்ஸேஞ்ச் புரோகிராம்’ என்ற திட்டம் ஒன்று வருடத்திற்கு ஒருமுறை செயல்படுத்தப் படுகிறது. அதன்படி இந்தி மொழியில் பயிலும் மாணவர்களில் 30 சதவிகிதம் பேரை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாணவர்கள் 30 சதவிகிதம் பேருடன் எக்ஸ்சேஞ்ச் செய்து அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்து அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள வழிவகை செய்கிறது.

நவோதயா பள்ளிகளில் மட்டும் தான் மாணவர்களின் கல்விச் செலவை மட்டுமல்ல அவர்களுக்கான தங்குமிடம், உணவு, ஸ்டேஷனரி பொருட்கள் , சீருடைகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுச் செயல்படுகிறது.

மேற்கண்ட அம்சங்களை எல்லாம் கருத்தில் கொண்டால், மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதனால் JNV பள்ளிகள் தமிழகத்தில் வரவேற்கத்தக்கவையே;

நவோதயா பள்ளிகளின் பாதகமான அம்சங்கள்...

ஆனால் தமிழகத்தின் 'சுயாட்சி கெளரவம்' என்ற முறையில் நோக்கினால்; இதில் பாதகமான அம்சங்களும் இல்லாமலில்லை... 

அதனால் தான், இந்தப் புதிய கல்வித் திட்டம் தொடங்கப் பட்டு 31 வருடங்களாகியும் இப்பள்ளிகள் இன்னும் தமிழகத்துக்கு வரவில்லை. அதற்கு காரணம் யார்?

தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள் மற்றும் தேர்தல் கால சீதோஷ்ணத்தைப் பொருத்து அவற்றுடன் சந்தர்ப்ப வாதக் கூட்டு வைக்கும் அரசியல் கட்சிகளும் தான்...

மேம்போக்காகப் பார்த்தால் கிராமப் புற மாணவர்களின் நலன் நாடும் அத்தனை அம்சங்களுடனும் கூடிய இத்தனை அருமையான கல்வித்திட்டத்தை தமிழகத்தில் மட்டும் மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழக்கூடும்.

திராவிடக் கட்சிகள் ஏன் எதிர்க்கின்றன?

  • முதல் காரணம்; மாநில சுயாட்சி மற்றும் மாநில அரசின் அதிகார உரிமையை மத்திய அரசு, இத்திட்டத்தின் மூலம் காவு வாங்கும் என்று திராவிடக் கட்சிகள் நம்புவதால். 
  • இரண்டாவது காரணம் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், இந்தி எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள், அரசியல் ரீதியாக தங்களது கொள்கையைக் காப்பதாக நினைத்துக்கொண்டு நவோதயா பள்ளிகளை எதிர்த்து வருகின்றனர்.

இந்தி கட்டாயமாக்கப் படக்கூடாது என்று நினைப்பவர்கள் மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பல நூறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழகத்தில் இயங்க அனுமதி கொடுத்து விட்டு மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அமையவிருக்கும் மத்திய அரசின் திட்டமான இந்த நவோதயா பள்ளிகளை மட்டும் எதிர்ப்பானேன்? என்ற கேள்வி இந்த இடத்தில் எந்த ஒரு சாமானிய மனிதனின் மனதிலும் எழக்கூடும்.

அந்தக் கேள்வியைத் தான் மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகப் பிரதிநிதிகளும் எழுப்பி வருகின்றனர். தற்போது இதில் உள்ள அரசியல் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால், அது கடைசியில் கல்வி வியாபாரத்தில் வந்து நிற்கிறது. கல்வி கடைச்சரக்கான பிறகு, தனியார் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைக் கடை பிடித்தால் அதில் மாநில அரசு தலையிட உரிமையில்லை என்கிறார்கள் மாநிலக் கட்சிப் பிரதிநிதிகள். தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் உரிமையில் வேண்டுமானால் மாநில அரசு தலையிடாமல் இருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் இயங்கி வரும் மும்மொழிக் கொள்கையுடன் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசுப் பள்ளிகளே அவற்றுக்கு தமிழகத்தில் அனுமதி உண்டே என்று கேள்வி எழுப்பப் பட்டால் அதற்கு உரித்தான பதிலை விவாத நிகழ்ச்சிகளில் எவருமே கூற முற்படவில்லை. அது மட்டுமல்ல;

மத்திய அரசின் திட்டத்திலும் குறையில்லை, மாநில அரசின் ஐயத்திலும் குறையில்லை என்றால் பிழை யாருடையது?

