நயா பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள்!

புற்றீசல் போலப் பெருகி வரும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், அதன் மூலம் பொது மக்களிடையே பிரபலமாகி மேலும் புகழைத் தக்க வைத்துக் கொள்வதும் அத்தனை லேசான காரியமில்லை. ஒரு காட்சி ஊடகத்திலிருந்து விவாத
நயா பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள்!

சமீபத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசிய காணொலிக் காட்சியொன்றை காண நேர்ந்தது. அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப் பட்டன. அதிலொன்று தான், மேற்கண்ட தொலைக்காட்சி விவாத மேட்டர். முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளை அகஸ்மாத்தாகத் தான் காண முடியும். செய்தி ஊடகங்கள் பெருகப் பெருக அதனோடு சேர்ந்து இந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளும் பெருகிப் பெருகி இப்போதெல்லாம் எந்த செய்திச் சேனலைத் திருகினாலும் யாராவது நான்கு பேர், ஒரு நெறியாளரோடு உட்கார்ந்து கொண்டு காச், மூச்சென்று கதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், தான் என்ன தலைப்பில், எதைக் குறித்துப் பேச வந்திருக்கிறோம் என்பதே பலருக்கு இம்மாதிரியான விவாத நிகழ்ச்சிகளில் மறந்து விடுகிறது. ஏனெனில் அங்கே அவ்வப்போது முற்றி விடும் வாய்த்தகராறுகளால். சிலர் ஆணித்தரமாகத் தமது கருத்துக்களை முன் வைப்பதாகக் கருதிக் கொண்டு எதிரணியினரை ஏக வசனத்தில் பேசிச் சாடுகின்றனர். சிலரோ, நிகழ்ச்சியில் தம்மை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் நெறியாளரின் கிடுக்கிப்பிடி கேள்விக் கணைகளில் சிக்குண்டு விழி பிதுங்கி, பாதி நிகழ்வில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விடுகிறார்கள்.

இதெல்லாம் எதனால்? அப்படியானால் பங்கேற்க வரும் பிரபலங்களுக்கெல்லாம் விஷய ஞானமில்லை என்று அர்த்தமா? அப்படியில்லை.

புற்றீசல் போலப் பெருகி வரும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், அதன் மூலம் பொது மக்களிடையே பிரபலமாகி மேலும் புகழைத் தக்க வைத்துக் கொள்வதும் அத்தனை லேசான காரியமில்லை. ஒரு காட்சி ஊடகத்திலிருந்து விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் அசெளகரியம் எங்கிருந்து தொடங்குமெனில்; நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேரம் பங்கேற்பாளர்களுக்கு ஒத்து வருகிறதா? என்பதில் துவங்கும். திரையில் தங்களது முகம் தெரிந்தால் போதும் என்று எண்ணுபவர்களாக இருந்தால் எந்த நேரத்தில் ஷூட்டிங் இருந்தாலும் கலந்து கொள்ளத் தயாராகவே இருப்பார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அவர்கள் முன் வைக்கும் தலைப்புகளில் பேசுவதற்கு, அழைக்கப்படும் நபர்களால் இயலுமா? என்பதையும் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் விவாத நிகழ்ச்சிகளில்  மணிக்கணக்காகப் பேசத் தெரிந்திருந்தால் போதும், யாரை வேண்டுமானாலும் அழைத்து, எதைக் குறித்து வேண்டுமானாலும் பேச வைக்கலாம் என்ற நிலமை முற்றி வருகிறது. அதைத் தான் கரு.பழனியப்பனும் தனது கருத்தாகப் பதிவு செய்திருக்கிறார். 

ஒரு சேனலில் இருந்து ஜி.எஸ்.டி குறித்துப் பேச இயக்குனரை அழைத்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி யா? அதைப் பற்றி எனக்கென்ன தெரியும்? என்று எனது ஆடிட்டரை அழைத்து ‘ஜி.எஸ்.டி குறித்து ஏதாவது சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச வேண்டியதாக இருக்கிறது என்று கூறி ஆலோசனை கேட்டிருக்கிறார். அதற்கு அவரது ஆடிட்டரோ; ‘ஜிஎஸ்டியா? அதைப் பற்றி எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது... இனிமேல் தான் தெரிந்துகொள்ளப் போகிறேன். உங்களுக்கும் கூட போகப் போகத் தெரிந்து விடும் என்று கூறி இருக்கிறார். இப்படித்தான் இருக்கிறது இன்றைய விவாத நிகழ்ச்சிகளின் லட்சணம்!

