காஷ்மீரத்துக் குட்டிப் பெண்ணே! உன்னைப் பாதுகாக்கத் தவறிய இந்த சமூகத்துக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை!

கடவுளர்கள் அதிகார வர்க்கத்தின் ஏவல் பூதங்களாக மாறி எத்தனையோ யுகங்களாகின்றன. கடவுளையும், மத துவேஷத்தையும் முன்னிறுத்தி ஒரு குழந்தையைச் சிதைப்பது என்பது எத்தனை வக்கிரம் பிடித்த மனநிலை.
காஷ்மீரத்துக் குட்டிப் பெண்ணே! உன்னைப் பாதுகாக்கத் தவறிய இந்த சமூகத்துக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை!

பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் புகைப்படத்தை செய்தி ஊடகங்கள் தோறும் காணும் ஒவ்வொரு கணத்திலும் மனம் பதைத்துக் கொண்டே இருக்கிறது. 8 வயதுச் சிறுமியை மிகக் கோரமாக அலங்கோலப்படுத்தியதோடு அவளைக் கொலையும் செய்யத் துணிந்த மனிதப் பதர்கள் எவராயினும் அவர்கள் உயிர் வாழத்தகுதியற்றவர்களே! அவர்களுக்கு எதற்கு நீதிமன்ற விசாரணை? அரசாங்க செலவில் சிறையிலடைத்து சோறு போட்டு, பாதுகாவல் செய்து, வழக்குப் பதிந்து நீதிமன்றங்களில் அவர்கள் தரப்பு நியாயங்கள் என அவர்கள் நினைப்பதை பேச வாய்ப்பளித்து, ஜாதி, மதம், அரசியல் அதிகார பலங்களை முன்னிட்டும் பண பலத்தை முன்னிட்டும் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின் முன் போதுமான சாட்சியங்கள் ருசுப்படுத்தப்படவில்லை என ஏதோ ஒரு சில ஒரு நொண்டிச் சமாதானங்களைக் கூறி நீதிமன்றங்கள் அவர்களை விடுவிப்பதைக் கண்டு களிக்கவா பொதுஜனங்களான நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்? 

ரத்தம் கொதிக்கிறது. 

ஒவ்வொரு முறையும் அந்தச் சிறுமியின் முகம் கண் முன்னால் நிழலாடும் ஒவ்வொரு முறையும் துக்கப் பந்து நெஞ்சை அடைக்கிறது. இன்னும் எத்தனையெத்தனை பாதுகாப்புகளுடன் தான் இந்த இரக்கமற்ற சமூகத்தின் முன் எங்கள் பெண்குழந்தைகளைப் பாதுகாப்பதடா மானம் கெட்ட மிருகங்களே என்று ஜான்சி ராணியாகவோ, வீர மங்கை வேலுநாச்சியாராகவோ கூர்வாள் உயர்த்தி கோபத்துடன் கத்தத் துடிக்கிறது மனம். 

ஆயினும் ஏதேனும் பலனுண்டா? 

டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த அதே கொடூரத்தை இந்தப் பூப்போன்ற சிறுமியிடம் நிகழ்த்தத் துணிந்த அந்த கொடூரர்கள் விசாரணை என்று காவல் வாகனத்தில் ஏற்றி இறக்கி காவலர்கள் துணையுடன் கொண்டு செல்லப்படுவதைக் கண்டால்... குற்றவாளிகளுக்கு இந்த அரசு அளிக்கும் பாதுகாப்பைக் கூட அப்பாவிகளுக்கு அளிக்க முன் வரவில்லையே என்கிற பதட்டம் தான் நொடிக்கு நொடி அதிகரிக்கிறதே தவிர அந்தப் பரிசுத்தமான சின்னஞ்சிறு மலர் கசக்கி எறியப்பட்டதற்கு உரிய நீதி கிடைக்குமென்று தோன்றவில்லை. அந்தக் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைக்கான நீதி என்பது இந்த சந்தர்பத்தில் உடனடித் தீர்ப்பாக இருந்திருக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் அளிக்கப்படுவதைப் போல கல்லால் அடித்துக் கொல்வதோ, அல்லது வாளால் தலையைக் கொய்வதோ? எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். தண்டனை உடனடியானதாக இருந்திருக்க வேண்டும்.