ஒருவகையில் பார்த்தால் மத்திய அரசின் திட்டத்திலும் குறையில்லை, மாநில அரசின் ஐயத்திலும் குறையில்லை எனும் போது இங்கே பிரச்னையின் அடிநாதம் என்னவென்றால்; மத்திய அரசு நவோதயா பள்ளிகள் மூலமாக மாநிலத்தின் சுயாட்சி அதிகாரத்தில் தலையிட விரும்புகிறது எனும் அதிகாரப் பங்கீட்டில் வந்து நிற்கிறது. இதில், நவோதயா பள்ளிகள் எனும் அருமையான திட்டத்தின் நோக்கம் அதுவல்ல என்பதை நிரூபிக்கும் தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசு அதைச் செய்ய விரும்பவில்லை. மாறாக நீதிமன்றம் மூலமாக ஆணையிட்டு தனது அதிகார வரம்பை நிரூபிக்க முயல்கிறது. 

இதுவரை இந்தியாவில் தமிழ்நாடு நீங்கலாக, பிற அனைத்து மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 598 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளில் இருந்து இந்த வருடம் மட்டும் மொத்தம் 14, 183 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். தேர்வு எழுதியவர்களில் 11,875 பேர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்படித் தேர்வானவர்களில் 7000 பேர் இதுவரை மருத்துவக் கவுன்சிலில் தேர்வாகி மருத்துவக் கல்வி அனுமதி கிடைத்து கல்லூரிகளில் சேர்ந்து விட்டார்கள். இந்தியாவில் இயங்கி வரும் பல்லாயிரக் கணக்கான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில் இருந்து பல லட்சக் கணக்கான மாணவர்கள் ஆண்டு தோறும் மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, வேளாண்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் கல்லூரிப் படிப்பைப் பெறும் கனவுடன் கடினமாக உழைத்துப் படிக்கின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு நவோதயா பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலுமாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1000 கிராமப்புறக் குழந்தைகள் சேர முடியும். கிட்டத்தட்ட இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு 31 வருடங்களாகி விட்ட நிலையில் பல்லாயிரம் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய மத்திய அரசின் இந்தக் கல்வித்துறைச் சேவையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றன நமது திராவிடக் கட்சிகள். அதற்கு தான் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

ஆனால் மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை நீட் தேர்வு, நெடுவாசல் திட்டம், கதிரா மங்கலம் பிரச்னை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விஷயங்களைப் போலவே நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதிலும் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை உள்ளூர் கட்சிகளுக்குள் ஒற்றுமை நிலவும் ஒரே விஷயமென்றால் அது மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது என்பதாகவே ஆகி விட்டது. தமிழகத்தில் மத்திய அரசுடன் நட்புறவு பாராட்டி வரும் ஓரிரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே நீட் தேர்வை எதிர்ப்பது போலவே நவோதயா பள்ளிகளையும் எதிர்த்து வருகின்றன.

நீட் தேர்வைப் போலவே நவோதயா பள்ளிகளையும் எதிர்ப்பது ஏன்?

கடந்த வாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். 8 வாரங்களுக்குள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 32 நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கான நிலம் மற்றும் இடம் ஒதுக்குவது தொடர்பான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, தடையின்மைச் சான்றிதழும் பெற்றுத் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. நவோதயா பள்ளிகளைப் பொருத்தவரை இந்தியைக் குறித்த பயம் மாநில அரசுக்குத் தேவையற்றது. வீணான அச்சத்தின் காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு அதிக நலன் தரக்கூடிய அருமையான கல்வித்திட்டத்தை தமிழகம் புறக்கணிப்பதில் அர்த்தமில்லை என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசைப் பொருத்தவரை கல்வித்திட்டத்தில் அது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது என்றபோதும் மாநிலம் முழுவதும் இயங்கும் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளிலும் அதே விதமாக மும்மொழிக் கொள்கை தானே பின்பற்றப் படுகிறது. லட்சங்களையும், கோடிகளையும் கட்டணமாகப் பெறும் அவற்றுக்கெல்லாம் தமிழக அரசு தனது இருமொழிக் கொள்கையைத் தளர்த்திக் கொண்டு அனுமதியளித்து விட்டு, உண்மையாகவே கிராமப்புற மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு செயல்படுத்திய நவோதய கல்வித்திட்டத்திற்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? இது சரியான அணுகுமுறை ஆகாது என்கிறது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு வேண்டாம் என்பதற்கு பிரபலங்களின் கருத்து...

