ஆவியாக நின்று நான் உன்னை அழைக்கிறேன்! அம்மா வா!

அம்மா! எனதன்மா! எனக்கு உயிரும் உடலும் கொடுத்த உனக்கு என் குரல் கேட்கிறதா?
ஆவியாக நின்று நான் உன்னை அழைக்கிறேன்! அம்மா வா!

அம்மா! எனதம்மா! எனக்கு உயிரும் உடலும் கொடுத்த உன் கருவுக்குள்ளிருக்கும் என் குரல் கேட்கிறதா? எலிகளுக்கு வளைகள் உண்டு, குருவிகளுக்கோ கூடும் உண்டு ஆனால் உனக்கோ ஓனர் தந்த அந்த நான்கு அடி கோணி மட்டும் தான் மறைப்பு. அந்த ஊசலாடும் கோணித் துணி சுற்றிய இடம்தானே நமது வீடு!  நிறைமாத கர்ப்பிணியான நீ நான்காவது குழந்தையாக என்னைப் பெற்றெடுத்தாய். நீ என் தாய். மூன்று அக்காக்கள் மற்றும் அப்பா இவர்களுக்கு நடுவில் நான். நீ நெல் அவித்து கொண்டிருந்தாய், நான் உன் வயிற்றை முட்டிக் கொண்டிருந்தேன். ஒரு நிமிட ஓய்வு கூட ஓனர் உனக்கு கொடுக்கலையே. வலியின் தாக்கத்தால் கண்ணீருண்டு கால் தளர்ந்து நீ!  உன்னையும் அறியாமல் கல்லில் சாய்ந்தபோது உச்சகட்ட கோபத்தோடு ஓனர் உன்னை அதட்ட, அவன் பிரம்பால் உன்னை அடிக்க உன் வயிற்றுக்குள் கருவாக கேட்டுக் கொண்டிருந்த நானும் தான் பயந்து அழுதேன். மருண்டு போனேன். உலகம் இவ்வளவு கொடூரமானதா? இங்கு நான் பிறந்தால் என்னை நீ காப்பாயா? அந்த ஓனர் யார்? இவ்விதமான பயம் இன்னும் பிறக்காத என் மூளைக்குள் பதிந்து போனது.

நெல் அவிக்கும் பாயிலரின் சூடு என்னை தாக்கக்கூடும் என்று எண்ணி நெளிந்து நெளிந்து என்னை பாதுகாத்து வேலை செய்தாயே! சத்தான உணவு உனக்கில்லை… சரியான பராமரிப்பு உனக்குத் தர ஒரு உயிருமில்லை! வேலை வேலை ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை. ஆனால் எவ்வளவு வேலை செய்தும் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழி இல்லை. உழவு செய்யும் காளைக்கு கூட புல் கிடைக்கும், உனக்கோ கேவலமான சொல்தான் தினமும் கிடைக்கிறது. உன் உழைப்பை ரத்தத்தை வியர்வையை உறிஞ்சி எடுத்து பணம் கொழிக்கும் அந்த அட்டைப் பூச்சியான ஓனர் நம் குடும்பத்துக்குத் தந்ததெல்லாம் அடி, உதை, வசைச்சொற்கள் மட்டுமே!