இம்மாதிரியான மனம் பதைக்கத் தக்க மனிதத் தன்மையற்ற செயலைச் செய்தவர்கள் வெறிநாய்களை விடவும் கேவலமானவர்கள். 
எப்படித் துணிகிறார்கள் இவர்கள்? 

காஷ்மீர் சிறுமி மரணம் மட்டுமல்ல;

டெல்லியில் 8 மாதக் குழந்தையொன்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் தகவலொன்று வலம் வந்தது.

8 மாதக் குழந்தையல்ல, பிறந்த சிசு கூட இன்று பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறது. வயதான பாட்டிகளைக் கூட சில வக்கிரம் பிடித்த மிருகங்கள் விட்டு வைப்பதில்லை.

எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்தியா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பீதியுண்டாக்கும் அளவுக்கு பாலியல் வறட்சி தலை விரித்தாடுகிறது இங்கே. 

அதற்கு ஒரு வயது வரம்பு வேண்டாமா?

பாலியல் தேவைகளை குழந்தைகளிடமும், பிறந்த சிசுக்களிடமும் நிறைவேற்றிக் கொள்ளத் தயங்காத ஈனப்பிறவிகளை ஈன்றதும் ஒரு பெண் தான். அவள் இவர்களை சூல் கொண்ட போதும் தன் மடியேந்திய சிசுவை கோயில் கர்ப்பகிருஹத்தை நிகர்த்த தன் கருப்பையினுள் ஈரைந்து மாதங்கள் மிகுந்த பாதுகாப்புடனே தான் தாங்கி நின்றிருப்பாள். இந்த உலகில் இதுவரை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அல்லது ஈடுபட நினைக்கும் ஒவ்வொரு ஆணும் தன் தாயின் கருவறை நாட்களை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும். அங்கிருந்து தானே ஜனித்தீர்கள் நீங்களும். பிறந்து மண்ணில் விழுந்த அடுத்த கணமே சில இழிபிறவிகளுக்கு மட்டும் மறந்து விடுமா என்ன தாயின் ஜனன வழிப்பாதை!

ஆறறிவு கொண்ட உயிர்கள் அனைத்தும் ஜனித்து பூமி தொட இறைவன் வகுத்த பாதை பெண்ணின் ஜனன உறுப்பு மட்டுமே! அதன் புனிதம் அறிந்திருத்தலே உண்மையான ஆண்மைத் தனமாக இருக்கவியலும். அன்றியும் நவத்துவாரங்களில் எதைக் காணும் போதும் சரி கண்டமாத்திரத்தில் தம் ஆணுறுப்பைத் திணித்து அரிப்பைத் தீர்த்துக் கொள்ள நினைப்பது அருவறுப்பானது மட்டுமல்ல, அபாயகரமான மனநோயும் கூட. சில மிருகங்களுக்கு தவறு செய்ய சந்தர்பம் வாய்த்தால் போதும் மிக வசதியாக தமது போகத்துக்கான ஜனன உறுப்புகளை அடையாளம் காண்பதில் மிகப்பெரிய மறதி வந்து விடுகிறது... கடவுளும் குருடாகிச் செவிடாகி, முடமாகிக் கல்லாகிச் சமையும் அக்கணத்தில் அரங்கேற்றப்படுகின்றன இயல்பான மனநிலை கொண்டவர்கள் எண்ணிப் பார்க்கக் கூட அஞ்சத்தக்க காமக் கொடூரங்கள். இவற்றை சட்டத்தாலோ, தண்டனையாலோ ஒருபோதும் கட்டுப்படுத்த முடியுமென்று தோன்றவில்லை.

உன்னாவ் சிறுமி விவகாரத்தில் மதவெறி தானே கொலைக்கான மூலகாரணமாக செய்தி ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. அந்தச் சிறுமி விஷயத்தில் அவள் வலியாலும், வேதனையாலும் கதறித் துடிக்கையில் காப்பாற்ற முன்வராத எதுவொன்றும் கல்லும், கற்பனையும் தானேயன்றி வேறென்ன? அதற்காகத்தானே அந்த வெறிநாய்கள் அவளைக் குதறிச் சிதைத்திருக்கின்றன. அவளைப் பொருத்தவரை அவளைக் காக்கத் துணியாத எதுவொன்றும் கல் மட்டுமே... வெறும் கல். அது இந்துக்களின் ராமனாகட்டும் முசல்மான்களின் அல்லாவாகட்டும், கிறிஸ்தவர்களின் தேவகுமாரனாகட்டும். எல்லா மதங்களும் தூக்கிப் பிடிக்கும் எது ஒன்றுமாகட்டும். அவையனைத்தும் அதிகார வர்க்கத்தின் ஏவல் பூதங்களாக மாறி எத்தனையோ யுகங்களாகின்றன. கடவுளையும், மத துவேஷத்தையும் முன்னிறுத்தி ஒரு குழந்தையைச் சிதைப்பது என்பது எத்தனை வக்கிரம் பிடித்த மனநிலை.