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

‘நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதி அளித்ததின் வாயிலாக உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டிருக்கிறது. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது உடனடியாக அது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் வேலை எனக்கூறி மேல்முறையீடு செய்த தமிழக அரசு, இப்போது நவோதயா பள்ளிகள் விஷயத்தில் மட்டும் மேல்முறையீடு செய்யாமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. கல்வி விஷயத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசின் கொள்கை இருமொழிக் கொள்கை தான் என்பதற்கான வாதத்தை தற்போதைய அரசு உறுதியாக எடுத்து வைக்கவில்லை.’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன்...

‘நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இதுவரை கட்டாயமாக்கப்படாமல் இருந்தன. ஆனால் இனிமேல் அது கட்டாயப் படுத்தப் பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்தக் கல்வித்திட்டம் தமிழகத்துக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தாண்டி இதன் மூலம் மத்திய அரசு இந்தியைத் திணிப்பதற்கும் மதவாத அரசியலைத் திணிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று கருதி அது ராஜீவ் காந்தி காலத்தில் தொடங்கப் பட்ட போதே தமிழகத்தில் அந்தக் கல்வித் திட்டம் வேண்டாம் என்று கூறி தவிர்க்கப் பட்டது. அதில் மீண்டும் மத்திய அரசு சட்டப்பூர்வமான ஒரு தீர்ப்பை பெற்றிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.’

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்...

‘நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டால் அரசுப் பள்ளிகள் செயலிழக்கும். எனவே மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். மாநில அரசு எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் பள்ளிகளுக்கான அனுமதியை அளித்து விடக்கூடாது.’

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு...

‘கோத்தாரி கமிஷன் 1964 லிருந்து 66 வரையிலும் இந்தியாவின் கல்விமுறையை முழுமையாக ஆய்வு செய்து மிக விளக்கமான ஒரு அறிக்கையை இந்திய அரசாங்கத்துக்கு கொடுத்தது. அந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு கிராமத்திலும் அருகாமையிலுள்ள பொதுபள்ளி மூலமாகத் தாய்மொழி வழியாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது தான் கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரை. இந்திய மொழிகளை வளர்ப்பது, உயர்க்கல்வியையும் இந்திய மொழிகளிலேயே வழங்குவது என்பது தான் அந்தக் கல்விக் குழுவின் பரிந்துரை. 66 லிருந்து இன்று 2016 வரை இந்திய அரசாங்கம் பொதுப்பள்ளி வழியாக கல்வி உரிமையைத் தருவதற்கு முன்வரவில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி உரிமையை, கல்வி வாய்ப்பைத் தரவேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம்.

1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கக் கூடிய 5 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் பயிலும் பள்ளியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இப்போதும் இங்கு சரியாகப் பேணப்படவில்லை. அங்கே அந்தக் குழந்தைகளுக்கு ஆடல், பாடல், கைத்திறன், விளையாட்டு உள்ளிட்டவற்றைக் கற்பிக்கப் போதுமான ஆசிரியர்கள் கிடையாது. பல பள்ளிகளில் ஆசிரியர்களே தான் அலுவலக வேலைகளையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. இப்படி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே செய்து தரப்படாத நிலையில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிற போது , நவோதயா பள்ளி விஷயத்தில் மட்டும், மாவட்டத்துக்கு ஒரு பள்ளிக்கு, ஒரு செக்‌ஷனுக்கு 40 பேர் இரண்டு செக்‌ஷன்களுக்கு 80 பேருக்கு மட்டும் நாங்கள் மத்திய அரசின் செலவில் முழு வசதிகளும் செய்து தருவோம் கோடிக்கணக்கில் நாங்கள் பணம் செலவு செய்வோம், அதற்கு மாநில அரசும் தன் பங்கைத் தரவேண்டும் என்றால் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது இல்லையா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 41 ல், அரசுக்கு வருவாய் பெருகப் பெருக, பொருளாதாரம் மேம்பட, மேம்பட அரசு தான் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே அந்தப் பிரிவுக்கும் எதிரானது தான் இந்தக் நவோதயா கல்வித் திட்டம். எனவே நவோதயா பள்ளிகள் என்பவை மீண்டும் பல அடுக்குக் கல்விமுறையை உறுதி செய்வதற்குத் தான் பயன்படுமே தவிர, அது சமத்துவமான கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவதற்குப் பயன்படாது. எனவே நாங்கள் கேட்பதெல்லாம்; சமத்துவமான கல்வி வாய்ப்பு ஏற்படுவதற்கு மாநிலங்களுக்கு அதிகமான நிதி வசதி செய்து கொடுங்கள், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொடுங்கள் அது தான் உண்மையிலேயே மாநிலத்திலிருக்கும் மக்களுக்கான கல்வியை வழங்க உதவும்.’ 