நான் பிறந்த சில நிமிடங்களில் உன்னைக் கண்டு சிலிர்த்துப் போனேன்… நீ உடல் தளர்ந்து கிடந்தாய். அம்மா! எனது இனிய அம்மா! உணர்வுகள் கடத்தும் உன்னத நிலையில் உன்னைக் காண காண எனக்குப் பேரானந்தம் ஏற்படுகிறது. ஆனால் உன் கண்களிலோ திரண்டு வடிந்த கண்ணீரும் காய்ந்துவிட்டது. ஒரு உயிரை இவ்வுலகிற்குக் கொண்டு வந்த உனதுடன் வலியிலும் சோர்விலும் முழுவதும் தளர்ந்து கிடந்தது. உன்னைத் தேற்ற எந்த மருந்து உண்டு என் புன்னகைகையும் அழுகையையும் தவிர உனக்குத் தர என்னிடம் ஏதுண்டு? ஆர்வமாக என மூன்று அக்காக்களும் அப்பாவும் வந்து என்னை பார்த்து பிஞ்சு விரல்களை வருடி, என்னைத் தொட்டுப் பார்த்து தடவிப்பார்த்து 'சுதந்திரம்’ என பெயரும் வைத்தீர்களே! ஓனர் முறைத்ததும் எல்லோரும் நெல் அவிக்க ஓடினீர்களே. பிறந்து சில நிமிடங்களே ஆன என்னை பிரிய மனமில்லாமல் ஏக்கத்தோடு விம்மி அழுது என் தலையை வருடியபடி அழுது கொண்டே நீ நிற்க, ஓனரின் மேஸ்திரி என்னை கேவலமாக அதட்ட, அழுதபடி அந்த பச்சை உடம்போடு நீ நெல் அவிக்க போனாயே! அப்படி நீ போகும் முன் கடைசியாக நீ கொடுத்த முத்தம் என் மனதில் இன்னமும் ஓவியமாக நிறைந்திருக்கிறது.

பிறந்த சில நாட்களில் ... நான் பிறந்த சில நாட்களில் சுக்கு தண்ணீர் தொட்டு வைக்க, மணி நேரத்திற்கு  ஒரு முறையாவது தாவி வந்து மின்னலாக நொடிப் பொழுதில் என்னை கொஞ்சியபின் மீண்டும் பணி செய்ய ஓடிப் போவாய். உன் வரவை எண்ணி அந்த கட்டாந்தரையில் எப்படி எல்லாம் ஏங்கிக் கிடந்தேன். அங்கு ஈக்களோடும் கொசுக்களோடும் விளையாடிக் கிடந்த எனக்கு உன் முகம் தானே சொர்க்கலோகம். அதைக் கூட எனக்கு காட்ட உனக்கு சமயம் கிடைக்கவில்லையா? நீ என்ன ஓனர் பயன்படுத்தும் 'மனித இயந்திரமா?’ ஓய்வே இல்லாத மரக்கலமா?

ஒரு நிமிட ஓய்வு கூட கிடைக்காத நிலையிலும், என்னை நீ மனத்திலே நினைத்துக் கொண்டிருப்பாய். உனது சிந்தையை முழுவதுமாய் நிறைத்தது நானன்றி வேறென்ன? தூரத்தில் இருந்து என்னை நீ பார்க்கும் பார்வையே திருப்தியை எனக்குத் தருகிறது. உனது தொடுதல் என் உயிருக்கு அருமருந்தாகிறது. ஆனால், அம்மா உனக்குத் தெரியாது. இப்போதெல்லாம் என்னால் தாங்க முடியவில்லை அவ்வப்போது என்னையும் கூட அடிக்கிறார்கள்! அப்பாவையும் கட்டி வைத்து அடிக்கிறார்கள். அக்காள்களின் உடம்பை பாரம்மா… புத்தகம் சுமக்க வேண்டிய இந்தச் சின்னஞ்சிறு வயதில் ஓய்வின்றி இந்த செஞ்சூட்டு பாயிலரில் நெருக்கமாக நின்று வேலை செய்து அவர்களது உடலின் தோல்களெல்லாம் கொப்பளமாகிக் கிடக்கிறது. இருந்தும் ஏன் அவர்களுக்கு மருத்துவமனைக்கு செல்ல அனுமதி இல்லை?

குழந்தைகளால் சூட்டை உணர முடியாது என வேக்காட்டுக்கு நெருக்கமாக அவர்களை அனுப்பி வேலை வாங்கும் அந்த இதயமில்லா பெரிய மனுஷன் தானே உனது ஓனர். எங்கும் வெளியே போக அனுமதியில்லாமல் திறந்தவெளி சிறைச்சாலையில் சூழ்நிலைக் கைதியாக அடைபட்டுக் கிடக்கிறாயே! உன்னை எவ்வளவு கொடுமைப்படுத்தி வேலை வாங்குகிறார்கள்?

