நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இடமே அதன் அபாயத்தை உணர்த்தும் - 2

 அணு உலைகளே பூமிக்கு வெளியில் அமைக்கும் பொழுது, நியூட்ரினோ ஆய்வகத்தை மலைக்கு நடுவே நடத்தப்படுவது அபாயத்தை உணர்த்துகிறது.
நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இடமே அதன் அபாயத்தை உணர்த்தும் - 2

நியூட்ரினோ என்றால் என்ன என்பது குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தற்போது நியூட்ரினோ திட்டம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நியூட்ரினோ திட்டத்தை செய்பவர்கள் யார்?

vivek
vivek

நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் விவேக் M. தாதர், திட்டத் தலைவர் மற்றும் மூத்த விஞ்ஞானி ஆவார்.

டாடா அடிப்படை ஆய்வு மையம் தமிழகத்துக்கு செய்தது என்ன?

ஹோமி பாபாவால் நிறுவப்பட்டது டாடா அடிப்படை ஆய்வு மையம் (Tata Institute of Fundamental Research). இந்த நிறுவனம் சர் டொரப்ஜி டாடா டிரஸ்ட் (Sir Dorabji Tata Trust) ஆதரவு மற்றும் உதவியுடன் ஜூன் 1, 1945ம் ஆண்டு நிறுவப்பட்டது.

அதன்பின் கீழ்வரும் நிறுவனங்கள் துவங்கப்பட்டன:

  • 1. பெங்களூரில் பொருந்தக்கூடிய கணிதவியல் மையம் (கேம்)
  • 2. மும்பையில் ஹோமி பாபா மையம் அறிவியல் கல்வி (HBCSE) 
  • 3. பெங்களூருவில் உள்ள தியரிடிகல் சயின்சஸ் இன் சர்வதேச மையம் (ICTS)
  • 4. பெங்களூரில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS)
  • 5. புனேவில் வானொலி வானியல் ஆய்வு மையம் (NCRA)
  • 6. ஹைதராபாத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் பன்டெமெண்டல் ரிசர்ச் (IFR)

73 ஆண்டுகளில் 2018 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு நிறுவனம் திறக்க மனதில்லை. ஆனால் இப்போது, தமிழ்நாட்டில் அபாயகரமான மற்றும் ஆபத்தான பரிசோதனை செய்ய விரும்புகிறது. 

நியூட்ரினோ திட்டத்தில் எத்தனை பேர் வேலை செய்வர்?

கட்டுமான பணியின் போது சுமார் 100 பேர் அங்கு வேலை செய்வர். இதில் கட்டடப் பொறியாளர்களும், வாகன ஓட்டுனர்களும், கட்டுமான பணியாளர்களும் அடங்குவர். இவர்களைத் தவிர அங்கு மண்ணியல் நிபுணர்களும், மின்சார பணியாளர்களும் மற்றும் சுற்றுச் சூழல் பொறியாளர்களும் இருப்பர். கட்டுமான பணி முடிந்தபின் சுமார் 20-30 விஞ்ஞானிகளும் மாணவர்களும் மட்டுமே ஆய்வகத்தில் இருப்பார்கள்.

நியூட்ரினோ ஆய்வகம் எவ்வாறு அமைய உள்ளது?

Neutrino lab-1
Neutrino lab-1


அம்பரப்பர் மலையை 2 கிமீ குடைந்து உள்ளே அமைய உள்ளது. 

Neutrino lab-2
Neutrino lab-2

குகையின் பரிமாணங்கள்:
132 மீ × 26 மீ × 20 மீ
சுரங்கப்பாதையின் பரிமாணங்கள்
7.5 மீ × 7.5 மீ × 2 கிமீ

அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம். (உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும்). இக்கட்டுமானத்திற்குத் தேவையான சிமெண்ட், மணல்   சுமார் - 37,000 டன்.

எவ்வளவு பாறைக்கழிவுகள் வெளியேற்றப்படும்?

வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு - 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி. சுரங்கப்பாதையின் முதல் பத்து மீட்டர் வரையிலான  தூரம் 'உடைத்து மூடல்' முறையில்  மேற்கொள்ளப்படும். இதிலிருந்து வரும் மேற்பரப்பு மண்ணைத் தனியாக சேர்த்து வைத்து பின்னர் குப்பை முற்றத்தை சமன்படுத்த மற்றும் பசுமைப்படுத்த பயன்படுத்தப்படும். பாறைக்கழிவுகள் பெரும்பாலும் சிறு கற்களை கொண்டவை. அவற்றை சாலைத்தளம் அமைப்பதிலும் கட்டுமானப் பணியிலும் பயன்படுத்தலாம். பாறைக்கழிவுகளின் மொத்த அளவு 224,000 கன சதுர மீட்டர் (18% வெற்றிடத்தையும் சேர்த்து) என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வகம் மற்றும் அதன் தரைத்தள வசதிகள் அமைக்க தேவையான மணல், பதப்படுத்தப்பட்ட பாறைக்கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் (சுமார் 80%). இவை அனைத்தும் மூன்று ஆண்டுகளில் கிடைக்கும் பாறைக்கழிவுகள்.

இதில் 20% INO திட்டத்தில், தரைத்தளம் அமைத்தல், சமப்படுத்துதல் மற்றும் இன்னும் பிற கட்டட பணிகளில் பயன்படுத்தப்படும். கழிவு சேமித்தல் இடத்தை குறைக்க, இக்கழிவுகள் தோண்டும் போதே அப்புறப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். 