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி... 

‘நவோதயா பள்ளிகள் ஆரம்பிக்கப் பட்டது கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியமான அளவில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனித்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதாலும் தான். அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்க்கும் போது அது நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த ஒரு கல்வித்திட்டமும் சரி மாணவர்களை வற்புறுத்துவதாக இருக்கக் கூடாது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆர்வமிருந்தால் நவோதயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படலாம். ஆனால் நாங்கள் கேட்பது நவோதயா பள்ளிகளுக்குண்டான பொருளாதார வசதிகளுடன் கூடிய மாநில அரசுப் பள்ளிகளை. அது நிறைவேறினால் தான், மாநிலத்தில் கல்விச் சமநிலை என்ற நிலையை எட்ட முடியும்.’

விஷன் இந்தியா கட்சியின்  பொன்ராஜ்...

‘தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளின் தரம் குறையக்காரணம்... இன்று, அரசின் 14 விதமான திட்டங்களை நிறைவேற்றும் பணி ஆசிரியர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்களுக்கு கற்பித்தலைக் காட்டிலும் செய்தாக வேண்டிய வேலைகள் பள்ளிகளில் அதிகம் இருக்கின்றன. ஆசிரியர்கள் முதலில் அந்த பணி அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு சுதந்திரமாக கற்பித்தலை மட்டுமே செய்யும் அளவுக்கு கல்விச் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். உண்டு, உறைவிடப் பாணியிலான அரசுப் பள்ளிகளும் இங்கே உண்டு, ஆனால் அவற்றில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் நவோதயா பள்ளிகளுக்கு இணையானவை அல்ல. ஏன்... சொல்லப்போனால் தமிழகத்தில் இயங்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தரம் கூட பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இங்கே குறைவென்று தான் சொல்ல முடியும். முதலில் மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தைக் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். பிறகு தான் நீட் முதலான தரத்தை நிர்ணயிக்கும் தேர்வுகள் எல்லாம் இங்கே அமல்படுத்தப் பட வேண்டும். ஏற்கனவே பெருவாரியான மாணவர்களிடையே புழக்கத்தில் இருக்கும் கல்வித் திட்டத்தில் சீர்திருத்தம் செய்யாமல் அதை விடுத்து புதிதாக நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவதால் இங்கே கல்விச் சீர்திருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை.’

சமூக ஆர்வலர் பாடம் நாராயணன்...

‘நவோதயா பள்ளிகள் கிராமப் புறத்தில் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த சில ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடியதாக இருக்குமே தவிர, இதன் மூலம் மாநிலம் முழுதும் ஒரே விதமான பொதுக்கல்வி முறை ஏற்பட வழி இல்லை. இதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது. கல்வியை மாநிலப் பட்டியலில் வைத்தால் மட்டுமே இங்கிருக்கும் மாணவர்களுக்குத் தேவையான கல்விச் சமநிலை கிடைக்க முடியும். மாறாக நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவதால் மட்டும் இங்கே கல்வியில் புதிய புரட்சி ஒன்றையும் ஏற்படுத்தி விட முடியாது. நாம் இப்போது, மாநிலத்தில் ஏற்கனவே இருக்கின்ற கல்வி வசதிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். எங்களைப் போன்ற சமூகச் செயல்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பெல்லாம் தற்போது செயல்பாட்டில் இருக்கின்ற மாநில அரசுக் கல்வித் திட்டத்தை சீர்திருத்தி தரமானதாகச் செயல்படச் செய்ய வேண்டும் என்பதைத் தான்.’

சிவ ஜெயராஜ், திமுக பிரதிநிதி...

நாடு முழுதும் இந்தக் கல்வித் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் எப்படித் தலையிட முடியும்? நாங்கள் மேல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம். இந்த மாநிலத்துகென்று தனியாக தட்ப வெப்ப சூழ்நிலை உண்டா இல்லையா? முதலில் மாநில சுயாட்சி உரிமைக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றியது இந்த மாநிலம் தான். நவோதயா பள்ளிகளின் வழியாக தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக என்று மத்திய அரசுக்கு திடீரென்று கரிசனம் வந்தது ஏன்? பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு அங்கே சம இடம் கிடையாது. தாழ்த்தப் பட்டோருக்குத் தான் முன்னுரிமை. இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

நவோதயாவை ஆதரிக்கும் தமிழக பாஜக பிரதிநிதியின் விளக்கம்...