எப்போதோ நம் தாத்தா வாங்கிய சிறு தொகை கடனுக்காக இந்த மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டோமே! கடனை கழிப்பதாகக் கூறி கூலியும் தராமல் நம்மை கலங்கடிக்கும் இவர்களின் பிடியில் நாம் அகப்பட்டுக் கொண்டது என்ன நம் விதியா? நம்மைப் பற்றிக் கவலைப்பட இங்கு யாருமே இல்லையா? உலகம் ஈவு இரக்கமற்ற அரக்கர்களின் ஒட்டுமொத்த இருப்பிடம் ஆகிவிட்டதா? உலகில் எங்கெல்லாமோ நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள், உள்ளூரில் இப்படி பல்லாயிரணக்கான உயிர்கள் மூச்சுவிடக் கூட தெம்பின்றி வாடிக் கிடப்பதை யாருமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையா? அத்தனை மலிவானதா ஏழைகளின் கண்ணீர்?

சரியான பராமரிப்பு இல்லாததால் எனது மூன்றாவது மாதத்தில் இரவு இரண்டு மணி வரை கடும் சுரம், உடல் வலி, ஜன்னியில் அவதியுற்றபோது அந்த காரிருள் நேரத்திலும், தயங்கி தயங்கி நீ ஓனர் கதவைத் தட்டினாயே! நீ அந்த ஓனர் காலில் விழுந்து அழுததை நான் நன்றாகவே பார்த்தேன். முதலில் நெல்லை அவித்து முடி.. காலையில் இதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லலாம் என அவன் கறாராகச் சொன்னதோடு யாரைக் கேட்டு இதை பெத்தாய் என உன்னை ஏச, நீ அழ, அக்காள்கள் அழ, அப்பா அழ… என்னால் மறக்க முடியாத ரணமான இரவல்லவா அது! அன்று மட்டும் எத்தனை அடிகளை எனக்காக நீ தாங்கிக் கொண்டு மெளவுனியானாய்! அடிகள் தாங்கித் தாங்கி உனது உடலும் மனமும் மரத்துப் போய்விட்டதா அம்மா? ஆனால் எனக்காக துடிக்கிறாய்! கடவுளாவது கருணைக் காட்டினாரா நமக்கு? யாரம்மா கடவுள்? அவர் நம் மீது ஏன் சிறு அருளையும் காட்டவில்லை? நாம் பாவிகள் என்றால் நம் மீது வன்கொடுமை செய்யும் இவர்கள் புண்ணியவான்களா? இது என்ன கணக்கு என்று எனக்கு விளங்குவதே இல்லை எனதன்புக்குரிய அம்மா!

ஜன்னியில் உச்சதிலே என் உடல் நெருப்பாய் காய்ந்து கொண்டிருந்த நேரம், என் உயிரின் ஊசலாட்டத்தில் நீ ஒரு முறையாவது என்னை வந்து பார்த்து, தூக்கி உன் மடியிலே என்னை வைத்து தாலாட்ட மாட்டாயா? உனது அன்பு அரவணைப்பில் நான் தவழ மாட்டேனோ என நான் ஏங்கிக் கிடந்த போதும், நீ ஓனரின் கெடுபிடியில் சிக்கி பாய்லரில் நெல்லை கொட்டிக்கொண்டிருந்தாய். ஆனால் உன் இதயத்தின் ரத்த உசிர் மட்டும் என் சிந்தையாலே நொந்து கொண்டிருந்ததை நான் உணராமல் இல்லை. தூரத்திலே உனது முகத்தைப் பார்த்து முக மலர்ச்சியோடுதான் நான் மரித்துப்போனேன்.

