விவசாயிகளைக் காக்க உங்களால் மட்டுமே முடியும்: முதல்வர் பழனிசாமிக்கு அவசரக் கடிதம்

தாங்கள் நினைத்தால் விவசாயிகளைக் காக்க முடியும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தொழில்நுட்ப வல்லுநர் குழு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது
விவசாயிகளைக் காக்க உங்களால் மட்டுமே முடியும்: முதல்வர் பழனிசாமிக்கு அவசரக் கடிதம்

சென்னை: தாங்கள் நினைத்தால் விவசாயிகளைக் காக்க முடியும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தொழில்நுட்பக் குழு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக தொழில்நுட்ப வல்லுநர் குழு வெளியிட்டிருக்கும் வேண்டுகோள் என்னவென்றால், 

தமிழக முதல்வர் அவர்களுக்கு, 
ஏற்கனவே பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் நிலைமை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதன் மூலம் மேலும் சிக்கலாக்கிவிட்டது. அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.  விவசாயத்தின் மீது விவசாயிகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர ஆரம்பித்து இருக்கிறது.

கர்நாடகம் மற்றும் மத்திய அரசுகள் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. தமிழகத்துக்கான உரிமையை காவிரி விஷயத்தில் பெற்றுத்தருவோம் என்று தமிழக அரசு கூறுவது ஆறுதல் அளித்தாலும், இந்த முயற்சியில் பல்வேறு வகையிலான செயல்திட்டங்கள் இருந்தால் மட்டுமே ‘விவசாயிகளின் நலனைக்காக்கும் அரசு’ என்கிற மதிப்பை பெற முடியும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தினை சரியான முறையில், கிராம அளவில், பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமானதாக, செய்வதற்கு இலகுவானதாக ஆக்கும் ஒட்டுமொத்த தீர்வை அரசுடன் சேர்ந்து செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுவரும் எங்கள் 16 ஆண்டு கால பயணத்தில் கிடைத்த புரிதல் என்னவென்றால், அரசு எந்திரத்தின் பலம் அளப்பரியது. 

அப்படிப்பட்ட பலம் வாய்ந்த தமிழக அரசு, ஒரு திட்டத்தை செய்து முடிக்கவேண்டும் என்று தீர்மானித்தால் எந்த தடைகளையும் தாண்டி செய்து முடிக்க முடியும். தற்போதைய தேவை, ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிற தீர்மானம் மட்டுமே.

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், தமிழக அரசு விவசாயிகளைக் காக்க வேண்டும் என்கிற தனது தீர்மானத்தை, கீழ்கண்ட வழிகளில் செயல்பட்டு உறுதிப்படுத்த முடியும்:

* போர்க்கால அடிப்படையில், தமிழகத்தின் கண்மாய், குளம், ஏரி, அணைகள் போன்றவற்றின் மராமத்துப்பணிகளை செய்து முடிப்பதன் மூலம் வரும் மழைக்காலத்தில் பெரும் நீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான சிறப்பு நிதியை ஒத்துக்குவதன் மூலம் வேலையை விரைந்து முடிக்க முடியும்.

* புதிதாக பல தடுப்பணைகளைக் கட்டுதல் நல்ல பலனைத்தரும்.

* விவசாயத்துறையை முடுக்கிவிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீரை சரியான அளவு பயன்படுத்தி விவசாயம் செய்யும் வழிமுறைகளை பயிற்றுவித்தல், சரியான பயிரை, பயிர் ரகத்தை தேர்ந்தெடுக்க தயார்படுத்துதல், தரமான விதைகள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும்படி செய்தல் போன்ற முக்கிய விஷயங்களில் பெரும் மாற்றத்தை, முன்னேற்றத்தை  ஏற்படுத்த முடியும்.

*அதிகப்படியான விளைச்சலுக்கு தேவைப்படும் தகவல்கள் கிடைக்காத நிலை, விவசாயக்கடன் மற்றும் பயிர்க்காப்பீட்டில் இருக்கும் தடைகள் மற்றும் தெளிவில்லாத நிலை, தரமுள்ள  விதை, உரம், பூச்சி மருந்து, போன்றவற்றை அறிந்து வாங்க முடியாத நிலை, விவசாய வேலைக்கான எந்திரங்கள் மற்றும் ஆட்கள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகள், விலை வீழ்ச்சி, விளை பொருளை கட்டாயமான நிலையில் விற்றே ஆக வேண்டும் என்கிற நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகள் இன்று விவசாயிகளை வெகுவாகப் பாதித்து  வருகின்றன. இதனால் தான் தண்ணீர் இருந்தும் பல நேரங்களில் விவசாயிகள் நஷ்டப்படும் நிலை உருவாகிறது.

மேற்சொன்ன அனைத்து பிரச்னைகளும் அரசு மனது வைத்தால் தீர்க்கப்படக்கூடிய பிரச்னைகளே. இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்பது  கூட கிடையாது. இந்தப் பிரச்னைகளை அரசு பேச ஆரம்பிக்கும்போது, தீர்வுகளை முன்னிறுத்தும்போது விவசாயிகள் மனதில் நம்பிக்கை ஏற்படும். தமிழக அரசு எப்படியும் தங்களைக் காக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.

எதிர்க்கட்சிகளைப் போல அரசும் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவது, ஊடகங்களில் திறம்பட விவாதிப்பது போன்றவை மத்திய அரசுக்கு வலுவான அழுத்தத்தைத் தர பயன்படுமே அன்றி, தமிழக விவசாயிகளுக்கு பலன் தராது. 

எனவே, தமிழக விவசாயிகளை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலையில், விவசாயத்தைக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுதான் மிக முக்கியம். 

தாங்கள் நினைத்தால் இப்பவும், இப்படியும் விவசாயிகளைக் காக்க முடியும்!

திருச்செல்வம் ராமு
Originator & Project Director
Mission IT-Rural
www.it-rural.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com