பாஜக வின் அரசகுமார் கூறியது...

‘நவோதயா பள்ளிகளைப் பொருத்தவரை அவை செயல்படும் முறையை தமிழக அரசு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்;

6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்துக் கொள்ளலாம். விரும்பினால் சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடங்களை இந்தியில் படிக்கலாம்.

11, 12 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம் தான் பயிற்றுமொழி, இந்தி கட்டாயப் பாடமாக இருந்தாலும் பள்ளி முதல்வரின் தீர்மானத்தின் படி மாணவர்களுக்கு இந்தி பரிபூரணமாகத் தெரியும் வரை ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலம் இரண்டாம் மொழிப்பாடமாகவும், பிராந்திய மொழி மூன்றாம் மொழிப் பாடமாகவும் இருக்கும். அதே சமயம் தமிழகம், கேரளம், ஆந்திரம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி முதன்மைப் பாடமாகவும், ஆங்கிலம் இரண்டாம் மொழிப் பாடமாகவும், இந்தி மூன்றாம் மொழிப்பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வட கிழக்கு மாகாணங்களில் பல்வேறு நாட்டைச் சார்ந்தவர்களும் வாழ்வதாலும் அவர்களுக்குத் தோதாக அந்த மாநிலங்களில் எல்லாம் ஆங்கிலம் முதன்மைப் பாடமாகவும், பிராந்திய மொழி இரண்டாம் மொழிப்பாடமாகவும், இந்தி மூன்றாம் மொழிப் பாடமாகவும் வைக்கப் பட்டுள்ளது. ஆகவே, மாநில அரசு, அரசியல் நோக்கோடு தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பிற மாணவர்களோடு போட்டி போட்டுப் பயின்று கல்வியில் மேல்நிலையை அடைய உதவும் நவோதயா பள்ளிகளைத் தமிழகக் கட்சிகள் எதிர்ப்பதில் அர்த்தமில்லை.’

நவோதயா பள்ளிகள் வந்தால் பெரிதாக நஷ்டமில்லை என்று கருதுவோரின் வாதம்...

  • மொழி தான் பிரச்னை என்றால் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைப் போலவே மும்மொழிக்கொள்கை கொண்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி இருக்கிறது. தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி இருக்கிறது. அங்கெல்லாம் இந்தி கற்றுத்தரப் படுகிறது. நவோதயா பள்ளிகளிலோ பெண்களுக்கு, 33% இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22.5 % இட ஒதுக்கீடு, கட்டணம் கிடையாது, இலவச உண்டு, உறைவிடப் பள்ளி வேறு. பிறகு அதை ஏன் எதிர்க்க வேண்டும். 
  • நவோதயா பள்ளிகள் குறித்த சர்ச்சையில், இந்தி திணிப்பு என்ற வாதத்தை தாண்டி இந்தியைத் தங்களுக்கான மொழித்திறனாக மட்டுமே எண்ணி அதைக் கற்றுக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழகத்தில் உண்டு. அவர்களில் வசதி, வாய்ப்பு மிக்கவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்த்து, பணம் செலவளித்து இந்தி கற்றுக் கொள்வார்கள். ஆனால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் தாழ்த்தப் பட்ட மாணவர்கள் மற்றும் கிராமப் புற மாணவர்கள் இந்தி கற்றுக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் சொல்ல வேண்டும்.
  • இந்தியைத் திணிக்கக் கூடாது என்பது தானே அவர்களது வாதம்... நவோதயா பள்ளிகளில் இந்தித் திணிப்பு நடக்குமென்றால் இதுவரை தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலமாக நடைபெறாத இந்தித் திணிப்பா... புதிதாக இந்த நவோதயா பள்ளிகளால் நடந்து விடப் போகிறது. இருமொழிக் கொள்கை தான் அரசியல் கட்சிகளின் ஒரே காரணமென்றால் தமிழகத்தில் இயங்கி வரும் மும்மொழிக் கொள்கை கொண்ட பள்ளிகள் அனைத்திற்கும் எவ்விதம் அனுமதி வழங்கினார்கள்?
  • உண்மையில் அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பது நவோதயா பள்ளிகளையா? அல்லது கல்வி வியாபாரத்துக்கு நாளடைவில் முட்டுக்கட்டையாக நவோதயா போன்ற மாடல் பள்ளிகள் மாறி விடக்கூடும் எனும் அச்ச உணர்வையா? என்பதே சாமானிய மக்கள் அனேகரின் பொதுக்கருத்தாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com