இதை அந்தக் ஈவிரக்கமற்ற மிருகங்கள் யோசிக்கத் துணிந்தது எக்கணத்தில்?

அவள் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற காரணத்தாலா?

அந்த கிராமத்தில் இந்துக்களான தாங்களே வலுவாக இருக்கிறோம், தனியாக மாற்றிக் கொண்ட ஒற்றை முஸ்லீம் குடும்பம் அது, அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் கேட்பதற்கு அங்கு நாதியில்லை என்ற ஆணவமா?

குதிரைகளின் பின்னால் ஏகாந்தமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த சின்னஞ்சிறுமி... அவள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை தான் இப்படிச் சாவோம் என! சாவைப் பற்றி யோசிக்கிற வயதா அந்தக் குழந்தைக்கு? சாவை மட்டுமல்ல பாலியல் துஷ்பிரயோகம் என்றால் கூடத்தான் என்னவென்று அவளுக்குத் தெரிந்திருக்காது. அந்தச் சிறுமியை திட்டமிட்டு மூன்று நாட்கள் ராமர் கோயிலில் அடைத்து வைத்து இப்படியொரு அக்கிரமத்தை நிறைவேற்றத் துணிந்தது எது? அது அதிகாரம், பண பலம், அரசியல் செல்வாக்கு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அந்த ‘எதுவை’ ஆட்சி செய்யவிடாமல் ஒரேயடியாக ஒழித்துக் கட்ட வேண்டும்.

சாமானியர்களே... உங்களுக்கு ஆண் குழந்தைகளிருப்பின் அவர்கள் மனதில் ஆழப்பதிய வையுங்கள்;

பெண்கள் இவ்வுலகில் பல்வேறு வயதுகளில் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே அன்பால் ஆளப்பட வேண்டியவர்களே அன்றி ஆணவத்தாலும், மேல் சாவனிஸ உரிமையுணர்வாலும், அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஜாதி, மத அரசியல்களாலும், அந்தஸ்து பேதங்களாலும், போகத்தாலும், பாலியல் அடிமைத்தனத்தாலும் ஆளப்பட வேண்டியவர்கள் அல்ல என.

பெண் என்பவள் அன்பாலும், அனுசரணையாலும், நேசத்தாலும் ஆளப்படத் தக்கவள். சகோதரி என்றும் சகதர்மிணி என்றும் சதிபதி என்றும் பிரயோகிக்கக் கூடிய வார்த்தைகளின் உண்மையான பொருள் பெண் ஆணில் பாதி அவனுக்கு சரிநிகர் சமானமானவள் எனும் நிஜத்தை போதியுங்கள்.

பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை. அவர்களை தங்களுக்கு இணையாக நடத்த வேண்டும். அவர்களுடன் தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என்பதையெல்லாம் பிஞ்சுப் பருவத்திலேயே ஆண்குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். பெண்கள் ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும், பிள்ளைகளைப் பெற்று வீட்டைப் பேணுவதற்கும் மட்டுமே படைக்கப்பட்டவர்கள் எனும் மனப்பான்மையை தயவுசெய்து ஆண் குழந்தைகளிடத்தில் படிய விட்டு விடாதீர்கள்.

குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் ரீதியாக சீரழிக்கப்படுவதற்கு அட.. என்ன இருந்தாலும் இவள் பெண் தானே! எனும் இளக்கார உணர்வும் தான் அடிப்படைக் காரணமாகி விடுகிறது. அதற்கு நாமே வழிவகுத்துத் தந்தவர்களாக இருந்து விட வேண்டாமே!

ஆதலால் ஆண் குழந்தைகளை வளர்ப்பவர்கள் தயவு செய்து மிகுந்த பொறுப்புணர்வுடனும், பெண்ணைப் புரிந்து கொள்ளும் இதயத்துடனும் வளர்க்க முயற்சி செய்யுங்கள். அது தீர்த்து வைக்கக் கூடும் இந்த சமூகத்தில் இன்றளவும் பெண்களும், பெண் குழந்தைகளும் எதிர்கொள்ளக் கூடிய பல்வேறு பிரச்னைகளை.