அது ஒரு காலை நேரம். 6 மணி. மூன்று மாதங்களே ஆன உன் குழந்தையான என் உயிர் பிரிந்த அந்த வலியான நேரம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ அப்போது கூட உன் ஓனருக்காக கொத்தடிமையாய் உழைத்துக் கொண்டிருந்தாய். எதற்கெடுத்தாலும் அட்வான்சு அட்வான்சு, நீ வாங்கின அட்வான்சு என எரிந்து விழுந்து, கணக்கு சொல்லும் அந்த ஓனருக்கு அட்வான்சு கொடுத்து வேலை வாங்கி அதில் கூலியை கழிப்பதும், குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பதும், எட்டு மணி நேர வேலையை மறுப்பதும், அரசு நிர்ணயித்த கூலியை தராமல் இருப்பதும், இப்படி கொடுமைப் படுத்துவதும், கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புச் சட்டத்தின்படி குற்றம் எனத் தெரியாதா? மனித உயிர் பற்றிய அக்கறை இல்லாத இப்படி வெறித்தனத்தில் ஈடுபடும் ஒருவனுக்காக உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் குத்தகைக்கு விட்டிவிட்டீர்களா? எனக்காவது மரணத்தின் மூலம் ஒரு முடிவு கிடைத்துவிட்டது. ஆனால் உங்களுக்கு? ஒவ்வொரு நாளும் துயரின் உச்சத்தை உடலாலும் மனத்தாலும் அனுபவிக்கும் கொடூரம் நிகழ்ந்து கொண்டே இருக்கப் போகிறதே! நினைத்தாலே எனது நெஞ்சம் பதை பதைக்கிறது! இதோ எனது புறப்பாடும் வந்துவிட்டது. இனி உன்னை நான் காண முடியாது!

என் சாவு கூட அந்த ஓனரின் கல் மனசை அசைக்கவில்லையே! நம் குல தெய்வ கோயிலில் காட்டிவிட்டு அருகில் என்னை கொண்டு போய் புதைக்கக் கூட அனுமதி கிடைக்கவில்லையே! வெளியே எங்கும் போகக்கூடாது, வேலையை முடித்துவிட்டு சாயங்காலத்தில் பக்கத்திலுள்ள ரோட்டோரமாக புதைத்து விடுங்கள் என்றல்லவா சொன்னான் சண்டாளி மழை வரக்கூடும் நெல்லை உலர்த்துங்கள் என என்னை அவசரப்படுத்தினான்! நம் குடும்பமே அழுதது அவன் காலில் விழுந்தது. இந்த ஒரு முறை தயவு செய்து... எனக் கெஞ்சியது ஏதாவது பலன் இருந்ததா இல்லையே.

என் பிணத்தை அங்கே வைத்துவிட்டு அழுது கொண்டே நீ நெல் உலர்த்தினாய் கேள்வி கேட்ட அப்பாவை அடித்து துவைத்தார்கள். அழுது கொண்டே இருந்த அக்காள்களை கட்டிப் போட்டார்கள். என் பிணத்தை பார்க்க வரும் போதெல்லாம் நீ வாங்கிக் கொண்டே கெட்ட வார்த்தைகள் தான் எத்தனை! ஒரு உயிர் ஜனித்ததும் மரித்தும் போய்விட்டது! இந்த கொடுமையைப் பற்றி எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா! அன்று மட்டும் என் பிணத்திற்கு எத்தனை முத்தங்கள் கொடுத்திருப்பாய். ஏனம்மா நமக்கு மட்டும் இத்தனை அவலங்கள்! துன்பங்கள் நம்மை காப்பாற்ற யாருமே வரமாட்டார்களா?

இப்படி கொடுமைகளோடு வாழ்வதைவிட நீயும் என்னோடு வந்துவிடு கொத்தடிமை முறை இல்லாத ஏதாவது உலகத்தில் மீண்டும் நாம் போய் மனிதர்களாய் பிறப்போம். ஆவியாக நின்று நான் உன்னை அழைக்கிறேன். அம்மா இங்கே வா…வா…ஆசை முத்தம் தா தா…

அம்மா வா…..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com