கடந்த வாரம் ‘நவோதயா பள்ளிகள்’ குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்காக இணையத்தில் அது குறித்து பல்வேறு விவாத நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் மற்றும் கட்டுரைகளை வாசிக்கவும் வேண்டியதாக இருந்தது. அப்படிப் பார்த்ததில் எந்த ஒரு விவாத நிகழ்ச்சியிலும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப் பட்டால், அதற்கான வரைமுறைகள் என்ன? ஒருவேளை அந்தப் பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்றால்... எம்மாதிரியான உறுதியான மறுப்பை முன் வைக்கிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. கலந்து கொள்ளும் எல்லோரும் அவரவர் கட்சி சார்பாகவும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் சார்ந்தும் விவாதம் செய்கிறார்களே ஒழிய... கொடுக்கப் பட்டுள்ள தலைப்பை ஒட்டி, அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் நோக்கம் அங்கே யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. 

இப்போது வரை நவோதயா பள்ளிகளுக்கான எதிர்ப்பாகச் சொல்லப்படுவது ‘தீவிர இந்தித் திணிப்பு’ வாதம் தான்.

ஆனால்...

'நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டால் 10 ஆம் வகுப்புக்கு மேல் தமிழ் முதன்மைப் பாடமாக இருக்கும், இரண்டாவது பயிற்றுமொழியாக ஆங்கிலம் இருக்கும் மூன்றாவதாகத் தான் இந்தி இருக்கும்'

- என்று பாஜகவைச் சார்ந்த ஒரு பிரதிநிதி ஒருவர் விவாத நிகழ்ச்சியில் கூறுகிறார். ஆனால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் அவர் சொல்வதில் இருக்கும் உறுதித் தன்மை குறித்து ஆலோசிக்கவோ அல்லது அதைப் பற்றி விவாதத்தை முன்னெடுக்கவோ விரும்பியதாகத் தெரியவில்லை. இங்கே விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோர் அத்தனை பேரின் நோக்கமும் உறுதியாக எதிர்ப்பது/ உறுதியாக ஆதரிப்பது என்ற இரண்டே நிலைகளில் மட்டுமாக மட்டுறுத்தப்பட்டு விட்டார் போலான தோற்றமே நிலவுகிறது. இப்போது வரை நவோதயா பள்ளி குறித்தான விவாத நிகழ்ச்சிகளில் முன் வைக்கப்படும் ‘இந்தி திணிப்பு’ எனும் வாதத்தில் அது உண்மையா? இல்லையா? என்பதற்கான பதில் பார்வையாளர்களுக்கு கிடைத்தபாடில்லை.

கடந்த வருடத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியொன்றில் ‘பெண்களைப் பின் தொடரும் ஆண்கள்’ குறித்தான ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் நோக்கமானது காதல் வயப்பட்டோ அல்லது இனக்கவர்ச்சியினாலோ நிகழக்கூடிய பின் தொடர்தல் எனும் விஷயம் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு தொல்லையாகவோ, மன உளைச்சலாகவோ இருக்கும் பட்சத்தில் அதைக் கண்டிக்கும் விதமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்ட விதத்தில் அது பின் தொடரும் ஆண்களை ஊக்குவிப்பதாகவும், இலக்கற்ற காதல் உணர்வுகளைத் தூண்டும் விதமாகவுமே இருந்தது. அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன் என்ற முறையில் என்னால் அப்படித் தான் அந்த நிகழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிந்தது. இப்படி விவாத நிகழ்ச்சிகள் பேசப்பட வேண்டிய விஷயங்கள் தாண்டி வெற்றுக் கவர்ச்சிகளாக மாறிப் போவது எங்கனம் பார்வையாளர்களுக்கு நன்மை செய்து விடக்கூடும்?!. இங்கே நன்மை, தீமை என்பது தாண்டி ஜஸ்ட் ஃபார் ஃபன் என்றொரு விஷயத்தை சிலர் முன் வைக்கலாம். அப்படியென்றால் அதை எப்படி ‘விவாத நிகழ்ச்சி’ என்று ஒப்புக் கொள்ள முடியும்?! அது வெறும் கமர்சியல் நிகழ்ச்சி மட்டுமே! 