கூடவே மற்றுமொரு கோரிக்கை. சில ஆண்டுகளாகவே பள்ளிக் கல்வித்திட்டத்திலேயே பாலியல் கல்வியின் அவசியம் பற்றிய கோரிக்கை முன் வைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தயவு செய்து அதையும் உரிய வகையில் அங்கீகரித்து மாணவர்களிடையே பாலியல் உறவு குறித்த ஒரு பண்பட்ட அடிப்படைப் புரிதலை கொண்டு சேர்ப்பிக்க வேண்டியதும் பெற்றோர்களின் கடமை தான். இவை எல்லாவற்றையும் ஆலோசித்துப் பார்த்தே நாம் நம் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

அதற்கும் முன்பு... வயது வித்யாசங்கள் இன்றி பிஞ்சுகளிடம் கூட தங்களது அரிப்பைத் தீர்த்துக் கொள்ள நினைக்கும் மனிதப் பதர்களுக்கு சொல்லிக் கொள்ள ஒரு விஷயமுண்டு.

நீதிமன்றங்கள் என்ன உங்களுக்கு தண்டனை தருவது?

பேசாமல் நீங்களே ஏதாவதொரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்து உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் செய்த கொலை பாதகத்துக்கு இவ்வுலகில் எந்தப் பரிகாரமும் இல்லை.

உங்கள் மேல் இப்படியொரு குற்றக்கறை படிந்திருக்கையில், அது நிரூபிக்கப்பட்டும் இருக்கையில் இனி வாழ்ந்து என்ன கிழிக்கப் போகிறீர்கள்?! செய்த தவறை முன்னிட்டு ஒருகணமும் வருந்தாதவை மிருகங்கள் மாத்திரமே. மிருகங்கள் காட்டிலிருக்க மட்டுமே லாயக்கானவை. கொடூர மிருகங்கள் வாழும் காடுகளில் உங்களை நிராதரவாக விட்டுவிடச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தால் அது மிகச் சரியான தீர்ப்பாக இருக்கலாம்.

குழந்தைகள் பாலியல் போகப்பொருட்கள் அல்ல. 8 வயது என்பது பறக்கச் சிறகுகள் இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டு அம்மாக்களும், அப்பாக்களும் சொல்லும் சின்னச் சின்னப் பொய்க்கதைகளைக் கூட உண்மையென நம்பி கோலிக் குண்டு கண்களை அகல விரித்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டு, நாய்களுக்கும், பூனைகளுக்கும், காகங்களுக்கும், வண்டுகளுக்கும், அறியாத புதிய மனிதர்களுக்கும் பயந்து கொண்டு அம்மாக்களின் புடவைத் தலைப்பின் பின்னோ, அப்பாக்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டோ மிரட்சி கொள்ளும் வயது அது. அப்படிப்பட்ட அறியாச் சிறுமிகளைக் கண்டால் அவர்களது மிரட்சியைப் போக்கி, தோளில் தட்டி அரவணைத்து அஞ்சாதே! என்று சொல்வதல்லவா மனிதத்தனம். 

பாலியல் வன்முறை என்றால் என்னவென்று வாய் விட்டுச் சொல்லக் கூடத் தெரிந்திராத அந்தத் தேவதைகளைத் தேர்ந்தெடுத்து போதை மருந்து கொடுத்து கோயிலுக்குள் அடைத்து வைத்து முறை வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எல்லாம் ஆணுறுப்பைத் துண்டிக்கும் தண்டனை அளித்தால் கூட தகாது. அதையும் தாண்டி கொடூர தண்டனை எதையாவது அளிக்க நமது இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமிருக்க வேண்டும்.

அதுவரை காஷ்மீரத்துச் சிறுமி மட்டுமல்ல இதுவரை சீரழிக்கப்பட்ட எந்த ஒரு சிறுமியின் ஆன்மாவும் எக்காலத்திலும் நிம்மதியடைய வாய்ப்பில்லை.

காஷ்மீரத்துக் குட்டிப் பெண்ணே உன்னை பாதுகாக்கத் தவறிய இந்தச் சமூகத்தை, அதன் அங்கத்தினர்களான எங்களையும் கூட நீ ஒருபோதும் மன்னிக்காதே!

Image courtesy: Deccon chronicle

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com