6) பாறைக்கழிவுகளை எங்கு சேர்த்து வைப்பீர்? ஆண்டின் 6 மாதங்கள் பலத்த காற்று வீசும் தருவாயில் சுற்றத்தில் உள்ள இடங்களை எங்கனம் பாதுகாப்பீர்?

அருகே உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க பாறைக்கழிவு சேமித்தல் இடத்தைச் சுற்றி சுவரொன்று எழுப்பப்படும். இச்சுவர், காற்றின் தாக்கத்தையும் குறைக்கும். தூசி பறப்பதைத் தடுக்க இச்சுவரின் மேல் பாகம் ஒரு தகடால் அல்லது துணியால் (கிராமப்புரங்களில் செய்வதைப் போல) மூடப்படும்.

நியூட்ரினோ திட்டத்திற்கு சட்டபோராட்டங்கள் செய்தவர்கள் யார் யார்..?

Vai Ko
Vai Ko


வைகோ சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் பிப்ரவரி 2015 ல் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த, W.P. (MD) No.733 of 2015 INO மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் இந்த ஆராய்ச்சி வேலை துவங்குவதிலிருந்து இடைக்கால தடை உத்தரவுகள் விதித்தது.
 

Sundar rajan
Sundar rajan


பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த G.சுந்தர் ராஜன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த Appeal No. 6 / 2015 வழக்கில், இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் தட்பவெட்பநிலை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது.

நியூட்ரினோவால் என்னென்ன பாதிப்புகள்?

1. அணு உலைகளே பூமிக்கு வெளியில் அமைக்கும் பொழுது, நியூட்ரினோ ஆய்வகத்தை 2 கிமீ பாதுகாப்பான பாறைகளுக்கு நடுவே நடத்தப்படுவது மற்றும் அரசே ஒரு கிராமத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்யாத நிலையில், இவர்கள் 100 கோடி ரூபாய் தருவதாக கூறியிருப்பதன் மூலம் இதன் ஆபத்தை உணரலாம்.

2. மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. நிறைய தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும் கூட. நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம்.

3. அரிதிலும் அரிதான வன விலங்குகளின் வாழ்வாதாரமாக விளங்கும் முதுமலை காடுகளில் அழிவு எற்படும்.

4. அதேபோன்று, இத்திட்டம் அமைக்கப்போவதாக சொல்லுகின்ற 34 ஹெக்டேர் பகுதி, மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படும்.

5. 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும் பொழுது உருவாகும் தூசி மண்டலம், அந்த பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான சுமையுந்துகள் குறுக்கும் நெடுக்குமாக இயக்கப்படும் போது அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பல மாதங்களுக்கு பாதிக்கும்.

6. காவிரி டெல்டா விவசாயிகளைப்போல் அந்த பகுதி விவசாயம் முழுதும் பாதிக்கப்படும்.

7. நியூட்ரினோ ஆய்வகத்தை அமைப்பதற்கு மலையை குடைந்து சுரங்க பாதை அமைப்பதற்கு ஆயிரம் டன் வெடிபொருட்களை பயன்படுத்தி 12 லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்பட உள்ளதால், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முல்லை பெரியாறு அணை உட்பட 12 முக்கிய அணைகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படும்.

8. மலைகளுக்கும் காடுகளுக்கும் அப்பகுதியில் வாழும் பல் உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

9. அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கதிர்வீச்சு அபாயம்:

10. வான்வெளி நியூட்ரினோவிற்கு நம் மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இல்லை என்றாலும் செயற்கையாக உற்பத்தியாகும் நியூட்ரினோவிற்கு அத்தன்மை உண்டு. இரண்டிற்குமான ஆற்றல் வேறுபாடே அதன் இயற்பியல்/வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. இயற்கை நியூட்ரினோவின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (MeV) வரை ஆகும். ஆனால், அமெரிக்க நியூட்ரினோ 500-1500 கிகா எலக்ட்ரான் வோல்ட் (GeV). செயற்கை நியூட்ரினோ 10 கோடி மடங்கு அதிகம் ஆற்றல் கொண்டது. இயற்கை நியூட்ரினோக்கள் தனித்தனியாக பயணிக்கக் கூடிய வல்லமை படைத்தது. ஆனால் செயற்கை நியூட்ரினோக்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும்பொழுது அது நேர்திசையாக்கள் செய்யப்பட்டு கற்றைகளாக பயணிக்கும். அதனால் செறிவும் (Intensity) அடர்த்தியும் பன்மடங்கு கூடும்.

11. பிற்காலத்தில் ஜப்பான் மற்றும் அண்டார்டிக்காவில் இருந்தும் தமிழகம் நோக்கி இக்கதிர்வீச்சு அனுப்பப்படலாம். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. ஏனைய நாடுகளின் அரசும் மக்களும் ஒருபொழுதும் தன் நாட்டின் மீது இத்தகைய கதிர்வீச்சு படையெடுப்பை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் இது முற்றிலும் சாத்தியம். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இந்திய துணைக்கண்டத்தில் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் சாத்தியமே.

12. ஹிரோஷிமா நாகசாகி போல் ஒரு புல் பூண்டுகள் முளைக்காத பகுதியாக ஆக வாய்ப்பு அதிகம்.

13. யாரோ 20-30 அறிவியலாளர்களின் வெற்றிக்காக பல லட்சம் மக்களையும் உயிரினங்களையும் பலிகடாவாக்க முடியாது.

தொடரும்….     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com