அவர்களுக்குத் தேவையானது... வியூவர்ஸ் அதாவது பார்வையாளர்களை 1 மணி நேரமோ 1/2 மணி நேரமோ கண்களாலும், செவிகளாலும் கட்டிப்போட்டு அடுத்த சேனலுக்கு விரல்கள் தாவிடா வண்ணம் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மட்டுமே. அந்த சக்தியை அர்த்தமுள்ள விவாதங்கள் நிச்சயம் தரத்தான் செய்யும். ஆனால் எங்கும், எதிலும் கான்ட்ரோவர்ஸிகளைத் தேடும் அல்ப ஆசைகளுக்கு அவை பெரும்பாலும் இடம் தருவதில்லையே, அதனால் அவை தவிர்க்கப் படுகின்றனவோ என்னவோ?!

நவோதயா, ஜி.எஸ்.டி மட்டுமல்ல அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டு இறந்த அன்று நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான விவாதத்தினை அனேகச் சேனல்கள் முன்னெடுத்தன. ஆனால் எல்லாவற்றிலும் விவாதத்தையும், நிபுணர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரது கருத்துக்களையும் தாண்டி அனிதாவின் இறுதிச் சடங்குகளை இஞ்ச்...இஞ்ச் ஆகக் காட்டும் முனைப்பும் இருந்தது. இம்மாதிரியான முன்னெடுப்புகள் பார்வையாளர்களை உணர்வு வயமாக்கி வெறி கொள்ளச் செய்யுமே தவிர உண்மையில் அனிதாவின் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தந்து விடுமா? என்று தெரியவில்லை.

இவையெல்லாம் தாண்டி; 

விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களைப் பற்றியும் கொஞ்சம் பேசித்தான் ஆக வேண்டும்.

முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களை மட்டுமே அழைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு சமீப காலங்களில் எப்போது பார்த்தாலும் கட்சிக்காரர்களை மாத்திரமே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவாதங்களில் பங்கேற்பதில் துறை சார்ந்த நிபுணர் என்ற பெயரில் ஒரே ஒருவர் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பார். அவருக்கும் கூட தன் கருத்தை முன் வைக்க மிகக்குறைந்த வாய்ப்புகளே வழங்கப்படும். மிச்சமிருக்கும் கட்சிக்காரர்கள் நெறியாளரின் நேர உணர்வைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் தொண்டை வறளத் தங்கள் கருத்துக்களை முன் வைத்து அந்த விவாதத்தைக் கொஞ்சமும் பொருளற்றும், பயனற்றும் முடித்து வைப்பார்கள். இது தான் இன்று நமது சேனல்களில் இடம்பெறும் விவாத நிகழ்ச்சிகளின் உண்மைக் கதை!

‘நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தான விவாத நிகழ்வுகளில் இதுவரை மாணவ, மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் விதமாக பிரதான சேனல்கள் எதிலாவது ஒரே ஒரு விவாத நிகழ்ச்சியாவது வந்திருக்குமா?’

- என்று தெரியவில்லை. உண்மையில் நீட் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தான விவாதங்களில் பங்கேற்கத் தகுதியுடைய முதல் நபர் மாணவர் குழாம் தானே? நீட்டை மறுக்கவோ, நவோதயா பள்ளிகளை மறுக்கவோ, ஆதரிக்கவோ அவர்களுக்குத் தானே உண்மையான காரணம் இருக்க முடியும்!

மாட்டிறைச்சி விவகாரத்தில் தொடங்கி, மதுக்கடைகள் ஒழிப்பு வரை. குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைகள் முதல் தனியாக வசிக்கும் வயதானவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது வரை. காய்கறி விலையேற்றம் முதல் விவசாயம் பொய்த்துப் போய் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் பிரச்னை வரை, நடிகை இணையத்தில் வெளியிட்ட சுச்சி லீக்ஸ் வீடியோக்கள் முதல் தென்னிந்திய சினிமா உலகில் பெண்களுக்கான பாதுகாப்புகள் வரை. நச்சு நுகர்பொருட்கள் முதல் ஆர்கானிக் பண்டங்கள் வரை எல்லாவற்றையுமே விவாதத்துக்கு உள்ளாக்கத் தெரிந்த நமக்கு, அந்த விவாதம் எப்படி அமைந்திருந்தால் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்? உண்மையில் யாரெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தால் அந்த விவாதம் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும் என்ற ஞானமும் இருந்தாக வேண்டும்.

‘இல்லா விட்டால் நாம் நாள் தோறும் கண்டு கொண்டிருக்கும் நமது விவாத நிகழ்ச்சிகளால் நமக்கு நயா பைசாவுக்குப் பிரயோஜனமில்லை!’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com